பந்தம் – 8 

மல்லி, மகிழ், மதி மூவரும் அன்றைக்கு அவசர சிகிச்சைப் பகுதியில் பணியில் இருந்தார்கள். காலை நேரம் மருத்துவக் கல்லூரியில் பணி செய்வதும் மதியம் தங்களுக்கான வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பதும் பொது விதி. 

மகிழும், மதியும் விழுந்து விழுந்து ஒவ்வொரு நோயாளிகளாய் கவனித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருந்த பதினாறு படுக்கைகளில் ஒன்பது படுக்கை நோயாளிகள் செயற்கை சுவாசத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர். 

இவர்களின் பணியிடதிற்கு வெளியே ‘கேசுவாலிட்டி’ என்று சொல்லப்படுகின்ற அதி தீவிர முதல் உதவி சிகிச்சைப் பகுதி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மதி நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொண்டிருக்க, மகிழோ அவர்களுக்கு நாம்புகளின் வழி ஊசியை செலுத்திக் கொண்டிருந்தாள். 

மல்லி செவிலிய பணியிடத்தில் நின்றபடி நோயாளிகளுக்கான சிகிச்சை குறிப்பேட்டில் செவிலியர்கள் எழுத வேண்டிய தகவல்களை நிரப்பிக் கொண்டிருந்தாள். அதே நேரம் டிப்ளோமோ படிக்கும் இரண்டாம் வருட மாணவிகளை நிறுத்தி கேள்வியும் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“கார்டியாக் பெயிலியர் பேசன்ட்டுக்கு ஃப்லூயிட் போடலாமா போடக் கூடாதா…?’’ என அவள் கேட்க, மூத்த செவிலியர் பணித்த வேலையை செயலாற்ற வந்த மாணவிகள் இவள் முன் தேங்கி நின்றனர். 

அதே நேரம் அதி தீவிர முதலுதவி பகுதியிலிருந்து இவர்கள் பகுதிக்கு வந்த பணி செவிலியர், “என்ன எல்லாரும் நர்சிங் ஸ்டேசனை சுத்தி நின்னு கதை பேசிட்டு இருக்கீங்க. செகண்ட் இயர் உங்களை அந்த எமர்ஜென்சி ட்ரே மெடிசன் எல்லாம் செக் செஞ்சி வைக்க சொன்னா இங்க நின்னு என்ன செஞ்சிட்டு இருக்கீங்க. போஸ்ட் பேசிக் சிஸ்டர் இன்னைக்கு டீன் ரவுண்ட்ஸ். கேசுவாலிட்டில ஒரு ஸ்டாப் தான் போஸ்டிங் போட்டு இருக்காங்க. நீங்க அங்க போய் கொஞ்சம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. ஒரு செகன்ட் இயர் பாப்பாவையும் உங்களோட கூட்டிட்டு போங்க.” என்றார். 

“சரிங்க சிஸ்டர்.” என்று பதில் கொடுத்த மல்லி, தங்கள் பிரிவை ஒட்டியிருந்த அந்த அதி தீவிர பிரிவிற்குள் நுழைந்தாள். அப்போது அங்கே பயிற்சி மாணவர்கள் கூட்டமாய் கூடி நிற்க, உதவி மருத்துவ அலுவலர் ஒருவர் அவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 

அங்கிருந்த செவிலியர் இவளைக் கண்டதும் ஆசுவாச பெருமூச்சு விட்டார். “சிஸ்டர் டெய்லி ட்ரக் இன்டன்ட் கொஞ்சம் எழுதுறீங்களா. நான் வார்ட் கிளன்லீனஸ் பாத்துட்டு வந்துடுறேன்.’’ என்றார். 

இவள் சரி என்பதாய் தலையாட்டிவிட்டு அங்கிருந்த பதிவேட்டை எடுத்து எழுத துவங்க, இவளோடு வால் பிடித்து வந்திருந்த இரண்டாம் வருட மாணவி, ஊசி செலுத்த வேண்டி வரிசையில் நின்றிருந்தோருக்கு ஊசி மருத்துகளை செலுத்த துவங்கினாள். 

இருவரும் தங்கள் பணிகளில் மூழ்கி இருக்க, மருத்துவ குழு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த உதவி மருத்துவ அலுவலர் திடீரென்று,  “சிஸ்டர்…’’ என்று உரத்த குரலில் அழைப்புவிடுத்தார். 

செவிலிய பணியிட மேஜை முன்பு நின்று கொண்டிருந்த இவளோ, என்னவோ ஏதோவென்று பதறியடித்து அவர் முன் வந்து நின்றாள். இவளை கண்டதும், மறுப்பாய் தலை அசைத்தவர், “உங்களை இல்ல சிஸ்டர். குட்டி சிஸ்டர் ஒருத்தங்க வந்தாங்க இல்ல. அவங்களை கூப்பிட்டேன்.’’ என்றார். 

“வர சொல்றேன் சார்.’’ என்றவள், ஊசி செலுத்திக் கொண்டிருந்த மாணவியிடம் சென்று, “சார் கூப்பிடுறாங்க. அங்க போங்க.’’ என சொல்லவிட்டு, தான் அவளின் பணியை தொடர்ந்தாள். என்ன தான் மாணவியை அந்த மருத்துவரிடம் அனுப்பினாலும், அவள் காது முழுவதும் அவர்களின் உரையாடலில் தான் இருந்தது. 

அந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இரண்டாம் வருட மருத்துவ மாணவர்களுக்கு, ‘அப்பன்டிக்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற, குடல்வால் தொற்று குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 

அதன் மருத்துவ பெயர் அறிகுறிகளை அவர் விளக்கி கொண்டிருக்க, அவர் சொற்கள் வசம் செவிகளை கொடுத்துவிட்டே அவள் எழுதிக் கொண்டிருந்தாள். அது இன்றைக்கு வந்த பழக்கம் அல்ல. 

என்றைக்கு செவிலியத்தில் இணைந்தாளோ அன்றைக்கு வந்த பழக்கம். செவிலிய மாணவிகளுக்கு பெரிதாக பணியிடத்தில் வந்தெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். வாரம் இரண்டு நாட்கள் வகுப்பு இருக்கும். 

மற்ற நான்கு நாட்களையும் முழு எட்டு மணி நேரமும் அவர்கள் வேலை பார்ப்பதில் தான் கழிப்பார்கள். செவிலியர்களோ, அன்றி மூத்த மாணவிகளோ மனதோ, நேரமோ இருந்தால் ஏதேனும் ஓரிரு விசயங்களை சொல்லி தருவார்கள். 

அவள் செவிலிய பட்டயப்படிப்பை முடித்ததும் மருத்துவக் கல்லூரி என்பதால் யாருக்கும் முகம் பார்க்க கூட நேரம் இருக்காது. காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு  ஓட வேண்டியிருக்கும். அதுவும் செவிலிய மாணவிகள் என்றால், அவர்களின் நிலை இன்னும் பரிதாபம். 

ஆக மல்லி செவிலியத்தையும், அது சார்த்த நோய் குறியியல், வைத்திய முறை என அனைத்தையும் கற்று தேர்ந்தது நோயாளிகள் மூலமே. ஒரு நோயாளியை கண்டால் அவருக்கு ஊசி செலுத்தும் போதும் அவர் அருகில் நின்று ஏதேனும் வேலை செய்யும் போதும், “உங்களுக்கு என்ன செய்யுது…? எத்தனை நாளா இப்படி இருக்கு…?’’ என்று விவரங்களை சேகரிக்க துவங்கிவிடுவாள். 

பேச முடியாத நிலையில் இருக்கும் நோயாளி என்றால் அவர் உறவினர்களிடம் அந்த கேள்விகள் பாயும். அதோடு அப்போதும் மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து இப்படி வகுப்புகள் நடக்கும். 

தன் வேலை எங்கு இருந்தாலும், தன் செவியை அந்த இடத்தில் வைத்துவிட்டு, அது கொண்டு தரும் தகவல்களை மூளையில்  சேகரித்து வைப்பாள். இவளை மருத்துகளை எண்ணி வர சொல்லும் போதெல்லாம், ஒவ்வொரு மருந்தும் என்ன மில்லி கிராமில் இருக்கிறது, அதில் என்னென்ன வேதிப் பொருள் கலந்துள்ளது என்பதையெல்லாம் பொறுமையாக வாசித்து விடுவாள். 

மல்லி வகுப்பறைக்குள் கல்வி கற்றவள் அல்ல. பார்த்தல், உணர்தல், கேட்டல், அறிதல் என்ற தன் திறன்களை தேவையான இடத்தில் பயன்படுத்தியே கல்வி கற்றவள். இப்படி தன் வழமைப்படி காதுகளை வகுப்பு நடக்கும் இடத்தில் பத்தித்தபடி நோயாளிகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். 

அப்போது அந்த மருத்துவர், செவிலிய மாணவியிடம், “காலைல எத்தனை மணிக்கு உள்ள வந்தீங்க…?’’ என்று கடுமையான குரலில் தன் விசாரணையை துவக்கியிருந்தார். 

அந்த மாணவி திணறிக் கொண்டே, “ஏழு மணிக்கு சார்.” என்றாள். “நில் ஓரல் ( வாய் வழியே உணவை எடுத்துக் கொள்ள முடியாதவர்கள்.) பேசன்ட்டுக்கு ஒரு  ஃப்லூயிட் போடாம இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க. போம்மா போய் ஒரு ஆரெல் எடுத்துட்டு வந்து கனக்ட் பண்ணு.’’ என்றார். 

அந்தப் பெண்ணும் நான் இப்போது தான் உள்ளே நுழைந்தேன் என்பதை கூட சொல்லாமல்,  விழுந்தடித்துக் கொண்டு ஒரு புதிய சலைன் பாட்டிலை அந்த நோயாளியின் கையில் இணைத்தாள். செவிலிய முதல் வருடத்தில் சொல்லிக் கொடுக்கும் பாடம் இது தான். இங்கு எதிர்த்து பேசுதல் கூடாது. கட்டளைகளுக்கு கீழ் படியும் குணம் வேண்டும். 

அவள் அதை இணைத்து விட்டு நகர முயன்ற நொடி, “வென்ப்ளானை எத்தனை நாளைக்கு ஒருமுறைமா மாத்துவ…?’’ என்ற கேள்வியை அவள் முன் வீசினார். 

அந்த இடத்தில அப்படியே தேங்கி நின்ற மாணவி, அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதை போல தன் முட்டை விழிகளை மேலும், கீழும் உருட்டிக் கொண்டிருந்தாள். 

தன் செவிகளை இங்கு பதித்திருந்த மல்லியின் முகம் கோபத்தில் லேசாக சிவக்கக் தொடங்கியிருந்தது. அந்த மாணவி பதில் சொல்ல தாமதிக்கவும்,  “ஏம்மா இருபத்திநாலு மணி நேரமும் என்ன தாம்மா செய்வீங்க. எப்பப் பாரு நர்சஸ் ஸ்டேசன்ல நின்னுட்டு எதையாவது எழுதிக்கிட்டே இருக்க வேண்டியது. ஒரு மண்ணையும் உருப்படியா கத்துக்கிறது இல்ல.” என்று அவர் கடினமாக பேச, மாணவியின் முகம் வேதனையில் சுருங்கியது. 

சுற்றி இருந்த மருத்துவ மாணவர்கள் அவளை இளக்காரமாய் பார்ப்பதை போல தோன்ற, அம்மாணவி அங்கிருந்து விலகி நடக்க யத்தனித்தாள். ஆனால் அதே நேரம், அவசர ஊர்தி நெருங்கும் சைரன் ஒலி அவ்விடத்தை நிறைக்க, உடனடியாக அங்கு  பரபரப்பு தொற்றியது. 

வாசலில் அவசர ஊர்தி நின்றதும், நோயாளியை படுக்கையில் வைத்து உருட்டியபடி அவசரமாய் உள்ளே வந்த 108  மருத்துவ பணியாளர், “மாசிவ் ப்ளீடிங்.’’ என்று அறிவித்த படி வேக வேகமாக அதிவேக சிகிச்சை பிரிவிற்குள் அந்த நோயாளியை இடம் மாற்றினார். 

அதுவரை அங்கங்கு நின்று நோயாளிகளை விசாரித்து கொண்டிருந்த பணி மருத்துவர்கள் அவ்விடத்திற்கு விரைய, வெளியே கேட்ட அரவத்தில், மதியும், மகிழும் கூட வந்து விட்டிருந்தனர். 

அந்த ஆணுக்கு மிஞ்சிப் போனால் இருபத்தைத்து வயதிருக்கலாம். சாலை விபத்தில் அவனின் வலதுபுற கால் முழங்கால் வரை மிக மோசமாக சிதைத்திருந்தது. திசுக்கள் கிழிந்து அவனின் எலும்புகள் வெளி தெரிய, அங்கு கூடியிருந்த பயிற்சி மாணவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 

அதிக குருதி போக்கில் அவன் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டிருக்க, மல்லி வேகமாக செயலில் இறங்கினாள். அவளோடு மதியும் மகிழும் இணைந்து கொண்டனர். பணி மருத்துவர்கள் விபத்து குறிப்பேட்டை நிரப்ப துவங்க, மல்லி வேகமாக கட்டு கட்டும் துணிகளை  கொண்டு வந்தாள். 

அதற்குள் மகிழ் அவருக்கு நரம்பூசி செலுத்த தயாராக, பாடம் எடுக்க வந்த உதவி மருத்துவ அலுவலர், தானும் அந்த நோயாளியை காக்க, அவரின் மற்றொரு கரத்தில் நரம்பூசியை செலுத்த முயன்றார். 

ஆனால் அதிக இரத்தப் போக்கில், அவனின் உடல் நீர்சத்து இன்றி வறண்டிருக்க அவரின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டிருந்தது. அதற்குள் மகிழ், அந்தப் பக்கம் வெற்றிகரமாக ஒரு நரம்பை பிடித்து ஊசியை நிலை நிறுத்தியிருக்க, மதி வேகமாக அதில் சலைனை ஏற்றிக் கொண்டிருந்தாள். 

‘சரி லைன் போட்டாச்சு இல்ல…’ என்ற நினைப்பில் அவர் விலக, அந்த இடத்தில் அதுவரை அவர் ஊசியை செலுத்த வாகாக கைகளை பிடித்து கொண்டிருந்த இரண்டாம் வருட மாணவி, யார் உதவியுமின்றி அதே கையில் மற்றொரு நரம்பூசியை வெற்றிகரமாக நிலை நிறுத்தினாள். 

அதில் அவர் தவறொன்றும் இல்லை. நரம்பில் ஊசியை நிலை நிறுத்துவது என்பது செவிலியப் பணி. அது மருத்துவர் பணி அல்ல. ஏதேனும் சிக்கலான நோயாளிகளுக்கு மத்திய நரம்பில் ஊசி போட வேண்டும் என்றாலோ, அல்லது கட் டவுன் என்று சொல்லப்படுகின்ற தமனியை வெளி இழுத்து நரம்பூசி போட வேண்டி வந்தாலோ மட்டுமே மருத்துவர்களை அழைப்பார்கள்.