மயக்க மருந்து மருத்துவர்கள், நரம்பு பிடித்து ஊசி செலுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்ற மருத்துவர்கள் தங்கள் பயிற்சி காலத்தோடு அந்த பணியிலிருந்தெல்லாம் விலகியிருப்பார்கள்.
ஆக நீர்சத்து இழந்த ஒருவருக்கு நரம்பூசி செலுத்துவது என்பது அவருக்கு சற்று கடின காரியம். ஆனால் குறைந்தது அறுபது நரம்பூசிகளை தினம் செலுத்த வேண்டிய அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலிக்கு அது இலகுவான வேலை.
இப்படி அவர்கள் நரம்பை நிலை நிறுத்தி, அதன் வழியே நீர் சத்தான குளுகோஸை வேக வேகமாக உள் அனுப்பி கொண்டிருக்க, அந்த இரண்டாம் வருட மாணவி அந்த மருத்துவ கட்டிலின் இயக்கியை பயன்படுத்தி நோயாளியின் தலை கீழே இருக்கும்படி அந்த கட்டிலின் அமைப்பை மாற்றி வைத்தாள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க.
பொதுவாக இரத்த இழப்பின் போது, எந்த இடத்தில் இருந்து இரத்தம் வருகிறதோ அந்த இடத்தை அழுத்தம் கொடுத்து உயர்த்தி பிடித்தாலே ரத்த இழப்பை கூடுமான அளவு தவிர்க்கலாம். அதே நேரம் அந்த பணியை மல்லி செய்து கொண்டிருக்க, பயிற்சி மருத்துவ மாணவர் ரத்த மாதிரியை எடுத்து கொண்டு ரத்தம் பெற்று வர ரத்த வங்கிக்கு விரைந்திருந்தார்.
அப்போது பணியில் இருந்த எலும்பு முறிவு மருத்துவர் அங்கு வந்து சேர்ந்தனர். நோயாளியின் உடலில் வெட்டுபட்டிருந்த ரத்தக் குழாய்களை ஆர்டரி என்று சொல்லப்படுகின்ற கருவிகள் மூலம் இறுக்கம் கொடுத்து உதிரப்போக்கை முற்றிலும் நிறுத்த, நனைந்த கட்டு துணிகளை அகற்றி மல்லி மீண்டும் புதிய கட்டு துணிகளை அந்த காயத்தில் சுற்றினாள்.
ரத்த இழப்பு நிறுத்தப்பட்டு, குளுலோஸ் ஏற்றப்பட்டதில் நினைவு திரும்பிய நோயாளி மெதுவாக விழி திறந்து பார்த்தான். அதே நேரம் அத்தனை சிதைவான காயம் ஏற்பட்டால் அதற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும், வலி நிவாரணிகளையும் மதியும், மகிழும் இணைந்து அவருக்கு கொடுத்திருந்தனர்.
“சிஸ்டர்… பேஷன்ட்டுக்கு எமர்ஜென்சி எக்ஸ்ரே எடுங்க. ஓ.டிக்கு (அறுவை அரங்கம்) மெமோ கொடுத்துடுங்க. ப்ளட் இப்ப ஒரு யூனிட் ஸ்டார்ட் செய்யுங்க. மூணு யூனிட் ரிசர்வ் செஞ்சிடுங்க. இன்வஸ்ட்டிகேசன் எல்லாம் வந்ததும் சொல்லுங்க.’’ என்ற எலும்பு முறிவு மருத்துவர் அணிந்திருந்த கையுறையை கழற்றிவிட்டு, நோயாளியின் சிகிச்சை குறிப்பேட்டை நிரப்ப சென்றார்.
தங்கள் கண் முன் போராடிய உயிரை மீட்ட மருத்துவ குழுவை மருத்துவ மாணவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றனர். “சார்…! காலேஜ் பஸ்க்கு டைம் ஆச்சு…” என்று அங்கிருந்த மருத்துவ மாணவர் ஒருவர் சொல்ல, தன் கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை சரி பார்த்தவர், “சரி கிளம்புங்க. மீதியை நாளைக்கு சர்ஜரி ஓபில கவர் செய்யலாம்.” என்றதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
தானும் தன் காருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தவர் கிளம்பும் முன் தன் கைகளை கழுவி கொள்ளலாம் என்று அங்கிருந்த கை கழுவும் இடம் நோக்கி நடந்தார்.
அப்போது மல்லி, இரண்டாம் வருட மாணவியிடம், “இதுக்கு தான் ஒவ்வொரு முறையும் ஒரு விசயத்தை ஏன் செய்றீங்க…? எதுக்கு செய்றீங்கன்னு…? தெரிஞ்சி செய்யுங்கன்னு படிச்சி படிச்சி சொல்றேன். இங்க யாரும் நமக்கு நிறுத்தி நிதானமா சொல்லி கொடுத்துட்டு இருக்க மாட்டாங்க. நாம தான் தேடி தேடிப் போய் தெரிஞ்சிக்கணும். ஒரு வென்ப்ளான் 72 ஹவர்ஸ் தான் பேசன்ட் வெயின்ல இருக்கணும். அதுக்கு மேல இருந்தா இன்பக்சன் ஆக வாய்ப்பு இருக்கு. அதை திராம்போ பிலிபைடிஸ் அப்படின்னு சொல்லுவாங்க.’’ என விளக்கி கொண்டிருந்தாள்.
அந்த மருத்துவருக்கே சங்கடமாய் போனது. மல்லியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அவர் உணர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்கையில், செவிலிய மாணவிகளையும் அழைத்து அருகில் நிறுத்திக் கொள்வார்.
ஆனால் செவிலியர்கள், பணி நிமித்தம் காரணமாக அவர்களை அழைத்து கொண்டே இருப்பார்கள். அது அவருக்கு இடையூராக இருக்க, அதன் பிறகு அவர் அவர்களை அழைப்பதையே நிறுத்தி இருந்தார்.
ஒவ்வொரு இடத்திலும் சிந்தித்து, செயலாற்ற தகுதியான, திறமையான செவிலியர்களை வேண்டும் நாம், எத்தனை சதவீதம் அதற்கான பங்களிப்பை அளிக்கிறோம் என்ற கேள்வி அவர் மனதில் தோன்ற, இனி வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அவர்களுக்கும் சேர்த்து கற்பிக்க வேண்டும் என்ற முடிவை மனதிற்குள் எடுத்து கொண்டார்.
ஒரே முயற்சியில் வெற்றிகரமாக நரம்பூசியை நிலை நிறுத்திய அந்த மாணவியின் செயல் அவர் மனத்திரையில் விரிய, கைகளை கழுவி கொண்டவர் வெளி வரும் போது, எதிர்பட்ட அம்மாணவியை கண்டு உள்ளார்ந்த புன்னகை பூதத்தார்.
காலையிலிருந்து கடு கடுவென்றிருந்தவர் இப்போது ஏன் நம்மைப் பார்த்து சிரிக்கிறார் எனப் புரியாத மாணவி, மெதுவாக தலையை மட்டும் அசைத்து விட்டு கடந்தாள்.
மல்லி, மதி, மகிழ் இவர்களின் பணி நேரம் முடிய, பொறுப்பு செவிலியரிடம் தெரிவித்து விட்டு, தங்கள் தோள் பைகளை எடுத்து கொண்டவர்கள் கல்லூரிக்கு கிளம்பினர். கிளம்பும் முன் இவர்கள் வழமையாய் தேநீர் அருந்தும் கல்லூரி உணவகத்திற்குள் நுழைந்தனர்.
இவர்களுக்கு முன்பே பணியிடத்திலிருந்து கிளம்பியிருந்த ரேணுவும், சங்கரியும் அங்கு அமர்ந்திருந்தனர். ரேணு காபியை சுவைத்துக் கொண்டிருக்க, சங்கரியின் கையில் பால் கோப்பை இருந்தது.
தன் தோள்பையை அங்கிருந்த மேஜையில் கழற்றி வைத்த மதி, “சை…! சரியான தலைவலி. எனக்கு ஏலக்காய் டீ சொல்லு மகி.’’ என்றாள். “எனக்கும்…” என்றபடி மதியின் அருகில் அமர்ந்தாள் மல்லி.
மகிழ் மூவரும் உண்டான தேநீர் கோப்பைகளை ஒவ்வொன்றாய் எடுத்து வந்த மேஜையில் வைக்க, மூவரும் தேநீரை அருந்தினர். இத்தனை நேரம் இருந்த பணி களைப்பை அந்த ஒற்றை தேநீர் மெல்ல மெல்ல உறிஞ்சிக் கொண்டிருந்தது.
“இன்னைக்கு வேற பொங்கல் செலிப்ரேசனுக்கு பேகல்டீஸ் எல்லாம் இன்வைட் செய்யணும். லன்ச் முடிஞ்சதும் நான் உடனே காலேஜுக்கு கிளம்பனும்டி.’’ என்றாள் சோகமாய்.
“இதுக்கு தான் அப்பவே சொன்னேன். பிரின்சிபல் மேம் கைல கால்ல விழுந்தாவது இந்த போஸ்டிங் வேண்டாம்னு சொல்லிட்டு வாடின்னு. இப்ப பாரு ஒவ்வொரு பங்சனுக்கும் உன்னைத் தான் வச்சி செதுக்கப் போறாங்க.’’
அவளோடு சேர்ந்து நால்வரும் வதைபடப் போகிறோம் என்ற உண்மை புரியாத மகிழ் தோழியை வைது கொண்டிருந்தாள். “ஆமா எனக்கு தான் ரொம்ப ஆசை கிளப் இன்சார்ஜா திரிய. ஒழுங்கா ஓடிரு. அந்தம்மா நான் போய் நின்னாலே… இவ டேலன்ட், எல்லாம் சமாளிச்சிருவான்னு அதுவா பேசி என்னை வெறுப்பேத்தி திருப்பி அனுப்பி விட்ருது. இதுல நான் எதை கேக்க…?’’ என்றாள் சோகமாய்.
“உனக்கு எங்ககிட்ட தான் வாய் வாய்க்கா மாதிரி நீளும். வேற யாரைப் பார்த்தாலும் திண்டுக்கல் பூட்டை வச்சி பூட்டிரு.’’ என்ற மகிழ், தேநீருக்கு பணம் செலுத்த எழுந்து சென்றாள். மதி, “இருடி நான் தறேன்.’’ என்று அவளை தொடர்ந்து எழுந்து சென்றாள்.
மல்லியால் அப்படி சட்டென பணத்தை செலவு செய்ய முடியாது. சுந்தர் எண்ணி செலவிற்கு தான் அவளுக்கு பணம் கொடுப்பான். தேவை என்று கேட்டால் அடுத்த நொடி பணம் வந்து விடும் என்றாலும், அநாவசிய செலவுகள் அவனுக்கு பிடிக்காது. இவளின் பண பரிவர்த்தன அட்டையே அவன் வசம் தானிருந்தது.
அவனிடம் கேட்பதற்கு தயங்கியே மல்லி பெரும்பாலும் அமைதியாகிவிடுவாள். அவளின் நிலை உணர்ந்த தோழிகள் பெரும்பாலும் உணவகம் சென்றாலோ வேறு எங்கும் வெளியிடம் சென்றாலோ, அவளுக்கும் சேர்த்து தாங்களே பணம் கொடுத்துவிடுவர்.
ஆனால் அதை மல்லி ஒவ்வொரு பைசாவாக மனதில் கணக்கிட்டு வைத்திருப்பாள். சமயம் வாய்க்கும் போது எப்படியும் அதை அவர்களுக்கு திருப்பி விடுவாள். மல்லி தன் எண்ணத்தில் மூழ்கியிருக்க, “போலாமா…?’’ என்று கேட்டபடி மகிழ் வந்து நின்றாள்.
எழுந்து நின்று தன் தோள் பையை எடுத்துக் கொண்ட மல்லி, “பாகீரதி மேம் வேற என்னையும் அந்த பனங்கா மண்டையையும் இன்னைக்கு சரியா ஒன்றரைக்கு வந்து பாக்க சொல்லி இருக்காங்க. டீனை பார்க்க போவோம்னு நினைக்குறேன்.’’ என்று சொல்லியபடி தான் வண்டி நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தாள்.
அதே நேரம் மகிழின் கண்களில் வேலனின் யூனிகார்ன் வண்டி கண்ணில் பட்டது. பார்க்கும் நேரம் எல்லாம், இவளையும் இவள் தோழிகளையும் எதையாவது சொல்லி கடுப்பேற்றும் வேலனை கண்டாலே மகிழுக்கு ஆகாது.
“ஓ… பாகீரதி மேடமே வர சொல்லியிருக்காங்களா. அப்ப சீக்கிரம் போக வேண்டியது தான்.’’ என்றவாறே அவன் வண்டியை நெருங்கியவள், சுற்றும் முற்றும் யாரும் கவனிக்கிறார்களா என பார்த்துவிட்டு, தவறவிட்ட கைகுட்டையை குனிந்து எடுப்பவள் போல, அவன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கர காற்றை இறக்கிவிட்டாள்.
அவளின் செயலை கவனித்துவிட்ட மல்லி, “ஏய்…! என்னடி செய்ற…?’’ என்று பதற, மதி அவளை அப்படியே ஓரமாக தள்ளி கொண்டு சென்றாள். சங்கரி உடனே, “நேத்து லைப்ரரில புக் எடுக்க போகும் போது என்னைப் பார்த்து, பேனை ஆப் பண்ணு மச்சி. காத்தாடி ஒன்னு வருது. பறந்துடப் போகுதுன்னு சொல்றான்டி.’’ என மூச்சு வாங்க அவன் மீது முதல் குற்றசாட்டை சுமத்தினாள்.
“அது கூட பரவாயில்ல. என்னை பார்க்கும் போதெல்லாம் குவாக் குவாக்ன்னு வாத்து மாதிரி சத்தம் கொடுத்து… என்னை இரிடேட் செய்றான். நான் அவ்ளோ குள்ளமாவா இருக்கேன்.’’ என்று தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தாள் ரேணு.
“நீங்க எவ்வளவோ தேவலாம்டி. நீங்க என் பட்டப்பேரை எப்ப அவன் முன்னாடி சொன்னீங்கன்னே தெரியல. என்னை பார்குறப்ப எல்லாம்… காத்தடிச்சு காத்தடிச்சு காலங்கள் போகுதம்மான்னு பாடுறான்டி.’’ என்றாள் கொலை வெறியை உள்ளடக்கிய குரலில்.
‘அப்ப இவளை…’ என்று மற்ற நால்வரும் அர்த்தத்தோடு அவளை பார்க்க, தன்னை, ‘மேக்கப் மேனியா’ என்று மேலோட்டமாக கலாய்த்து சென்றதை சொல்ல விருப்பமில்லாத மகிழ், “உங்களை சொன்னா என்ன…? என்ன சொன்னா என்ன…? ரதி மேடமுக்கு டைமிங் ரொம்ப முக்கியம். ஆல்ரெடி எல்லா மாஸ்டரும் வண்டியில கிளம்பியாச்சு. தல இன்னும் அவங்க வார்ட்ல இருந்து வரல போல. இன்னைக்கு பஸ் பிடிச்சி தொங்கிட்டு வரட்டும். அப்போ தெரியும் மத்தவங்க கஷ்டம். அந்தம்மா வாய திறந்தாலே குடும்பம் குட்டின்னு முழு சரித்திரத்தையும் இழுத்து வச்சி பேசும். இன்னைக்கு பனங்கா மண்டையை வச்சி செதுக்க போகுது.’’ என்றாள் ஒரு வெற்றிப் புன்னகையை இதழோரம் தேக்கியபடி.
“அப்ப எனக்கு ரோசு.’’ என்று மல்லி பதற, “நீ வாடி என் லூசு…’’ என்று அவள் பையை பிடித்து தர தரவென்று இழுத்து சென்றாள் சங்கரி.
மகிழும், ரேணுவும் ஒரு வண்டியில் ஏற, மதியின் வண்டி முன்னால் சீறிக் கொண்டு பறந்தது. மல்லி தன் வழமை போல பொறுமையாக வண்டியை ஓட்டியபடி, காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த யூனிகார்ன் வண்டியை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.
தாங்கள் விதைத்த விதையை தாங்களே வேறோருநாளில் அறுவடை செய்யப் போகிறோம் என்று அறியாத தோழிகள் வெற்றி களிப்புடன் பயணித்து கொண்டிருந்தனர்.