“பரவால்லியே, வந்த வரை லாபம் என்று எண்ணாமல் இப்படி யோசிக்கிறாரே… அந்த வைஷூ போல அண்ணனுக்கு பேராசை இல்லை…” என அவனைப் பாராட்டினாள்.

“என்ன ரஞ்சுமா, அமைதியா இருக்க…”

“இல்ல பிரபா, அப்பாக்கு எனக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் எந்தக் குறையுமில்லாம செய்யணும்னு ஆசை… பணத்தைத் திருப்பிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டார், வருத்தப் பட தான் செய்வார்… இருக்கட்டும், அவர் ஆசை போல இன்னைக்கே கடைக்குப் போயி வேண்டியதை வாங்கிக்கலாம்…” அவள் சொல்ல அவன் மறுக்கவில்லை.

“நான் குளிச்சிட்டு வந்துடறேன்…” என்றவள், அம்மாவும், அத்தையும் பாக் செய்து அவர்களுக்காய் கொடுத்து விட்டதை எல்லாம் பாகில் இருந்து எடுத்து வெளியே வைத்தாள். மாற்றுத் துணி, டூத் பிரஷை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். அங்கே சோப்பைக் காணாமல் கணவனை அழைத்தாள்.

“பிரபா, இங்கே சோப் இல்லை…” என்றதும் அவன் அடுக்களைக்கு சென்று எடுத்துவந்து தந்தான். அலுப்பு தீர குளித்து முடித்தவள் டவலைத் தேட காணவில்லை.

“அச்சோ… டவல் எடுக்காம லூசு மாதிரி டிரஸ் மட்டும் எடுத்திட்டு வந்திருக்கமே…” என நொந்து கொண்டு தலையில் வழியும் தண்ணீரைக் கையால் வழித்துக் கொண்டு மீண்டும் கணவனை அழைத்தாள்.

“பிரபா, கொஞ்சம் டவல் எடுத்துக் கொடுங்க…” கதவை மெல்லத் திறந்து கையை மட்டும் வெளியே நீட்டியபடி சொல்ல அவன் அங்கே இருப்பது போல் தெரியவில்லை. மெல்ல தலையை நீட்டி எட்டிப் பார்க்க, அவன் இல்லை.

“பிரபா எங்க போயிட்டார்…” சலித்துக் கொண்டே அவிழ்த்த உடையால் உடலை மட்டும் துடைத்துவிட்டு நைட்டியைப்  போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

தலையிலிருந்து வழிந்த தண்ணீர் நைட்டியை நனைக்க பாகைத் திறந்து டவலைத் தேடியவள் அதை எடுத்து தலையைத் துவட்டிவிட்டு நிமிர பிரபா கதவைத் திறந்து மொபைலுடன் உள்ளே வந்தான்.

“எங்க போயிட்டிங்க பிரபா… டவல் எடுக்காம குளிக்கப் போயிட்டேன், உங்களைக் கூப்பிட்டா காணோம்…”

“சாரி ரஞ்சு… உன் அம்மா கால் பண்ணாங்க, பேசிட்டே வெளிய போயிட்டேன், அப்படியே என் அம்மாக்கும் கால் பண்ணி நாம வந்தாச்சுன்னு சொல்லிட்டேன்…” என, “அடடா, அம்மாவும், அத்தையும் ரீச் ஆனதும் என்னைக் கால் பண்ண சொன்னாங்களே, மறந்துட்டமே…” எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

“ம்ம்… சரி, நீங்க குளிச்சிட்டு வாங்க…” என்றவள் தலையைத் துவட்டியபடி நகர அவன் டவலுடன் குளிக்க சென்றான்.

“நாம டிபன் முடிஞ்சு வீட்டுக்கு வேண்டிய திங்க்ஸ் எல்லாம் போயி வாங்கிட்டு வந்துடலாமா பிரபா, உங்களுக்கு டயர்டா இருந்தா ஈவனிங் போகலாம்…” குளித்து வந்தவனிடம் சொல்ல, “எனக்கென்ன டயர்ட், போகலாம்…” என்றான்.

எட்டு மணிக்கெல்லாம் நம்ம ஜெயப்பிரதா இட்லி, சாம்பார், சட்னியைப் பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுக்க இருவரும் பசியோடு சாப்பிட்டனர். “மதியமும் நானே உங்களுக்கு சேர்த்து சமைச்சுடறேன்…” என்ற சரிதாவிடம் அன்போடு மறுத்து விட்டாள் ரஞ்சனா.

“இல்லமா, நீங்க இது செய்ததே ரொம்ப சந்தோஷம், உங்களுக்கு எதுக்கு சிரமம்… நாங்க கொஞ்ச நேரத்துல வெளிய கிளம்பறோம், லஞ்ச் வெளிய பார்த்துக்கறோம்…” என்றபடி கணவனை நோக்க அவன் தலையாட்டினான். இருவரும் சாப்பிட்டு முடிக்க சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு கிளம்பினர்.

கட்டில், அலமாரி, வாஷின் மெஷின், கிரைண்டர், சின்னதாய் ஒரு டீப்பாய், சோபா, குக்கர், சிறிது பாத்திரங்கள் என அத்தியாவசியமாய் உள்ள வீட்டு உபகரணங்களை ஆர்டர் செய்துவிட்டு மளிகை, காய்கறியையும் சிறிய அளவில் வாங்கி முடிக்க மணி இரண்டாகி இருந்தது.

“சாப்பிட்டு கிளம்பினா, டெலிவரி வண்டி வரதுக்குள்ள வீட்டுக்குப் போக சரியாருக்கும்…” பிரபஞ்சன் சொல்ல இருவரும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

எதிரெதிரே அமர, “என்ன சாப்பிடற ரஞ்சு…” என்றான்.

“எனக்கு வெஜ் பிரியாணி போதும்…” அவள் சொல்ல அவனுக்கு பிரைடு ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஹோட்டல் உணவு ரஞ்சனாவுக்கு பிடிக்காது என்பதால் அவள் மீதம் வைக்க அதையும் பிரபஞ்சனே சாப்பிட்டான்.

இருவரும் வீட்டை அடைந்து சிறிது அமர்வதற்குள் ஆர்டர் செய்த பொருட்கள் வண்டியில் வந்துவிட வண்டிக்காரன் போன் செய்தான். அதை இறக்கி முடிக்க ரஞ்சனா அடுக்களையில் சாதனங்களை ஒதுக்க, பிரபஞ்சன் மற்ற பொருட்களை பிட் செய்து வைத்தான்.

இறுதியாய் கட்டிலை பிட் செய்கையில் ரஞ்சனா காபியுடன் அத்தை கொடுத்து விட்ட முறுக்கும் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டவன் சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடர எதிரே சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்தவள் விழிகள் அவன் மீதே படர்ந்திருந்தது.

சட்டென்று பிரபஞ்சன் ஏதோ யோசித்துப் புன்னகைக்க அது அவளையும் தொற்றிக் கொள்ள அவனிடமே கேட்டாள்.

“எதுக்கு பிரபா சிரிக்கறீங்க…?”

“அது… ஒண்ணு நினைச்சேன், சிரிப்பு வந்திருச்சு…”

“அப்படி என்ன சிரிப்பு வர்ற அளவுக்கு யோசிச்சீங்க, நான் வண்டி ஓட்டிப் பழகினதையா…?”

“இல்ல ரஞ்சு, இந்தக் கட்டில் நம்ம வீட்டுல இருந்த கட்டில் அளவுக்குப் பெருசா இல்லியே, அதான் நினைச்சேன், சிரிச்சேன்…” என்று பாவனையுடன் சொல்ல கூச்சத்துடன் குனிந்து கொண்டவள்,

“ஹூக்கும், உங்களுக்கு யோசிக்க வேற எதுவுமே இல்லையா…” என்றபடி எழுந்து செல்லப் போக கையைக் குறுக்கே நீட்டித் தடுத்தான் பிரபஞ்சன். “என்ன…” என்பது போல் அவள் அவனைப் பார்க்க அவளுக்கு நேராய் எழுந்தவனின் கைகள் அவளது இரு பக்கமும் சுவரில் பதிந்து தடை செய்ய குறுகுறுக்கும் விழிகள் அவளது விழியோடு கலந்து ஏதேதோ கதை சொல்ல அவஸ்தையுடன் குனிந்து கொண்டாள்.

“ப்ச்… தள்ளுங்க பிரபா, நான் டின்னர் ரெடி பண்ணனும்…” சொன்னவளின் குரல் அவளுக்கே கேட்காமல் பாதி முழுங்கி இருக்க தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள் ரஞ்சனா.

அவனது விழிகள் அவளுக்குள் தன்னை விதைத்து விடுவது போல் பார்க்க, அவள் தொண்டைக் குழிகள் ஒரு விதப் புது உணர்வில் ஏறி இறங்கின. ஆவலுடன் அவள் முகத்தை நோக்கிக் குனிந்தவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டவள் நாணத்துடன் அடுக்களைக்கு ஓடிவிட, “ஏய்…!” என அவன் புன்னகைக்க அவளுக்குள்ளோ வெட்கமும், கூச்சமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

காதல் வெள்ளாமைக்கு

உன் வெட்கங்கள்

வேலியிட்டால்

முத்தங்களை

அறுவடை செய்வது

எப்பொழுது…?

இரவு உணவு சாப்பிடும்போதும் இருவருக்குள்ளும் ஒருவித மௌனமே ஆட்சி செய்ய, அவன் மனதில் பெண்ணவளை அறிந்து கொள்ளும் தேடல்களைத் தொடங்கும் ஆவல் குடி கொண்டிருக்க, அவளோ அச்சத்தின் போர்வைக்குள் நாணத்தோடு மாறி நிற்க அவளாகக் கனியக் காத்திருந்தான்.

பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைத்து தயக்கத்துடனே படுக்கை அறைக்கு வந்தாள் ரஞ்சனா. மொபைலை நோண்டியபடி படுத்திருந்தவன் முன்தினம் சரியாக உறங்காததும், இன்றைய நாள் ஓய்வின்றி ஓடியதுமாய் களைப்பில் உறங்கிப் போயிருந்தான்.

கணவனின் முகத்தையே பார்த்தவள் மனது அவளுக்காய் அவன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தது நினைவில் வர நெகிழ்ந்தது. அவனது கலைந்த தலை முடியை மெல்லக் கோதி விட்டவள் அருகே அமர்ந்து மீண்டும் அவன் முகத்தையே பார்த்தாள்.

காதுக்குள் அவன் குரல் ஒலித்து, “தூங்குற புள்ளையைப் பார்த்து ரசிச்சா ஆயுள் குறையும்னு பாட்டி சொல்லுவாங்க…” என்று சொல்ல, இதழில் விரிந்த புன்னகையுடன் குழந்தை போல் எல்லாம் மறந்து உறங்கும் கணவனின் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தவள் அருகே படுத்துக் கொண்டாள்.

சின்ன படுக்கையறை என்பதால் அதற்கேற்ப சின்ன கட்டிலைத் தான் வாங்கியிருந்தனர். இருவருக்கும் அது போதும் என்றாலும், நடுவில் அதிகமாய் இடைவெளி விடுவது கடினம். அவனைப் பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு இன்று ஏனோ உறக்கம் எட்டாக் கனியானது.

விழி திறந்தே

கனவுகளை அழைக்கும்…

சித்தம் சிதற வைத்து

பித்தம் கொண்டு பிதற்ற

வைக்கும் – காதல்

ஒரு நித்திரை அழிப்பான்…!!!