பகுதி – 10

“ஆனந்த் திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான். ஹலோ! மேடம் நான் உங்க ஊருக்கு வேணா புதுசா இருக்கலாம். அதுக்காக சொடக்கு போட்டு கூப்பிடுவிங்களோ.  எனக்கு பேர் வச்சிருக்காங்க மேடம். ஆனந்த்னே நீங்க கூப்பிடலாம் என்றான். திமிரு பிடிச்சவ” என மனதில் நினைத்தான்.

சின்ன குட்டிய கால ஒடச்சுட்டு அப்படியே நைசா நழுவி போய்ட்டா இதுக்கு வைத்தியம் யாரு பாப்பாங்க.

ஏங்க ஆட்டுக்கு எல்லாம் வைத்தியம் பாக்க நான் ஒன்னும் வெட்னரி டாக்டர் இல்லைங்க. எனக்கு அதைப்பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது.

“நீங்க ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம். வைத்தியம் பண்ண ஆகுற செலவுக்கு பணத்தை மட்டும் கொடுங்க”  என்றாள் செண்பகம்.

“என்னது ஆட்டுக்கு வைத்தியம் பண்ண பணமா?  அது நல்லா தான இருக்கு.நான் எதுக்கு பணம் தரனும்.  இப்படி எல்லாம் கல்லாட்டம் ஆடாதீங்க. கடவுளுக்கே அடுக்காது” என்றான் ஆனந்த்.

“யோவ்! குட்டிக்கு கால் உடைஞ்சு போச்சு கட்டுப் போடவேண்டாமா.  அதுக்கு நல்லெண்ணெய் வாங்கணும்.  உளுந்து வாங்கணும். முட்டை எல்லாம் கூட வாங்கணும்.  எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய் செலவாகும். எடுத்து வச்சுட்டு  நகரு என்றாள்” செண்பகம்.

“ரொம்பவே காலம் மாறிப்போச்சு தாங்க.  இது சத்தியமா கலிகாலம் தான்.  நான் அடிச்சு சத்தியம் பண்ணுவேன்.  கிராமத்தில பிறந்து வளர்ந்த நீங்களே இவ்வளவு புத்திசாலியா இருக்கும் போது நகரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அறிவு இல்லாம போயிடுமா. என்னங்க இது அழுகுனி ஆட்டம். ஆட்டுக்கு கட்டு போட  உளுந்து, முட்டை எல்லாம் வாங்கி கட்டு போடுவீங்களா.  இத  நல்ல பகல் கொள்ளையா இருக்கு.  நீங்க ஒன்னும் கட்டு போட வேண்டாம்.  நான் எதிர் வீட்டுல தான் இருக்கேன். மூணு வேலையும் சேர்த்து உங்க ஆட்டுக்குட்டிக்கு நானே கட்டுப் போட்டுக்கறேன்.  நடக்குதா இல்லையான்னு பாப்போம்” என்று ஆனந்த் நகர.

“எனக்கு உங்கிட்ட பணத்தை வாங்கி பொழைக்கனும்னு அவசியமில்லை.  எனக்கு ஆட்டுக்குட்டி நடக்கணும். அவ்வளவுதான்.  நீ என்னை மருந்து போடுவியோ மண்ணாங்கட்டிய போடுவியோ  எனக்கு குட்டி  நடக்க வைக்கணும் என்று செண்பகம் அவனோடு வாக்குவாதம் செய்து கொண்டிருக்க.  அப்போது அங்கு வந்த பூவாயி என்னலே  தம்பி யாரு?  என்ன வேணும்” என கேட்க.

ஆனந்த் நடந்த விஷயத்தை பூவாயி இடம் கூற.

“இவ கெடக்கா வெவரங்கெட்ட கழுத. நீ போ தம்பி அவ கெடக்கா” என்று பூவாயி கூறினார்.

“ரொம்ப சந்தோசம்மா. நீங்களாவது இப்படி பேசுறீங்களே.  மனசுக்கு ஆறுதலா இருக்கு. அந்த வீட்டுல தான் தங்க போறேன்.  போறேன் நீங்களும் எனக்கு அம்மா மாதிரி தான்.  நான்  போறேம்மா” என்று அவன் கூற.

“அம்மா, அப்பா கூட வரலையா தம்பி. தனியாதே  வந்தீகளா?” என்று பூவாயி கேட்க.

வேலைக்காக அவ்வளவு தூரம் இருந்து வர முடியாது.  அப்பா, அம்மாவும் இங்க வர முடியாது அதனால நான் மட்டும் தனியா தான் வந்து இருக்கேன்.

நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீக தம்பி.  இங்க கட கண்ணி  எல்லாம் கிடையாது.

“அதெல்லாம் நானே சூப்பரா சமைப்பேன். நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு ஆனந்த் வீட்டை நோக்கி நகர்ந்தான்.

“வந்ததும் வராததுமா அந்த புள்ள கிட்ட என்னடி வம்பு.  போய் வேலையை பாரு” என்று செண்பகத்தை அதட்ட.

“ஹீக்கும்” என செண்பகம் நகர்ந்தாள்.

அன்று மாலை பொழுது  வயல்களில் அவரவர் வேலைகளை முடித்து வீடு திரும்ப திரும்பினார்கள்.

“கண்ணனின் வீடு பரபரப்பாக இருந்தது. மீசைய முருகேசன் தாத்தா பாட்டியிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார்.  என்ன தங்கம் கண்டுக்கவே மாட்டேங்கறவ.  இவ்வளவு நேரமா நானும் கேட்கிறேன்”  என தாத்தா பாட்டியிடம் சிணுங்கிக் கொண்டிருக்க.

வயசானாலும் உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் கூட கொறையவேயில்ல கிழவா. புள்ளைக  முன்னாடி என்ன பேசுறதுனு வெவரம் இல்லாம வார்த்தைய விடுறீகளே. மனசுல இளவட்டம்னு நெனப்பு நட  போடுது போல.  மொத்தமா நறுக்கி வச்சிடுவேன்.

“என்னத்த பெருசா கேட்டுட்டேன்.  இப்படி கோபப்படுதே.  வரும்போது கொஞ்சம் தலையில் பூ வச்சிகிட்டு  வா ன்னு சொன்னேன்.  இது ஒரு தப்பா தங்கம்”  என தாத்தா கேட்க.

“மீசை நரச்சாலும் ஆசை நரைக்காதுன்னு சொல்லுவாங்களே அப்படித்தான் கிழவனுக்கு இன்னும் துள்ளுது.  இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது. கண்ணுல படாம ஓரமா  போய் உட்காருங்க வாரேன்” என்று பாட்டி கூற.

“ஏன்டி தங்கம் எல்லாத்தையும் எகனை மொகனையா யோசிக்கிறவ.  இவ்வளவு மல்லிகை பூ தோட்டத்தில மலர்ந்து கெடக்கு.  என் பொண்டாட்டி தலையில நாலு கிள்ளு  வைக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா. இதுல என்ன தப்பு இருக்குலே. உன்  மனசுதே  தான் ஏதோ குறுகுறுன்னு இருக்குலே. அதே  நீ என்னென்னமோ பேசறவ.  உனக்கு தான்டி பழைய நினைப்பு வந்துடுச்சு போல”  என்று தாத்தா மீசையை முறுக்கி கொண்டு பேச.

“புள்ளைவ முன்னாடி ஏன் இப்படி மானத்தை வாங்குறீக.  நீங்க இப்ப போகல நான் வரமாட்டேன்”  என்று செல்லமாக கோபிக்க.

“இந்த வயசுலயும் கோவத்துல என் பொஞ்சாதி எம்புட்டு அழகா இருக்கிறலே” என்று தாத்தா கூறிக்கொண்டு நகர்ந்தார்.

“மாரியம்மாள் அத்தை நீங்க முதல்ல கிளம்புங்க.  ஆக வேண்டியதை நான் பாக்குறேன்”  என்று கூற.

“கண்ணனுக்கு நீ அம்மா.  நீ என்னத்த முன்ன நின்னு  செய்வ.  அவங்க சின்ன பசங்க. ஆக வேண்டிய முறைய செய்யனும். சாமி கும்பிட்டு உள்ள அனுப்பி வச்சா சரி. அப்புறம் மத்ததுக்கு பாத்துக்கோ.  இந்த கிழவனுக்கு வேற என்ன வேலை” என்று பாட்டி கூற. அங்கு மொத்தமும் மகிழ்ச்சி எதிரொலித்தது.

“மலரின் வீட்டில் அவளது பெற்றோர்கள் எழிலைப் பார்க்க தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்ப.  மலரும் அவளும் கூட வருவதாகப் பிடிவாதம் செய்தாள்.  நீ இப்போ அங்க வரக்கூடாது.  வீட்டிலேயே இரு அவ்வளவுதான்” என அவளை அதட்டி சமாதானம் செய்துவிட்டு எழிலின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

அத்தை முறைக்கு சிலரும்,  பக்கத்தில் சிலரும் வந்திருந்தனர்.  எழில்,  கண்ணன் இருவரையும் அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.  கடவுள் தரிசனம் பெற்று மீண்டும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்ட அறையில் இல்லற வாழ்வை தொடங்குவதற்க்கு   தேவையான அனைத்து சம்பிரதாயங்களும் தயாராக இருந்தது. எழிலின்  முகம் வெட்கத்தால் ஒரு புறம் சிவந்து கொண்டிருந்தது.  கண்ணனும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.

ஒருவழியாக அனைவரும் இரவு உணவினை முடித்து  எழிலை தனியாக அழைத்து சில அறிவுரைகளைக் கூறிவிட்டு பெற்றோர் கிளம்பினர்.

“தாத்தாவோ தங்கம் அதான் எல்லாம் ஆச்சு இல்லலே.  அனுப்பிட்டு வா”  என அவசர படுத்தினார்.  இந்த வயசுல ஏன் தான் இப்படி பண்றீகளோ  தெரியலனு பாட்டி முறைக்க.

“மாரியம்மாள் தனது கணவனை திரும்பி பார்க்க அவருக்கு சிரிப்புதான் வந்தது. இதெல்லாம் கண்டுக்காதலே” என கண்ணால் ஜாடை காட்ட. மாரியம்மாள் சிரிப்பை அடக்கிக் கொண்டே பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தார்.

“பாட்டியும் அங்கு வந்திருந்த சில   உறவுகளை கூப்பிட்டு இதுக்கு மேல எழிலுக்கு சொல்லவேண்டியதை சொல்லி அனுப்பி வைங்க.  கிழவன் பறக்குறாரு வேற. அவருக்கு மருந்து கொடுக்கணும்”  என்று பாட்டி கூற.  அவர்களும் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

“கடவுளே!  இவரு பண்ற வேளை  எல்லார் முன்னாடியும் மானம் போகுது.  பாக்கறவக என்ன நினைப்பாக. நம்முடைய பாசம் மத்தவங்களுக்கு தெரியுமா?  இது ஏன் இந்த கிழவனுக்கு புரியல”  என நெற்றியில் அடித்துக்கொண்டே தங்கம்மா தாத்தாவின் இருப்பிடத்தை நோக்கி சென்றார்.

“ஏன் சாமி. மகராசா ஏன் இப்படி மத்தவங்க முன்னாடி மானத்தை கூறு போடுறீக. அவக முன்னாடி சொன்னா என்ன நினைப்பாக.  நம்மள  பத்தி இந்த வயசுலயே இதுக  பண்றத பாருன்னு தானே நினைப்பாக”  என்று தாத்தாவின் அருகில் அமர.

அடுத்தவக  என்ன நினைப்பாகளோனு  நாம யோசிச்சா வாழ்க்கை மொத்தமும் தொலைஞ்சி  போய்டும் தங்கம்.  நம்ம பாசம் நமக்கு தெரியும். அது ஏன் இந்த வயசுல கூப்பிட்டாலே இப்படி தப்பா தான் யோசிக்கணுமா. தாம்பத்தியங்கறது   உடலளவில சந்தோஷத்தை   கொடுக்கறது மட்டும்  இல்ல. அப்படி நெனச்சா அது தப்பு.  இந்த வயசுலயும் நாம ஒருத்தர ஒருத்தரு புரிஞ்சுகிட்டு சந்தோசமா பாசமா இருக்கறமே தங்கம்.  அதுதான் உண்மையான தாம்பத்தியம்.  நம்ம ரெண்டு பேரும் மனசுவிட்டுப் பேசி ரொம்ப நாள் ஆகுதுலே. தினமும்  பேசுவோம்லே.  இல்லன்னு சொல்லல. பழைய நினைவுகள் எல்லாம் அப்பப்ப வந்து எட்டிப் பார்க்குதுலே.  அதான் மனசு விட்டுப் பேசினா  சந்தோசமா இருக்கும்னு தான் தங்கம்.

“என்ன பேசறீகளோ   பேசுக ராசா.  கேட்கத்தானே நான் இருக்கேன்”  என்று தங்கம்மா  தாத்தாவின் கையை பிடித்துக் கொள்ள.

இந்த கைய சாகர வரைக்கும் விடாம இருக்கணும் தங்கம். என்னைக்கு உன் கைய பிடிச்சனோ  அன்னையில் இருந்து இன்னைக்கு வரைக்கும் என் வாழ்க்கையில் எல்லா சொத்தும் சொந்தமும் எனக்கு நிறைஞ்சு இருக்கு.  இதுல நான் உன்னோட அன்பு தான்  மட்டுந்தே பாக்குறேன் தங்கம்.  இப்படி உன் கைய பிடிச்சு கிட்டு உன்னை என் மார்பு மேல சாய்ச்சுகிட்டு இருக்கிற கொஞ்ச காலத்த  ரெண்டு பேரும் சந்தோசமா முடிச்சிக்கனும்.   நீ யாருக்கும் கிடைக்காத வரம்  எனக்கு தங்கம்.

நான் மட்டும் என்ன சொல்லுவேன் ராசா . நீங்கதானே இன்னைக்கு வரைக்கும் எனக்கு எல்லாமா இருக்கீக. ஒன்னு வேணும்னு நான் கேக்குற நிலைமைய நீங்க கொடுத்தது இல்லயே. நான் நெனைக்கும் போதே அதை நீக கொண்டு வருவீக.  எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வாழ்க்கை.

நீ மட்டும் என்ன தங்கம்.  என்னால் முடியுமா? முடியாதான்னு என்  கண்ணைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி விட்டுக் கொடுத்தே  வாழ்ந்த சாமிடீ  நீ.

“ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்கிதுறதே   வாழ்க்கை.  அதை யார் எந்த இடத்தில விட்டு கொடுக்கணும்னு புரிஞ்சிக்கிட்டா போதும். வாழ்க்கை சொர்க்கம் தான்”  என தங்கம்மா பாட்டி கண்கலங்க.

“நான் இன்னும் உன் பக்கத்துல தான் இருக்கேன்.  நான் இருக்கிற வரைக்கும் என்  ராசாத்தி நீ கண்கலங்க கூடாது.  இந்த கட்டையில  என்னைக்கு உயிர் போகுதோ  அன்னைக்கு தான் உன் கண்ணுல தண்ணி வரனும்” என தாத்தா கூற.

“நீங்க இல்லாம நான் மட்டும் இருப்பேன்னு நினைச்சிகளா.  தனியா நின்னு கண் கலங்க மாட்டேன்.  உங்க கூடவே நானும் வந்திடுவே ராசா”   என தங்கம்  மார்போடு சாய. தாத்தா  பாட்டியின் தலையை வாஞ்சையோடு தடவ.  அங்கு அன்பு என்ற அழகான உறவு வெளிப்பட்டது.

உறவினர்கள் புடைசூழ எழிலின் கையில் சுற்றி நின்று கேலியும் கிண்டலுமாக சிரித்துக் கொண்டிருக்க.

“மாரியம்மா முத்துவை இன்னைக்கு ஒரு நாள் தோட்டத்து வீட்டுக்கு போய் தூங்குப்பா” என்று கூற.

“முத்து உள் மனதில் சிரித்துக் கொண்டே, சரிம்மா” என தனது புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்ட தோட்டத்திற்கு கிளம்பினான்.

கண்ணன் ஆயிரம் கனவுகளோடு தனது அறையில் எழிலுக்காக காத்திருந்தான். வெட்கங்கள்  எழில் முகத்தில் எதிரொளிக்க மனதில் மன்னவனை சுமந்துகொண்டு கண்ணனின் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.

தொடரும்…