8

     ‘எதுக்கு இவளுக்கு இந்த வேலை?!’ என்று கவியை முறைத்தவன்,

     “ஆச்சா?! கிளம்பலாமா?!” என்று சிடுசிடுக்க,

     “ம் ஆச்சுப்பா?! அடுத்து காய் வாங்கப் போக வேண்டியதுதான்.  நீங்க போய் சந்தையைச் சுத்திப் பார்த்துட்டு வாங்க. நாங்க அதுக்குள்ள  காய்கறி எல்லாம் வாங்கிட்டு அதோ அங்க இருக்க அம்மன் கோவில்  கிட்ட நிக்குறோம்” என்றார் வைரம்.

     அவர் சொன்னது போலவே நண்பர்கள் நால்வரும் சுற்றிப் பார்க்கக்  கிளம்ப, பெண்கள் நால்வரும், காய்கறி வாங்கக் கிளம்பினர்.

     சிறிது நேரம் அவர்களுடன் வாங்கும் பொருட்களை சுமந்தபடி வந்த கங்கா,

     “எம்மா…” என்று இழுக்க,

     “என்னடி?!” என்றார் கற்பகம்.

     “எம்மா நானும் அவளும், அதோ அந்த வளைவிக் கடைக்கு போய் வரட்டுமா?!” என்று கெஞ்சத் துவங்க, 

     “அடியே இங்க வாங்குற பொருளைத் தூக்கிட்டு வரவாச்சும் கூட வாங்கடி. இப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போனா எப்படி?!” என்று கற்பகம் கத்த ஆரம்பிக்க,

     “விடு கற்பகம். அவளுங்க போகட்டும். இல்லாட்டி காயெல்லாம் வாங்கி முடிச்ச பிறகு நம்மளையும் கூட சேர்த்து இழுத்துட்டுப் போய் அங்க அரை மணி நேரம் நிக்க வைப்பாளுங்க!” என்றார் முன்னெச்சரிக்கையாய்.

     “அத்தை உஷாரு?!” என்று அவர் கன்னத்தைக் கொஞ்சியவள்,

     “வாடி போகலாம்” என்று தோழியின் கைப்பற்றி இழுக்க,

     “எனக்கு எதுவும் வேணாம்டி. நீ மட்டும் போயி வாங்கிட்டு வா” என்று மறுத்தாள் கவி.

     “டி என்ன?! ஆசையா கூப்பிடுறால்ல. போயிட்டு வாம்மா. எல்லாஞ் சரியாகிடும்” என்று மகளின் மனம் அறிந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் வைரம்.

     “என்னமோ வைரம், கொஞ்ச நாளா இந்தப் பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியலை! எப்படிச் சிரிப்பும் கும்மாளமுமா வளைய வருவா?! ஏன்தான் இந்தக் கண்ணன் பயலுக்கு இவ பாசம் புரியாம போச்சோ?!” என்று வேதனை கொண்டார் கற்பகமும்.

     “என்னவோ நேரம்! எல்லாமே நினைச்சது நினைச்சபடி நடந்துட்டா தெய்வம் எதுக்கு?! எது எப்படி இருந்தாலும் இறுதியா நல்லதுல முடிஞ்சா சரி” என்று தேற்றிக் கொண்டார் வைரம் தனக்குத் தானே.

     “டேய் நாம சுத்திப் பார்க்காத மால்களாடா?! இந்தச் சந்தையில என்ன இருக்குன்னு இங்க கூட்டிட்டுப் வரச் சொல்லி உயிரை எடுத்த?!” என்றான் கிஷோர் கார்த்திக்கிடம்.

     “டேய் இது சின்ன இடம்தான் டா! ஆனா இங்க இருக்க ஜனங்க எவ்ளோ சந்தோஷமா எல்லார்கிட்டயும் பரிச்சயமா சிரிச்சுப் பேசி பழகுறாங்கன்னு பார்த்தியா?! மாலுக்குப் போனா அப்படியா?! அங்கயும் நம்ம நாலு பேருதான் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கணும்!” என்று கார்த்திக் சொல்லி கொண்டிருக்க,

     “என்னய்யா கண்ணா எப்படி இருக்க?!” என்று கண்ணனின் முதுகில் தட்டி நலம் விசாரித்த அவனின் ஒன்று விட்ட சித்தப்பா,

     “அதிசயமா ஊருக்கு உன் கூட்டாளிங்களைக் கூட்டியாந்திருக்கன்னு கேள்விப்பட்டேன். இவுகதானா அவுங்க?! பார்த்தா நல்ல பசங்களாத்தான் தெரியுது?! பட்டணம் போறதுக்குள்ள நம்ம ஊட்டுக்கு ஒரு நாள் விருந்துக்கு அழைச்சிட்டு வா” என,

     “சுவர் அங்கிள் கண்டிப்பா வரோம்.” என்றான் கண்ணனுக்கு பதில் கார்த்திக்.

      “அடேய்!” என்று பிரதாப் அவன் காலை மிதிக்க,

     “ஹான் அழைச்சிட்டு வரேன் சித்தப்பா” என்ற கண்ணன்,

     “வீட்ல தொத்தா, தம்பி, தங்கச்சி எல்லாரும் சௌவுக்கியமா?!” என்றான்.

     “அவங்களுக்கென்ன ஜோரா இருக்காங்க” என்றவர்,

     “சரி சரி நீங்க போயி சுத்திப் பாருங்க. நானும் போயி ஊட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு ஓடுறேன். நேரமானா உங்க தொத்தா கத்த ஆரம்பிச்சுடுவா” என்று அவர் கிளம்பிவிட,

     “பார்த்தியாடா! நான் சொன்னேன்ல இந்த அறிமுகம், நலம்விசாரிப்பு எல்லாம் இது மாதிரி கிராமத்துல தான் கிடைக்கும். ஒரே நாள்ல எனக்கு இந்த கிராமம் அவ்ளோ பிடிச்சுப் போச்சு தெரியுமா! பேசாம ஐடி வேலையும் வேணா, சிட்டி லைஃபும் வேணான்னு இங்கயே கொஞ்சம் இடம் வாங்கிட்டு வந்து விவசாயத்துல இறங்கிடலாமான்னு தோணுது காலையில இருந்து!” என்றான் கார்த்திக் ஆவலாய்.

     “தோணும்டா தோணும்!” என்று நக்கலடித்த பிரதாப்,

     “விட்டா இங்கயே பொண்ணு பார்த்து ஊரோட மாப்பிள்ளையா செட்டில் ஆகிடுவ போல?!” என்றான் கேலியாய்.

     “கொடுத்தா தாராளமா செட்டில் ஆகிடுவேன்” என்று கார்த்திக் மந்தகாசப் புன்னகையுடன் சொல்ல, நண்பர்கள் மூவரும் அவனை வெகுவாய் முறைத்தனர்.

     “டேய் நீ உதை வாங்காம போகப் போறதில்லை போல!” என்று இப்போது கிஷோரும் சொல்ல,

     “நல்ல பொண்ணு கிடைக்கிறதா இருந்தா உதை வாங்கினாலும் தப்பில்லை!” என்ற கார்த்திக்,

     “டேய்! அங்க சுடச் சுட அவிச்ச மரவள்ளிக் கிழங்கு மசாலா போட்டு தாளிச்சு விக்கிறாங்க பாருடா! வாங்க போய் சாப்பிட்டுட்டு வருவோம்!” என்று அவர்களை அழைத்தபடி நடந்தான்.

     “இவன் அப்படியே உனக்கு ஆப்போசிட் கண்ணா! உனக்கு எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் அவனுக்குப் பிடிச்சிருக்கு!” என்றான் பிரதாப்.

     “அவன் இங்க பொறந்திருக்கணும். கண்ணன் சிட்டில பொறந்திருக்கணும்டா. மாறிப் பிறந்துட்டானுங்க!” என்று சிரித்தான் கிஷோரும்.

     இதையெல்லாம் கேட்டிருந்த கண்ணனுக்குதான் ஏனோ சம்மந்தமே இல்லாமல் எரிச்சலாய் வந்தது.

     அனைவரும் சந்தை ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, வீடு திரும்ப ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

     “என்னா பிள்ளை, காய் வாங்கப் போனவங்க துணிமணி எல்லாம் அள்ளிக்கிட்டு வந்திருக்கீங்க?!” என்று வீரபாண்டி அவர்கள் வரும்போதே கேட்க,

      “எல்லாம் கார்த்திக் தம்பி வாங்கிக் கொடுத்ததுங்க. உங்களுக்கும் அண்ணன்களுக்கும், முருகனுக்கும் கூட வாங்கிக் கொடுத்திருக்கு” என்றவர் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களிடம் வாங்கி வந்திருந்த புதுத்துணிகளை கொடுக்க,

     “ஏன் தம்பி இம்புட்டு செலவழிச்சு வாங்கிக்கிட்டு?! அதான் நேத்தே கண்ணன் வாங்கியாந்துட்டான்ல?!” என்றார் வீரபாண்டி.

     “இருக்கட்டும் அங்கிள் எனக்குதான் பேமிலி இல்லை! இங்க வந்த பிறகு நீங்க எல்லோரும் என் குடும்பம் போல தோணுச்சு! அதான் வாங்கினேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்!” என்று அவன் நிறுத்த, என்னவென்பது போல அனைவரும் பார்க்க,

     “நாளைக்கு பொங்கலுக்கு எல்லோரும் நான் எடுத்துக் கொடுத்த புதுத்துணியைத்தான் உடுத்திக்கணும்” என்றான் அன்புக் கட்டளையாய்.

     “அட அவ்ளோதானய்யா உடுத்திக்கிட்டா போச்சு!” என்று ரத்தினம் உடனே சம்மதம் தெரிவிக்க, அவள் மட்டும் சட்டென தன் மாமன் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

     அவன் முகத்தில் அவள் எதிர்பார்த்தது போலவே எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவளுக்கு அந்தக் கோபத்திலும் கூட சிரிப்பு எட்டிப் பார்த்தது.

     “என்னடி சிரிக்க?!” என்று கங்கா தோழியின் காதில் கிசுகிசுக்க,

     “என் மாமனைப் பாரு” என்று அவள் சைகை செய்ய,

     அவன்புறம் திரும்பிப் பார்த்த கங்கா, “ம்க்கும்! உன் மாமனுக்குத் தனக்கும் சிரிப்பு வராது. மத்தவங்க சிரிச்சாலும் பொறுக்காது!” என்று கங்கா முணுமுணுக்க,

     “ஏய்! என் மாமனைப் பத்தி தப்பா சொன்ன பிச்சுப்புடுவேன் பிச்சு!” என்றவள்,

     “அதுக்குப் பாசம்டி! எங்க தான் வாங்கிக் கொடுத்தது உடுத்தாம அவங்க வாங்கிக் கொடுத்ததை உடுத்திக்குவோமோன்னு முகம் மாறிடுச்சு!” என்றாள்.

     “ரொம்ப நல்லா இருக்கு தம்பி! எதுக்கு எங்க குடும்பத்துக்கும் சேர்த்து எடுத்துக்கிட்டு?!” என்றார் மருதுவும் அவன் அன்பில் ஆச்சர்யம் கொண்டு.

     “இருக்கட்டும் அங்கிள். என்னைப் பொறுத்தவரை நீங்க எல்லோரும் ஒரே பேமிலியாதான் தெரியுறீங்க எனக்கு. சோ அட்டாச்ட் யு ஆல் ஆர்!” என்றான் வியப்புடன்.

     “சரி சரி நீங்க எல்லோரும் பேசிக்கிட்டு இருங்க. நாங்க போயி வேலையைப் பாக்குறோம்.” என்று சொல்லி வைரம் உள்ளே செல்ல, ஆண்கள் அனைவரும் திண்ணையில் அமர்ந்து பேசத் துவங்க, பெண்கள் அனைவரும் மறுநாள் பண்டிகைக்கு தேவையான வேலைகளில் இறங்கினர்.

     மறுநாள் பொங்கல் பண்டிகை இனிதே ஆரம்பமாக, அனைவரும் குளித்து முடித்ததும், கார்த்திக்கின் ஆசைப்படி அவன் அன்பாய் வாங்கிக் கொடுத்த உடையையே அணிந்து வர, கண்ணனின் முகம் சிறுத்துப் போனது.

      அதை கவனித்தும் கவனியாதவள் போல், அவளின் தாவணியை வேண்டுமென்றே கண்ணனின் முன் ஆட்டிக்கொண்டே வந்து இடுப்பில் செருகியவள், வீட்டின் வாயில் முன்னே பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட,

     வைரம் காமாட்சி விளக்கு கொண்டு வந்து கோலத்தின் முன் ஏற்றி வைத்து, கோலத்தின் நடுவே அடுப்பை வைத்துப் பற்ற வைத்தார். மஞ்சள் கொத்துக் கட்டப்பட்டிருந்த மண்பானையில் வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் தயாராகத் துவங்க, உள்ளே சமையலறையில் பூசணிக்காய் கூட்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், அவரைக்காய் தொக்கு, வாழைக்காய் வறுவல், புடலங்காய் புட்டு, என ஐவகைக் காய்கறிப் பொரியலும், பச்சை மொச்சை, கருணைக்கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் என  ஐவகைக் காய்கறிகள் போட்டு செய்யப்பட்டக் குழம்பும், உளுந்துவடையும் தயாராகி வீடு நிறைய கமகமத்தது.

    பொங்கல் தயாரானவுடன், பொங்கல் பானையைச் சுற்றி நான்கு கரும்புகளை ஒன்றாய் கட்டி நிற்க வைத்து, படையலுக்கு சமைத்த சமையலை, பூசணி இலைகளில் பரிமாறி,

     “பொங்கலோப் பொங்கல்!” என்று பெண்கள் அனைவரும் குலவை இட்டு, உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இயற்கையின் முதற்கடவுளாம் கதிரவனுக்கு தீபாராதனைக் காட்டி வழிபட, ஆண்களும் கைகூப்பி கதிரவனை வணங்கி நின்றனர். அவ்வாறே கங்கா வீட்டிலும் ஒரே நேரத்தில் படையலிட்டு வழிபட, படு கோலாகலமாய் இருந்தது பொங்கல் பண்டிகை.

     “செமையா இருக்குடா! எங்க வீட்ல கூட பொங்கல் கொண்டாடுவாங்க! ஆனா இவ்ளோ சந்தோஷமா ஒருநாளும் இருந்ததில்லை!” என்றான் கிஷோர்.

     “ஆமாம்டா! ரொம்ப சந்தோஷமா இருக்கு இங்க!” என்றான் பிரதாப்பும்.

     “இதுக்கெல்லாம் கண்ணனுக்குத் தேங்க்ஸ் சொல்றதா இல்லை இத்தனை வருஷமா நம்மை எல்லாம் இங்க கூட்டிட்டு வராம போனதுக்குக் கோவப்படுறதான்னு தெரியலை!” என்றான் கார்த்திக்.

     “டேய்!” என்று கண்ணன் முறைக்க,

     “சரி சரி ஏதோ இந்த முறை எங்களை அழைச்சிட்டு வந்ததுனால உன்னை மன்னிச்சு விட்டுடறோம்” என்ற கார்த்திக்கிடம்,

     “எல்லோரும் கற்பூரம் தொட்டு வணக்கிங்கோங்கய்யா” என்றார் ரத்தினம்.

     “ம் அங்கிள்” என்று கார்த்திக் முந்திக் கொண்டு வழிபட, கண்ணன் அவனுக்குப் பின் வழிபட்டான் அவனை முறைத்தபடி.

     நேற்று வரை அவனது முடிவாலும் பேச்சாலும் சோகமாய் இருந்தவளுக்கு, ஏனோ கார்த்திக்கால் அவனிடம் ஏற்படும் இந்த மாற்றங்கள் சின்னதாய் குதூகலத்தைக் கொடுக்க,

     “என்ன மாமா இந்த வருஷம் பொங்கல் களை கட்டுது போல?!” என்றாள் அவன் காதருகே வந்து கிசுகிசுத்து.

     அவள் எதை நினைத்து அப்படிச் சொல்கிறாள் என்று புரியாது போனாலும்,

     “என்னடி லந்தா?!” என்றான் முறைப்புடன்.

     “நான் ஏன் மாமா உன்கிட்ட லந்து பண்ணப் போறேன்?! நான் என்ன உன்னைக் கட்டிக்கப் போறவளா?!” என்று கேட்டு அவள் அவன் வாயை அடைக்க, அவனுக்கு ஏதோ போல் ஆனது.