விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே தங்கள் பெண் மீது தவறு இல்லை. லிங்கா தான் சரியில்லை என்று மற்றவர்களுக்குக் காட்ட… உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக ஒரு வரனை பார்த்து, ஐஸ்வர்யாவின் தந்தை மகளுக்குத் திருமணம் முடித்து விட்டார்.
லிங்காவும் உடனே திருமணம் செய்து கொள்ளவில்லையா…. அப்போது இவர்கள் சொன்னது போல இருக்குமோ என உறவுகளுக்கு மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டது.
ஐஸ்வர்யா இரண்டாவதாக மணந்து கொண்ட முத்துக்குமாருக்கு உடன்பிறந்த அண்ணன் தங்கை இருவர் இருக்க… அவர்கள் வீட்டில் மகனை வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொள்ளச் சொல்லிவிட்டனர். ஐஸ்வர்யா ஒரே பெண் என்பதால்… சொத்து முழுவதும் மகனுக்கு வருமே… அவர்களுக்கு அதுதான் பெரிதாகத் தெரிந்தது.
முத்துகுமார் படித்திருக்கிறான் ஆனால் வேலைக்கு எதுவும் செல்லவில்லை. மாமனாரோடு அவர் தொழிலை பார்த்துக் கொண்டு இருந்தான். மாப்பிள்ளையாகவே இருந்தாலும், ஐஸ்வர்யாவின் தந்தை வரவு செலவு எல்லாம் அவரே தான் பார்த்துக் கொண்டார்.
முதல் சில மாதங்கள் எல்லாம் சரியாக இருப்பது போல இருந்தது. முத்துகுமாரின் வீட்டினர் வந்தால்… இவர்களும் நன்றாக உபசரித்தனர். முத்துக்குமாரின் பெற்றோருக்கு மகன் மருமகள் வீட்டில் இருப்பது பற்றி எல்லாம் கவலை இல்லை.
வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் கிளம்பி இங்கே வந்து விடுவார்கள். அவர்களுக்கு மதிய உணவு ,மாலைப் பலகாரம் என்று விருந்து வைக்கவே ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு ஆண்டு முழுவதும் நேரம் சரியாக இருக்கும். அதோடு இவர்களுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும் என்ற கடுப்பும் இருந்தது.
வாரவாரம் அவர்கள் வந்ததும், “இவங்களுக்கு ஆக்கி போடணும்னு எனக்கு என்ன வந்தது” என அவள் அம்மா புலம்ப…. ஐஸ்வர்யாவும் முத்துகுமாரிடம் சொல்லி பார்த்தாள். ஆனால் அவன் உனக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் இருக்காங்களா என்ன? என் வீட்டு ஆளுங்க வந்து போய் இருக்கிறது உனக்கு என்ன பிரச்சனை? என்றவன், அவர்கள் அப்படித்தான் வருவார்கள் என்றான்.
அவர்களுக்கு ஆக்கி போட வலித்து, அவர்கள் இங்கே வருவதற்கு நீங்கள் அங்கே செல்லுங்கள் என மகளையும் மருமகனையும் இவர்களே வார இறுதியில் அங்கே அனுப்ப ஆரம்பித்தனர்.
ஐஸ்வர்யாவுக்குச் செல்லவே இஷ்ட்டம் இருக்காது. அவளுக்கு அவர்கள் வீட்டையோ வீட்டு ஆட்களையோ பிடிக்காது. வீடும் அந்தக் காலத்து வீடு. அம்மா வீட்டில் தானே இருக்கப் போகிறோம் என்று அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போது பெற்றோருக்காக வேறு வழியில்லாமல் சென்றாள்.
அதோடு அவள் மாமியார் ஒவ்வொரு மாதமும், அவள் வீட்டு விளக்காகும் நாளை நினைவு வைத்துப் போன்னில் அழைத்து, இந்த முறையும் வந்துவிட்டதா… அல்லது நாள் தள்ளி போயிருக்கா என்று விசாரித்து விடுவார். அவருடைய மகனுக்கு வாரிசு வேண்டும் என்பதில் அவ்வளவு குறியாக இருந்தார்.
அவருடைய நச்சரிப்புப் பொறுக்காமல் மருத்துவரை பார்க்க சென்றனர். மருத்துவர் அவளுக்கு மாத்திரை மருந்து எல்லாம் கொடுத்து அனுப்பினார். உடல் எடையையும் கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்.
முத்துகுமாரிடம் இவர்களின் பருப்பு வேகவில்லை. இவர்கள் அவனை மட்டம் தட்ட முனைந்தால்… அவன் பதிலுக்கு வெளி ஆட்கள் முன்பு ஐஸ்வர்யாவின் தந்தையை அலட்சியமாக நடத்தினான். அதற்குப் பயந்து கொண்டே அவனிடம் ஒழுங்காக நடந்தனர்.
முத்துக்குமார் ஒன்றும் இவர்கள் சொன்னதை நம்பி ஐஸ்வர்யாவை திருமணம் செய்யவில்லை. அவனுக்கு இவர்கள் இதற்கு முன் இருந்த சம்பந்தி வீட்டினரை எனன் பாடு படுத்தினார்கள் என்று எல்லாமே தெரியும். அதனால் அவன் முதலிலேயே சுதாரித்துக் கொண்டான்.
நானும் வேலை பார்க்கிறேன். எனக்கு மாசம் இவ்வளவு வேண்டும் என்று ஒரு தொகையைக் கேட்டு வாங்கி விடுவான். இவனுக்குப் பணத்தையும் கொடுத்து, சேவகமும் பார்க்க வேண்டுமா என்று ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு இப்போது வலித்தது.
ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கும் உடல்நலமில்லாமல் போக…. மனைவிக்கு எதாவது ஆகி விடுமோ என்ற அச்சத்தில், “உன் வீட்டு ஆளுங்களுக்கு வேலைப் பார்க்க எல்லாம் அம்மாவுக்கு முடியாது.” என்று சொல்லி, மகளைத் தனிக்குடித்தனம் வைத்து விட்டார் ஐஸ்வர்யாவின் தந்தை.
முத்துக்குமாரின் வீட்டினரை ஐஸ்வர்யாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் அவர்கள் அண்ணன் குடும்பம் தங்கை குடும்பம் எல்லாம் பண்டிகை நாட்களில் இங்கே தான் இருப்பார்கள். வீட்டில் இத்தனை பேர் இருக்க… வேலையும் அதிகம் இருக்கும். அப்போது தான் ஐஸ்வர்யாவுக்கு உரைக்க ஆரம்பித்தது.
பெற்றோரை நம்பி லிங்காவை விட்டு வந்ததுக்கு இப்போது அனுபவிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள். அங்கே அவனுக்கு ஒரு தங்கை மட்டும் தானே…
என்றைக்கு அப்படி ஒரு எண்ணம் அவள் மனதில் வந்ததோ…. அன்றிலிருந்து லிங்காவையும் முத்துக்குமாரையும் மனம் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தது. தான் எப்பேர்பட்ட வாழ்க்கையை இழந்து விட்டோம். அதுவும் பெற்றோரை நம்பியதால்… என்று மனதிற்குள் நினைத்து நினைத்துக் குமுற ஆரம்பித்தாள்.
அதுவும் லிங்கா யாதவியை விரும்பி வீட்டினரை எதிர்த்து மணந்தான் என்பது எல்லாம் கேள்விப்பட்ட பிறகு, மனம் மிகவும் வலித்தது. மனதிற்குள் ஏமாற்றம் பரவ….அதை பெற்றோரிடம் காட்ட ஆரம்பித்தாள்.
“உங்களா தான் என வாழ்க்கை போச்சு…” என்று பெற்றோரை வார்த்தையால் வதைக்க ஆரம்பித்தாள்.
ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு அப்போதுதான் மகளை இதற்கு முன் திருமணம் செய்த இடத்திலேயே வாழ விட்டிருக்கலாம் என இப்போது நினைத்து வருந்தினார்.
அதுவும் இப்போது யாதவி உண்டாகி இருக்கும் விஷயம் கேள்விபட்டதில் இருந்து, முத்துக்குமாரின் பெற்றோர், “நீங்க எதோ சொன்னீங்க. ஆனா அந்தப் பையன் கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் பெத்துக்கப் போறான்.” என்று நச்சரிக்க… ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு அலைந்தவர்கள்…. அப்போதும் அவள் உண்டாகவில்லை. இப்போது முதலில் பார்த்த மருத்துவரிடமே காட்டுவோம் என்று இங்கே தென்காசிக்கு வந்திருந்தனர்.
வந்த இடத்தில் தான் பரிசோதனைகள் முடித்துவிட்டு வந்த ஐஸ்வர்யா லிங்காவை பார்த்துவிட்டு அவனிடம் பேச வந்திருந்தாள்.
இப்போதும் அவன் செய்ததுதான் தவறு என்பது போல… அவள் குற்றம் சொல்ல… லிங்காவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
“என்னைப் பத்தி எங்க வீட்டை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் நீ கல்யாணம் பண்ணிகிட்ட… ஆனா ஒரு நாளாவது இங்க எங்களோட ஒத்து வாழணும்னு நினைச்சிருக்கியா? புருஷன்னு என் மேல அன்பு இருந்திருந்தா… அதுக்காகவாவது அட்ஜஸ்ட் பண்ணி இருந்திருப்ப இல்ல… அப்படி எங்க வீட்ல ஒன்னும் உனக்குப் பெரிய அசவுகரியமா எதுவும் நடக்கலை. உன்னை யாரும் இதைச் செய் அதைச் செய்னு கொடுமையும் படுத்தலை.”
“நீயா தான் இங்க இருக்காம உங்க வீட்ல போய் உட்கார்ந்துகிட்டே.”
“நானும் உனக்கு நிறையத் தடவை புரிய வைக்க முயற்சி செஞ்சேன். நீ வீம்பா இருந்த…. அப்புறம் உன்னைக் கெஞ்சிட்டே இருப்பேனா?”
“உனக்கு என்ன திமிர்னா, நம்ம அழகா இருக்கோம், நம்மகிட்ட இல்லாத பணமா… அவன் எப்படியும் நம்ம பின்னாடி வருவான்னு நீ நினைச்ச.”
“சரி எல்லாத்தையும் விடு… விவாகரத்து பேச்சு ஆரம்பிச்ச பிறகாவது, நாம நல்ல முறையில புருஷனோட பேசி பிரச்சனயை சரி பண்ணிப்போம்னு நினைச்சியா… உங்க அப்பா இல்லாததும் பொல்லாததும் என்னைப் பத்தி சொல்றார்… நீயும் அப்படித்தாங்கிற மாதிரி இருந்த. மத்தவங்களை விடு, நீ எப்படி என்னோட வாழ்ந்தன்னு உன்னோட மனசாட்சிக்கு தெரியும் தான…… ஆனா அப்பவும் நான் அவமானப்படுவதை நீ பார்த்திட்டு தான் இருந்த.”
“ஒருவேளை நீ அப்போ சுயமா யோசிச்சு முடிவெடுத்து, மனம் திருந்தி வந்திருந்தேனா… நான் விவாகரத்து செய்யுற முடிவுல இருந்து மாறி இருப்பேன். இன்னும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு எனக்கும் தோணி இருக்கும்.”
“ஆனா நீங்க என்ன பண்ணீங்க? உங்க பணப் பலத்தைக் காட்டி, என்னை அடக்கி உங்க பின்னால வர வைக்கப் பார்த்தீங்க.”