Raaja Bavani 2 1 16516 இராஜ பவனி 2 தனாவின் உரிமை பார்வையும், அனுவின் முகச்சிவப்பும் மற்றவர் கண்களுக்கு நன்கு தெரியும்படியும், புரியும்படியே இருக்க, “தனா..” என்று எச்சரிக்கை குரல் எழுப்பினான் குகன். கடையில் வச்சு எல்லாம் பார்க்கிற இடத்துல இது என்ன..? குகன் கண்டிக்கும் பார்வை பார்க்க, தனா புரிந்து தலை கோதி கொண்டான். “அனு.. நாம கிளம்பலாமா..?” பில் போட ஆட்கள் வரவும், பூமிகா தோழியை கிளப்பினாள். அனு சரியென்று தலை ஆட்டி தனாவை பார்க்க, அவனும் அவளை பார்க்க, இருவரும் நொடியில் கண்களாலே மற்றவரிடம் விடைபெற்றனர். “இருந்தாலும் உனக்கு இவ்வளவு தைரியம் ஆகாதுடி. எல்லாம் இருக்கிற இடத்துல உருகி போய் நிக்கிற, நீ தள்ளு, நான் வண்டியை ஓட்டுறேன்..” பூமிகா சாவியை பிடுங்கி அவள் வண்டி எடுக்க, அனு ஏறி கொண்டாள். “நீங்க பண்றதை பார்த்தா எனக்கு தான் பிபி ஏறுது..” பூமிகா வண்டி ஓட்டியபடி சொல்ல, அனு பதில் சொல்ல மாட்டாமல் வேடிக்கை பார்த்து வந்தாள். “உன்கிட்ட தான் பேசுறேன், இதுக்கு மட்டும் பதில் வராதே..” பூமிகா நொடிக்க, அனுவோ கடையில் நடந்தவற்றை நினைத்து இதழ் விரித்தாள். “என்ன சிரிப்பு..?” கண்ணாடியில் பார்த்து கேட்க, “ஒண்ணுமில்லை..” என்றாள் அனு. ஆனால் அவள் மனகண்ணிலோ, தனாவின் பார்வையும், பேச்சும் தான் ஓடி கொண்டிருந்தது. “நீ மிதக்க ஆரம்பிச்சுட்ட..? இனி உன்கிட்ட பேசி பிரயோஜனமில்லை..” பூமிகா வண்டி வேகத்தை அதிகப்படுத்தி அவள் வீட்டின் முன் நிறுத்தினாள். “பார்த்து பத்திரமா போ, தனா அண்ணாவை நினைச்சு கனவிலே வண்டி ஒட்டாத..” கேலியாக சொல்லி வண்டி கொடுத்தாள். “ச்சு போடி..” தனா பேர் கேட்டதும் சிவக்கும் முகத்துடன் வண்டி ஓட்டி சென்றாள் அனு. அவளை பார்த்து பூமிகாவிற்கு தான் கவலையாகி போனது. தனா, அனு இருவரும் வேறு வேறு இனம், மற்ற குடும்பத்தில் காதல் என்றாலே பிரித்து விடுவதில் முன்னுக்கு நிற்பவர் குருமூர்த்தி. அவரின் மகனே அப்படி என்றால், அனுவை நினைத்து கவலை தோன்றாமல் இல்லை. தனா மேல் அவள் வைத்திருக்கும் காதல் அறிந்தவள் ஆயிற்றே. நூற்றில் ஒரு பங்காய் இது நடந்தால் மிக்க மகிழ்ச்சி.. நடக்கவில்லை என்றால்..? மிகப்பெரிய கேள்விக்குறி தான் அவர்கள் காதல். அந்த கவலை எல்லாம் அனுவிற்கு இருப்பது போல தோன்றவில்லை. அவளை முழுதும் காதல் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. காதல் கண்ணை மட்டுமில்லை மூளையையும் மறைத்தது. இது சரியா..? நடக்குமா..? எந்தவித யோசனையும் இல்லை. தனா.. தனா மட்டும் தான். அவன் காதல் மட்டும் தான். கனவுலகில் மிதப்பவளுக்கு நிதர்சனம் புரிய வேண்டும், விழிப்பு வர வேண்டும். இது தனாவிற்கும் சேர்த்து தான். ம்ம்ம்.. “எவ்வளவு நேரம்டி வீட்டுக்கு வர..?” அனு காம்பவுண்டிற்குள் வண்டி நிறுத்தவும், அவளின் அக்கா சித்ரா வந்தாள். “என்ன இன்னைக்கு டீச்சர்மா சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டீங்க..” அனு ஸ்கூட்டி நிறுத்தி அக்காவிடம் சென்றாள். “அப்பா வர சொன்னார்டி..” சித்ரா சலித்து கொண்டாள். “ஓஹ்..” அனுவிற்கு புரிந்தது. “சரி வா உள்ள போலாம்..” அக்காவுடன் வீட்டிற்குள் செல்ல, சுஜாதா பரபரப்பாக சமையல் வேலையில் இருந்தார். “ம்மா.. பசிக்குது..” அனு நேரே கிட்சன் செல்ல, “ஒரு நிமிஷம்டி..” சுஜாதா மகளுக்கு டிபன் வைத்து கொடுத்தவர், பெரிய மகளுக்கும் கொடுத்தார். “எனக்கு வேணாம்மா..” சித்ரா சொல்லி ஹாலில் அமர, “என்னை கோவப்படுத்த கூடாது, ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பி வா..” சுஜாதா மகள் கையில் திணித்து சென்றார். “க்கா.. சாப்பிடு..” அனு பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு ஒரு வாய் ஊட்ட, அதன் பிறகு சித்ரா தானே சாபிட்டாள். “முடிஞ்சதா.. போய் கிளம்பு, ஓடு..” சுஜாதா சொல்ல, “போறேன்மா..” அமர்ந்தபடியே சொன்னாள் சித்ரா. “படுத்தாம போடி, அப்பா வந்துடுவார்..” திரும்ப குரல் வர, கடுப்புடன் மேலேறினாள். அனு தானும் அக்காவுடன் ரூம் சென்றவள், “என்னக்கா..” என்றாள் கை பிடித்து. “இது தான், அப்பா காலையில சொன்னார், கிட்டத்தட்ட முடிவான மாதிரி தான் சொல்றார்..” மொபைல் எடுத்து நீட்டினாள். அதில் போட்டோ ஒன்று மின்னியது. அனு வாங்கி கவனமாக பார்த்தாள். “நல்லா இருக்கார்க்கா.. பேர் என்ன..?” என்றாள் அனு முகம் நிமிர்த்தி. “சஞ்சய்..” என்றாள் சித்ரா. “அப்படியே புல் டீடைல்ஸ் சொல்லுக்கா..” அனு பெட்டில் அமர்ந்தாள். “சென்னைல ஐடி கம்பெனில வேலை பார்க்கிறார், அப்பா, அம்மா, தம்பி, அவங்க சொந்த ஊர் வேலூர், ம்ம்.. இவ்வளவு தான் அம்மா சொன்னாங்க..” என்றாள். “ம்ம்..” இந்த சம்மந்தம் முடிந்தால் மகிழ்ச்சி தான். சித்ராவிற்கு வயது கூடுகிறதே. அவளுக்கு செவ்வாய் தோஷம் உண்டு. இருபத்தி ஒன்றிலே வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அனுவை விட ஆறு வயது பெரியவள் சித்ரா. இப்போது அவளுக்கு இருப்பத்தியாறு வயது. நல்ல சம்பந்தமாக இருந்தால் இதுவே முடிந்து விட வேண்டும்.. அனு மனதில் வேண்டுதல் வைத்தாள். சித்ராவிற்கு இது எல்லாம் சலிப்பாக இருந்தது. வரன் பார்க்க ஆரம்பித்த முதலில் எல்லாம் அவளுக்கும் அந்த ஆர்வம் இருக்க தான் செய்தது. ஆனால் இந்த செவ்வாய் தோஷத்தால் எல்லாம் கை விட்டு போகவும், அவளுக்கு அந்த ஆர்வம் மெல்ல குறைய ஆரம்பித்து தேய்ந்தே போனது. இதோடு பலமுறை பெண் பார்க்கும் படலத்திற்கு தயாராகி நின்றுவிட்டாள். இத்தனைக்கும் அவளின் அப்பா மிகவும் தெரிந்தெடுத்து தான் பெண் பார்க்கவே வரவைத்தார். ஆனாலும் இரண்டு, மூன்று முறைக்கு மேல் எனும் போது சித்ராவிற்கு கசந்து போனது. இப்போதும் மிகவும் சாதாரணமாக தான் கிளம்பினாள். பார்த்த அனு, “க்கா.. ஜிமிக்கி, பூ மட்டும்.. ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சுதலாக. “ம்ப்ச்.. விடு அனு..” சித்ரா மொபைல் பார்க்க, “க்கா.. ப்ளீஸ், ப்ளீஸ்..” அனு கெஞ்சி சாதாரண தோடு மாற்றி, பெரிய ஜிமிக்கி மாற்றியவள், தலையில் சிறிதே வைத்திருந்த பூவுடன் இன்னும் சேர்த்து வைத்தாள். “இப்போ ஓகே..” அனு சொல்ல, “க்கா..” என்று வந்தான் ஆதர்ஷ். இவர்கள் இருவருக்கும் இடையில் பிறந்தவன் ஆதர்ஷ். “அப்பா ரெடியான்னு பார்க்க சொன்னார்..” என்றவன், “மாப்பிள்ளை வீட்ல இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்களாம்..” என்றான் தகவலாக. “ம்ம்..” சித்ரா தலை மட்டும் அசைக்க, ஆதர்ஷ் அனுவை பார்த்தான். அவள் அக்காவை பார்த்து உதடு பிதுக்கினாள். அவன் கீழிறங்கி செல்ல, சிறிது நேரத்தில் கார் ஒன்று நிற்கும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து, சில நிமிடங்களில் “அனு அக்காவை கூட்டி வா..” என்று சுஜாதாவின் குரல் வந்தது. அனு அக்காவை பார்க்க, அவள் மூச்சை இழுத்துவிட்டு, வர, அனு அக்காவுடன் கீழிறங்கினாள். “இங்க வாம்மா..” அன்பழகன் மகளை தன் பக்கத்தில் கூப்பிட, முன்னமே சுஜாதா எல்லாம் கொடுத்து உபசரித்திருக்க, சித்ரா எல்லோருக்கும் கை குவித்து வணக்கம் வைத்து அமர்ந்தாள். அனு மெல்ல வந்திருந்தவர்களை பார்த்தாள். முக்கியமாக மாப்பிள்ளையை. நன்றாக இருந்தார். அக்காவிற்கு பொருத்தமாக தான் இருப்பார்.. உள்ளுக்குள் திருப்தி தான். திரும்பி சித்ராவை பார்க்க, அவள் எங்கேயோ பார்த்து கடனே என்று அமர்ந்திருந்தாள். மாப்பிள்ளையாகப்பட்டவன் சித்ராவிடம் பேச வேண்டும் என, இப்போது இது எல்லாம் சகஜம் தான் என்றாலும், மகளுக்கு பிடிக்காது என்பதால் அன்பழகன் தயங்கவே செய்தார். அவரின் தயக்கம், சஞ்சய் புருவம் சுருக்க வைத்தது. “அங்கிள்.. அவங்க என்னை பார்த்த மாதிரியே தெரியல, நான் சம்மதம் சொல்லிட்டா, என்னை பார்க்காமலே அவங்க எப்படி சம்மதம் சொல்வாங்க, அதான் என்னை பார்க்க மட்டுமாவது சொல்லுங்க..” என்றான் திருத்தமாக. அவன் பேச்சில் சித்ரா கண்கள் தானே அவனை பார்க்க, அவன் பளிச்சென்று சிரித்தான். அவனின் சிரிப்பில் சித்ராவின் கண்களும் சிரிப்பை சிந்த, அதுவரை மிகவும் தவிப்புடன் அமர்ந்திருந்த அன்பழகன் குடும்பம், ஆசுவாசமாக மூச்சை விட்டனர். இந்த சம்மந்தம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுதலும் உடன் முளைத்தது. சஞ்சய் அப்படி நினைக்க வைத்தான். அவனின் வீட்டினரும் நன்றாக பழக, முடிந்துவிடும் என்று நம்பிக்கையும் வந்தது. ஆனால் சித்ராவின் திருமணத்திற்கான நேரம் இன்னும் கூடி வரவில்லை போல. அவளின் வயது பிரச்சனையானது. “என்ன படிச்சிருக்க, எங்க வேலை பார்க்கிற..?”ஆரம்பித்த பேச்சு அவளின் வயதில் வந்து நின்றது.