‘இவானை திரும்ப பெறுவது கடினம். அவனை ருஹானாவிடம் ஒப்படைத்து விட்டார்கள்’ என ரஷீத் சொன்னதை கேட்டு ஆர்யன் அதிர்ந்து நின்றது சில வினாடிகளே! அடுத்த நிமிடம் ஆவேசமாய் அவனிடமிருந்து அடுக்கடுக்காய் கட்டளைகள் பறந்தன.
“பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட், ஹார்பர் எல்லா இடத்துக்கும் ஆட்களை அனுப்பு ரஷீத். வேற எங்கெங்க அவ போவாளோ அங்க எல்லாமும் ஆளுங்களை அனுப்பு. அவ முன்னாடி இருந்த இடம், அவ சொந்த ஊர்… எதையும் விட்டுடாதே”
“சரி ஆர்யன், உடனே நம்ம ஆட்களை அனுப்பி கண்டுபிடிக்க சொல்றேன்”
“அந்த தன்வீர்ங்கற போலீஸ்காரன், மிஷால்ங்கற சூப் பாய் அவங்க ரெண்டு பேரையும் பின்தொடர சொல்லு. அவங்க உதவியை அவ கேட்ருக்கலாம். இதுலாம் உடனே செய், ரஷீத். கிடைக்கிற தகவலை எனக்கு சொல்லிட்டே இரு”
பின்னால் நின்ற கரீமா இதையெல்லாம் ஆனந்தமாக கவனித்திருக்க, போனை கோட் பையில் போட்டுக்கொண்ட ஆர்யன் உடலெங்கும் அனல் வீச அங்குமிங்கும் அலைந்தான்.
———-
ருஹானா கமிஷனர் வாசிமுக்கு மீண்டும் நன்றி சொல்ல அவனோ அது தன் வேலை தான் என்று விட்டான்.
“சித்தப்பா நம்ம கூட்டிட்டு போக வரலயா?” என இவான் கேட்க, சுருங்கிய ருஹானாவின் முகத்தை பார்த்த தன்வீர் “வா இவான், நாம கார்க்கு போலாம்” என அழைத்து சென்று அவனை உட்கார வைத்துவிட்டு ருஹானா அருகே வந்தான்.
“வா ருஹானா! அம்மா காத்திருப்பாங்க” என அழைக்க, அவளும் தலையாட்டினாள்.
வாசிம் “இல்ல தன்வீர்! உங்க வீட்டுக்கு இல்ல. அர்ஸ்லானுக்கு உங்க சொந்தம் தெரியும். அங்க வருவான். வேணாம்” என மறுக்க “உங்க யாரையும் நான் தொந்தரவு செய்ய விரும்பல. நான் பார்த்துக்கறேன்” என ருஹானா சங்கடமடைந்தாள்.
“அது அவ்வளவு எளிது இல்ல. நீங்க எங்க போனாலும், ஆர்யன் அர்ஸ்லான் கண்டுபிடிச்சிடுவான்” என வாசிம் சொல்ல ருஹானா யோசித்தாள். “குழந்தையை கடத்தினவன கண்டுபிடிச்சி இவானை மீட்டினவனுக்கு, உங்களை கண்டுபிடிக்க ரெண்டு மணி நேரம் போதும்” என ஆர்யன் பலத்தை பற்றி சொன்னான்.
“அப்போ என்ன செய்யலாம், கமிஷனர்?” என தன்வீர் கேட்க “என்னோட வீடு. அது தான் இப்போதைக்கு இவங்களுக்கு பாதுகாப்பானது” என வாசிம் முடிவாக சொல்ல “இல்ல.. உங்களுக்கு தொல்லை கொடுக்க என்னால முடியாது” என ருஹானா மறுக்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல. என் வீட்டுக்கு போறோம். அவ்வளவு தான். வேற எங்கயும் உங்களை அனுப்ப நான் தயாரா இல்ல. வீட்டில என் அத்தை இருக்காங்க. வாகிதா இருக்கா. நீங்க அவங்களை சந்திக்கலாம்” என வாசிம் ருஹானாவிற்கு நம்பிக்கை ஊட்டினான்.
தன்வீர் ருஹானாவை பார்த்து ‘ஒப்புக்கொள்’ என தலையசைக்க, அவளும் சரியென தலையாட்ட, காரில் ஏறி வாசிம் வீட்டை அடைந்தனர்.
“சித்தி! நாம எங்க வந்திருக்கோம்? நம்ம வீட்டுக்கு போகலயா?” காரிலிருந்து இறங்கிய இவான் புது இடத்தை பார்க்கவும் கேட்டான்.
ருஹானா பதில் சொல்லாமல் இருக்க, வாசிம் இவானின் முன் மண்டியிட்டு “யங்மேன்! நீ இன்னைக்கு என்னோட விருந்தாளியா வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன். வர்றீயா?” என புன்முறுவலுடன் கேட்டான்.
புன்னகைத்த இவான் ருஹானாவை பார்க்க அவள் தலையாட்டவும் “வரேன்!” என வாசிமிடம் சொன்னான்.
“ருஹானா! நான் இப்போ போகணும். எனக்கு நைட் டூட்டி இருக்கு. உனக்கு எது தேவைப்பட்டாலும் எனக்கு கூப்பிடு” என தன்வீர் சொல்ல, தலையாட்டிய ருஹானா “எல்லாத்துக்கும் நன்றி, தன்வீர்” என்று கண்கலங்க சொன்னாள்.
மூவரிடமும் விடைபெற்று தன்வீர் கிளம்ப, வாசிம் இருவரையும் வரவேற்று கேட்டை திறந்து உள்ளே அழைத்துப் போனான்.
இரும்பு கதவு திறந்த சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த வாகிதாவை பார்த்து ஆச்சரியமான இவான் “ஆஹ்ஹா! சாக்லேட் அக்கா!” என்றான். வாகிதாவும் பாசமாக இவானை பார்க்க, ருஹானாவும் வாசிமும் குழப்பமாக பார்த்தனர்.
——
உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் தணலை தணிக்க முடியாமல் அறையில் அலைந்து கொண்டிருந்த ஆர்யன், ரஷீத்துக்கு அழைப்பு விடுத்தான்.
“என்ன ரஷீத்! இன்னும் ஒரு தகவலும் வரல. என்ன செய்றீங்க எல்லாரும்?”
“எல்லாரும் தேடிட்டு தான் இருக்காங்க, ஆர்யன். அதுல ஒரு சிக்கல். இவான் சித்தி போலீஸ் கூடவே வந்து இவானை வாங்கிட்டு அவங்க கூடவே போய்ட்டாங்க”
“அவ ரகசியமா இவானோட கஸ்டடியை வாங்கினா. இப்போ எல்லாத்தையும் போலீஸ் வச்சி செய்றாளா? இப்படி செஞ்சா நான் பயந்து அவளை விட்டுடுவேனா?”
“கவலைப்படாதீங்க. கண்டுபிடிச்சிடலாம்”
“வெறும் வார்த்தை தேவையில்ல, ரஷீத். செயல்ல காட்டுங்க”
“ஒரு பொண்ணு சின்ன பையனை அபகரிச்சிட்டு நம்ம கண்ணு முன்னாடியே அகாபா நகரத்தை விட்டு டாட்டா காட்டிட்டு போய்டுவா. நம்ம ஆளுங்களோட அதை நாம வேடிக்கை பார்த்துட்டு நிற்கணும். அப்படித்தானே, ரஷீத்? என்ன தான் செய்றாங்க உன்னோட ஆட்கள்?”
“தீவிரமா எல்லா பக்கமும் தேடிட்டு தான் இருக்கோம். போலீஸ் பாதுகாப்பு இருக்குற இவான் சித்தியை கண்டுபிடிக்கறது அத்தனை எளிது இல்ல, ஆர்யன்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. இவானையும், அவன் சித்தியையும் கண்டுபிடிச்சி என் கண்ணு முன்னாடி இப்பவே நிறுத்தணும்”
அவள் மேல் தான் கோபமாக இருக்கிறானே! பின் ஏன் அவளையும் சேர்த்து அழைத்து வர சொல்கிறான்? அவள் வெளியே செல்வதையும் அவன் உள்மனம் ஏற்றுக் கொள்ளவில்லையா?
——–
இவானை பூனைக்குட்டியுடன் தான் சந்தித்ததையும், காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லிவிட்டு பூங்காவில் விட்டு சென்றதையும், தங்களுடைய வேடிக்கையான சம்பாஷணைகளையும் வாகிதா கூற ருஹானா அதிசயப்பட்டு கேட்டவள், வாகிதாவுக்கு நன்றியுரைத்தாள்.
“எந்த மாதிரியான சிரமங்கள்லாம் பட்டுட்டோம். அதையெல்லாம் தாண்டி வந்தது போல இந்த நாட்களும் நல்லபடியா கடந்து போகணும்” என ருஹானா இறைவனை வேண்டினாள்.
“ஆமா சித்தி! அக்கா எனக்கு நிறைய சாக்லேட் கொடுத்தாங்க. என்கூட சிரிப்பா பேசிட்டு இருந்தாங்க”
“ஓஹ்! இந்த சாக்லேட் அக்கா தான் நம்ம ரகசிய தேவதையா?” என ருஹானா சொல்ல எல்லாரும் புன்னகை செய்ய, வாசிமின் அத்தை தௌலத் மட்டும் வாகிதாவை பாராட்டுவது பொறுக்க முடியாமல் முகம் சுளித்தார்.
“தேவதையை யாரும் கண்ணால பார்த்திருக்க மாட்டீங்க. அதான் இவளை சொல்றீங்க” என கிண்டல் செய்தவர் “வந்தவங்களுக்கு உணவு கொடுக்காம என்ன நீயும் உட்கார்ந்து இருக்கே!” என வாகிதாவை விரட்டினார்.
வாகிதா எழுந்து சமையலறைக்கு செல்ல அவளுக்கு உதவ ருஹானாவும் அவள் கூடவே சென்றாள்.
வாசிமிடம் தௌலத் “இதென்ன வீடுன்னு நினைச்சியா? இல்ல, சத்திரமா? ஏற்கனவே ஒருத்தி தண்டமா இருக்கா? நீ இன்னும் ஆட்களை சேர்த்துட்டே போறே, வாசிம்?”
“அத்தை! அவங்க தன்வீரோட சகோதரி. சில நாட்களுக்கு இங்க தங்குவாங்க. பர்வீன் ஆன்ட்டி நமக்கு எவ்வளவு உதவிகள் செய்றாங்க. நீங்க ருஹானா மனம் வருந்துற மாதிரி எதும் பேசிடாதீங்க.”
“ஆமா! நீ என்னையே சொல்லு” என நொடித்துவிட்டு அவர் படுக்கையறைக்கு போனார்.
———
“ஆர்யன்ட்ட என்னால எதுவும் கேட்க முடியாது, சல்மா. எரிச்சல்படுவான். ருஹானாவை கண்டுபிடிச்சிடுவாங்களா?”
“கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவான், அக்கா. அதுக்கு அப்புறம் என்ன ஆகும்? அந்த மாயக்காரி அவன் மனசை மாத்திடுவா”
“அது கடினம், சல்மா. அவ ஆர்யனோட பொக்கிஷத்தை அவன் கையில இருந்தே திருடிட்டு போயிருக்கா. வாழ்க்கை முழுசுக்கும் இதை மறக்க மாட்டான். அவளை கண்டுபிடிச்சான்னா, அவ தொலைஞ்சா”
“நடக்கட்டும் பார்க்கலாம், அக்கா. அவ விஷயம்ன்னு வந்தா ஆர்யனோட இயற்கை சுபாவமே மாறி போய்டும்”
“இந்த முறை ஒன்னும் நடக்காது. அவன் கண்ணுல தெரிஞ்ச வெறுப்பு வெறியை நீ பார்த்திருந்தா, இப்படி பேச மாட்டே, சல்மா. குறைஞ்சபட்சம் அவளை மாளிகைக்குள்ள விட மாட்டான். அது எனக்கு நிச்சயம்”