லிங்கா யாதவியை அழைத்துக் கொண்டு இங்கே வந்ததில் இருந்து பாக்கியம் இங்கு வருவதில்லை. அவர் வர தயாராகத்தான் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் அனுப்பவில்லை.
“உங்களால தான் எங்க குடும்பத்துல பிரச்சனைன்னு அத்தான் சொல்லிட்டார். இப்போ நீங்க அங்க போற நேரத்துல, அவங்க மாமியார் மருமகளுக்குப் பிரச்சனை வந்தாலும், உங்களைத்தான் சொல்வாங்க. அதனால போகாதீங்க.” என்று விட்டனர்.
பாக்கியமும் சிவகாமி மருமகளைப் பற்றி எதாவது குறை சொல்லுவார் எனக் காத்திருக்க… ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
சிவகாமிக்கு பிடிக்கவில்லை என்பதால் யாதவி சற்று ஒதுங்கித்தான் இருப்பாள். லிங்காவின் மீது அவளுக்கு இருக்கும் உரிமையைக் காண்பிப்பது போல, அவள் நடந்து கொண்டதே இல்லை. சிவகாமியின் முன்பு அவள் லிங்காவிடம் பேச கூட மாட்டாள்.
அலுவகத்திற்கு அவனுடன் வண்டியில் செல்லும் போது கூட, சற்று தள்ளி சென்று தான் பைக்கில் ஏறுவாள்.
“நீ என் பொண்டாட்டி தான… உன்னை நான் தள்ளிட்டு வரலை இல்லை…” என லிங்காவே கேலி செய்வான். அவரே வருத்தத்தில் இருக்கிறார், மேலும் ஏன் அவர் மனம் வருந்தும்படி நடக்க வேண்டும் என்பது யாதவியின் எண்ணம். அவள் சிவகாமியை தூண்டி விடும்படி எதுவும் செய்யாததால்… மாமியாருக்கும் மருமகள் மேல் குறை சொல்ல எதுவும் இல்லை.
கோட்டைத் தாண்டி நீயும் வராத, நானும் வரமாட்டேன் என்பது போலவே மாமியார் மருமகள் இருவரும் இருக்க… இப்படியே யாரோ போல இருந்தால் சரி வராதே என்று லிங்கா யோசித்துக் கொண்டு தான் இருந்தான்.
மார்கழி மாதம் துவங்க இருக்க… சிவகாமி முன்தினமே கோலம் போட வண்ண பொடிகளை வரவேற்ப்பு அறையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது கடைக்குச் சென்றுவிட்டு லிங்காவும் யாதவியும் சந்தோஷோடு உள்ளே வந்தனர்.
“என்ன மா கோலம் போட போறீங்களா?” என லிங்கா கேட்க…
“ஆமாம் நாளைக்குப் போடணும்.” என்றவர், “இதெல்லாம் இன்னும் நான்தான் பண்ண வேண்டியதா இருக்கு.” என்று சடவாகச் சொல்ல…
இதுதான் மாமியார் மருமகளைக் கோர்த்து விடச் சந்தர்ப்பம் என நினைத்த லிங்கா,“நாளைக்கு உங்களோட சேர்ந்து யாதவியும் போடுவா… நீங்க மட்டும் தனியா போட வேண்டாம்.” என்றவன், “எத்தனை மணிக்குக் கோலம் போட வர வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டு சென்றுவிட்டான். அவன் பின்னே வந்த யாதவி, வீட்டிற்குள் வந்து கதவை சாத்தியதும், “யாரைக் கேட்டு நீங்க நானும் கோலம் போடுவேன்னு சொன்னீங்க?” எனக் கேட்க…
“இங்க குட்டியா தான போடுறேன். அதோட நான் அச்சுக் கோலம் தான் போடுவேன்.” என்றதும் தலையில் கைவைத்தவன், “அம்மாகிட்ட வேற சொல்லிட்டேன். நாளைக்கு என்னைக் கொல்லப் போறாங்க.” என்றவன், சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.
ஐந்தரை மணி எனச் சிவகாமி சொல்லி இருந்தார். ஐந்து மணிக்கே எழுந்து ஹீட்டர் போட்டு குளித்த யாதவி, ஐந்தரை மணிக்கு தயாராக இருந்தாலும் கீழே செல்லவில்லை.
மகன் எதோ சொன்னானே என்று சிவகாமியும் யாதவி வருவதற்காகக் காத்திருக்க… அவள் வருவதாகத் தெரியவில்லை என்றதும், அவரே வாசலை கூட்டி, தண்ணீர் தெளித்துக் கோலம் போட… மாடியில் இருந்து எட்டிப் பார்த்த யாதவி, அவர் கோலம் வரைந்து முடிந்த நேரம் கீழே இறங்கி சென்றவள், அங்கிருந்த கலர் பொடியை எடுத்துக் கோலத்தில் தூவ ஆரம்பித்தாள்.
சிவகாமி பத்து நிமிடத்தில் பெரிய கோலம் வரைந்து முடித்து விட்டார். ஆனால் அவ்வளவுக்கும் கலர் கொடுக்க வேண்டுமே…
சிவகாமி அவரும் கலர் கொடுக்க… “நானே கொடுக்கிறேன், நீங்க வேற வேலை இருந்தா பாருங்க.” என யாதவி சொல்ல… அவருக்கும் பனியில் வெளியில் நிற்க முடியவில்லை. அவர் உள்ளே சென்று விட்டார்.
அந்தத் தெருவில் நிறையப் பேர் கோலம் போட்டுக் கொண்டு தான் இருந்தனர். எதிரே ஜெயந்தியும் போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பேசிக் கொண்டே யாதவி கலர் போட்டு, சிவகாமி போட்ட கோலத்தின் மீது மீண்டும் ஒருமுறை வெள்ளைப் பொடியால் வரைந்து முடிக்க…வெளியே வந்து பார்த்த சிவகாமிக்கும் வெகு திருப்தியாக இருந்தது.
நேற்று வேறு சொல்லி இருந்தோமே… யாதவியை வேறு காணோமே என்று நினைத்து லிங்கா கீழே வந்தான். அப்போதுதான் யாதவி போட்டு முடித்து எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்து வைக்க… கோலத்தைப் பார்த்த லிங்கா சிவகாமியிடம், “என் பொண்டாட்டி போட்ட கோலத்தைப் பார்த்தீங்களா… நீங்க இப்படி ஒருநாளாவது போட்டிருக்கீங்களா?” என வம்பிழுக்க…
“கோலம் அவங்கதான் போட்டாங்க. கலர் தான் நான் கொடுத்தேன்.” என யாதவி சொல்ல…
“கோலம் போடுறது ஈஸி, கலர் போடுறதுதான் கஷ்ட்டம்.” என்றவனைப் பார்த்த சிவகாமி, “கோலம் போடாம கலர் மட்டும் கொடுக்க முடியாது டா… உன் பொண்டாட்டிக்குக் கோலம் போட தெரியாது. அதை ஒத்துக்கோ.” என்று சொல்ல… கண்டுபிடித்து விட்டாரே என நினைத்தவன், மேலும் எதோ சொல்ல வர…
“எனக்கு இப்படிப் பெரிசா போட தெரியாது.” என்ற யாதவி, “நீங்க கோலம் போட்டுடுங்க. நான் வந்து கலர் கொடுக்கிறேன். இப்போ நான் ஆபீஸ்க்கு கிளம்பணும்.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
இப்போ என்ன சொல்ற என்பது போலச் சிவகாமி மகனைப் பார்க்க, “சென்னையில அபார்ட்மெண்ட் வீட்ல இருக்காங்க. அங்க எங்க போய் இவ்வளவு பெரிய கோலம் போடுவா… அதனால தான். இல்லைனா அவளும் சூப்பரா போட்டிருப்பா.” என்ற மகனை, இவனை என்ன செய்வது என்பது போலப் பார்த்தவர்,
“நீ வக்கீல் தான், அதுக்காக உன் பொண்டாடிக்கு வக்கலத்து வாங்கிட்டே இருக்காத… போய் வேற வேலை இருந்தா பாரு.” என்று சொல்லிவிட்டு செல்ல…
“இந்த மாமியார் மருமகள் கேஸ்ல மட்டும் நாம ஜெயிக்கவே மாட்டோம் போல…” எனப் புலம்பிக் கொண்டே சென்றான்.
கணவனைப் பார்த்ததும் யாதவிக்கு ஒரே சிரிப்பு. “நீங்க பேசாம இருந்திருந்தா… அவங்க கண்டுக்காம விட்டிருப்பாங்க. உங்க வாயை வச்சிட்டு சும்மா இருக்காம, எல்லாம் உங்களால வந்தது.” என்றதும்,
“இனிமே உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வரவே மாட்டேன்.” என்றவன், “நான் வேற சீக்கிரம் எழுந்துட்டேன், இப்போ என்ன பண்றது?” என்றவன், மனைவியை அணைக்கச் செல்ல…
“நான் இனிதான் சமைக்கணும். சந்தோஷ் எழுந்திடுவான்.” என்றதும், மனைவியை விட்டு மகனிடம் சென்று படுத்துக் கொண்டான்.
மாமியாரும் மருமகளும் தினமும் கோலம் போட்டனர். அப்போது இருவரும் ஒன்னிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்ளவும் செய்வார்கள்.
சந்தோஷிற்கு விடுமுறை துவங்கி இருக்க… யாதவிக்கும் அலுவலக நேரம் பத்து மணி என்பதால்… அவள் செல்வதற்கு முன் மகனை எழுப்பி, பாத்ரூம் செல்ல வைத்து, குளிக்க வைத்து, காலை உணவு கொடுத்து, பாட்டிலில் தண்ணீர் மற்றும் நடுவில் கொரிக்கத் தீனிகள் எல்லாம் ஒரு பையில் வைத்து கொடுத்துவிட்டே செல்வாள். சிவகாமிக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று நினைத்தே அப்படிச் செய்தாள்.
உணவு நேரத்தில் வீட்டிற்கு வந்து, மகனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு, அவனை ஒருமுறை பாத்ரூம் செல்ல வைத்து விட்டே மீண்டும் அலுவலகம் செல்வாள்.
இரண்டு நாட்கள் கவனித்த சிவகாமி, “ஏன் அந்தச் சின்னப் பையனுக்குச் சாப்பாடு நான் கொடுக்க மாட்டேனா? அவ்வளவு கூட என் மேல நம்பிக்கை இல்லையா?” என மகனிடம் கோபப்பட….
“அம்மா, ஏற்கனவே வீட்ல சின்னக் குழந்தை இருக்கு. இதுல உங்களுக்கு வேற வேலை வைக்கணுமான்னு தான் நினைக்கிறா… வேற ஒன்னும் இல்லை.” என்றதும்,
“ஆமாம் அவனுக்கு நான் தனியா ஒரு குண்டான் சோறு ஆக்க போறேன். எனக்குக் கஷ்டமாதான் இருக்கும்.” என்றதும், கையெடுத்து கும்பிட்டவன், யாதவிடம் “நான் சந்தோஷை பார்த்துக்கலை… அம்மா தான் பார்த்துக்கிறாங்க. இப்படி எல்லாமே நீயே பண்ணா… அது அவங்களை நம்பாத மாதிரிதான நினைப்பாங்க.” என்றதும், “நான் அவங்களுக்குக் கஷ்ட்டமா இருக்குமோன்னு தான் நினைச்சேன்.” என்றவள், மறுநாளில் இருந்து நடுவில் மதியம் வருவதில்லை. அதே போல மகனை காலையில் கிளப்பி மட்டும் விடுவாள். நடுவே உண்ண குடிக்க எதுவும் கொடுப்பது இல்லை.
அன்று சிவகாமி மதியத்திற்கு மீன் குழம்பும், வருவலும் செய்திருக்க… மதிய உணவை லிங்கா தான் சந்தோஷுக்கு கொடுப்பான்.
அன்றும் மீனை முள் இல்லாமல் பார்த்துதான் கொடுத்தான். அப்படியும் ஒரு சின்னமுள் இருப்பதைக் கவனிக்காமல் கொடுத்துவிட்டான். சந்தோஷின் தொண்டையில் முள் மாட்டிக்கொள்ள… சந்தோஷ் குத்துது என்றான்.
சிவகாமி வெறும் சோறில் நெயை விட்டு பிசைந்து எடுத்து வந்தவர், “இது முழுங்கு சரியா போயிடும்.” என்றவர், பெரிய உருண்டைகளாகச் சோற்றை உருட்டி ஊட்டி விட… சந்தோஷ் சந்தேகமாகத்தான் வாங்கினான். ஆனால் இரண்டு வாய் உண்டதும் தொண்டையில் இருந்த முள் இறங்கி விட…
“போயிடுச்சு.” என்றான். இருந்தாலும் சிவகாமி மேலும் கொஞ்சம் ஊட்டி விட்டார்.
சந்தோஷ் போதும் என்றதும் விட்டு விட்டார்.
“ச்ச… நான் பார்த்துக் கொடுத்திருக்கணும். அவன் சரியாவே சாப்பிடலை…” என லிங்கா புலம்ப….
“நிறையத் தண்ணி வேற குடிச்சிட்டான். இப்ப கொடுத்தா வாந்தி எடுப்பான். நான் அவன் தூங்கி எழுந்ததும் தோசை சுட்டுக் கொடுக்கிறேன்.” என்றார்.
அதே போலச் சந்தோஷ் உறங்கி எழுந்ததும், அவனுக்குத் தோசை சுட்டுக் கொடுக்க… அவனே உண்டான்.
மாலை வந்த அம்மாவிடம் மகனே எல்லாவற்றையும் சொல்லி விட…
“நான் பார்த்து தான் கொடுத்தேன் யாதவி. எப்படிப் போச்சுன்னே தெரியலை.. பாவம் பயந்துட்டான். அம்மா சட்டுன்னு சோறை கொடுத்தாங்க.” என்றதும்,
“இதுக்குப் பயந்திட்டு தான் நான் கொடுக்காம இருந்தேன். பரவாயில்லை விடுங்க.” என்றாள்.
மறுநாள் மதியம் லிங்காவுக்கும் சந்தோஷுக்கும் சிவகாமி தட்டில் சோற்றைப் போட்டு வைக்க… ஊட்ட வந்த லிங்காவை மறுத்துவிட்டு, தட்டை எடுத்துச் சென்ற சந்தோஷ், சிவகாமியிடம் கொடுத்து ஊட்ட சொன்னான்.
“போ… உன் பேச்சு காய்.” என்றதும், சந்தோஷ் மீண்டும் தட்டை தூக்கிக் கொண்டு அவனிடம் செல்ல…
“இன்னைக்குச் சாம்பார் தான். நான் பிசைஞ்சு கொடுக்கிறேன். நீயே சாப்பிடு.” என்றவன், சாதத்தைப் பிசைந்து கொடுக்க… சந்தோஷ் உணவு மேஜையில் உட்கார்ந்து உண்டான். ஆனாலும் நேற்று ஏற்பட்ட அனுபவத்தில், உண்ணும் ஒவ்வொரு வாய் உணவையும் சந்தோஷ் நன்றாக மென்று தான் உண்டான்.