சையத் உணவகம்.

எதிரே அமர்ந்திருந்த சையத்திடம் ஆர்யன் “அவ அவ்வளவு எளிதா போக முடியாது, சையத் பாபா. என் முதுகுக்கு பின்னால சதி செஞ்சி இவானை தூக்கிட்டு போனவ அதோட விளைவுகளை அனுபவிக்காம எங்கயும் தப்பிச்சி போக நான் விட மாட்டேன்” என கோபமாக பேசினான்.

“இங்க பார் மகனே! உன்னோட கோபத்தீ மத்தவங்களை மட்டும் இல்ல, உன்னையும் சேர்த்து ரணமாக்கிடும். உன்னை நிதானமாக்கிக்க முயற்சி செய்”

“நான் எப்படி அமைதியா இருக்க முடியும், சையத் பாபா?” ஆர்யனிடமிருந்து பட்டென எழுந்தது கேள்வி.

“அந்த பொண்ணு உன்னோட எதிரி இல்ல, ஆர்யன். இவான் உனக்கு எப்படியோ அதே போல தான் அவளுக்கும் அவளோட ஒரு பகுதி. உன்னை மாதிரி தான் அவளுக்கும் இவானோட மகிழ்ச்சி தான் முக்கியம். அவனுக்காக அவ கிணத்துல கூட குதிப்பா. ஒருவேளை அவ ஒரு தவறு செஞ்சிருக்கலாம்”

அவர் பேச்சை இடைமறித்த ஆர்யன் “முதல்ல இருந்தே எல்லாமே நடிப்பு தான். என்னால தான் கண்டுபிடிக்க முடியல, சையத் பாபா. அவ ரொம்ப நல்லவ ன்னு உங்களை நம்ப வச்சிருக்கா. ஆனா நீங்க நினைக்கிறது போல அவ கிடையாது” என அழுத்தமாக சொல்ல, ‘இவனிடம் என்ன பேச?’ என்பதுபோல் சையத் பெருமூச்சு விட்டார்.

“சின்ன வயசுல இருந்தே பெண்கள் நம்ப தகுந்தவங்க இல்லன்னு எனக்கு தெரியும். இப்போ வரலாறு திரும்புது. அவ்வளவு தான்” என்று சொன்ன ஆர்யன் ருஹானாவிடம் மனம் மயங்கி இருந்தவன் போல இல்லாமல் மயக்கம் தெளிந்தவனாய் தெரிந்தான்.

“இனி எந்த பெண்ணையும் நம்ப மாட்டேன். அதுவும் முக்கியமா இவளை!” என்று சொன்னவன் தொண்டை அடைத்தது.

அடைத்ததை உள்ளே விழுங்கி கொண்டவன் “நீங்க சொன்னீங்க, அவ என் எதிரி இல்லன்னு. ஆனா இப்போ அவ தான் என்னோட மோசமான விரோதி!” என கடுமையுடன் பறை சாற்றினான்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவளை தவறாக புரிந்து கொள்ளும் தருணம், அவள் மேல் அவனுக்கு ஏற்படும் ஏமாற்றம் கோபமாகி உச்சம் தொடுகிறது.

 

சினம் கொண்டு

சீறுகிறது உள்ளம்….!

தவறி தவறி தவறாமல்

கபட விழிகளில் வீழ்ந்த 

பேதமையை எண்ணி…

கடும் பாறையென இருந்த 

தன் மனம் மெழுகாய் 

உருகியதை எண்ணி…

கன்னி அவள் விரித்த 

கண்ணியை எண்ணி… 

——-

அந்தி சாயும் நேரம் கையில் அட்டைப்பெட்டியோடு மிஷால் வாசிமின் வீட்டுக்குள் நுழைய, அவனை பின் தொடர்ந்து வந்த ஆர்யன் ஆட்கள் ருஹானா வாசலுக்கு வெளியே வந்து அவனோடு பேசுவதை பார்த்தனர்.

“மன்னிச்சிக்கோ, மிஷால். உன்கிட்டே என்னால பேச முடியல. பர்வீன் அம்மா உன்கிட்டே எல்லா தகவலும் தெரிவிச்சேன்னு சொன்னாங்க” ருஹானா அவனை வாசலிலேயே நிறுத்தி வைத்து பேசினாள்.

“ஆமா, அவங்க எல்லா விவரமும் சொன்னாங்க. வாழ்த்துக்கள் ருஹானா. இதை கொண்டாட கேக் கொண்டு வந்தேன்” என சிரிப்போடு மிஷால் சொல்ல, ருஹானா முகத்தில் புன்னகை கூட பூக்கவில்லை.

“நன்றி. எதுக்கு உனக்கு இந்த சிரமம்?”

“இவானுக்காக கொண்டு வந்தேன்” என பேச்சை மாற்றிய மிஷால் “அப்படியே உனக்கு ஏதாவது தேவையான்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றான்.

“ஆமா மிஷால். நாங்க தங்கறதுக்கு ஒரு வீடு பார்க்கணும்”

மிஷால் முகத்தில் மீண்டும் சிரிப்பு மலர “நாளைக்கே பார்த்துடலாம். கவலைப்படாதே!” என்றான்.

அப்போது பர்வீன் உள்ளே இருந்து வர, அவருக்கு சலாம் சொன்ன மிஷால், அவர் வீட்டுக்கு புறப்பட்டதை பார்த்து அவரை தானே விடுவதாக கூறி அழைக்க, அவரும் சம்மதித்தார். ருஹானாவிடம் எதையோ சொல்லவந்த மிஷால் அவள் அவனை பார்க்காமல் நிற்பதை பார்த்து, ஒன்றும் சொல்லாமல்  பர்வீனோடு வெளியே நடந்தான்.

——–

காரை செலுத்திக்கொண்டிருந்த ஆர்யன் ரஷீத்தின் போன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லு, ரஷீத். எதும் தகவல் இருக்கா?”

“இவானோட சித்தியை கண்டுபிடிச்சிட்டோம்”

“எங்கே இருக்கா?” ஆர்யன் உணர்ச்சிகள் பேரலையாய் எழுந்தன.

“கமிஷனர் வாசிம் வீட்டுல. நம்ம ஆளுங்க மிஷாலை பின் தொடர்ந்தாங்க. அவன் போலீஸ் ஆபிசர் வீட்டுக்கு போனான். அங்க தான் இருக்காங்க”

மிஷாலின் பெயரை கேட்டதும் ஆர்யனின் தலை இகழ்ச்சியாக ஒரு பக்கம் சாய்ந்தது.

“ஏற்கனவே நான் யூகித்தேன், ஆரம்பத்துல இருந்தே இவன் இதுல சம்பந்தப்பட்டிருப்பான்னு. அது தப்பா போகல”

“இப்போ என்ன செய்யலாம், ஆர்யன்?”

“நம்ம ஆட்களைலாம் அங்க வர சொல்லு. எனக்கு கமிஷனர் வீட்டு லொக்கேஷன் அனுப்பு” வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினான்.

“ஆர்யன்! கமிஷனர் வீட்டை தாக்குறது நல்ல யோசனையா?”

“சொன்னதை செய், ரஷீத்” என சொல்லி தொடர்பை நிறுத்திய ஆர்யன் வண்டியின் வேகத்தை கூட்டினான்.

——-

“நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் இல்லாம வீடே வெறிச்சோடி போய்டும்” என வாகிதா கவலைப்பட “இங்க பக்கத்திலேயே தான் வீடு பார்க்க போறோம். நாங்களும் இங்க வரலாம். நீயும் அங்க அடிக்கடி வா” என ருஹானா அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

“கடைசியா நானும் ஒரு வாழ்கையை தொடங்க போறேன், இவான் கூட. எனக்கு அதிக சந்தோசமாவும் இருக்கு. அதோட பயமாவும் இருக்கு. ஒரு வேலை கிடைக்கணும். செட்டில் ஆகணும். இதுக்குலாம் நேரம் பிடிக்கும்” என ருஹானா கவலைப்பட, இப்போது ஆறுதல் சொல்வது வாகிதாவின் முறையாயிற்று.

“இன்ஷா அல்லாஹ்! நீ நினைக்கிறது போல எல்லாம் நல்லபடியா நடக்கும்”

அப்போது கார்கள் வேகமாக வந்து நிற்கும் ஓசை கேட்க, படம் வரைந்துக் கொண்டிருந்த இவான் “சித்தி! என்ன சத்தம் இது?” என கேட்க, “நான் போய் பார்த்துட்டு வரேன்” என வாகிதா வெளியே செல்ல போனாள்.

ருஹானா உள்ளுணர்வு அவளுக்கு எதையோ உணர்த்த “இல்ல. நீ இவானை கூட்டிட்டு உள்ளே போ. நான் போய் பார்க்கறேன்” என வாகிதாவோடு இவானை  அனுப்பிவிட்டு ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தவள் திடுக்கிட்டாள்.

ரஷீத் மற்றும் மெய்க்காப்பாளர்களோடு ஆர்யன் காரில் இருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

வெளிக் கேட்டை தாண்டி படைவீரர்கள் பின்தொடர வரும் தளபதி போல ஆர்யன் தோட்டத்தில் நடந்து வர, ருஹானா வாசல் கதவு தாண்டி வேகமாக வந்து அவன் முன்னே நின்றாள்.

ஆர்யன் அவளை உக்கிரமாக முறைக்க, நீர் நிறைந்த பெரிய கண்களை நிமிர்த்தி அவனை பார்த்த ருஹானாவும் அவனை முறைக்கவே செய்தாள்.

அவளை அப்படி தரக்குறைவாக பேசியவன் எப்படி அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறான்?

“என் அண்ணன் மகனை கொடு. இப்பவே.. உடனே..!” ஆர்யன் இரைந்தான்.

“இவான் இங்க தான் இருப்பான். உங்களால அவனை கூட்டிட்டு போக முடியாது” ருஹானா உறுதியாக சொன்னாள்.

“யார் அப்படி சொன்னது?” கிண்டலாக வந்தது அவனின் கேள்வி.

“சட்டம். உங்களுக்கு பிடிக்கிதோ இல்லயோ, இதை நீங்க ஏத்துக்க தான் வேணும். இதான் எல்லாருக்கும் நல்லது” ருஹானாவின் உறுதி குறையவில்லை. அழுத்தமாகவே சொன்னாள்.

“இவானை அனுப்ப சொல்லி நான் கேட்டேன்” அவள் சொன்னதை காதிலோ கருத்திலோ ஏற்றுக்கொள்ளாமல் திரும்ப அதையே கேட்டான்.

இருவர் கண்களும் நேர்க்கோட்டிலேயே ஒன்றை ஒன்று முட்டி நின்றன.

அப்போது காரை ஓட்டி வந்த வாசிம் தன் வீட்டு வாசலில் நிறைய கார்கள் நிற்பதை பார்த்து “ஆர்யன் அர்ஸ்லான்!” என பல்லை கடித்தவன் வேகமாக இறங்கி உள்ளே வந்தான்.

ஆர்யன் பின்னால் வாசிம் வரும் அசைவு தெரிய, ருஹானா ஆர்யனின் பார்வையிலிருந்து தன் கண்களை விலக்கி அவன் பின்னே பார்த்தாள். ருஹானாவின் விழியோட்டத்தை கவனித்த ஆர்யனும் தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி பார்த்தான்.

காலடியோசை நெருங்க ஆர்யன் அப்படியே நிற்க அருகே வந்த வாசிம் “ஆர்யன் அர்ஸ்லான்!” என அழைத்தான்.

ஆர்யன் திரும்பி பார்க்க “என்ன? என் வீட்டை சோதனை போடுறீயா?” என கேட்டான்.

ஆர்யன் பதில் ஏதும் சொல்லாமல் வாசிமை தீவிரமாக பார்த்தபடி நிற்க, கலங்கிய கண்களுடன் ருஹானா “அமைதியா இருங்க” என வாசிமிடம் கேட்டுக்கொண்டாள்.

அதற்கு பதில் சொல்லும்விதமாக ஆர்யன் “ஆபிசர் தான் நிதானத்தில் இல்லயே. என் அண்ணன் பையனை தைரியமா அவர் வீட்டில வச்சிருக்கார்” என்று சொன்னவன் இன்னும் ஒரு அடி முன்னே வந்து  “நீ உன்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கே?” என கேட்டான்.

ஆர்யனை மேலும் கீழும் ஏளனமாக பார்த்த வாசிம் “உன்னையும், உன் கைக்கூலிகளையும் பார்த்து பயப்படாத சாதாரண போலீஸ் நான்” என சொல்லி ஆர்யனை உற்று நோக்க, அவனும் கமிஷனரை இமை தட்டாமல் முறைத்தான்.

ருஹானா ‘என்ன நடக்க போகிறதோ?’ என பதைத்து போய் பார்த்திருக்க, அங்கே போர் மேகங்கள் சூழ்ந்தன.

 

(தொடரும்)