‘அக்கா உங்களுக்கு சொல்லலையா’ என்ற கேள்வியை தாங்கி சீனு பார்க்க, சுந்தருக்கு அப்படி ஒரு அவமானமாய் இருந்தது. அது அப்படியே உக்கிர கோபமாய் உருமாறியது. ‘அது தானே… அவள் எனக்காக என்னை திருமணம் செய்தாள்.’ என்ற உண்மை அந்த நொடி முகத்தில் ஓங்கி அறைய அது வேறு அடியாழத்தில் புதைத்திருந்த பழைய நினைவுகளை கிளறி அவன் வன்மத்தை விசிற வைத்தது. 

“அவ எனக்கும் கூப்பிட்டு இருப்பா. போனை சாயங்காலம் ரூம்ல சார்ஜ் போட்டேன். எடுத்து பார்க்க மறந்துட்டேன். சீனு நீ வீட்டுக்கு போ. வண்டியை காலைல கொண்டு வந்து விடுறேன்.’’ என்று மச்சானை அங்கிருந்து கிளப்பியவன், அவன் தலை மறைந்ததும், “பிரண்ட் ஒருத்தன் வரான். டவுன் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.’’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 

வண்டியை இயக்கும் போது, கோபம் கோபம் கண் மண் தெரியாத கோபம் மட்டுமே அவன் மூளையை ஆக்கிரமித்து இருந்தது. தன்னிடம் கலந்தாலோசிக்காமல் மற்றொரு கருவை அவள் சுமந்த கனம் வலியோடு மீண்டும் நினைவிற்கு வந்தது. 

முதல் பிரசவத்தில் அவளை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு அவன் அனுபவித்த வேதனைகளை அவன் மட்டுமே அறிவான். அவள் உள்ளே கதற கதற வெளியே நின்று கொண்டிருந்த இவன் உயிர் மொத்தமும் வற்றும் படி வலித்தது.

 

அவள் ஏன் மீண்டும் கர்ப்பம் தரித்தாள் என்பதை அவன் நன்கு அறிவான். உலகோர் விரும்பும் ஆண் மகவான வாரிசை பெற்றெடுக்கவே அவள் அடுத்த குழந்தைக்கு தாயானாள் என்பதை அவன் அறிவு அவனுக்கு அறிவிக்கவே செய்தது. 

ஆனால் அவள் வேதனைகளை கிஞ்சித்தும் பொறுத்துக் கொள்ள முடியாத உள்ளக் காதலனால் அவளை மீண்டும் பிரசவ அறைக்குள் அனுப்பும் காட்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 

விளைவு, வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி ஒதுக்கி வைத்தான். அவளும் கூடுதலாய் ஒதுங்கிப் போனாள். இருவருமே ஒருவரின் மீது ஒருவர் எதிர்பார்ப்பற்ற, பகிர்ந்து கொள்ளாத அன்பை கூடை கூடையாய் தூக்கி சுமந்தனர்.

ஆனால் மௌனம் என்ற சுவரின் பின் இருவருமே மறைந்து நின்றனர். இருவருக்கும் ஆளுக்கு ஒரு காரணம். சற்று நேரம் அவளை திட்டிக் கொண்டே வந்தவன், ஓர விழி கொண்டு அவளை பார்க்க, இருக்கையில் சரிந்து இருந்தவள் வழமை போல உறங்கியிருந்தாள். 

ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவிவிட்டால் அவளிடம் வெளிப்படும் உடல் மொழியை கண்டவனின் முகம் மென்மையானது. தோள்களின் இறுக்கம் சற்றே தளர, தன் அச்சுவை நன்றாக இரசித்து பார்த்தான். 

அப்போது தான் மனைவியின் அலங்காரம் அவன் கண்களில் பட்டது. காலையில் இதழில் தீற்றியிருந்த இதழ் சாயம், லேசாக வெளிறி சரியாய் ரோஜா நிறத்திற்கு மாறியிருந்தது. கண்களிலிருந்த கண் மை, அவள் அழுகையை விழுங்க முயன்றதின் பயனாய், லேசாய் கீழிமைகளில் நழுவியிருந்தது. 

தேர்ந்த ஓவியன் வரைந்த எழிலோவியம் போல அவள் அழகாய் உறங்கிக் கொண்டிருக்க, அத்தனை நேரம் மனதில் இருந்த வெப்பத் தடாகம், கொஞ்சம் கொஞ்சமாய் குளிர்ந்து கொண்டிருந்தது. 

அவள் கூந்தலில் இருந்து நழுவி சில முல்லை அரும்புகள் அவள் மடி சேர்ந்து இருந்தன. ஒற்றை கரத்தில் மிக மிருதுவாய் அதை கையில் எடுத்தவன், நாசியின் அருகில் எடுத்து சென்று வாசம் பிடித்தான். அதில் மலர் மணம் வீசாமல், அவள் மணம் வீச, அவன் மனம் மெல்ல மெல்ல மயங்க துவங்கியது. 

நள்ளிரவில் வீட்டை நெருங்கியவன், அதிக ஓசை எழும்பாது மகிழுந்தை ஓரமாய் நிறுத்தினான். மல்லியை லேசாக உலுக்க, ‘ம்… ம்…’ என்று முனகியவள் மீண்டும் திரும்பி உறங்க முயல, அவளை பிடித்து வேகமாய் உலுக்கினான். 

உறக்கம் கலைந்தவள், அருகில் கணவன் முகத்தை கண்டதும், வேகமாய் தன் பக்க கதவை திறந்து இறங்கினாள். அவனின் இன்றைய பேச்சு, அவள் உள்ளத்தில் அமிலக் கரைசலாய் காந்திக் கொண்டிருந்தது. 

கணவனை திரும்பியும் பார்க்காது, தன் பையை எடுத்துக் கொண்டவள் வீட்டை நோக்கி நடந்திருந்தாள். அதுவரை இருந்த இலகு மனப்பான்மை வற்றிவிட, சுந்தரும் அவளை பின்பற்றி வீட்டிற்குள் நுழைந்தான். 

இருவரும் இல்லாதிருக்க, பாரி குழந்தைகளை தன்னுடன் கூடத்தில் படுக்க வைத்திருந்தார். மல்லி குழந்தைகள் இல்லாத அறையை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் வரவிற்கு பின் கணவன் மனைவி இருவரும் ஒன்றாய் கட்டிலில் சயனித்தது கிடையாது. 

குளியலறை சென்று இரவு உடைக்கு மாறி வந்தவள், கூடத்தில் குழந்தைகளுடன் படுத்துக் கொள்ள, தன் போர்வை தலையணையில் கை வைத்தாள். இவளை பின்பற்றி வந்திருந்த சுந்தர், தானும் வேட்டிக்கு மாறியிருந்தான்.

மனைவி போர்வை தலையணையில் கை வைக்கவும், அதை பிடுங்கி படுக்கையில் கோபமாய் எறிந்தவள், வெளியே சென்று கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பூரணனை எடுத்து வந்து படுக்கையில் விட்டான். 

உள்ளே எத்தனை காந்தினாலும் என்றும் மல்லி சுந்தரிடம் சண்டையிட்டது கிடையாது. ஆக அவள் அமைதியாய் குழந்தையை ஒட்டிப் படுத்துக் கொண்டாள். சுந்தர் கீழே பாய் விரித்து படுத்துக் கொண்டான். 

விளக்கை அணைத்து, விடிவிளக்கை ஒளிரவிட்டவன் சரியாய் இருபது நிமிடங்கள் தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். மல்லியிடமிருந்து வெளிப்பட்ட சீரான சுவாச ஒலி அவளின் உறக்கத்தை அறிவிக்க, வேகமாக எழுந்தவன், அவளை நெருங்கி படுத்துக் கொண்டான். 

அவளின் தோளில் வலிந்த முல்லையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டவன், சற்றே ஒருக்களித்து படுத்து, அவளை அணைத்து படுத்துக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் நித்திரா தேவி அவனையும் ஆட் கொண்டாள். 

உதடுகளால் பகிரப்படாத பிரியங்கள் கால காலமாய் உணர்வுகளின் வழி தான் வாழ்கின்றன. அப்படி ஒரு வாழ்வு தான் சுந்தருக்கும், மல்லிக்கும் வாய்த்திருந்தது. 

அடுத்த நாள் காலை பாரி, “நீ எப்பம்மா வந்த…?” என்ற கேள்வியை முன் வைக்க, அரவை இயந்திரத்தில் சட்னியை அரைத்து கொண்டிருந்த மல்லி, “மல காட்ல கூடு கட்டியிருக்க கருட பட்சி தூக்கி வந்து புடக்காலில போட்டுட்டு இப்ப தான் பறந்து போச்சு. நீ பாக்கால…?’’ என்று விழி விரித்து பதில் சொன்னாள். 

“அடி உங்கொப்பன் மவளே… உன்ன…’’ என்று பாரி அவள் கன்னத்தை கிள்ள முயல, “ஆச்சி அச்சுருவேன்.’’ என்று பூரணன் அவரை மிரட்ட, இருவரும் அவனை கண்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர். 

கூடத்தில் அமர்ந்து செய்தித்தாளை பிரித்து வைத்து அமர்ந்திருந்த சுந்தர், சமையலறை சாளரம் வழியே, அந்த காட்சியை இரசித்துக் கொண்டிருந்தான். ‘என்ன தவிர எல்லார்கிட்டயும் வாய் நீளும்.’ என்று உள்ளம் சுணங்கினாலும், அவளின் ஹாஸ்ய பேச்சுகளுக்கு அவள் ரசிகன். 

அவள் வீட்டாரிடமும், தன் தாயிடமும் ஏதாவது வம்பளந்து பேசிக் கொண்டிருந்தாள், அங்கு நின்று வேறு ஏதோ வேலை செய்வதை போல அவளின் வாயாடலை இரசித்துக் கொண்டிருப்பான். 

சிரித்து முடித்த பாரி, “ஏய் பிள்ள… ஏன் வந்த…? எப்படி வந்த…?” என்று மீண்டும் அழுத்தமாய் கேட்க, “மாமா ஏதோ டவுனுக்கு வேலையா வந்து இருப்பாங்க போல. பையன் நடுராத்திரி முழிச்சிட்டு என்னை தேடினா என்ன செய்றதுன்னு என் பிரண்டு வீட்டுக்கே வந்து என்னை கூட்டிட்டு வந்துட்டாங்க. நைட்டே வீட்டுக்கு வந்துட்டோம்.’’ என்றவள், தன்னோடு, தன் மகள்களுக்கான உணவு டப்பாவையும் தயார் செய்ய துவங்கினாள். 

“நீ பெத்ததுகளை விட நான் பெத்தது தாண்டியம்மா உன்ன ரொம்ப தேடும்.’’ என்று பாரி கேலியில் இறங்க, “அம்மா…’’ என்று கூடத்தில் இருந்து சுந்தரின் குரல் ஓங்கி ஒலித்தது. 

ஒரு சிறிய கேலியை கூட பொறுத்துக் கொள்ள முடியாத என்ற எண்ணத்தில் மல்லியின் முகம் சுண்டிப் போக, பாரியோ, “அழுத்தக்காரன்…’’ என்று முணு முணுத்துக் கொண்டே, மருமகள் கலந்து வைத்திருந்த காபியை எடுத்துக் கொண்டு கூடம் நோக்கி சென்றார். 

மகள்களை பள்ளிக்கு தயார் செய்து முடித்தவள், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளப்பினாள். கிளம்பும் அவள் முதுகையே கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் சுந்தர். 

 

அதே நேரம், தன் கைகளில் இருந்த நீதிமன்ற உத்தரவை கண்கள் கலங்க வெறித்து கொண்டிருந்தாள் மகிழ்வேணி.  

பந்தமாகும்.