“மாரியம்மாள் நிலக்கடலை பையுடன் கூடவே கேப்பை களியும், பாசிப்பயிறு துவையலும் சேர்த்து  ஒரு தூக்கு வாளியில்  வைத்துக் கொடுத்து மதியம் ரெண்டு உருண்டை சாப்பிடுய்யா.  பொழுது சாய தான வருவ. வயித்தக் காய  போடாதய்யா” என அன்பாக  மகனிடம் பேச.

“இதை பார்த்த எழில் அத்தை நானும் வெளியே போகணும்.  கொஞ்சம் வேலை இருக்கு. வர மூணு மணியாகும்”  என்று கூற.

“ஆமா.  பெரிய இவ  கலெக்டர் ஆபீசுக்கு போய் கையெழுத்து போடுற வேலைக்கு போறா. ஆம்பள வயக்காட்டுக்கு போனா பொம்பள கூடவே  வர வேணாமா? நிலக்கடலை போடணும்னு சொல்றேன்.  இவ  வந்து சால் பருப்பு போடலாம்ல. இல்லனா காக்கா  கூட்டம் மொத்தமும் பருப்ப போட போட கூடவே பொறுக்கும். அதையாவது தூரத்தலாம்ல.  அவளோட  ஊர் சுத்துற வேலைய  ஒடப்புல  போட்டுட்டு வயலுக்கு வர சொல்லு ஆச்சு”  என்றான் கண்ணன்.

“கையெழுத்து போட கலெக்டர் ஆபீசுக்கு போகனும்னு அவசியமே இல்ல மாமா. நாலெழுத்து படிச்சிருந்தா போதும். யார் வேணாலும் கையெழுத்து போடலாம்.  நான் உங்களோடு வயலுக்கு வருவேன். ஆனா இப்போ இல்ல.  அதற்கான நேரம் வரும் போது வருவேன். நான் ட்ரெயினிங் போனதே நம்ம கிராமம் மழை இல்லாதப்போ வாழ்வாதாரம் பாதிக்காத அவங்களை எப்படி பாதுகாக்கணும்னு  விழிப்புணர்வு சொல்லிக் கொடுக்கத்தான். எனக்கு என்னோட வேலை முக்கியம்.  நான் பஞ்சாயத்து தலைவரை பார்த்து பேச போறேன்.  அப்படியே பேங்கில கொஞ்சம் வேலை இருக்கு. அதையும் முடிக்கணும்.  நான் ஒன்னும் வெட்டியா ஊர் சுத்துல மாமா”  என்றாள் எழில்.

“ஆச்சி பார்த்தீகளா.  இவ நமக்கு சரிபட்டு வரமாட்டா”  என்ற கண்ணன் அருகில் கிடந்த மூங்கில் சிமிரை கையில் எடுத்தான்.  மாமா, அத்தை  பத்தி யோசிக்க மாட்டேன்.  இழுக்கற  இழுப்பில தோலுரிஞ்சி  இரத்தம் கசியும் பார்த்துக்க என்று  கண்கள் சிவக்க அவளை  முறைத்துக் கொண்டு கையை ஓங்கினான்.

இந்த முறைப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் மாமா.  நீ என்ன ஆட்டம் போட்டாலும் சரி.  நான் நெஞ்சில் எழுதி வச்ச எண்ணத்தை மாத்திக்க முடியாது.  அதே சமயம் உங்களை விட்டு போகவும்  மாட்டேன்.  ஏன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீதான் எனக்கு உசுரு  மாமா.  என் மனசு புரிஞ்சுக்கோங்க என்றவள் அவசரமாக கையை கழுவிக்கொண்டு எழுந்து உள்ளே போனாள்.

“கண்ணன் கையில் இருந்த குச்சியை கீழே வீசிவிட்டு இவள வச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே” என கடலையும் சேர்த்து வாளியையும் தூக்கிக் கொண்டு வயலுக்கு கிளம்பினான்.

எழில்  உடையை மாற்றிக்கொண்டு தலைவரை சந்திக்க கிளம்பினாள்.

“இதுக ரெண்டும் இப்படி பண்ணுதுகளே.  எப்படித்தான் வாழப்போவுதோ தெரியலையே” என ஆச்சி மாரிம்மாளிடம் வருத்தப்பட.

“அதெல்லாம் எம் மருமக பார்த்துகிடுவா.  நீங்கள் வருத்தப்படாதீக” என்று கூறிவிட்டு மாரியம்மாள் ஆட்டுக்கு  தண்ணி வைக்க போனார்.

அதுவரை அமைதியாக இருந்த முத்து அவசர அவசரமாக கையை கழுவிவிட்டு செல் போனோட வெளியில் வந்தவன் மலரின் தொலைபேசி எண்ணிற்கு நம்பரை தட்டிவிட.

மலர் எடுத்துப் பேசினாள்.  என்ன இந்த நேரத்துல கோழி கூவுது  என்றாள்.

அது ஜோடிய தேடி தான் கூவுது.  மலர் நீ இப்போ என்ன பண்றனா உடனே கிளம்பி தெக்காட்டுல இருக்க  அந்த பெரிய வேப்ப மரத்துக்கிட்ட  இப்ப கிளம்பி வரே என்றான்.

அதெல்லாம் முடியாது.  நீ என்ன எனக்கு உத்தரவு போடுறது.  நான் வரமாட்டேன் என்றாள்.

“நீ வர.  வருவ.  அவ்வளவுதான்”  என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் முத்து.

சற்று யோசித்த மலர் அம்மா நான் மாடுகளை காட்டுல கொண்டு கட்டிப்போட்டு வரேன்  என்றாள்.

“ஒன்னும் வேண்டாம்.  நானே போறேன்”  என சரசு  கூற.

“அடி விவஸ்த கெட்டவளே. அவ போன்ல  பேசினத கேட்டியா? இல்லையா?  மாப்ள ஏதோ பேச கூப்பிடுறாரு போல போகட்டும் விடு” என கூற.

மலர் ஓடிச்சென்று கண்ணாடியில் முகம் பார்த்து சிறிய ஒப்பனை செய்து கொண்டு வெளியே வந்தாள்.

வெயில் ஏறிக்கொண்டிருக்க, வெயிலுறைப்புக்கு மருது காலை மடக்கி தலையை சாய்த்து சுகமாகப் படுத்துக் கிடந்தான்.  மெல்ல தட்டி கொடுத்து கொஞ்சி எழுப்பி தாயும் கன்றையும் சாடியில் தண்ணீரை குடிக்க வைத்து ஒரு வழியாக மலர் ஓடிக்கொண்டு போக.  ஜில்லுவும் கூடவே போனான்.

வேப்ப மரத்தடி நிழலில் முத்து மலருக்கு  முன்பாகவே வந்து அமர்ந்திருப்பதை பார்த்தவள்  மாடுகளை ஒரு ஓரமாக கட்டிவிட்டு மரத்தடிக்கு வந்து அமைதியாக நின்றாள்.

“இவளா பேசுவாளா? மாட்டாளா?” என யோசித்த முத்து வேண்டும் என்றே  கண்டும் காணாதது போல் தனது விழிகளை வேறு திசையில் சுழல விட்டான்.

“மலர் முத்துவை தன் பக்கம் திருப்ப என்ன செய்வது” என சிந்தித்தவள் தனது கை வளையல்களைக் குலுக்கி பார்த்தாள். அப்பொழுதும் முத்து திரும்பவில்லை. கால் கொலுசு ஓசை கேட்க கால்களை நிலத்தில் அழுந்த  தட்டினாள்.  ஆனாலும் முத்து திரும்பவில்லை.   ரொம்பத்தான் கொழுப்பு அதிகம் என்று  மனதிற்குள் திட்டிக் கொண்டே ‘ஹிக்கும்’ என்று ஒரு மெல்லிய குரல் கொடுத்தாள். அப்போதும் முத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டே திரும்பவில்லை.  மலர் பொறுமை இழந்து மாமா என்றாள்.

“மலர் வந்துட்டியா” என ஒன்றும் அறியாதவன் போல முத்து அவளைப் பார்த்து கேட்க.

“ஆஹா! நல்ல நடிப்பு கண்டிப்பா இதுக்கு உங்களுக்கு விருது வாங்கி கொடுத்தே ஆகணும்” என்றாள்.

என்ன நடிப்பு.  என்ன விருது  மலர் என்று முத்து  கேட்க.

“நான் வந்தது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சுட்டு இருந்தீங்களே.  அதைத்தான் நடிப்புனு சொன்னேன்.  அதுக்குதான் விருது வாங்கித் தரலாம்னு” என்றாள்.

“நான் எப்போதும் என் மனசு விட்டு உன்னை தனியா பிரிச்சு பார்த்ததே இல்ல மலரு. அதான் நீ என் மனசுக்குள்ள இருக்கியா.  நீ வெளியில வந்து நின்னது எனக்கு தெரியவே இல்ல பாரேன்” என்றான்.

“இது உங்களுக்கே ஓவரா தெரியலையா மாமா.  கொஞ்சம் நம்புற மாதிரி பேசலாமே” என்றாள்.

“நான் உண்மையத்தான் தான் மலரு சொல்றேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் உன்னோட முகம் தான் தெரியுது.  கையில் தொட்டா காத்தோட கரஞ்சி கனவா போயிடுற. உன்ன நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் மனசுக்குள்ள உருகி தவிக்கிறேன்டீ  இது ஏன்டி உனக்கு புரியவே மாட்டேங்குது”  எனக் கூற.

“முத்துவின்  மனதைப் புரிந்து கொண்ட மலர் இப்படியே விட்டால் படிப்பில் கவனம் இல்லாமல் போகுமோ” என்று நினைத்து, “நான் ஒன்னு கேட்கலாமா?” என்றாள்.

“ஒன்னு இல்ல நிறையவே கேளு” என்றான். உனக்கு இல்லாத உரிமையா மலர் என்றான்.

“நீங்க  இந்த கிராமத்துக்கு எதுக்காக திரும்பி வந்திங்க மாமா”  என்றாள்.

“படிக்கணும். இன்டர்வியூல ஜெயிக்கணும். இலட்சியத்தை அடையனும்.. அப்புறம்  என் இதயத்தில் இருக்கும் காதல் கோட்டைக்கு உன்னை மகாராணி ஆக்கனும்” என்றான்..

“பாத்தீங்களா?  உங்க மனசுல படிப்புக்கு தான் முதல் இடம் இருக்கு. அப்போ நீங்க என்ன பண்ணனும். உங்கள் லட்சியத்தில முதல்ல ஜெயிக்கணும். அதுக்கப்புறம்தான் மற்றது எல்லாமே.  படிப்பு லட்சியம் தான் முதல்ல சொன்னீங்க.  கடைசியா தான் காதல் வாழ்க்கை எல்லாமே.  அதனால சும்மா காதல் கத்திரிக்கானு என் பின்னாடி சுத்துறது விட்டுட்டு ஒழுங்கா படிச்சு லட்சியத்தில ஜெயிக்கற வழிய பாருங்க” என்று கோபமாகக் கூறினாள்.

என்ன லட்சியத்துல நான் நிச்சயம் ஜெயிப்பேன் மலரு.  எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு துணையா நீ என் கூட இருக்கணும்னு ஆசை படுறேன்டி.  அது ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே மலர்.

“எனக்கு என்னமோ   லட்சியத்தில உன்னோட  மனசு போற மாதிரி தெரியல. உன் மனசு முழுக்க காதல் வெறி பிடிச்சிருக்கு. எப்ப பாரு காதல் கவிதைனு வசனம் பேசிக்கிட்டு இப்படி சுத்தி நீ எங்க ஜெயிக்க போற. முதல்ல உன் மனசுல இருக்கு இந்த கர்மம் பிடிச்ச  காதல் வெறிய தூக்கி தூர வீசிவிட்டு படிக்கிறத மட்டும் பாரு மாமா” என்றாள்.

முத்துவுக்கு கோவம் வர. என்னடி சொன்ன.  கர்மம் பிடிச்ச காதல் வெறியா? இவ்வளவு தான் நீ என்னை புரிஞ்சுக்கிட்டதா? என்றவனின்  கைகள் கோபத்தில்  மலரின் கன்னத்தை பதம் பார்க்க.  மலரை ‘பளாரென’  ஓங்கி அறைந்தான் முத்து.

தொடரும்…..