காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது பிரபஞ்சனுக்கு. கண்ணைத் திறந்தவன் தன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் தலை வைத்து உறங்கும் மனைவியைக் கண்டதும் மென்னகை கொண்டான். அவனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த வளைக்கையும், நெஞ்சில் பதிந்திருந்த மதிமுகமும் இது எனக்கான இடம் என்னும் உரிமையை சொல்ல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ரஞ்சனா. அவனது அசைவில் தலையை நெஞ்சிலிருந்து இறக்கி தலையணையில் வைத்துக் கொண்டாள்.
மனைவியின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்தவன் மனதுக்குள் பாட்டியின் குரல் கேட்க புன்னகைத்தான்.
“சின்ன அளவான நெற்றி, பெரிய கண்கள், வளைந்த அழகான புருவம், எடுப்பான மூக்கு, குண்டு கன்னம், சின்ன உதடு…” என ரசித்துக் கொண்டே வந்தவனின் பார்வை உதட்டின் கீழிருந்த குட்டி மச்சத்தை விட்டு அகல மறுத்தது.
“ஹூம்… அழகி டி நீ, என்ன…? எனக்கு தான் இன்னும் உன்னை ஆள முடியல…” பெருமூச்சுடன் சொன்னவன் மெல்ல எழுந்தான். குளியலறைக்குள் நுழைந்தவன் வெளியே வரும்போது ரஞ்சனாவும் எழுந்திருந்தாள்.
“ம்ம்…” என்றவள் குளியலறைக்குள் நுழைந்தாள். வெளியே வரும்போது காபியின் மணம் நாசியைத் துளைத்தது. அவள் முன் கோப்பையை நீட்டியவன், “காபி…! உன் காபி அளவுக்கு இருக்குமா தெரியல…” என்றபடி நீட்ட புன்னகையுடன் வாங்கியவள் உதட்டில் வைத்தாள்.
இன்ஸ்டன்ட் காபியின் சுவையில் இதழில் இன்ஸ்டண்டாய் ஒரு புன்னகை உற்பத்தியானது.
“ரொம்ப நல்லாருக்கு பிரபா…”
“தேங்க் யூ ரஞ்சு…” என்றவன் ஜன்னலருகே சென்று வெளியுலகின் காலை நேர பரபரப்பை ரசித்தபடி குடித்தான்.
அவன் அருகே சென்ற ரஞ்சனா, “பிரபா, இன்னிக்கு ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணி லெட்டர் வாங்கணும்… எனக்கு சென்னை ஏரியா அவ்ளோ பழக்கம் இல்ல, உங்களுக்கு எதுவும் வொர்க் இல்லன்னா என் கூட வர முடியுமா…?” தயங்கியபடி கேட்க திரும்பி முறைத்தான்.
“ரஞ்சு… இதென்ன கேள்வி, எனக்கு வேற வேலை இருந்தாலும் உன்னோட நான் வர மாட்டனா…? அடிக்கடி நான் உன் புருஷன்கிறத நீ மறந்து போயிடற, எப்பவும் மறக்காத போல ஏதாச்சும் பண்ணனும்…” முன்னதை சத்தமாய் சொல்லி பின்னதை வாய்க்குள் முனங்கினாலும் அவள் காதில் விழவே செய்ய புன்னகையை அடக்கிக் கொண்டபடி சொன்னாள்.
“ம்ம்… ஆமாம், புருஷன்னு மறக்காம இருக்க நானும் ஒண்ணு பண்ணலாம்னு இருக்கேன்…”
அவளது பதிலில் திகைத்த பிரபஞ்சன், “என்ன, என்னமா பண்ணப் போற…” என்றான் ஆவலுடன்.
“அது..வந்து… இன்னைல இருந்து உங்களை ‘டேய் புருஷா’ன்னு கூப்பிடலாமான்னு யோசிக்கறேன்…” சொன்னவள் நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்து விட அவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் காலை டிபன் செய்து கொண்டிருக்க, “நானும் ஹெல்ப் பண்ணறேன் ரஞ்சு…” என்று வந்தவனை முறைத்தாள்.
“செய்யுற உப்புமாவுக்கு நீங்க என்ன ஹெல்ப் பண்ணப் போறீங்க…?” என்றாள் அவள் கிண்டலுடன்.
“என்னது உப்புமாவா…? அச்சோ, அது ரொம்பத் தப்பு மா…”
“ஏன், உங்களுக்குப் பிடிக்காதா…?”
“எனக்குப் பிடிக்காத ஒரே டிபன் உப்புமா… அதை ஏன் இந்த லேடீஸ் தேசிய உணவு போல ஆக்கிட்டாங்கன்னு தான் தெரியல…” அவன் புலம்பலாய் சொல்ல சிரித்தாள்.
“இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க, மாவு அரைக்கப் போட்டிருக்கேன், நாளைல இருந்து உங்களுக்குப் பிடிச்ச டிபனா செய்து தரேன்…”
“ஹூம்…” என்றவன் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு நகர ரஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது.
அந்த உப்புமாவுக்கு சேர்த்துக் கொள்ள பப்படத்தைக் காய்ச்சி வைத்தாள். மும்பையில் உடன் பணி புரிந்த மலையாளச் சேச்சி ஒருவர் உப்புமாவுடன் பப்படத்தைப் பொடித்து சேர்த்து சாப்பிடுவதைக் கண்டு அவளும் சாப்பிட்டுப் பார்க்கப் பிடித்துப் போனதால் உப்புமா செய்யும் போதெல்லாம் பப்படம் காய்ச்ச மறப்பதில்லை.
தட்டில் வைத்து கணவனுக்குக் கொடுக்க, “என்னமா, உப்புமா கூட இதுவா…” என்றான் முகம் சுளித்து.
“சாப்பிட்டுப் பாருங்க…” என்றவள் அவன் முன்னில் அமர்ந்து தட்டிலிருந்த பப்படத்தைப் பொடித்து உப்புமாவுடன் சேர்த்து சாப்பிட அவனும் அப்படியே வேண்டா வெறுப்பாய் வாயில் வைத்தான். “ம்ம்… நல்லாருக்கே…” என்றவன் அதன் பின் விரும்பியே சாப்பிட்டான்.
“இருக்கு மா… இங்க சும்மா ஏன் நிறுத்தணும்னு, ஆபீஸ்ல ஒருத்தருக்கு யூஸ் பண்ணக் கொடுத்திருந்தேன்… அவர் எங்கயோ வெளியூர் போயிருக்காராம், நாளைக்கு வண்டியைக் கொண்டு வந்து தரேன்னு சொல்லிருக்கார்…”
“ஓ…! சரிங்க…” என்றவள் ஹாஸ்பிடல் செல்லத் தயாராக வண்டி வந்ததும் கிளம்பினர். அங்கிருந்து ஹாஸ்பிடலை அடைகையில் பத்து மணியை நெருங்கி இருந்தது. மருத்துவமனை அமைதியான சூழலில் அமைந்திருக்க அலுவலகம் சென்று காண வேண்டியவர்களைக் கண்டு பார்மாலிட்டீஸ் முடித்து கிளம்ப பதினோரு மணி ஆனது.
அடுத்த நாள் காலையில் சார்ஜ் எடுத்துக் கொள்வதாய் சொல்லி கிளம்பினாள் ரஞ்சனா. போகும்போதே ஹாஸ்பிடல் செல்லும் ரூட்டுக்கான பேருந்துகளை எல்லாம் பிரபஞ்சன் சொல்லிக் கொடுத்திருந்தான்.
வீட்டுக்கு வந்ததும் சமைக்க சென்றவளுக்கு பிரபாவும் காய்கறி கட் பண்ணி உதவி செய்ய சாம்பார், சாதம், பொரியல் என சமையலை முடித்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு டயர்டாய் இருந்தது.
அவனது வங்கி வேறு திசையில் இருந்ததால் இருவரும் தனித் தனியே சென்றாக வேண்டிய சூழ்நிலை. இருவரின் பணி இடங்களுக்கு நடுவே பிளாட் இருந்தது வசதியானது.
“ரஞ்சு… தினம் காலைலயும், சாயந்திரமும் ஒவ்வொரு மணி நேரம் டிராவலிங்லயே போயிடும், உனக்கு அவ்ளோ தூரம் போயிட்டு வர கஷ்டமா இருந்தா சொல்லு… ஹாஸ்பிடல் ஏரியாவுல வீடு மாத்திக்கலாம்…”
“இல்லங்க, அந்த ஏரியால வாடகை அதிகமா இருக்கும், எனக்கு குவார்ட்டர்ஸ்க்கு எழுதிக் கொடுத்துடலாம்… என்ன, கொஞ்சம் வெயிட் பண்ணனும்… சீனியாரிட்டி பிரகாரம் தான் குவார்ட்டர்ஸ் அலாட் பண்ணுவாங்க…” என்றாள்.
“ஓ… அதுவரை உனக்குப் போய்வர சிரமம் ஆச்சே…”
“பரவால்ல, சமாளிச்சுக்கலாம்…” என்றவள் எழுந்து அவளது துணிகளை அலமாரியில் அடுக்க சென்றாள். பிரபஞ்சன் லாப்டாப்புடன் கட்டிலில் அமர்ந்தான்.
“எக்ஸ்கியூஸ் மி, உள்ள வரலாமா…?” இனிமையான பெண் குரல் வெளியே நின்று அனுமதி கேட்க, யாரென்று பார்ப்பதற்காய் ரஞ்சனா வெளியே வர அழகிய பெண் ஒருத்தி ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து கையில் இரண்டு புத்தகங்களுடன் நின்றிருந்தாள்.
“ரஞ்சு இல்லியா…?” என்றவளின் பார்வை உள்ளே தேட குழப்பமாய் கண்ணை சுருக்கினாள் ரஞ்சனா.
“நாந்தான் ரஞ்சு, நீங்க யாரு…?” என்றதும் அப்பெண் திகைத்து புரியாமல் முழிக்க அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு பிரபஞ்சன் வெளியே வந்திருந்தான்.
“ஹேய் தியா, வா…”
“ஹாய் ரஞ்சு, உங்ககிட்ட வாங்கின புக்ஸ் கொடுக்கலாம்னு வந்தேன்…” என்றவளின் பார்வை ரஞ்சனாவை எடை போட பிரபஞ்சன் அவஸ்தையாய் மனைவியை நோக்கி சிரித்தான்.
“ரஞ்சு… இது தியா, மேல் புளோர்ல இருக்காங்க… M.Com படிக்கிறாங்க..! தியா, இது என் ஒயிப் ரஞ்சனா…” என்று இருவரையும் அறிமுகப் படுத்தினான்.
“ஹோ, இவங்கதான் அந்த லக்கியா…? என் அளவுக்கு இல்லன்னாலும் அழகாதான் இருக்காங்க… ஹூம், இவங்க பேரும் ரஞ்சுன்னா இனி நான் உங்களை எந்தப் பேர் சொல்லி ஸ்பெஷலா கூப்பிடறது…?” கொஞ்சலாய் கேட்டவள் அவனை நோக்கிக் கண்ணடித்து சிரிக்க அவனோ பதட்டத்துடன் மனைவியைத் திரும்பிப் பார்க்க ரஞ்சனா இயல்பாய் இருந்தாள்.
“உள்ள வாங்க தியா…” ரஞ்சனா அழைக்க உள்ளே வந்தவள்,
“நான் உங்க பிரைவசி டைம்ல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டனா…?” என்றாள்.
“அப்படில்லாம் எதுவும் இல்ல, உக்காருங்க…” சொன்ன ரஞ்சனா அடுக்களைக்கு செல்ல பிரபஞ்சன் தியாவிடம் கிசுகிசுப்பாய் சிடுசிடுத்தான்.
“ஏய் தியா, என்ன நீ இப்படிப் பேசிட்டு இருக்க… ரஞ்சு நம்மளைப் பத்தி தப்பா நினைக்க மாட்டாளா…?”
“நினைச்சா நினைச்சிட்டுப் போகட்டும்…” என்றாள் அவள் அலட்சியமாய்.
“தியா, என்ன நினைச்சு இப்படிப் பேசற…? நான்தான் உன்கிட்ட தெளிவா எல்லாத்தையும் சொல்லிட்டனே, இன்னும் நீ பழைய நினைப்போட தான் இருக்கியா…?”
“லுக் ரஞ்சு, உங்களுக்கு வேணும்னா என் லவ் சாதாரணமா இருக்கலாம்… என்னால அப்படில்லாம் உடனே உங்களை மனசுல இருந்து தூக்கிப் போட முடியாது…” அவள் மெல்லிய குரலில் சொன்னாலும் ரஞ்சனாவுக்கு கேட்டு விடுமோ என்று பதறியவன் அவள் வருகிறாளா என்று பார்த்தான்.
ரஞ்சனா கையில் சுவீட் பாக்ஸுடன் வருவதைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டவன் அவள் முகத்தில் எதுவும் தெரிந்த பாவம் தெரிகிறதா எனப் பார்க்க சாதாரணமாகவே இருந்தவள், “ஸ்வீட் எடுத்துக்க தியா…” என்று கொடுக்க அவளும் மறுக்காமல் எடுத்துக் கொண்டாள்.
“நீ எந்தக் காலேஜ்ல படிக்கிற…?” ரஞ்சனா இயல்பாய் கேட்க தியா சொன்னாள்.
“நான் எத்திராஜ்ல படிக்கிறேன், நீங்க நர்ஸ்னு சொன்னாங்க, எந்த ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணறீங்க…?”
“கிண்டில இருக்கிற மிலிட்டரி ஹாஸ்பிடல்ல மா, நாளைக்கு டியூட்டில ஜாயின் பண்ணனும்… உன் வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க…?”
“நானும், அம்மாவும் மட்டும் தான்… அண்ணன் ராணுவத்துல சர்வீஸ் பண்ணிட்டு இருக்கார்…”
“ஓ… எங்க இருக்கார்…?”
“மும்பைல…”
“மும்பைலயா…? நானும் அங்க இருந்து தான் சென்னை வந்தேன், அவர் பேரு…?”
“அர்ஜூன்…” தியா சொல்லவும் ரஞ்சனாவின் முகம் சட்டென்று மாற அதிர்ச்சியுடன் குனிந்து கொண்டாள்.