Raaja Bavani 1 2 20085 “அப்புறம் சொல்லுங்ண்ணா.. எலக்ஷன் வருது, வேலை எல்லாம் எப்படி போகுது..?” தனா பேச்சு கொடுக்க, “அதெல்லாம் அமோகமா போகுது, இந்த முறை நான் தான் MLA, நம்ம கட்சி தான் ஆட்சி..” என்றார் அவர் உற்சாகமாக. “நல்லதுண்ணா.. டீ எடுத்துக்கோங்க..” தனா சொல்ல, எடுத்து கொண்டவர், “இன்னும் கொஞ்ச நாள் தான், அப்புறம் இந்த ஏரியா எல்லாம் நாம தான், அது தெரியாம சிலர் ஓவரா ஆடுறாங்க..” அவர் குருமூர்த்தி பார்த்து சொல்ல, தனாவிற்கு புரிந்து போனது. அப்பா ஏதோ வினையை இழுத்து விட்டுவிட்டார் என்பது. “எல்லாம் நம்ம ஏரியா ஆளுங்க தானே, புரிஞ்சுப்பாங்க, நீங்க சொல்லுங்கண்ணா..” என்றான். “அது ஒண்ணுமில்லை தம்பி, நம்ம பையன் வந்ததுக்கு உங்க அப்பா ஏதோ பேசினார்ன்னு கேள்விப்பட்டேன், அதான் என்ன எதுன்னு கேட்டுட்டு போக வந்தேன்..” என்றவர், குருமூர்த்தியை பார்த்து, “என்னண்ணா.. பசங்ககிட்ட பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருக்கீங்க போல..” கேட்டார். “நான் கொடுக்க மாட்டேன் சொல்லலை, அவங்க கேட்கிற காசு தான் தரமாட்டேனு சொன்னேன்..” என்றார் குருமூர்த்தி. “எவ்வளுடா கேட்டீங்க..?” ஆட்களிடம் கேட்டு கொண்டவர், “இவ்வளவு தானே, இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு..” என்றார் அவர். “இவ்வளவு தானா..” சில லட்சங்கள் கேட்டிருக்க, குருமூர்த்தி மகனை பார்த்து மூச்சு வாங்கினார். “ண்ணா.. அவ்வளவு கஷ்டம், அடுத்த மாசம் உங்களுக்கு கொடுக்கும் போது சேர்த்து கொடுக்கிறேன், இப்போ மொத்தமா முடியாது..” தனா பொறுமையாக சொன்னான். “தம்பி என்ன நீயும் புரியாம பேசுற..? எலெக்ஷன் செலவுக்கு தானே கேட்கிறோம், உங்களுது ரெண்டு கடை, அதுக்கு இவ்வளவு காசு வரும் தானே..?” என்றார் அவரோ சட்டமாக. “ஆமாடா உங்க அப்பன் வீட்டு துட்டு பாரு, தூக்கி கொடுக்க..” குருமூர்த்தி உள்ளுக்குள் கொதிக்க, தனா நிதானமாக, “ண்ணா.. நம்ம கட்சிக்கு, உங்க பதவிக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம், ஆனா பாருங்க, இப்போ கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலை, உங்களுக்கு மட்டுமில்லை, மத்தவங்களுக்கு கொடுக்கணும், அதனால தான் அடுத்த முறை சேர்த்து கொடுக்கிறேன் சொல்றேன்..” என்றான். “அப்படியென்ன பெரிய இக்கட்டு..? நல்ல லாபம் பார்த்துட்டு யாரை ஏமாத்த பார்க்கிறீங்க..?” உடன் வந்தவன் எகிற, தனா அவனை நேராக பார்த்தவன், “நான் அண்ணாகிட்ட பேசிக்கிறேன், நீ அமைதியா நில்லு..” என்றான் அழுத்தமாக. “தம்பி.. மத்தவங்க எல்லாம் தோற்க போறவங்க, அவங்களுக்கு எதுக்கு பணம், துரத்தி விடுங்க..” என்றார் வைரவேலோ. “அது நாம சொல்ல முடியாதேண்ணா, யாரு எப்படின்னு நாம போடுற ஓட்டுல தானே இருக்கு..” என்றான் தனா அர்த்தமாக. அவர்கள் ஊரில் பெரிய குடும்பம், ஊர் கவுண்டர் எல்லாம் குருமூர்த்தி குடும்பம் தான். ஓட்டு தொகையும் மிக கணிசமாக இருக்க, “அது உண்மை தான்ப்பா..” வைரவேலுக்கு அவன் சொல்ல வருவது புரிய, உடன் வந்தவர்களுக்கு புரிய வேண்டுமே. “தலைவரே.. இன்னா இவங்கிட்ட எல்லாம் பேசிகிட்டு, யோவ் இப்போ நீ பணம் எடுத்து வைக்கல..” முன் பேசியவன் குருமூர்த்தியிடம் எகிறி கொண்டு போக, தனா அவன் முன் நின்றான். இருவரின் நெஞ்சும் மோதி நிற்க, “அண்ணா கூட வந்துட்டா நீ என்ன பெரிய பருப்பா..? அவருக்கு தான் மரியாதை, நாய் உனக்கு இல்லை, கை கால் அடக்கி நின்னுட்டு போகணும், இல்லை..” விரல் நீட்டி எச்சரித்தான். “தம்பி.. தம்பி.. விடுங்க, அவன் என் தூரத்து சொந்தம், உங்களை எல்லாம் தெரியாது..” வைரவேல் சமாதானமாக சொன்னவர், “டேய் முட்டாள் பையலே.. வெளியே போடா, அவனை இழுத்துட்டு போங்கடா..” என்று ஆட்களுக்கு சத்தமிட்டவர், “நீங்க கொடுக்கிற பணமே கொடுங்க, நாம அப்புறம் பார்க்கலாம்..” என்று கிளம்பிவிட்டார். “ப்பா.. இனி யார் இப்படி வந்தாலும் நீங்க எதுவும் பேசாதீங்க, என்கிட்ட அனுப்பிவிடுங்க..” என்றவன், வேகமாக அவன் சூப்பர் மார்க்கெட் சென்றான். மெயின் ரோடில் ஒற்றை மாடி கொண்ட சூப்பர் மார்க்கெட் அவனுடையது. உள்ளூர் காலேஜில் MBA படித்து முடித்தவன், அப்பா, அம்மா நினைத்தது போல வேலை தேடி கொண்டு சென்னை, பெங்களூர் செல்லவில்லை. அவனுக்கு அவன் ஊரை விட்டு செல்ல முடியாது. அப்பா, அம்மா, குடும்பம், சொந்த மண் பற்று இதனுடன் வேறொரு காரணமும் உள்ளது. “என்னடா இன்னும் காணலையே பார்த்தேன்..” குகன் இவனை பார்த்து கிண்டலாக சொல்ல, “போய் வேலையை பாரு, போடா..” தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான். “மாட்டுனியா..” சாருலதா அவள் தோழிகளுடன் கடைக்குள் வர, அச்சோ இவளுக்கு இன்னைக்கு பர்த் டே ஆச்சே.. உள்ளுக்குள் குட்டி கொண்டவன், “என்ன ஓசி சாக்லேட்டுக்கு வந்தாச்சா..” கிண்டலாக அந்த கூட்டத்தை பார்த்தான். “ஆஹா கொடுக்கிற ஒரு ரூபாய் எக்லர்ஸ்க்கு..” கிண்டலாக சொன்ன சாரு, “என் பர்த் டே மறந்ததுக்கு பனிஷ்மெண்ட்டா எங்க எல்லோருக்கும் இன்னைக்கு ஐஸ்கிரீம் வேணும்..” என்றாள். “சரி சரி எடுத்துக்கோங்க..” தனா சொல்ல, எல்லோரும் ஐஸ்கிறீம் எடுக்க செல்ல, இங்கு தானோவோ வாசலை பார்த்து கொண்டிருந்தான். “இன்னும் என்ன பண்றா..” தலையை கோதி கொண்டவன், திரும்பி பார்க்க, எல்லோரும் கையில் இரு ஐஸ்கிரீமுடன் நின்றிருந்தனர். “ஏய் குட்டி பிசாசுகளா.. ஒழுங்கா ஒன்னு மட்டும் எடுங்க..” என்றான் அதட்டலாக. “அது நீ எனக்கு காலையிலே விஷ் பண்ணி, பணமும் கொடுத்திருந்தா..” சாரு நக்கலாக சொல்ல, “போய் தொலை.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்..” என, “அதை அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றாள் அவளோ. “இம்சை..” தனா தங்கையை திட்ட, சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது. அதன் சத்தத்திலே தனா வேகமாக திரும்பி பார்த்தான். ஹெல்மெட்டை கழட்டி வைத்து கொண்டிருந்தாள். அவள் “அனுபமா..” ஊரை விட்டு செல்லாத அவனின் இன்னொரு காரணம் இவள் தான். அவனின் அவள். இன்றோ நேற்றோ இல்லை, சில வருடங்களாய். சாருலதா படிக்கும் அதே கல்லூரியில் இவளும் டிகிரி இறுதி ஆண்டு மாணவி. வேறு வேறு பிரிவு என்பதால் சாருவிற்கும், இவளுக்கும் முக பரிச்சயம் மட்டுமே. உள்ளே வந்தவளை தனா கண்கள் மின்ன பார்க்க, அனுவோ ஓரக்கண்ணால் அவனை பார்த்துவிட்டு, ஸ்டேஷனரி பக்கம் சென்றாள். “இந்த பார்வைக்கு இவ்வளவு ஓட்டம்..” அனுவுடன் வந்த அவள் தோழி பூமிகா கேலி செய்ய, அனு என்பவளோ ரகசிய பார்வையில் தனா பக்கம் சென்றிருந்தாள். “அடியேய் போதும், வாங்க வந்த அந்த ஒன்னாரூபாய் பேனா எடுத்துட்டு வா, வீட்டுக்கு போகணும்..” என்றாள். “ம்ப்ச்.. போலாம் இருடி..” அனு சொன்னவள், வேறு பார்ப்பது போல நின்றிருந்தாள். இவளோட.. பூமிகா அந்த கடையை சுற்றி வர, அனுவின் கண்களோ தனாவை தான் பாராமல் பார்த்து கொண்டிருந்தது. சந்தன கலர் ஹால்ப் ஹேண்ட் ஷர்ட், கருப்பு கலர் பேண்ட்டில், பின் தலையை கோதியபடி, அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். “ண்ணா.. எனக்கு பர்த் டே கிப்ட்டா அந்த டெடி எடுத்து தா, வா..” சாரு வர, குகன்.. என்று குரல் கொடுத்தான் இவன். “அவன் கொஞ்ச நேரத்துக்கு சிலையா தான் நின்னுட்டு இருப்பான்..” முனகிய குகன் சாரு கேட்ட டெடி எடுத்து கொடுத்தான். “மாமா.. ண்ணா.. எங்களுக்கு..” சாருவுடன் நின்றிருந்த அவன் ஒன்று, இரண்டு விட்ட முறை பெண்கள், தங்கை முறை உள்ள பெண்கள் கேட்டனர். அவர்கள் மாமா அழைப்பில், அனு உதடு சுழிக்க, தனாவிற்கோ குறும்பு மின்னியது. “உங்களுக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோங்க..” என்றான் அவளை பார்த்தபடி. “நிசமாவா மாமா..” அவர்கள் நம்பாமல் கேட்க, “அவன் ஏதோ சும்மா சொன்னான், உடனே நிசமாவான்னு வந்துருவீங்களே.. ஓசி ஐஸ்கீரிம் அதிகம், எல்லாம் வீட்டுக்கு ஒடுங்க..” என்றான் குகன். “அதான் வந்துடுவீங்களே, மாமா கொடுத்தாலும் நீங்க விட மாட்டீங்கண்ணா..” என்றவர்கள், “இந்த கீசெயின் மட்டும் எடுத்துகிறோம்..” புதிதாக வந்திருந்தவைகளை பார்த்து ஆசையாக கேட்டனர். அதன் விலையும் மிகவும் குறைவாக இருக்க, “எடுத்துக்கோங்க..” என்றுவிட்டான் தனா. ஹேய்.. என்று அவர்கள் குதூகலித்து எடுக்க, அனுவிற்கோ பொறாமையில் பொசுங்கியது. “மாமா கூப்பிட்டா கடைய கூட எழுதி கொடுத்திடுவார் போல..” முகம் கடுகடுவென்றானது. “என்னடி ஏசி ஓடியும் கடை கொதிக்குதே..” பூமிகா தோழியை வாரினாள். “சும்மா இருடி..” அனு அவளிடம் காய்ந்தவள், தனாவை முறைக்க, அவனோ அவர்களுக்கு கீசெயின் எடுத்து கொடுத்து வழியனுப்பி கொண்டிருந்தான். “இவரை..” பார்த்தவள் கண்களுக்கு அங்கிருந்த பீங்கான் கப் கண்ணில் பட, அதனை பார்த்துவிட்டு, தனாவையும் சவாலாக பார்த்தாள். தனா திரும்பியவன் புரிந்து கொண்டு கண்கள் விரிக்க, அனு மிகவும் சாகவாசமாக அதில் ஒன்றை கீழே தள்ளிவிட்டாள். கப் கீழே விழுந்து நொறுங்க, வேலை செய்பவர்கள் ஓடி வந்தனர். அவளோ “நான் இதுக்கு பே பண்ணிடுறேன்..” என்றாள். “கிளீன் பண்ணிடுங்க..” குகன் எல்லோரையும் அனுப்பி வைக்க, அனு பில் கவுண்டர் வந்தாள். காலையில் வைத்த வாடிய மல்லி பூ வாசம் நெருங்க வந்தவள், பர்ஸ் எடுக்க, “போக சொல்லுடா..” என்றான் தனா. “நான் ஒன்னும் இங்க யாருக்கும் முறை பொண்ணு இல்லை..” அனு வெட்டினாள். தனா முகத்தில் தாராளமாக சிரிப்பு மலர, “முறை பொண்ணா இல்லன்னா மட்டும் இங்க என்ன குறைஞ்சு போச்சாம்..?” என்றான். அனுவின் கோவம் மெல்ல குறைய, அவனின் உரிமை பார்வையில் முகம் சிவக்க வேறு பக்கம் பார்த்தாள்.