இராஜ பவனி 1

“குகன் மாமா.. பிரசாதம் எடுத்துக்கோங்க..” குரல் கேட்க, கணக்கு பார்த்து கொண்டிருந்த குகன் நிமிர்ந்து பார்த்தான்

சாருலதா கோவில் சென்று வந்த அடையாளத்துடன் நின்றிருக்க, ஆச்சரியமாக புருவம் தூக்கியவன்,  “எதுக்கு அடிப்போட இப்படி பக்தி மயமா காட்சி தரீங்க மேடம்..?” எழுந்து பிரசாதத்தை வாங்கியபடி கேட்டான்

இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்..”  அவள் முகம் மலர  சொன்னாள்

ஓஹ்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள், அப்பறம் மாமாக்கு எங்க சாக்லேட்..?” குகன் கேட்க

அதுக்கு என்கையில காசு இருக்கணும்..” என்றாள் உர்ரென்று

ஆத்தி..’ மனதுள் உஷாரான குகன், “அதான் பிரசாதம் கொடுத்துட்டியே, இதுவே போதும், நீ போய் காலேஜ் கிளம்பும்மா..” என்றான்

அதானே அவனை போல தானே நீங்களும் இருப்பீங்க..” அவள் நொடித்து உள்ளே செல்ல, குகன் உப்பென்று மூச்சு விட்டு, பிரசாதம் சாப்பிட்டு கை கழுவி, மறுபடியும் சிஸ்டம் முன் அமர்ந்தான்.

“வந்தாச்சா.. அப்பாக்கு பிரசாதம் கொடு, பின்கட்டுல இருக்கார் பாரு..” கிட்சனில் இருந்தபடியே வைதேகி குரல் கொடுக்க, சரிம்மா.. சாரு நேராக பின்கட்டுக்கு சென்றாள்

அங்கு அவளின் அப்பா, குருமூர்த்தி போனில் யாரிடமோ பேசி கொண்டிருக்க, சாரு அவர் வரும் வரை அமைதியாக நின்றாள். குருமூர்த்தி மகளை பார்த்து இரண்டொரு வார்த்தைகளில் போன் பேசி வைக்க, “ப்பா.. பிரசாதம்..” சாரு கொடுத்தாள்

இன்றோடு மகளுக்கு இருபது ஆகிறது. பெண்ணை பெற்றவராய் உள்ளுக்குள் பெரு மூச்சு விட்டவர், “குகன்கிட்ட நான் சொன்னதா ஐநூறு ரூபாய்  வாங்கிக்கோ..” என்று பிரசாதம் எடுத்து கொண்டார்.

அம்மா நச்சு தாங்காமா  கோவில் போய்ட்டு வந்ததுக்கு ஐநூறு ரூபாய் தேறுச்சு..”  மனதுள் குதூகலித்தவள், வெளியே நல்ல பிள்ளையாய் தலையாட்டி குகனிடம் ஓடினாள்

என்ன அப்பா காசு கொடுக்க சொல்லிட்டாரா..? மாமாக்கு சாக்லேட் வந்திடணும்..” குகன் எவ்வளவு என்று கேட்டு கொடுத்தான்

கொடுக்கிறேன்.. கொடுக்கிறேன்..” சாரு குறும்பாக சொல்ல

புரிந்த குகன், “பணம் கொடுத்து வாங்கி கொடுக்கணும்..” என்றான்

அது எதுக்கு உங்களுக்கு.. சாக்லேட் கிடைச்சா போதும் தானே..” சாரு சிரிப்புடன் சொல்லி ஓடிவிட, குகன் சிரித்தபடி வேலையை தொடர்ந்தான்.

“ம்மா..  அண்ணனை எங்க காணோம்..” சாரு அண்ணனை தேடி விட்டு அம்மாவிடம் கேட்டாள்

“லோடு வர நாள் இல்லை, அதான்  காலையிலே கிளம்பிட்டான்..”  வைதேகி சொல்லியபடி காலை உணவை டேபிளில் வைத்தார்

எனக்கு விஷ் கூட பண்ணாம போயிட்டானா உன் மகன், இன்னைக்கு இருக்கு அவனுக்கு..” சாரு கருவியபடி  டிபன் சாப்பிட்டு காலேஜ் கிளம்பினாள்.

“வைதேகி.. இன்னைக்கு மதிய சாப்பாட்டை மண்டிக்கே கொடுத்துவிட்டுடு, லோட் இறங்கிட்டு இருக்கு..”   குருமூர்த்தி சாப்பிட அமர்ந்தபடி சொன்னார்

சரிங்க.. தம்பிக்கும் சேர்த்து கொடுத்து விட்டுடுறேன், அவனும் அங்க தான் இருக்கான்..” என

ஆமாம் பின்ன.. அதை வேற தனியா சொல்லனுமா..? இவ்வளவு வருஷம் குடித்தனம் நடத்தியும் இன்னும் ஒவ்வொண்ணா புளி போட்டு விளக்கணும், இப்போ சாப்பாடு வைக்க போறியா..?  இல்லை என் வாய் பார்த்துட்டே நிற்பியா..?”  எப்போதும் போல  படபடவென பேசி முடிக்க, வைதேகி அவசரமாக டிபனை வைத்தார்

சட்னி வை.. எல்லாம் சொல்லணும்..” குருமூர்த்தி கடிய, முன்னமே வைக்க எடுத்து விட்டவர் கணவன் பேச்சு பழகி போனது என்பதால் அமைதியாக வைத்தார்

காபி எங்க..? சாப்பிட்டவுடன் கிளம்பணும் தெரியாதா..?” கையை கூட கழுவாமல் பேச, வைதேகி கிட்சன் ஓடி சென்று காபியுடன் வந்தார்

இங்க இருக்கேன், கண்ணை சுத்தி முத்தி பார்க்கிறதில்லையா, கடனுக்கேன்னு வச்சிருக்க போல..”  ஹாலில் இருந்தபடி சொல்ல, வைதேகி அவர் கையில் காபி கொடுத்தார். அவர் குடித்து முடிக்கும் வரை அங்கேயே நின்றவர், கொடுத்த டம்ளரை வாங்கி கொண்டு நகர்ந்தார்

வைதேகி போன் எங்க, பணம் எங்க.. எவ்வளவு நேரம்டி தம்மாத்தூண்டு டம்ளர் வைக்க..” அவர் திரும்ப கத்த, வைதேகி கையில் எல்லாம் எடுத்து கொண்டு அவரிடம் சென்றார்

சரி நான் வரேன்..” வெளியே வந்தவர், “குகன் சாப்பிட்டியா..”  அவனிடம் கேட்டார். மகனின் நண்பன், அவரின் ஒன்று விட்ட மச்சானின் மகன் என்பதால் அவர்களின் கணக்கு வழக்கு பார்க்க, கடைகளை பார்க்க என்று இருந்து கொண்டான்.

இதோ மாமா..” அவன் எழ

என்ன இன்னும் சாப்பிடலையா..?” திரும்பி மனைவியை பார்த்தார்

எனக்கு பசிக்கல மாமா.. அத்தை முன்ன இருந்து கூப்பிட்டு இருக்காங்க, இதோ போறேன், அத்தை.. வாங்க..”  குகன் கையோடு வைதேகியை கூட்டி கொண்டு உள்ளே வந்தான்

வெளியே குருமூர்த்தி பைக் கிளம்பும் சத்தம் கேட்கவும் தான் வைதேகி ஓய்ந்து போய் சோபாவில் விழுந்தார். குகன் அவர் பக்கத்தில் அமர்ந்தவன், “மகன் இல்லைன்னதும் மூர்த்திக்கு ஒரே ஆட்டம் தான்  போல..” என்றான் கசந்த சிரிப்புடன்

 “விடுடா.. வா நாம சாப்பிடலாம்..”  எழுந்தவர், அவனுக்கு உணவு வைத்துவிட்டு, போன் எடுத்து மகனுக்கு அழைத்தார். அவன் எடுக்கவும், அவன் சாப்பிட்டதை கேட்டு தெரிந்து கொண்டுகுகன் கையில் காபி கொடுத்துவிட்டு, தான்  சாப்பிட அமர்ந்தார்

குகன் அங்கேயே அமர்ந்து அவருடன் பேசியபடி காபி காலி செய்தவன், “நான் கடைக்கு கிளம்புறேன்த்தை.. இவன் வேற இல்லையே..”  என்று கிளம்பினான்.

எல்லாரும் கிளம்பி சென்றது வீடு அமைதியாக இருந்தது. வைதேகிக்கு மிகவும் பிடித்த நிமிடங்கள் இவை. ஆசுவாசத்துடன் தரையில் கால் நீட்டி அமர்ந்தவர், மகன் அவருக்காக சேகரித்து கொடுத்திருந்த பாடல்களை மொபைலில் ஒலிக்க விட்டபடி கண் மூடி கொண்டார்

வேலூர் ரத்னகிரியில் தான், குருமூர்த்தி.. வைதேகியின் குடும்பம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு. குருமூர்த்தி மண்டி வைத்திருந்தார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா கடைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் இவர்கள் மண்டியில் இருந்து தான் தானியங்கள் சென்று சேரும்

அவரை பின்பற்றி அவர் மகன் படித்து முடித்ததும், அப்பாவிடம் கேட்டு ரத்னகிரி டவுனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி கொண்டிருக்கிறான். மகள் சாருலதா  டிகிரி இறுதி வருடத்தில்

நேரம் பதினொன்று என்று அலாரம் அடிக்க, வைதேகி பாட்டை நிறுத்தாமல், மதிய உணவிற்கான வேலைகளை ஆரம்பித்தார். சரியாக ஒரு மணிக்கு குருமூர்த்திக்கு உணவு சென்றாக வேண்டும். ஆள் வருவதற்குள் வைதேகி சமைத்து, பேக் செய்து வைக்க, மண்டியில் இருந்து வந்த ஆள் எடுத்து சென்றான்

தம்பி சாப்பிட வாப்பா..” குருமூர்த்தி குடோனில் நின்றிருந்த மகனை சத்தமாக கூப்பிட்டார்

இதோப்பா..” என்று பதில் குரல் கொடுத்ததனஞ்செயன்.. தனா..’ அப்பா அவர் ரூம் செல்வதை பார்த்துவிட்டு, இரண்டாயிரம் நோட் எடுத்து கொடுத்தவன்

நீங்களும் போய் பிரியாணி சாப்பிட்டு வந்துடுங்க, அப்புறம் சப்ளை பண்ணலாம்..” மண்டியில் வேலை செய்யும் ஆட்களை அனுப்பிவைத்து, முகம் கழுவி சென்றான்

குருமூர்த்தி மகனுக்காக காத்திருக்க, இவன் சென்று பிளேட் எடுத்து வைத்து, அப்பாவிற்கு உணவு வைத்து, தானும் உடன் சாப்பிட்டான். “தம்பி.. அரிசி லோட் வந்துடுச்சா..” குருமூர்த்தி கேட்க

தனா, “இப்போ வந்துடும் சொன்னாங்கப்பா..” என்றான்

அவங்களோட இதே வேலையா போச்சு, எப்போ பாரு லேட், கேட்டா அந்த அன்பழகன்  ஏகப்பட்ட ஏத்தமா பேசுவான், என்னமோ அவன் மட்டும் தான் அரிசி  மில் வச்சிருக்கிற மாதிரிஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் சரக்கு எல்லாம் திருப்பி அனுப்பிச்சா தான் தெரியும் அவனுக்கு..” குருமூர்த்தி பேச, இங்கு தனாவிற்கு  பக்கென்றானது

விடுங்கப்பா.. அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ, எப்படியோ நாள் முடியறதுக்குள்ள வந்துடுது இல்லை..” சமதனாமாக சொன்னவன், “சரக்கு எல்லாம் டெலிவரிக்கு ஏத்திடலாமா..?” பேச்சு மாற்றினான்.

“ம்ம்..” குருமூர்த்தி சொல்ல, தனா அந்த வேலைகளை அவசரமாக முடித்தவன், நேரம் பார்க்க, அது மணி மூன்று என்றது

ப்பா.. கடைக்கு போய்ட்டு வந்துடுறேன்.. குகன் போன் பண்ணியிருந்தான்..” தனா சொல்ல

சரி.. சரி.. நீ கடைய பாரு, நான் இங்க பாத்துக்கிறேன்..” குருமூர்த்தி சொன்னார்

தனா வெளியே வந்து அவன் புல்லட் எடுக்க போக, தோரணையாக வந்தார் அந்த ஊரின் முன்னால் MLA வைரவேல். ம்ப்ச்.. தனா உள்ளுக்குள் சலித்து கொள்ள, “தம்பி கிளம்பிட்டீங்க போல..” கேட்டார் வந்தவரோ

ஆமாண்ணா.. கடைக்கு தான், நீங்க உள்ள வாங்க..” அவரையும், அவருடன் வந்த ஆட்களையும் உள்ளே அழைத்து சென்றவன் , “டேய் எல்லோருக்கும் டீ வாங்கிட்டு வா..” குரல் கொடுத்தபடி குருமூர்த்தி ரூம் கூட்டி சென்றான்

உட்காருங்க..” அவர்களை அமரவைக்க, குருமூர்த்தி தானும் வந்தவர், அவர்களை பார்த்தபடி முதலாளி சீட்டில் அதிகாரமாக அமர்ந்தார்