தன்னையே பார்த்து கொண்டிருந்தவனை கண்டு சன்னமாய் புன்னகைத்த விஜயன் “என்னடா அப்டி பாக்குற!” என்று கேட்கவும்

“ஒன்னுமில்ல” என்று மறுப்பாய் தலையசைத்தவன் “நீ இன்னும் வைஷ்ணவிய மறக்கல! அப்டி தானே!” என்றான் ஆராயும் பார்வையோடு

கேள்வியை எதிர்பார்த்திருந்தவன் போல எந்தவித பாவனையும் காட்டது வெற்று புன்னகை புரிந்தவன் “டேய் அவ இப்போ வேற ஒருத்தனோட மனைவி அவள போய் எப்டிடா..?” என்று சங்கடத்துடன் உரைத்தவன் “என்னோட கதை இருக்கட்டும் கல்யாணம்ன்னு அன்னைக்கு போன் பண்ணி சொன்ன ஆனா இப்போ நிலைமையே வேற மாதிரி இருக்கு ஆன்ட்டி சொன்னாங்க நீயே கல்யாணத்த நிறுத்திட்டேன்னு ஏன் என்னாச்சு!” என்று கேள்வியை திசை திருப்பும் விதமாக விஷ்ணுவிடம் கேள்வி எழுப்ப

“நா உன்ன கேட்டா நீ என்ன கேள்வி கேக்குறயா?” என்று சிரித்தவன் “என்னோட விஷயம் இருக்கட்டும் நா கேட்டதுக்கு பதில் நீ இன்னும் சொல்லவே இல்ல, நீ இன்னும் அவள நினைச்சுட்டு இருக்க அதானே! வைசுவோட காதல ஏத்துக்காததுக்கு உன்னோட கடந்தகால காதல் தான் காரணம்” என்று மனதை அறிந்தவன் போல ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக கேட்க பலத்த மௌனம் நிலவியது விஜயனிடம் 

“என்னடா இதுக்கு உண்மைய சொல்லவா வேணாமான்னு யோசிக்கிறயா? அவ தான் உன்மேல அந்த மாதிரி எண்ணம் வரல வேற ஒருத்தர லவ் பன்றேன்னு சொல்லி அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டாளே! நடத்தி வச்சதே நீ தான அப்றம் ஏன் அவளையே நினைச்சிட்டு இருக்க?, வைசுக்கு என்னடா குறைச்சல் உன்மேல உயிரையே வச்சுருக்கா! உனக்காக என்ன வேணாலும் பண்ணுவா! அவள ஏத்துகிறதுல உனக்கு என்ன கஷ்டம்! நீயே உனக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அதுல நீ மட்டும் வேதனைய அனுபவிச்சுட்டு இருக்க! எனக்கு தெரியும் நீ வைசுவ லவ் பண்ற! ஆனா அத வெளிப்படையா ஒத்துக்க மாட்டிங்கிற?

தகுதியே இல்லாத ஒருத்தி மேல வச்ச காதலை இன்னும் நினைச்சு உருக்கிட்டு இருக்க  இனி வாழ்க்கையே இல்லன்ற மாதிரி உனக்கு நீயே பொய் சொல்லிக்கிட்டு போலியான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்க விஜி, உன்ன பாக்கும் போதெல்லாம் கஷ்டமா இருக்குடா சின்ன வயசுல அம்மா அப்பாவ இழந்து அத்தையோட கொடுமை தாங்க முடியாம ஆஸ்ரமத்துல சேந்து படிச்சு இப்போ நல்ல நிலையில இருக்க, நீ வாழ்க்கையில நிறைய இழப்புகளை சந்திச்சிருக்க உன்னோட அத்தனை இழப்புகளையும் வைசு ஈடுகட்டுவாடா அது ஏ உனக்கு புரிய மாட்டிங்கிது உன்ன நேசிக்கிறவங்களை நேசிக்க கத்துக்கோ விஜி அவ மனசு காயப்படுத்துற மாதிரி பேசாத அவளும் மனுஷி தாண்டா நீ வேணாம்னு ஒதுங்குற அவ வேணும்னு நீ என்ன அவமானப்படுதுனாலும் உன்கிட்ட தான் வர்றா அவளோட மனசு உனக்கு கொஞ்சம் கூட புரியலையா?” என்று ஆற்றாமையோடு பேசியவனின் விழிகள் லேசாக கலங்கி இருந்தது 

பேசிமுடிக்கும் வரை அமைதிகாத்தவன் “பேசி முடிச்சிட்டயா? இப்போ நா பேசலாமா? நீ சொல்றது சரி தான் வாழ்க்கையில நிறைய இழப்புகளை சந்திச்சிருக்கேன் தான் ஆனா..! அத்தனை இழப்புகளுக்கும் ஆறுதலா இருந்தவடா என்னோட வைசு, அவள மறந்துட்டு வேற ஒருத்திய என்னால எப்டிடா அவ என்ன விரும்பல தான் ஆனா நா அவள விரும்பிருக்கேன்னே பைத்தியம் மாதிரி அவளோட ஒவ்வொரு செயலையும் ரசிச்சிருக்கேன்! சட்டுன்னு அவள மறந்துட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணா நிச்சயம் அது திருப்தியான வாழ்க்கையா இருக்காது விஷ்ணு மனசு ஒத்து போய் வாழ முடியாதுடா” என்று குரல் நலிந்து கசக்கிய முகத்துடன் சொல்லாவென வேதனையை தேக்கி கொண்டு கூற

இப்போ தான் சொன்ன அவள மறந்துட்டேன்னு 

அவள மறந்துட்டேன் தான் ஆனா அவ விட்டுட்டு போன ஞாபகங்களை என்னால மறக்க முடியல அவளோட சிரிப்புல இருந்து என்மேல காட்டுன அக்கறை வரைக்கும் எதையும் என்னால மறக்க முடியல சின்ன சின்ன விஷயங்களை கூட எனக்காக பாத்து பாத்து செய்வா   எதுனாலும் என்கிட்ட தான் சொல்லுவா நிறைய பேசுவா பேச வைப்பா சம்பந்தமே இல்லாம சிரிப்பா அவளோட சிரிப்பு என்னையும் தொத்து நோய் மாதிரி தொத்திக்கும் அவ கூட இருந்த நாட்கள் எல்லாமே அழிக்க முடியாத நினைவுகள் விஷ்ணு என்று பித்தனாய் பிதற்றியவனின் வதனத்தில் அத்தனை பிரகாசம் 

அவளை பற்றி பேசும் போது மட்டுமல்ல எண்ணும் போதும் கூட அகத்தில் அத்தனை பூரிப்பு அதன் வெளிப்பாடு வதனத்தில் படிந்து அவன் மனதை காட்டி கொடுக்க

வெறும் ஞாபங்களை வச்சு வாழ்ந்து முடிச்சிற முடியாது விஜி என்றான் ஆதங்கத்தோடு 

வைத்திய மறந்துட்டு வேற ஒரு பொண்ண கட்டிக்க சொன்னா நீ கல்யாணம் பண்ணிப்பயா சொல்லுடா அவள நினைச்சிட்டு இருந்துற மாட்ட” என்று வேகமாக வேதனையுடன் பதில் வாதம் செய்ய

“நீ விதண்டாவாதமா பேசுற விஜி என்னோடது வேற உன்னோடது வேற! நானே வைத்திய யாராவது ஒரு நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன் அது வேற விஷயம் விஜி, ஆனா உன்னோடது அப்டி இல்ல உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் நீ சந்தோசமா இருக்கணும் அது தான் நானும் துவாரகாவும் ஆசைபடுறோம் நீ நல்லா இருக்கிறத நாங்க பாக்கணும்டா கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கே புரியும்” என்று இருவரும் தீவிரமாக எதிர்கால வாழ்வை பற்றி விவாதித்து கொண்டிருக்க  விஜயனின் அலைபேசி அலறியது திரையில் மின்னிய பெயரை கண்டதும் புன்னகையோடு உயிர்பித்தவன் 

“சொல்லுடா சபரி! இப்போ தான் என்னோட ஞாபகமே வந்துச்சா” என்றவன் மறுமுனையில் கேட்ட சோர்வான குரலில் “என்னாச்சு ஏதாவது பிரச்னையா?”

“ஆமா விஜி வீட்டை விட்டு வந்துட்டேன்” என்றதும் 

“என்ன! வீட்ட விட்டு வந்துடயா?” என்று அதிர்ந்தவன் “நா சென்னையில தான்டா இருக்கேன் காலையில தான் வந்தேன் நீ எங்கே இருக்கேன்னு சொல்லு உன்ன கூப்பிட வறேன்!” என்றதும் மறுமுனையில் இருந்தவன் இடத்தை கூறவும் தொடர்பை துண்டித்துவிட்டு

“டேய் விஷ்ணு ஒரு முக்கியமான வேலை நா சீக்கிரம் போய்ட்டு வந்துடுறேன் உன்னோட பைக் கீ எங்க இருக்கு?” என்று கேட்க

“என்னோட பைக் நாளைக்கு தான் வந்து சேரும் மாமாவோட வண்டி தான் இருக்கு சாவி செல்ப்ல இருக்கும் சீக்கிரம் வந்து சேரு இப்பவே ரொம்ப நேரமாச்சு” என்க

“சரி நா சீக்கிரம் வந்துடுறேன்!” என்று கூறிவிட்டு அவசர அவசரமாக பைக் சாவியை எடுத்து கொண்டு கிளம்பி சென்று விட

தனித்துவிடபட்ட நிலவை வெறித்தபடி மனதில் சூழ்ந்த விடை தெரியாத கேள்விகளில் தவித்தவன் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு கீழே இறங்கி வந்த விஷ்ணு தன் அறையில் சத்தம் கேட்பதை அறிந்து மெதுவாய் அடிகளை பதித்து உள்ளே வர பாரதியின் புத்தகத்தை எடுத்து புரட்டி கொண்டிருந்த வைஷாலியை கண்டதும் “நீ தானா பயந்துட்டேன் இங்க என்ன பண்ற தூங்காம?” 

“தூக்கம் வரல விஷ்ணு அதான் ஏதாவது புக் படிக்கலாமேன்னு எடுத்துட்டு போக வந்தேன்!, சரி விஜி எங்க உன்கூட தானே இருந்தான்?” 

“ஏதோ அவசர வேலையாம் வெளிய போயிருக்கான்” என்றவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர

“உன்கிட்ட கேக்கணும்னு இருந்தேன் ஆனா நீ இருந்த பிஸியில கேக்க முடியல, ஏண்டா கல்யாணத்த நிறுத்துன உன்னோட விருப்பத்த கேட்டு தானே ஏற்பாடு பண்ணாங்க? அப்றம் என்னடா உனக்கு,  அப்பா எனக்கு கால் பண்ணி சொன்ன பிறகு தான் தெரியும்!, என்னால தான் வர முடியலயே சரி போன் போட்டு என்ன ஏதுன்னு பேசலாம்னு உனக்கு போன் பண்ணா நீ எடுக்கவே இல்ல சரி அவளுக்கு கால் பண்ணா அவளும் அட்டன் பண்ணல ரெண்டு பேருக்கும் மாறி மாறி கால் பண்ணி என்னோட போன் டிஸ்பிளே போனது தான் மிச்சம்” என்று நொடித்து கொண்டவள்

“எனக்கு தான் தலையெழுத்து என்ன லவ் பண்ண வைக்க அவன் கூட போராட வேண்டியதா இருக்கு! உனக்கு அப்டியில்லயே அவளுக்கும் உன்ன பிடிச்சிருக்கு உனக்கும் அவள பிடிச்சிருக்கு பின்ன எதுக்குடா கல்யாணத்தை நிறுத்துன உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்று மனம் தாளாமல் கேட்க

மெலிதாய் புன்னகைத்தவன் “நீ போய் படு நாளைக்கு பேசிக்கலாம் எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு தூங்கனும்” என்று வராதா கொட்டவியை வம்படியாய் இழுத்துவிட்டவனை முறைத்து பார்த்தவள் அவன் அருகில் வந்து அமர்ந்து

“இந்த மழுப்புற வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது கண்ணா உண்மைய சொல்லு உனக்கு என்ன பிரச்சனை! நீ முன்ன மாதிரி இல்ல விஷ்ணு ஜாலியா பேச மாட்டிங்கிற மனசு விட்டு சிரிக்க மாட்டிங்கிற எதையோ சொல்லணும்னு நினைக்கிற ஆனா சொல்ல மாட்டிங்கிற!, பாத்தேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாடியில அவகிட்ட சொல்லவா வேணாமான்னு தயங்கிட்டு இருந்தத அவகிட்ட சொல்றதுக்கு உனக்கு தயக்கமா இருந்தா என்கிட்ட சொல்லு நா உன்னோட பிரெண்ட் தானே?” என்றதும்

பெருமூச்சை வெளிவிட்டவன் விரகத்தியாய் புன்னகைத்து “என்ன சொல்ல சொல்ற? இன்னும் ஆறு மாசம் தான் உயிரோட இருப்பேன்” என்றதும் வைஷாலிக்கு தூக்கி வாரி போட்டது ஒரு நிமிடம் இதய துடிப்பு நின்றது போன்ற உணர்வு திடுக்கிட்டு போனவள் சிலையாகி போக 

“அதனால கல்யாணம் வேணாம் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா அவ கேப்பாளா? இல்ல வீட்டில இருக்குறவங்க தான் தாங்குவாங்களா?, உனக்கே தெரியும் என்மேல எல்லாரும் எவ்ளோ பாசம் வச்சுருக்காங்கன்னு அவங்ககிட்ட எப்டி உண்மைய சொல்லுவேன்” என்று  வேதனையுடன் முகத்தில் வலியை தேக்கி கொண்டு சொல்ல முடியாமல் சொல்ல

வைஷாலி உறைந்து போய் அமர்ந்திருந்தாள் தன் செவிகளுக்கு விளம்பியவனின் வார்த்தைகள் சரிதானா என்ற எண்ணம் எழ சட்டென எழுந்து கொண்டவள் “என்னடா சொல்ற! விஷ்ணு.. பொய் சொல்லாத நீ. நீ… நீ ஏண்டா சாகணும்!”எனும் போதே குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது 

“உனக்கு என்னாச்சு யார் சொன்னது நீ செத்து போயிருவேன்னு சொல்லுடா தடிமாடு சொல்லு! யார் சொன்னது?” என்று ஆவேசமாக அவனது சட்டை காலரை கொத்தாக பற்றி உலுக்க 

அவளது கரத்தை விலக்கிவிட்டு பிரோவை திறந்து தனது மருத்துவ அறிக்கையை எடுத்து அவளிடம் நீட்டினான் கண்களில் நீர் வழிய அவனை பார்த்தவளிடம் “ம் இத படிச்சு பாரு உனக்கே புரியும்” என்றதும் வாங்கி பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள் அதில் அவன் பெயர் வயது அவனுக்கு என்ன நோய் என்பது தெளிவாக குறிப்பிடபட்டிருக்க 

“டேய் விஷ்ணு உனக்கு.. உனக்கு..” என்பதற்கு மேல் வார்த்தைகள் எழவில்லை 

“ஆமா வைசு என்னோட ஆயுள் காலம் இன்னும் ஆறு மாசம் தான் இந்த நிலையில நா எப்டி அவள கல்யாணம் பண்றது சொல்லு! என்ன கட்டிக்கிட்ட பாவத்துக்கு வாழ்க்கை முழுக்க தனிமரமா இருக்கணுமா?” என்றவன் “எனக்கு தெரியும் அவ என்ன தவிர வேற ஒருத்தன மனசலவுள கூட நினைச்சு பாக்க மாட்டான்னு!, ஆனா அவள சம்மதிக்க வைக்கணும் அத எப்டி பண்ண போறேன்னு தான் தெரியல” என்று வலியை மறைத்து கூறி கொண்டிருந்தவனை “விஷ்ணு…!” என்று அழுது கொண்டே அவனை கட்டிக்கொண்டு உடல் குலுங்க தேம்பி அழுக தொடங்கினாள் வைஷாலி