‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான், மீண்டும் அவள் முகம் காணும் ஆவலில்.
முன்னால் இருந்த மூங்கில் தடியை திறக்க அவன் கை கொண்டு சென்ற நேரம், சீதையின் குரல் ஐந்து கஜத்தில் அவன் செவியை எட்டியது. “சே… சே…! எம் பொண்ணு வயசென்ன… அந்தப்பய வயசென்ன… என்ன ரங்காயி அக்கா…? நீயே பொசுக்குன்னு இப்படி கேட்டுபுட்ட. பையன் படிச்சி பாக்க லட்சணமா இருந்தாலும், கணக்குன்னு ஒன்னு இருக்கு இல்ல. சொந்தமா கைபுடி அளவு கூட உழவு நிலம் இல்லாத வீட்ல உங்க மாமா பொண்ணு கொடுப்பாரா..? வீடு கட்ட ஒத்தாசை செஞ்ச நன்றிக்கு தான்… சொச்ச பணத்துக்கு மூணு ஏக்கரா நிலத்தை பத்து வருசமா குத்தகைக்கு கொடுத்துட்டு கிடக்கோம். அதுக்குன்னு பொண்ணெல்லாம கொடுக்க முடியும், வெறும்பயலா நிக்கிறவனுக்கு. அந்த மாதிரி எண்ணம் எல்லாம் எங்க ரெண்டு குடும்பத்து ஆளுகளுக்கும் இல்ல.’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரிடம் வாய் கொடுத்து கதை கேட்டு கொண்டிருந்த ரங்காயியோ, “அதுக்கில்லடி சீதா… உம்மவளும் அத்தை அத்தைன்னு பாரிகிட்ட உரசிட்டு கிடக்கா. அந்தப் பயலும் மாமா மாமான்னு உங்க வீட்டுக்காரர் பின்னாடியே சுத்தி வந்துட்டு இருக்கான். அதான் பரிசம் கிரிசம் பேசி, வெளிய சொன்னா ஊருக்கு விருந்து வைக்கணும்னு கமுக்கமா இருக்கியோன்னு கேட்டேன். வேற சூது ஒண்ணும் என் மனசுல இல்லடி ஆத்தா.’’ என்றார்.
உடனே சீதை முன்பை விட ஆங்கார குரலில், “உன் விளக்கத்தை எல்லாம் என்னோட முடிச்சிக்க ரங்காயி அக்கா. ஒருநாளும் நடக்கவே முடியாத விசயத்தை ஊருக்குள்ள பேசிட்டு திரியாத. அவங்க பொழப்பே யாசகத்துல ஓடிகிட்டு கிடக்கு. நாளைக்கே உங்க மாமா நிலத்தை திருப்பி வாங்கிட்டா… நாலு பசுமாட்டை தவிர அவங்க கிட்ட வேற என்ன இருக்கு. அந்த மாட்டுக்கு தொழுவம் போட்டு இருக்க இடம் கூட எங்க இடம். ஒரு ரெண்டு லட்சம் காண்ற மச்சு வீடு. அது மட்டும் தான் அவங்க சொத்து. அந்த பையன் படிச்சி பெருசா வாத்தி வேலைக்கு போறானே அவன் சம்பளம் எவ்ளோ தெரியுமா உனக்கு. வெறும் ஆறாயிரம். நம்ம கழனியில களை எடுக்குற பொம்பளை தினக் கூலியே முன்னூறு ரூபா. இதெல்லாம் ஒரு சம்பாத்தியம். இதுக்கு நாங்க பொண்ணு தரணும். உனக்கு பாரி மேல அக்கறை இருந்தா, உன் தூரத்து சொந்தத்துல, ஏழை பொண்ணு ஏதாச்சும் இருந்தா பார்த்து சொல்லு. அந்தப் பயலுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா தான் இருக்கும்.’’ என்று ஆடித் தீர்த்தார்.
“ஆத்தா…! தெரியாத்தனமா கேட்டுப்புட்டேன். ஆளை விடுறி.’’ என்று அந்த ரங்காயி அங்கிருந்து அலறிப்புடைத்து ஓடும் படி செய்துவிட்டார். ஏற்கனவே கோதண்டன் அளவுக்கு அதிகமாக பாரியின் குடும்பத்தை தாங்குவதாக மனதிற்குள் சஞ்சலம் கொண்டிருந்தவர், ரங்காயி வாய் வார்த்தையாக கேட்ட சாதாரண விசயம், அவருக்கு பீதியை கிளப்ப, அடைத்திருந்த ஆத்திரமெல்லாம் வடிய கத்தியிருந்தார்.
வேலிக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த சுந்தர், பணம் மட்டும் தான் மனிதனை அளவிடும் தராசு என்பதை மீண்டும் ஒரு முறை வலிக்க வலிக்க அறிந்து கொண்டவன், குழம்போடு திரும்பி மனம் கனக்க வீட்டை நோக்கி நடந்தான்.
குழம்பை கழனி தொட்டியில் கொட்டியவன், அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான். அறையில் படுத்துக் கிடந்தவன் கண்களில் அவன் மனதை பறைசாற்றுவதை போல சூடான கண்ணீர் அவன் கண்கள் தாண்டி காதின் வழி ஊர்ந்து தலையணை தொட்டது.
“காடு கரயோட இருக்குறவனுக்கு தான் உன்னை கட்டி கொடுப்பாங்களாம் அச்சு. இந்த மாமாகிட்ட அன்பு மட்டும் தாண்டி இருக்கு. ஆமான்டி எனக்கு சம்பளம் வெறும் ஆறாயிரம் தான். அதுல உனக்கு பட்டும் பவுனும் வாங்கித் தர முடியாது. ஆனா உனக்கு மூணு வேளை வயிறார சாப்பாடு கொடுத்து… உன்னை சந்தோசமா வச்சிக்க முடியும். இந்த அன்பு… பாசம் இதெல்லாம் உங்க அம்மாவுக்கு வேண்டாமாம். உனக்கு மட்டும் என்னை புரியவா போகுது. நான் யாசகனாம். பிச்சைக்காரனாடி நானு. பதிமூணு வயசுல இருந்து உழச்சி சாப்பிடுறவனை பார்த்து எப்படிடி உங்க அம்மா அப்படி கேக்கலாம். பணம் காசு தான் பெருசுன்னு நினைக்கிற குடும்பத்தை சார்ந்து இருக்க நீ எனக்கு வேண்டாம் போடி. எனக்கு எதுவுமே வேண்டாம்.’ என்று தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டவன், அதிகாலை நேரத்தில் கண் அயர்ந்தான்.
மல்லி செவிலியம் படிக்க கிளம்ப, தன் துறையில் ஆராய்ச்சி படிப்பை, வேலை பார்த்துக் கொண்டே படிக்கப் போவதாய் சொல்லிவிட்டு சுந்தர் சென்னைக்கு பயணமானான். ஆனால் கிளம்பும் முன் பாரியின் மூலம் சீதையை வீட்டிற்கு அழைத்தவன், “குத்தகை எடுத்த மூணு ஏக்கர் காட்டுக்கும் ஒரு ஏக்கரா நாற்பதாயிரம் கணக்கு போட்டு லட்சத்து இருபதாயிரம் வருசா வருசம் சரியா மாமா கணக்குல போட்டுட்டு இருக்கேன். நம்ம சுத்து பட்டு காட்ல இதை விட ஐயாயிரம் கம்மியா தான் கொடுத்துட்டு இருக்காங்க.’’ என்று நிறுத்தினான்.
“புதுசா கணக்கெல்லாம் எதுக்கு தம்பி என்கிட்ட…’’ என அவர் திணற, “இல்ல உங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சி இருக்குறது நல்லது இல்லையா.’’ என்றவன் அதோடு கிளம்பிவிட்டான். ‘அத்தை’ என்ற அழைப்பை கவனமாய் தவிர்த்து இருந்தான்.
பாரி புரியாமல் பார்க்க, சீதைக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘ஆனாலும் இந்த மனுஷன் நமக்கு இருபதாயிரம் தானே கணக்கு காட்டுவார்.’ என்று அவர் மென்னியை பிடிக்க உள்ளுக்குள் தயாரானார்.
சுந்தருக்கு இருபத்தி ஆறு வயது தொடங்கும் போதே, பாரி அவனை திருமணத்திற்கு நச்சரிக்க துவங்கி இருந்தார். அவன் அது இதுவென்று சாக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது மல்லி செவிலியம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
அவள் விடுமுறையில் இருக்கும் போது, எப்போதாவது அவனும் ஊருக்கு வர நேர்ந்தால், இவனை காணும் மல்லி தானாக முன் வந்து நலம் விசாரிப்பாள். மல்லி முகத்தை கண்டாலே அவனுக்கு சீதையின் வார்த்தைகள் வடுவாய் நினைவிற்கு வந்து விட, ‘ம்…’ என்ற தலை அசைப்போடு அவளை கடந்து விடுவான்.
அவன் அவளை கடக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. பாரி எழுதும் கடிதம் தொடங்கி, வீட்டிற்குள் நுழைந்தால் முற்றத்தில் இவனை வரவேற்கும் அடுக்குமல்லி வரை அவளை நினைவூட்டி அவனை உயிரோடு கொன்று தின்றது.
நினைவிற்கும், நிஜத்திற்கும் இடையில் அவன் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் போதே, அவனை அவன் தாயை விட கொடூர வார்த்தைகளால் காயம் கொடுத்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டாள் அவனின் அச்சும்மா.