இன்று அவன் முன்பு தான் நின்ற கோலத்தை நினைத்து யாதவி அதன் பிறகு லிங்காவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அலுவலகம் செல்ல நேரமானதால்… வேகமாகக் கிளம்பி மூவரும் பைக்கில் சென்றனர்.
சந்தோஷை சென்று பள்ளியில் விட்டு, அடுத்து யாதவியை அலுவலகத்தில் விட்டு லிங்கா கிளம்ப…
“பரவாயில்லை நீ சாரி எல்லாம் சொல்ல வேண்டாம்.” என்றதும், யாதவி முகம் மலர… “ஆனா இனிமே நீ சொல்லிட்டு போனாலும், நான் வருவேன்.” என்றவனை யாதவி என்னது என்பது போலப் பார்க்க…
“உனக்குச் சரியா தான் கேட்டுச்சு.” என்றவன், அவளைப் பார்த்து சிரித்தபடி சென்றுவிட்டான்.
“கொழுப்பு… எவ்வளவு திமிர் இருக்கணும்?” என மனதிற்குள் அவனை வறுத்தபடி சென்றவளுக்கு… அதை யோசிக்க யோசிக்கச் சிரிப்புதான் வந்தது.
அவன் எதோ விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மாலை சந்தோஷும் அவளும் சென்றபோது லிங்கா வீட்டில் இல்லை. அவனை எப்படிப் பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தாள், நல்லவேளை அவன் இல்லை.
இவர்கள் சென்றபோது சிவகாமி வாயிலில் தான் இருந்தார். உள்ளே வந்ததும் சந்தோஷ், அவன் அம்மாவிடம் இருந்து இறங்கி, லிங்காவின் அலுவலக அறைக்குள் சென்று பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான்.
அடுத்துச் சந்தோஷ் பாப்பா என்று தீபிகாவின் மகளைத் தேடி வீட்டுக்குள் செல்ல.. யாதவி அழைத்தும் வரவில்லை.
“நான் பார்த்துக்கிறேன் அண்ணி.” எனத் தீபிகா சொல்ல…”பார்த்து அவன்கிட்ட பாப்பாவை தனியா விடாதீங்க.” எனச் சொல்லிவிட்டு யாதவி மாடிக்கு சென்றுவிட்டாள். சிவகாமியும் கிரில் கதவை மூடிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
ஹாலில் தீபிகா மகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க…. சந்தோஷ் அருகில் வந்து கொஞ்சுவதும், பிறகு விலகி செல்வதுமாக இருந்தான்.
பள்ளியில் இருந்து நேராக வந்திருக்கிறானே என்று சிவகாமி அவனுக்கு நொறுக்குத் தீனிகள் கொண்டு வந்து வைக்க… அதை ஆராய்ந்தவன் முறுக்கு என்று கேட்க…
சரி இதாவது கிடைத்ததே என்பது போல… சந்தோஷ் அவர் வைத்திருந்ததில் பிஸ்கட்டை எடுத்து உண்டான்.
யாதவி அவள் வீட்டு வேலைகள் முடிந்ததும் மகனை இன்னும் காணோமே என்று கீழே வந்து பார்க்க.. சந்தோஷின் பேச்சுக் குரல் உள்ளே கேட்க… அவள் வாயிலில் இருந்தே திரும்பி சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் லிங்காவின் பைக் சத்தம் கேட்க… சந்தோஷ் ஓடி சென்று கிரில் கதவு வழியாக…. “அங்கி… அங்கி…” என்று சத்தம் கொடுக்க… லிங்கா பைக்கை உள்ளே வைத்துக் கேட்டை மூடிவிட்டு, கிரில் கதவை திறந்து கொண்டு வந்தவன், “என்னோட சிங்க குட்டி இங்கதான் இருக்கா?” என்று கேட்க… சந்தோஷ் சந்தோஷத்தில் குதித்தான்.
“பாப்பா பார்க்க வா…” என லிங்காவையும் உள்ளே அழைத்துச் செல்ல… முகம் கைகால் கழுவி கொண்டு வந்த லிங்கா, தங்கையின் மகளைத் தூக்கிக்கொண்டு உட்கார்ந்தான். சந்தோஷும் சென்று அருகில் உட்கார்ந்து கொண்டான்.
லிங்கா வரும் வழியில் நொறுக்குத் தீனிகள் வாங்கி வந்திருக்க… அந்தப் பையை ஆராய்ந்த சந்தோஷ், அவனுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒன்றை எடுத்து சென்று லிங்காவிடம் கொடுத்து பாப்பாவுக்கு என்றான்.
லிங்கா முறுக்கும் வாங்கி வந்திருக்க… அதை எடுத்து சென்று சிவகாமியிடம் கொடுத்தான். அவர்தானே முறுக்கு இல்லை என்றார். இந்தாங்க வச்சுக்கோங்க என்று கொடுத்தான்.
“நீதானே கேட்டே நீயே வச்சுக்கோ.” என்று அவர் சொல்ல… “பாத்தி நீ சாப்பிடு.” என்று மீண்டும் அவரிடமே கொடுத்து விட்டான்.
“அத்தைக்கு ஒன்னும் இல்லையா…” என்று தீபிகா கேட்க… அவளுக்கும் ஒன்று எடுத்து சென்று கொடுத்து, லிங்கா வாங்கி வந்ததை எல்லாவற்றையும் அப்போதே பங்கு பிரித்துக் கொடுத்து விட்டான்.
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு, அவர்களைக் கதவை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு, லிங்கா சந்தோஷை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
யாதவி இரவுக்குத் தோசை மாவு இருந்ததால்…. தொட்டுக்கொள்ள மட்டும் செய்து விட்டு, ஓய்வாகப் படுத்து தான் இருந்தாள்.
கணவனும் மகனும் வருவதைப் பார்த்தவள், கட்டிலில் இருந்து எழுந்துகொள்ள… லிங்கா வெள்ளை நிற முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருப்பதிலேயே… அவன் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு வருகிறான் என்று புரிந்தது.
சந்தோஷைப் பார்த்து “வந்ததும் கீழ போயாச்சு.” என்றவள், மகனுக்கு முகம் கைகால் கழுவி உடைமாற்றி விட்டாள்.
லிங்கா அவன் சட்டையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டி தொங்க போட்டவன், துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிகொண்டு பேண்டையும் மாற்றினான்.
யாதவி கட்டிலில் வேறுபக்கம் பார்த்து உட்கார்ந்திருக்க…உடைமாற்றி வந்த லிங்கா அவளை உரசியபடி நெருங்கி உட்கார… இன்னைக்கு இவருக்கு என்ன ஆச்சு என்று நினைத்தபடி யாதவி நகர்ந்து உட்கார… லிங்காவும் இன்னும் வசதியாக உட்கார்ந்தான்.
“நான் சாப்பாடு ரெடி பண்றேன்.” என்றபடி யாதவி எழுந்துகொள்ள… அவள் கைபிடித்து இழுத்து உட்கார வைத்தவன், “அதுக்கு இன்னும் டைம் இருக்கு.” என்றான்.
அவன் இதுவரை இப்படித் தொட்டு பேசியது இல்லை. காலையில் அவன் விளையாட்டுக்கு சொல்லவில்லை என்று இப்போது புரிந்தது. லிங்கா சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தாலும், பார்வை மனைவியிடமும் இருந்தது.
மாலை நேரத்தில் கொசுக்காகப் பயந்து வெளி மெத்து கதவை திறக்க மாட்டார்கள். யாதவி சமையல் அறையில் இருந்து தோசை சுட்டுக் கொண்டு வர… கீழே உட்கார்ந்து உண்டனர்.
யாதவி குளியல் அறைக்குள் சென்று உடைமாற்றி விட்டு வர… அவளைப் பார்த்து லிங்கா சிரித்துக் கொண்டான்.
சில நேரம் சந்தோஷ் உறங்கிய பிறகு, லிங்கா கீழே அவன் அலுவலக அறைக்குச் சென்று வேலைப் பார்ப்பான். ஆனால் இன்று செல்லவில்லை… கீழே சென்று கேட் மற்றும் கிரில் கதவை பூட்டிக் கொண்டு வந்தவன், கட்டிலில் சந்தோஷை நடுவில் விட்டு எப்போதும் போலப் படுத்துக்கொள்ள… யாதவி மறுபக்கம் படுத்துக் கொண்டாள்.
சந்தோஷ் உறங்காமல் அவன் காரை வைத்து விளையாட… அவனைத் தூக்கி தனக்கு அடுத்து உட்கார வைத்துவிட்டு, லிங்கா மனைவியின் அருகில் நெருங்கி படுத்தான்.
யாதவி என்ன என்பது போலப் பார்க்க… “அவன் இப்ப தூங்க மாட்டான் போல… நாம ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கலாம்.” என்றான்.
“ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி இருக்கு?”
“ம்ம்… அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா சந்தோஷுக்கு பத்து நாள் ஸ்கூல் லீவ் வருது. எனக்கு ஆபீஸ் கண்டிப்பா போய் ஆகணும். அதுதான் சென்னையில அம்மாகிட்ட விட்டுட்டு வரலாமான்னு பார்க்கிறேன்.” என்றதும்,
“என்னது பத்து நாளா… அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
“நீங்க எப்படிப் பார்த்துபீங்க? உங்களுக்கு வெளியில போற வேலை இருக்காதா?”
“நான் வெளிய போற வேலையைக் குறைச்சுக்கிறேன். அதோட எனக்கும் கோர்ட் இந்த மாசம் நிறைய நாள் லீவ் தான். அப்படி முக்கியமா போகும் போது அம்மாகிட்ட விட்டுட்டு போறேன்.” என்றான்.
“அவங்க எதாவது நினைச்சுக்கப் போறாங்க.”
“அவங்களுக்கு நம்ம மேல தான் கோபம். சந்தோஷ்கிட்ட காட்ட மாட்டாங்க.”
அவர்கள் இருவரும் அருகருகே படுத்திருப்பதைப் பார்த்த சந்தோஷ், இருவருக்கும் நடுவே வந்து உட்கார…
யாதவியின் கைபேசி அந்த நேரம் அடிக்க… அவள் எழுந்து சென்று பார்த்தவள், எடுத்துப் பேசாமல்… அதன் சத்தத்தை மட்டும் நிறுத்தி வைத்தாள். திவாகர் தான் அழைத்தான். குடித்துவிட்டு புலம்ப ஆள் கிடைக்கவில்லை என்றால் இவளுக்கு அழைத்து விடுவான்.
தொடர்ந்து எடுக்கவில்லை என்றால்… நேரிலேயே வந்து நிற்கப் போகிறான் என்ற அச்சத்தில், சில நேரம் எடுத்து பேசவும் செய்வாள். அன்று சென்னையில் பார்த்ததுதான். அதற்குப் பிறகு இன்றுதான் அழைக்கிறான். இன்னும் அவன் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருப்பது லிங்காவுக்குத் தெரியாது.
அடுத்து வந்த நாட்களில் யாதவியிடம் நெருக்கத்தை இன்னும் அதிகரித்தான். ஒரே நாளில் எல்லாம் நடக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அவனின் அருகாமையை உணர்த்தினான். அதுவுமே ரொம்ப இயல்பாக இருந்ததால்… யாதவிக்கும் பிடிக்காமல் இல்லை.
அந்த வாரம் சனிக்கிழமை காலை யாதவி சந்தோஷ் இருவரையும் லிங்கா அவர்கள் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். காலை உணவை வீட்டில் அருந்திவிட்டு மதியத்திற்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றனர்.
காரில் தான் சென்றனர். வழியில் ஒரு பெரிய பிள்ளையார் கோவில் இருக்க, முதலில் அங்குச் சென்றுவிட்டு பிறகு அவர்கள் தோட்டத்திற்குச் சென்றனர்.
அவர்கள் தோட்டத்திற்குள் நுழையும் போதே… பெரிய பாம்பு ஒன்று அவர்கள் முன்னால் சாலையைக் கடந்து செல்ல… சந்தோஷ் அதைப் பார்த்து ஆச்சர்யத்தில் குதிக்க… யாதவி தான் மிகவும் பயந்து போனாள்.
இங்க பாம்பெல்லாம் இருக்குமா என்று அச்சத்தில் கேட்டவள், “இப்போ போகலாமா? பாம்பெல்லாம் இருக்கே பரவாயில்லையா?” என்று அவள் கேட்க…
அவளின் பயந்த முகத்தைப் பார்த்து லிங்காவுக்குச் சிரிப்புதான் வந்தது.
“பூனை குறுக்கப் போனாதான் போகக் கூடாது சொல்வாங்க. பாம்புக்கு ஒன்னும் இல்லை… அதனால போகலாம்.” என அவன் கிண்டலாகச் சொல்ல…
“நான் இதுவரை பாம்பை இவ்வளவு கிட்டத்துல பார்த்தது இல்லை… அதுதான் பயமா இருக்கு.” என்றாள்.