வரதன்  செண்பகத்தின் தலையை தடவிக் கொடுத்து,  “நீ சாதிக்க பிறந்தவ. அழக் கூடாது.  பூவாயி  நாம இன்னும்  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி.  இந்த இரண்டு புள்ளைகளையும் கூட மேல ஏதாவது படிக்க வைக்க முடியுமா பார்க்கலாம்” என்று கூற.

நீ  மட்டும் சரின்னு சொன்னா போதுய்யா.  “நம்ம கண்ணன் பொண்டாட்டி எழிலு புள்ள இதுக்கெல்லாம்   பேங்க்ல லோன் வாங்கி கொடுத்து எல்லா உதவியும் செய்யுது.  நாம அந்த புள்ள சொல்ற மாதிரி கேட்டா போதும்.  இந்த ரெண்டு பொட்ட புள்ளைகளையும் செண்பகத்தோட  சேர்த்து மேலே கொண்டு வந்துடலாம். நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போய்டும்”  என்று கூறினாள்.

“படிப்பறிவு இல்லாம நாம வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் போதும் புள்ள.  அந்த எழில பாத்து  என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்ணு.  இந்த புள்ளைக  இனி களத்துமேட்டில கஷ்டப்பட வேணாம்.  நாலெழுத்து படிக்கட்டும்”  என்று கூற.

பூவாயி முதல் முறையாக தன் கணவனின் தலையை வருடிக்கொடுத்து பெருமிதத்தோடு பார்த்தாள்.  பிள்ளைகள் மூவரும் தனது பெற்றோரின் மகிழ்ச்சியை கண்டு அவர்களை சேர்த்து கட்டிக்கொள்ள.

“கடவுள் காரணமில்லாம எதையும் செய்ய மாட்டாருய்யா.  இப்படி ஒரு சம்பவம் நடந்ததாலதே  நம்ம குடும்பத்துக்கு இப்படி ஒரு விடிவுகாலம்  வந்திருக்கு.  இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து நம்ம வாழ்க்கை படிப்படியாக உயர போகுது பாருய்யா” என்று கூற.

“எனக்கு குலசாமியா நீ இருக்கையிலே இனி நான் ஏன்டி கஷ்டப்பட போறேன்.  நான் களத்துமேடு வரைக்கும் போயிட்டு வாரேன்.  நீ ஆகவேண்டியத பாரு. புள்ளைகளுக்கு ஏதாவது செஞ்சு கொடுலே” என்று கூறி விட்டு நகர.

“செண்பகம் நான் அந்த தம்பி வந்திருச்சானு   பார்த்துட்டு ஒரு வார்த்த மன்னிப்பு கேட்டுட்டு வாரேன்.   மனசு கேக்கல.  பாவம் அந்த புள்ள.  வந்து இன்னைக்கு ஏதாவது உங்களுக்கு செஞ்சு தாரேன்” என்று கூற.

‘சரிம்மா’ என்றாள் செண்பகம்.

பூவாயி  வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.  ஆனந்த் இருந்த அந்த வீடு திறந்திருக்க.

“பூவாயிக்கு   தனியாக போக சற்று தயக்கமாக இருந்தது.  செண்பகம் கொஞ்சம் நீயும்  வா புள்ள” என்று கூற.

செண்பகம் வெளியில் வந்தாள். “நான் எதுக்கும்மா. நீங்களே போங்க” என தயங்கி நிற்க.

“எனக்கும் தயக்கமா தான் இருக்கு.  நீயும் வாடீ. அந்த தம்பி வந்துடுச்சு போல. ஒரெட்டு போயிட்டு வருவோம்” என்று கூற.

“என்னால தாம்மா இந்த தப்பே நடந்துச்சு.  நான் எப்படிம்மா அவங்க மூஞ்சில முழிக்கறது”  என்று தயங்க.

“அதேன் நான் கூட வரேன்ல. பாத்துக்கறேன் வா போலாம்” என்று “அவளை இழுத்துக்கொண்டு ஆனந்தின் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்.  தம்பி..  தம்பி” என்று ஆனந்தை  அழைக்க.

“வெளியில் பூவாயியோட குரல் கேட்டு ஆனந்த் எட்டிப் பார்க்க.  இருவரும்  சேர்ந்து நிற்பதைப் பார்த்த ஆனந்தின்  விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.  நீங்க..  நீங்க” என தயங்கினான்.

“நாங்கதே தம்பி. நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டேன்  தம்பி. ஏதோ தப்பு நடந்துபோச்சு. மன்னிப்பு கேட்கலாம்னுதே இவளையும் கூட்டிட்டு வந்தேன்” என்று கூற.

“ஐயோ! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா.  தெரியாம நடந்த தப்பு.  யார் மேல குத்தம் சொல்ல முடியும்.  அங்க எதுவுமே வேணும்னு நடக்கலம்மா.  அத நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே” என்றான்.

“தெரியாமதே நடந்துடுச்சி தம்பி.  என் புருஷன் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுதே  ஆகணும். தலைக்கு மேல வந்த  பிள்ளைய  கைய நீட்டி அடிச்சி இருக்காரே. அது ரொம்ப  தப்புதே.  உண்மையை உணர்ந்து திருந்தி இப்பதான் களத்து மேட்டுக்கு  போய் இருக்காரு.  வந்ததும் அவரையும் மன்னிப்பு கேட்க சொல்றேன் தம்பி” என்றார்.

 “ஐயோ!  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  அவரு புரிஞ்சிக்கிட்டதே  போதும். தப்பே பண்ணாம  தண்டனை கொடுத்தது தான் கொஞ்சம் மனசு வலிக்குது” என்று ஆனந்த் வருத்தத்தோடு செண்பகத்தின் கைகளைப் பார்த்தான். “என்னங்க உங்க  காயத்துக்கு மருந்து போட்டிங்களா?” என்று கேட்க.

“நம்ம கிராமத்துல மருந்தெல்லாம் யாரு தம்பி போடுறாக.  அருவாமன பூண்டு கசக்கி வெச்சி கட்டினா வெட்டுக் காயமே  ஆறிடும்.  அததே போட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதும்  அடிபட்டு இருக்கா தம்பி” எனக் கேட்க.

எனக்கு ஒன்னும் ஆகலங்க.   “உங்க பொண்ணுக்கு தான் வளையல் உடைஞ்சு ரத்தக்காயம் பட்டுருச்சு.  எதுக்கும் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று கூறிய ஆனந்தின் விழிகள் ஏனோ  செண்பகத்தின் விழிகளோடு  மோத.

எப்போதும் குறும்பும், கோபமுமாக விறைப்போடும்,  வீராப்போடும் சுற்றிக் கொண்டிருக்கும் செண்பகத்தின் விழிகள் முதல் முறையாக தயக்கத்துடனும், பயத்துடனும் ஆனந்தின் கூர்முனை விழிகளை எதிர்நோக்க முடியாமல் நிலத்தை நோக்கி நின்றது.

அதையும்  ஆனந்தால்  நன்றாக உணர முடிந்தது.  ஏனோ அவனுக்குள் தோன்றிய  ஒரு இனம்புரியாத தவிப்பை அவனது மனம் உணரத்தான் செய்தது.

செண்பகம்,  “தம்பி கிட்ட மன்னிப்பு கேளு” என்று கூற.

செண்பகம், “தயங்கி தயங்கி என்ன மன்னிச்சிடுங்க”  என்றாள்.

செண்பகம் கூறியது கூட அவனது  காதிற்குள் நுழைய மறுத்து அவளது விழிகளோடு  போர் நடத்திக் கொண்டிருந்தது. இதுவரை வெறுமையாக பிடிப்பில்லாமல் இருந்த அவனது மனதில் செண்பகம் மெதுவாக ஊடுருவத் தொடங்கி இருந்ததாள். ஆழ் மனமோ இவன் தான்டா உனக்கானவள்னு துடிப்பது போலத் தோன்றியது.

செண்பகம், மீண்டும் ‘மன்னிச்சிடுங்க’ என்று அழுத்தமாகக் கூற.

அந்த அழுத்தமான காந்தக்குரல் அவனை தட்டி எழுப்ப,  “அதெல்லாம் பரவா இல்லைங்க. காயத்துக்கு ஏதாவது மருந்து போடுங்க.  செஃப்டிக் ஆகிடப்  போகுது”  என்று கூற.

அதெல்லாம் பார்த்துக்கலாம் தம்பி.  “நீங்க எதுவும் சாப்பிட்டீங்களா? காலைல சோறு தண்ணி ஆக்கின மாதிரியே தெரிலயே” என்றாள் .

“இன்னும் இல்லம்மா.  இனிமேதான் செய்யனும்” என்று கூற.

சரி இன்னைக்கு உங்களுக்கு விருந்து நம்ம வீட்லதே.  முதல் முறையா என் புருஷன் மனம் திருந்தி சின்னதுகளையும்   படிக்க வைக்கலாம்னு  சொல்லிட்டு போயிருக்காக. எங்க வாழ்க்கையில இனிமே  எல்லாமே வளமாதே  இருக்கப் போகுது.  இன்னைக்கு நம்ம வீட்டில விழுந்து விருந்து சோறுதே.  சமச்சி குடுத்து அனுப்புறேன்.  “நீ ஒன்னும் செய்ய வேண்டாம் தம்பி” என்று கூறிவிட்டு, “செண்பகா வா போலாம்” என்று கூப்பிட.

பூவாயி கூறிய வார்த்தைகள் பாவையவள்  காதில் விழாமல் இரு  ஜோடி விழிகளும் போராட்டத்தை நடத்த தொடங்கியிருந்தது.

விழிகள் எனும் கூறிய அம்பினால் காதலெனும் மை கொண்ட ஓவியம் தீட்டத் தொடங்கியிருந்தனர்.  விழி அம்பில் இருந்து விலக முடியாமல் இருக்க. அவளை  விதி எனும் சதி  தாயின் வடிவில் இழுத்துச் சென்றது.

மதிய விருந்து அவர்கள் வசதிக்கேற்ப அருமையாக தயாராக இருந்தது.

நெல்லு சோறு ஆக்கி தனியாக எடுத்து வச்சிட்டு, தொவரம் பருப்ப வேகவச்சி தம்பட்டங்காய கிள்ளிபோட்டு, சின்ன வெங்காயம், தக்காளி, சேர்த்து மணக்க மணக்க கொழம்பு வச்சி  தாளிச்சி இறக்கிட்டு, முருங்கைக்கீரை பொரியல்,  ரசம், வாழைக்காய் பஜ்ஜி அனைத்தும் செய்து பாத்திரத்தில் போட்டு, அதனுடன் வாழை இலை ஒன்றை கிள்ளி வைத்து  பூவாயி ஆனந்திற்கு கொண்டு வந்து கொடுத்து அன்போடு சாப்பிட சொன்னாள். ஆனந்திற்கு ஏதோ மனதில் புதுவிதமான ஒரு உணர்வு தென்பட்டது.

அவனது விழிகள் அடிக்கடி செண்பகத்தை பார்க்கும்படி கட்டளையிட்டது.  என்னமோ அவளை பார்த்துக்கொண்டே இருக்க உள்ளுணர்வு தூண்டியது. “இது வரைக்கும் நெறைய பொண்ணுங்கள பாத்து இருக்கேன். பேசி வம்புக்கு இழுத்து சண்ட கூட போட்டு இருக்கேன். ஏன் இதே ஊருல அந்த மலர் கிட்ட கூட பேசி வம்பு பண்ணிருக்கேன். ஆனா செண்பகத்து கிட்ட மட்டும் இப்போ ஏனோ மனசு தடுமாறுது” என நினைத்துக் கொண்டான்.

அப்போது, “செண்பகம் வெளியே வர.  தற்செயலாக அவனைப் பார்த்தாள். ஏனோ அவனது விழிகளை  நேரிட முடியாமல் செண்பகமும் ஒருவித நாணத்துடன் தலை குனிந்தாள். என்ன இது. எனக்கு என்ன ஆச்சு”  என மனம் தடுமாறினாள். இதுவரையும் கோபமும்,சண்டையும் மட்டுமே அவர்களுக்குள் உறவாக இருந்தது. இப்போது அவர்கள் இடையில் அங்கு ஒரு புது காவியமே உருவாகிக் கொண்டிருந்தது.

இங்கு கண்ணம்மா தனது மகனை அழைத்து கொண்டு கண்ணனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

இவர்களைப் பார்த்து எழில் அவசரமாக கிளம்பிக் கொண்டு இருக்க.

இப்போ எதுக்கு இவ்ளோ அவசர படுற.  “எந்த வேலை செஞ்சாலும் நிதானமா செய்யணும்” என கண்ணன் கூற.

இத நீங்க எனக்கு சொல்றீங்களா?. அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா. நீங்க உங்க வேலைய கவனிங்க” என்றாள்.

“என்னோட வேலைனு தனியா எதுவும் இல்ல செல்லம்.  எல்லாம் நம்மோட வேலைதான்.  பிரிச்சி  பேசாத.  நானும் உன்கூட வரேன்.  ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்.  அவங்க வேலைய முடிச்சுட்டு வந்து காட்டு வேலையை இரண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம்” என்று கூற.

எழிலுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நெஜமாவா  மாமா சொல்றீங்க.  காலையில ஏதோ ஒரு சும்மா சொல்றீங்கன்னு தான் நினைச்சேன் என்றாள்.

“நான் ஏன்டா தங்கம் பொய் சொல்லப்  போறேன்.  உண்மையா தான் சொல்றேன். நானும் ரெடியாகிட்டேன்டா” என்று கூற.

இதைப்  பார்த்துக் கொண்டிருந்த மீசை  தாத்தாவுக்கும், ஆச்சிக்கும்  சிரிப்புதான் வந்தது.

“ஏன்?  ரெண்டு பேரும்  சிரிக்கிறீங்க” என்று மாரியம்மாள் கேட்க.

எந்த விஷயத்துக்கு  ரெண்டும்  எலியும் பூனையுமா இருந்ததுகளோ இப்ப அதுக்கு ரெண்டு பேரும்  ஒன்னா  போறாக. எப்படியோ சந்தோசமா இருந்தா சரிதேன். இனி இவகளுக்கு  சண்டை வராது பாரு.  அதுகளும் சந்தோசமா இருக்கும்.  நாமளும் சந்தோசமா இருக்கலாம்.  “இந்த   முத்து பையன்தே  என்ன கிறுக்கு புடிச்சிதோ.  நம்மள வேதனப்படுத்தி  பாத்துட்டு இருக்கான்.  ம்ம்ம். பாக்கலாம்.  அதையும் சரி பண்ணிடுவோம்” என தாத்தா கூற. அங்கு மகிழ்ச்சி அலை அடிக்கத் தொடங்கியது.

எழிலுடன் கண்ணனும் சேர்ந்து கொள்ள  வங்கிக்கு கிளம்பினார்கள்.

தனது தங்கையின் வீட்டிலிருந்து கிளம்பிய ராசைய்யா கனத்த மனதுடன் நேராக தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

“தனது வீட்டிற்கு முன் கூட்டம் கூடி நிற்பதை கண்டு அதிர்ச்சியுடன் பார்த்து என்ன நடந்துச்சோ தெரியலையே” என மனதிற்குள் சிறிய கலக்கத்தோடு கூட்டத்தை விலக்கி சென்றார்.

தொடரும்……