தேவிகாவைக் காண சத்யனும் அவன் அன்னை திலகாவும் வந்திருந்தனர். அண்ணியின் உடல்நிலையைக் காரணம் காட்டி திலகா, ஒரு மாதத்திலேயே சக்திக்கும், சத்யனுக்கும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூற கோவிலில் கல்யாணம் என்பதால் இவர்களும் சம்மதித்தனர்.
கல்யாண ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டது. அந்த வார ஞாயிறு விடுமுறையில் வீட்டுக்கு சென்று அன்னையைப் பார்த்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பினாள் பாரதி.
கல்யாணத்துக்கு தேவையான உடைகளை எடுத்ததோடு தேவிகாவின் நகையைக் கொடுத்து சக்திக்கு புது நகை செய்யவும் அட்வான்ஸ் கொடுத்தனர். சத்யன் தருவதாக சொன்ன தொகையை பத்து நாளில் கொடுப்பதாக் கூறினான். அப்போது நகைகளை வாங்கிக் கொள்ள முடிவு செய்தனர். இன்விடேஷன், சாப்பாடு, வண்டி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல கோபால கிருஷ்ணன் திகைத்தார்.
ஆசுபத்திரியில் தேவிகாவின் சிகிச்சைக்கான செலவை ரிஷி ஏற்றுக் கொண்டிருந்தாலும் கோபால கிருஷ்ணனுக்கும் அவ்வப்போது மருந்து, வண்டி என்று செலவாகியிருந்தது. அவரது கையிருப்பு குறைந்திருக்க மீதிப் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்க, அந்தப் பணத்திற்கான பொறுப்பை பாரதி ஏற்றுக் கொண்டாள்.
மாப்பிள்ளைக்கான செயின், மோதிரம், பிரேஸ்லெட்டை பாரதி வாங்குவதாய் சொல்ல கல்யாண வேலைகள் மும்முரமாய் தொடங்கி விட்டது.
ஆபீஸில் லோன் சம்மந்தப்பட்ட விஷயங்களை கங்கா தான் தீர்மானிப்பாள் என்பதால் அவளிடம் கேட்க பாரதிக்கு சற்றுத் தயக்கமாய் இருந்தது.
ரிஷியிடம் கூறினால் லோன் எல்லாம் வேண்டாம், அந்தப் பணத்தை நான் தருகிறேன் என்பான்… அவன் எனக்கு உரிமையாகும் முன்னே இப்படி பணம் கேட்பது சரியில்லை என்று தோன்ற அவனிடம் அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தாள் பாரதி. காலையில் அலுவலகம் வந்த ரிஷி பாரதியைக் கண்டதும் பளிச்சென்று புன்னகைத்தான்.
“ரதி, நீ ஆபிஸ்க்கு லேட்டா வருவேன்னு நினைச்சேன், காலைல ஊருல இருந்து சீக்கிரம் கிளம்பிட்டியா…?”
“ம்ம்… பர்ஸ்ட் பஸ்ஸுக்கே வந்துட்டேன்…”
“அத்தை எப்படி இருக்காங்க, உடம்பு பரவால்லையா…?”
“ம்ம்… நல்லாருக்காங்க ரிஷி, அக்காவுக்கு தை மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க…”
“வாவ் சூப்பர், அது முடிஞ்சு அடுத்த ரெண்டு மாசத்துல நம்ம கல்யாணத்தையும் வைக்க சொல்லிடுவோம்…” ரிஷி கண்ணடிக்க, புன்னகைத்தாள்.
ரிஷி நிறைய புதிய கஸ்டமர்களை சந்திக்கத் தொடங்கி ஆர்டர் எடுக்கத் தொடங்கி விட்டான். கங்காவும் சில கஸ்டமர்களை சந்திக்க சொல்லியும், புது கான்ட்ராக்ட் விஷயமாய் பேச சொல்லியும் இவனுக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு நிறைய வேலைகளைக் கொடுத்தாள்.
அன்றும் சில வேலைகள் இருந்ததால் பாரதியிடம் சொல்லிவிட்டு ரிஷி வெளியே கிளம்பினான். பாரதியின் மேஜை மீதிருந்த இன்டர்காம் சிணுங்க எடுத்தவளிடம், கங்கா அறைக்கு வரும்படி கூறினாள்.
அவள் அறை முன் நின்று அனுமதி பெற்று உள்ளே சென்று குட்மார்னிங் சொல்ல ஏறிட்டவள் புன்னகைத்தாள்.
“குட் மார்னிங் பாரதி, ஊருல என்ன விசேஷம், அம்மா சுகமா இருக்காங்களா…?”
“நல்லாருக்காங்க மேடம், அக்காக்கு அடுத்த மாசமே மேரேஜ் வைக்க முடிவு பண்ணிட்டாங்க, அதுக்கான வேலையும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க… அது விஷயமா உங்ககிட்ட ஒரு ரிக்வஸ்ட் பண்ணனும்னு இருந்தேன்…” தயங்கிக் கொண்டே ஒரு வழியாய் சொல்லி விட்டாள்.
“நாம ஒரு வீட்டுல ஒண்ணா வாழப் போறோம், என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்…? சொல்லு பாரதி…”
“அது வந்து, மேடம்… அக்கா மேரேஜ்க்கு நிறைய செலவு இருக்கு, ஆபீஸ்ல ஒரு லட்சம் லோன் கேக்கலாம்னு…”
“ஓ… இவ்ளோ தானா, லோன் எல்லாம் வேண்டாம்… உனக்கு வேண்டிய பணத்தை நான் தர்றேன்…”
“அது வேண்டாம் மேடம், ரிஷிக்கு மனைவியாகறதுக்கு முன்னாடி எந்த உரிமையும் எடுத்துக்க நான் விரும்பல…”
“ஓ… நீ அப்படி வர்றியா, சரி… அக்கவுண்ட்ஸ்ல லோன் அப்ளிகேஷன் பில் பண்ணிக் கொடுத்திரு… நான் சாங்க்ஷன் பண்ணிடறேன், இதுக்குப் போயி தயங்கிட்டு இருக்க…” கங்கா சொல்லவும் மலர்ந்தாள் பாரதி.
“தேங்க்ஸ் மேடம், ஆபீஸ்ல ஜாயின் பண்ணி பர்ஸ்ட் சாலரி கூட வாங்கல, அதுக்குள்ள லோன் கேக்கறது கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு… அதான் தயங்கினேன் மேடம்…”
“நீ சாலரி வாங்கலேன்னா என்ன பாரதி, அதுக்குள்ள தான் இந்த கம்பெனி ஜேஎம்டி யே உன்னைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாரே, அப்புறம் நீயும் இந்தக் கம்பெனில பார்ட்னர் போலத் தானே…” உள்ளுக்குள் விஷம் வைத்து பட்டும் படாமலும் கிண்டலாய் குத்திக் காட்டினாள் கங்கா. பாரதி சட்டென்று அவளை நோக்க புன்னகைத்தாள்.
“அதிருக்கட்டும்… நீ எனக்காக ஒரு முக்கியமான வேலை பண்ணனுமே பாரதி…”
“என்ன வேலை மேடம்…?”
“நம்ம அன்னை குரூப்புல புதுசா மெடிக்கல் லாப் புராஜக்ட் நடந்திட்டு இருக்கறது உனக்குத் தெரியும் தானே…”
“ம்ம்… அந்த லாபுக்கு சில வெளிநாட்டு மெஷின்களை இம்போர்ட் பண்ணலாம்னு இருக்கோம்… அது சம்மந்தமான மெஷின் மானுபாக்சரிங் கம்பெனில இருந்து டெக்னீஷியன் ஒருத்தர் நம்ம பாக்டரிக்கு விசிட் பண்ணறார்… அவரை ரிசீவ் பண்ணறதுல இருந்து ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிட வைக்கிறது வரைக்கும் எல்லா ஏற்பாடுகளையும் கூட இருந்து பார்த்துக்கணும், உன்னால முடியுமா…?”
“என்ன சொல்லறீங்க மேம், நா..னா…?”
“ம்ம்… அது பெரிய கம்பெனி, நம்ம லாபுக்கு எந்த மாதிரி மெஷின் தேவைன்னு பார்த்திட்டு அதுக்குத் தகுந்த போல கொட்டேஷன் அனுப்புவாங்க… ஹரி வெளியூர்ல இருந்து ஈவனிங் தான் வருவார், ஆடிட் முடிச்சு இன்கம்டாக்ஸ் பைல் பண்ணற விஷயமா நான் ஆடிட்டர் ஆபீஸ் போக வேண்டிருக்கு… ரிஷியும் மார்கெட்டிங் விஷயமா வெளிய கிளம்பிட்டான்… இந்த டெக்னீஷியன் நம்ம லாபுக்கு நாளைக்கு வர்றேன்னு சொல்லிருந்தார், அதுக்கு தகுந்த போல பிளான் பண்ணி இருந்தேன், இப்ப இன்னைக்கே வந்து பார்த்திட்டு நாளைக்கு பாரின் கிளம்பறதா சொல்லுறார்… இங்கே வேற யாரையும் நம்பி அனுப்ப முடியல, நீ கொஞ்சம் பொறுப்பா எல்லா விஷயத்தையும் பண்ணுவ, அதான் உன்னைப் போக முடியுமான்னு கேக்கறேன்…”
பாரதி பதில் சொல்லாமல் மிரண்டு விழிக்க புன்னகைத்தாள்.
“ஓகே மேடம்…” என்ற பாரதி சற்று யோசனையுடனே தனது காபினுக்கு வந்தாள். ரிஷியிடம் சொல்லலாமா என யோசித்து அவனுக்கு அலைபேசியில் அழைக்க அது சுவிட்ச் ஆப் என்றது. மீட்டிங்கில் இருக்கும்போது அவன் போனை சுவிட்ச் ஆப் செய்வது வழக்கம். எனவே வெளியே செல்லுவதாய் ஒரு மெசேஜை மட்டும் போட்டு வைத்தாள்.
பத்து நிமிடத்தில் கெளதம் வந்து, “போகலாம்…” எனவும் எழுந்த பாரதி அவனுடன் காரில் கிளம்பினாள்.
மெடிக்கல் லாபில் வேலை நடந்து கொண்டிருந்ததால் கட்டுமானப் பொருட்கள் அங்கங்கே கிடக்க சற்று கசகசப்பாகவே இருந்தது. சற்று நேரத்தில் அந்த வெளிநாட்டு டெக்னீஷியன் வந்துவிட்டான். அவனும் தமிழ் இளைஞன் ஆதலால் இவர்களுடன் நட்புடன் தமிழிலேயே பேச பாரதிக்கு தயக்கம் குறைந்து அவளும் இயல்பாய் பேசினாள்.
அவனை வரவேற்று ஜூஸ் கொடுத்து அமர வைக்க லாப்க்கு சம்மந்தமான விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
எஞ்சினியர் லாப் முழுதும் அவனை அழைத்துச் சென்று சுற்றிக் காட்ட அவர்களும் உடன் இருந்தனர். அங்கே இருந்த பலவித புரியாத இயந்திரங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டே அவர்கள் பேசுவதை கவனித்திருந்தாள். அந்த டெக்னீஷியன் ஏதேதோ அளவெடுத்துக் கொண்டு மெஷின்களை நிறைய போட்டோ எடுத்துக் கொண்டான்.
எல்லாம் முடிய நேரம் இரண்டாகி இருந்தது.
“சார், டைம் ஆச்சு, லஞ்ச் முடிச்சுடலாமே…” பாரதி சொல்ல அந்த டெக்னீஷியன் தலையாட்டினான்.
“யா, ஷ்யூர்…”
மூவரும் ஒரே காரில் கிளம்பினர். கங்கா முன்னமே ரிசர்வ் செய்திருந்த பெரிய ரெஸ்டாரண்டில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர்.