அவன் ஆசைப்பட்ட காதல் வாழ்வு கிட்டியிருந்தால் இந்நேரம், ‘நீ வேற நான் வேறயா…! நீ எதுக்குடி எனக்கு தாங்க்ஸ் சொல்ற… தாங்க்ஸ் சொன்னது இந்த உதடு தானே… இதை…’ அவன் தன் கனவுலகில் சஞ்சரித்திருக்க, “மா…’’ என்று இவள் வரவை கண்டு குழந்தைகள் வெளிவாசலுக்கு ஓடி வந்தனர்.

அவர்களின் குரல் அவனை நடப்பிற்கு திருப்ப, ‘இதுக்கு தானே இவ என்னை கல்யாணமே செஞ்சிகிட்டா’ என்ற கசப்பான உண்மை அந்நேரம் அவன் முகத்தில் அறைய, “ம்…’’ என்று முணகியவன், தொழுவத்தை நோக்கி நடந்துவிட்டிருந்தான்.

ஒப்புக்கு கூட சுந்தர் புன்னகைக்காமல் சென்றது மல்லிக்கு அளப்பரிய வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும் குழந்தைகள் அவளை சூழ்ந்து கொள்ள, முயன்று தன்னை இயல்பாக்கி கொண்டவள், அவர்களுடன் ஒன்றிப்போனாள். சுந்தரின் இயல்பே அபப்டித்தானே என்று கடக்கும் மனநிலை கொண்ட அவன் மனையாள்.

மாடுகளுக்கு தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டி முடித்தவன், அடுத்து தோட்டம் நோக்கி நடந்தான். மாலையே நீர் பாய்ச்சி முடித்திருந்தான். பெரிதாக அங்கு வேலை என்று எதுவும் இல்லை. ஆனாலும் வழக்மாய் தான் அமரும் மாமரத்தின் அருகில் வந்து அமர்ந்தான்.

மரத்தின் தண்டில் சாய்ந்து அமர்ந்தவன், கால்களை வசதியாய் நீட்டிக் கொண்டான். தன்னிடம் சேயென அடைக்கலமாகி வந்தவனை குளிர் தென்றலை தூதனுப்பி குளிர வைக்க முயன்றது அந்த மாமரம்.

கண்களை மூடியவனுக்குள் பழைய நினைவுகள், அவன் அனுமதியை கேட்காமல் வரிசை கட்டி வந்து நின்றன. மல்லியை முதன் முதலில் பாவாடை தாவணியில் வளர்ந்த பெண்ணாக என்றைக்கு பார்த்தானோ, அன்றைக்கே முகிழ்த்தது அவள் மீதான நேசம்.

ஆனால் சிறு பெண் என்று அவளிடம் ஒதுங்கியே நின்றான். வாய்ப்புகிட்டும் போதெல்லாம்  யாரும் அறியாமல் அடிக் கண்ணில் அவளை நோட்டம் விட கற்றுக் கொண்டான். யாரிடமும் தான் பிடிபட்டு விடக் கூடாது என்பதாலேயே மற்றவர் முன் அவளை கண்டால் எரிந்து விழுவான்.

ஆனால் அவளுக்கென வீட்டில் தானே ஒரு பூந்தோட்டத்தை கட்டமைத்தான். அவளுக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து, அது அவள் வாயில் அரைபடுவதை கண்டு ரசிப்பான்.

‘அச்சு சீக்கிரம் வளர்ந்து தொலைடி. உன்ன ஒளிஞ்சி ஒளிஞ்சி சைட் அடிச்சி மாமா ஓடா தேஞ்சிட்டு இருக்கேன்.’ என்று உள்ளுக்குள் உருகலாய் புலம்பி கொள்வான். அவள் பதினாறில் இருந்த போது, அவன் தன் இருபத்து மூன்றாம் வயதை முடிக்கும் தருவாயில் இருந்தான்.

ஊருக்குள் அவனோடு விளையாடித்திரிந்த வாலிபர்கள் எல்லாம், கோவில் திருவிழாவிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான கண்மாயிலும் காதலித்து கொண்டிருக்க, இவனோ ஒரு இரட்டை ஜடைக்காரியில் பின்னலின் பின் சுற்றிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் விட அவனை அனலிட்ட புழுவாய் தகிக்க வைத்த சம்பவம், அவன் ஆருயிர் நண்பன் ஒருவன் காதலில் விழுந்த சம்பவம் தான். அந்த ஆருயிர் நண்பனான ஜெயராம் இவனோடு ஒன்றாக கல்லூரியில் பயின்றவன்.

அவனின் சொந்த ஊர் சேலம். முதுகலை கல்வி முடித்ததும், அவர்களின் பரம்பரை தொழிலில் காலூன்றியவன். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த தன் தங்கையின் தோழி மீது காதலில் விழுந்தான்.

முதன் முதலில் அவன் காதல் வயப்பட்டது தொடங்கி, காதலை பகிர்ந்து கொண்டது, திருட்டு சந்திப்புகள், முதல் முத்தம் என்று ஒன்றையும் விடாது, அலைபேசியின் வழி நண்பனின் செவியை தீய்த்து எடுத்தான்.

அவன் சொல்ல சொல்ல, சுந்தருக்கும் அந்த ஆசைகள் ஊற்றென பொங்க ஆரம்பித்தது. ‘ஆளில்லாத கம்மாக்கரையோரம் அவ கை கோர்த்துட்டு நடந்து போனா நல்லா இருக்கும்ல. ஓயாமா பேசிட்டே இருக்க அந்த உதட்டை முத்தம் கொடுக்குற சாக்குல கடிச்சி வச்சா தான் என்ன..?’ என்று ஏகத்துக்கும் அவன் கற்பனை குதிரைகள் இறக்கை கட்ட, தலையில் தன்னை தானே தட்டிக் கொண்டவன், “அவ மொதோ காலேஜ் போகட்டும்.’’ என்று மனதிற்கு கடிவாளம் போட்டான்.

பருவ ஆசைகளுக்கு கூட அவனால் எளிதாக கடிவாளம் போட முடித்து. ஆனால் அவன் நண்பனோ, “மச்சி… என் ஆளு எனக்காக இன்னைக்கு பிரியாணி செஞ்சி கொண்டு வந்து கொடுத்துட்டு போனாடா. செம டேஸ்ட். சமைக்கவே தெரியாம இருந்தவ. அவ பாட்டிக்கிட்ட கேட்டு சமச்சி கொண்டு வந்து இருக்கா. என் பர்த்டேக்காக.’’ என்று சொல்லும் போதும்,

“இன்னைக்கு யுனிவர்சிட்டி எக்சாம்னு புது பேனா வாங்கி தர சொன்னா மச்சி, கடையில இருக்கேன். அதுலயும்… என் பேரையும் அவ பேரையும் சேர்த்து எழுதிட்டு தந்தா தான் மேடம் பேனாவை வாங்கிட்டு கிளம்புவா.’’ என்று பெருமையில் பூரித்து போகும் போதும்,

“நேத்து பைக் ஹிட்டாகி கீழ விழுந்து ரைட் ஹான்ட்ல நாலு தையல் போடுற அளவுக்கு காயமாகிப் போயிருச்சி. வீட்டுக்கு தங்கசிகிட்ட நோட்ஸ் வாங்குற மாதிரி வந்தவ, கையை பிடிச்சிட்டு விடவே இல்லடா. கைக்கு மட்டுமே ஒரு நூறு கிஸ் கொடுத்து இருப்பா. அவ கொடுத்த கிஸ்சை விட அவ கண்ல இருந்து நிக்காம வழிஞ்ச கண்ணீர் என்னவோ பண்ணுது மச்சி. கைல இருந்த வலி கூட காணாம போயிருச்சின்னா பாத்துக்கோயேன். பொண்ணோட வெட்க சிரிப்பை விட, நீ எனக்கு முக்கியம்னு அவ பதறி கொட்ற கண்ல தெரியுது பாரு மச்சி ஒரு லவ். இந்த பீல் செமையா இருக்கு மச்சி.’’ என்று நெகிழ்ந்து கரையும் போதும், உள்ளுக்குள் மல்லியோடு தனக்கு அப்படி ஒரு ஆத்மார்த்தமான உறவு முகிழ்க்குமா என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அவனுள் பெரிதாய் வளர துவங்கியது.

நண்பன் கைகாய கதை சொன்ன மறுநாள் தான் சுந்தர் மல்லிக்கு பூ கொடுக்க, முயன்று அந்த முயற்சி வெற்றிகரமாக தோல்வியை தழுவியது. அதன் பிறகு மல்லிக்கு அவன் நேரடியாக எதையும் கொடுப்பதில்லை. ஆனாலும் அவளை பார்வையால் தொடர்வதை விடுவதில்லை.

இப்படி இவன் யார் கவனத்தையும் கவராது அவளை கவனித்து கொண்டிருக்க, நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் நாட்களை தாள்களாய் கிழித்து பறந்திருந்தது. தற்சமயம் மல்லி பனிரெண்டாம் வகுப்பில் இருந்தாள்.

மல்லி அப்போது பள்ளி செல்ல தோட்டத்து குறுக்கு வலியை உபயோகிக்க, சுந்தர் அவள் பாதுகாப்பு கருதி எப்போதும் அவள் அந்த பாதையை கடக்கும் நேரம் அங்கு வேலை இருப்பதை போல சுற்றி வருவான்.

அப்படி ஒரு நாள் அவளை சுற்றி வரும் போது தான், மல்லியின் தோழி செல்வியியை அவளின் தற்கொலை முயற்சியிலிருந்து காத்தான். அதன் பிறகு அதன் காரணம் அறிந்து, அந்த ஆசிரியரை லாவகமாக பேசி, தன் தோட்டத்திற்கு அழைத்து வந்து, அவனை தன் மோட்டார் அறையில் அடைத்து, விசசே கவனிப்பு கொடுத்து, பணியிட மாறுதல் பெற வைத்தான்.

‘இந்த உலகில் நீ எனக்கு முதன்மையானவன்.’ என்று தோழனின் காதலி நித்தம் ஒரு செய்கையில் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருக்க, அதை இவன் அட்சரம் பிசகாது சுந்தரிடம் வாய் மொழிந்தான்.

மல்லியோ, ‘ஆட்டுக்குட்டி. அம்மா சுட்ட அதிரசம். அத்தையின் மிளகு வத்தல் குழம்பு’ என்று அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாது தன் சுக உலகில் மூழ்கியிருந்தாள். ‘நெடு நெடுன்னு ஒருத்தன் எதுக்க வரேனே. நிமிந்து பார்த்தா இவளுக்கு என்ன..?’ என்று மனதிற்குள் அலுத்து கொண்டாலும், அவள் தப்பி தவறி நிமிர்ந்து பார்த்தால், ‘என்ன’ என்று கண்களாலேயே அவளை அரட்டி ஓட வைத்து விடுவான்.

செல்வியை தேற்ற சுந்தர் அவ்வப்போது அவளிடம் பேச, அவள் தனக்கு புரியாத பாடங்கள் குறித்த விளக்கத்தை அவனிடம் கேட்டாள். அவளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுத்தால் கிராமத்தினர் கண்களுக்கு அது சரியாக படாது என்பதால், அவளோடு அவனுக்கு தெரிந்த பள்ளி மாணவர்களையும் வர சொல்லி சிறப்பு வகுப்பை ஆரம்பித்தான்.

ஆனால் அவனே எதிர்பார்க்காத இனிய அதிசயமாக மல்லி தானும் அந்த சிறப்பு வகுப்பில் இணைந்தாள். உள்ளம் உள்ளுக்குள் உவகையில் துள்ளினாலும், வெளியே முகத்தை கடு கடுவென்றே வைத்து கொண்டான்.

அவளுக்கு புரியாத கணக்கு பாடத்தை வேண்டும் என்றே சூத்திரம் துவங்கி, சுற்றி வளைத்து தன் அருகில் நெடு நேரம் நிற்க வைத்தே சொல்லிக் கொடுப்பான். தவறிழைக்கும் போதெல்லாம், சாரைப்பாம்பை ஒத்திருந்த இரட்டை பின்னலில் ஒன்றை பிடித்து இழுத்து, தன் உள்ளங்கையில் அதன் மழுமழுப்பை ரசிப்பவன், “இப்போதைக்கு இது தான் உனக்கு. அனுபவிச்சிக்கோ.’ என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொள்வான்.

நண்பன் தன் காதலிக்கு சரச வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, இவனோ பள்ளிப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். ‘யப்பா… இன்னும் மூணே மாசம். பப்ளிக் எக்ஸாம் முடிச்சிட்டா என் அச்சும்மா காலேஜ் போயிருவா. போன வாரம் பர்த்டே கொண்டாடும் போதே பதினெட்டு வயசு பொறந்துடுச்சுன்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க. ஆனாலும் காலேஜ் போகட்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி. காலேஜ் பஸ்ட் இயர்ல லவ் சொல்றோம். தேர்ட் இயர் முடிச்சதும் கல்யாணம் பண்றோம்.’ என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டான்.

அவன் விரும்பிய அந்த நாளும் வந்தது. ஆனால் அது அவன் விருப்பத்தை உடைக்கப் போகிறது என்பதை சுந்தார் அப்போது அறியவில்லை. மல்லி தான் விரும்பிய ஆசிரியர் கல்விக்கு அவள் எடுத்த மதிப்பெண்கள் போதாது போக, அரசில் செவிலியம் படிக்கலாம் என்ற ஆலோசனையோடும், விண்ணப்பப் படிவத்தோடும் சுந்தர் அவளை தேடி சென்றான்.

அவனை உபசரித்தது, வரவேற்பறையில் அமர்ந்திருந்த கோதண்டம் தான். இவன் விவரங்களை சொல்லவும், அவர் மல்லியை அழைக்க, அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், “மாமா சொன்னா சரிப்பா.’’ என்றுவிட்டு மீண்டும் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும், ‘மாமா சொன்னா சரிப்பா…’ என்ற அவளின் ஒற்றை வார்த்தை அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘என் அச்சு’ என்று மனதிற்குள் அவளை கொஞ்சி கொண்டவன், பூர்த்தி செய்ய வேண்டிய படிவத்தை கோதண்டனிடம் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

அன்றைக்கு பாரி, மீன் குழம்பு வைத்திருக்க, “ஏம்மா…! சட்டி நிறைய குழம்பு கிடக்கு. கோமு மாமா வீட்டுக்கு கொஞ்சம் கொடுத்து இருக்கலாம் இல்ல.’’ என்று தானாக கேட்டான்.

உடனே அவன் தாயோ, “வாசம் கண்டதும், கன்னுக்குட்டி ஓடியாரும். என்னன்னு தெரியல. இன்னும் காணோம். ஒரு வேலை வீட்டு விலக்காயிருப்பாளோ…’ என்ற கடைசி இரண்டு வார்த்தைகளை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும், மல்லி குறித்த பேச்சென்றாலே காதை பாம்பு போல தீட்டி வைத்திருக்கும் சுந்தரின் காதுகளில் துல்லியமாக விழுந்தது.

குழம்பை எடுத்து கொண்டு பாரி மல்லி வீட்டிற்கு கிளம்ப, “மூட்டு வலியோட படி ஏறி இறங்கிக்கிட்டு. கொண்டா. உனக்காக பக்கத்து வீட்டுக்கு கொரியர் வேலை பாக்குறதே எனக்கு புலப்பா போச்சு.’’ என்று சலிப்பவன் போல ஏறக் குறைய குழம்பு குண்டாடனை பிடுங்கிக் கொண்டு சென்றான்.