கட்டும் போதே கீழே மேலே சேர்த்து கட்டவில்லை. முதலில் கீழ் தளம் மட்டுமே இருக்க… லிங்காவுக்குத் திருமணம் ஆகும் முன்பு தான் மாடி எடுத்தனர். அதனால் மாடிப்படி வெளியே வரவேற்ப்பு அறையில் தான் இருக்கும்.
மாடி ஏறியதும் மரக்கதவுக்கு அடுத்து, பெரிய அறை தான். அதோடு ஒட்டி குளியல் அறை இருக்க… … பக்கவாட்டு கதவை திறந்தால்… ஓடு போட்ட பெரிய திறந்தவெளி இருக்கும். இப்போது அதில் ஒருபக்கம் தான் சமையல்அறை போட ஆள் வர சொல்லி இருந்தான்.
இருவர் மட்டும் வந்திருக்க, லிங்கா அவர்களை அழைத்துச் சென்று இடத்தைக் காட்டினான். இப்போது சிமெண்ட் போட்டு பூச வேண்டிய அவசியம் இல்லாத வகையில், அழாகான வடிவமைப்பில் ரெடிமேட் செங்கற்கள் இருக்கிறது. அதை வைத்துக் கட்டினால் வேலை சீக்கிரம் முடியும். அதனால் அதை வைத்து கட்ட சொன்னான். அதோடு மேலே ஓடு இருப்பதால் மேல் தளம் போடும் வேலையும் இல்லை.
அந்த ஆட்கள் இரண்டு நாட்களில் வேலை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டு சென்றனர். அவர்கள் சென்றதும் பரத்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.
“சாப்பிடலாமா?” என அவன் யாதவியைக் கேட்க… சமைத்ததை எல்லாம் எடுத்து வந்து அவள் ஹாலில் வைக்க… கை கால் கழுவிக்கொண்டு வந்து உண்ண உட்கார்ந்தவன், பக்கத்தில் சந்தோஷை உட்கார வைத்துக் கொண்டான்.
“நீங்க எதுக்கும் முதல்ல டேஸ்ட் பண்ணிடுங்க.” என்றதும், சிரித்தபடி படி முதலில் சூப்பை குடித்துப் பார்த்தவன், அதில் மகனுக்காகக் காரம் கம்மியாக இருக்கிறது எனப் புரிந்து கொண்டான். அடுத்துக் குழம்பை ருசி பார்த்தவன், உடனே எதுவும் சொல்லவில்லை.
நல்லா இல்லையா என யாதவி கேட்கும் போதே… “சமைக்கிறதே இல்லைன்னு சொன்ன, ஆனா நல்லா வச்சிருக்க.” என்றதும்தான் அவளுக்கு நிம்மதி ஆனது.
லிங்கா ஸ்பூனில் சந்தோஷுக்குச் சூப்பை எடுத்து கொடுக்க… இரண்டு வாய் வாங்கி விட்டு வேண்டாம் என்றான்.
“என்னது வேண்டாமா? நீ இப்போ பேபி இல்லை பாய்… ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாமா…” என லிங்கா கேட்க… சந்தோஷ் வேண்டாம் என்று தலையசைத்தான்.
இவனை என்ன செய்வது என்பது போல லிங்கா பார்க்க… “சாப்பாட்டுல போட்டு பிசைஞ்சு கொடுத்திடலாம்.” என யாதவி சொல்ல…. சரியென அவள் சொன்னபடி, சாதத்தில் சூப்பை ஊற்றி பிசைந்து, அதோடு அவித்த முட்டையும் வைத்து கொடுக்க, சந்தோஷ் உண்டுவிட்டான்.
முதலில் அவனுக்குக் கொடுத்து விட்டு பிறகு இவர்கள் இருவரும் உண்டனர். யாதவி ரசமும் வைத்திருந்தாள்.
“ரொம்ப நல்லா இருக்கு யாதவி.” என்றவன், அவளும் ஒழுங்காக உண்ணுகிறாளா என்று பார்த்துக் கொண்டான்.
“நானும் நினைப்பேன் சந்தோஷுக்கு இதெல்லாம் கொடுக்கணும்னு. அப்புறம் அப்படியே யோசிச்சிட்டே இருந்துட்டேன்.” என்று யாதவி சொல்ல…
“தனியா குழந்தை வளர்க்கிறது சுலபம் இல்லை யாதவி. நீ ஒருத்தியே எவ்வளவு பார்ப்ப… நீ இதுவரை நல்லாத்தான் சமாளிச்சிருக்க… ஆனா பசங்க வளர வளர… தனியா சமாளிக்கிறது கஷ்ட்டம் தான். மத்தவங்களைக் கவனிக்க ஆரம்பிப்பாங்க. அப்போ நமக்கு மட்டும் ஏன் இப்படின்னு தோணும்.” என்றவன்,
“விடு எதையும் யோசிக்காத, நாம சேர்ந்து அவனை நல்லா பார்த்துக்கலாம்.” என்றவன், அவர்கள் தங்கள் வீட்டு மாடியிலேயே இனி இருக்கப்போவதாகச் சொல்ல… யாதவி யோசிக்க… நான் அம்மாகிட்ட பேசிட்டேன் அவங்களுக்கு ஓகே தான் என்றவன், “நாம அங்க இருந்தாலும், நான் காலையில மதியம் எப்பவும் போல அம்மாகிட்டேயே சாப்பிட்டுகிறேன். அப்போதான் அவங்களுக்கும் தனியா இருக்கோம்னு தோணாது.” என்றதும்,
“நீங்க உங்க அம்மா மேல இருக்கப் பாசத்துல சொல்றீங்களா? இல்லை என் சமையல்ல இருந்து தப்பிக்கச் சொல்றீங்களா?” என அவள் கேட்டதும்,
சற்றும் யோசிக்காமல் உடனே,”ரெண்டும் தான்.” என அவன் சிரிக்க, யாதவி அவனை முறைத்தாள்.
அங்கே வீட்டு வேலை நடக்க… ஜெயந்தியிடமும் ஒரு மாதத்தில் வீடு காலி செய்வதாகச் சொல்லி விட்டனர். லிங்கா அவனே அவர்களுக்கு வேறு நல்ல ஆள் பார்த்துக் கொடுப்பதாகச் சொல்லி இருந்தான்.
லிங்கா இங்கேயே தான் இரவு தங்க ஆரம்பித்தான். காலை எழுந்து இங்கேயே குளித்துக் கிளம்பி, இருவரையும் சென்று விட்டுவிட்டு வந்துதான் காலை உணவை உண்பான். பிறகு அவன் வேலையைப் பார்ப்பான். சில நேரங்கள் வெளி வேலை இருந்தால்… அவர்களை விட்டுவிட்டு அப்படியே அங்கிருந்தே சென்று விடுவான்.
சந்தோஷ் முதலில் இரண்டு மூன்று நாட்கள் லிங்கா அங்கேயே உறங்குவதை ஒருமாதிரி பார்த்தவன், பிறகு இனி இவன் போக மாட்டான் போலிருக்கு. இங்கேயே செட்டில் ஆகிவிட்டான் என்று முடிவுக்கு வந்துவிட்டது போல இருந்தான்.
எங்கே மீண்டும் உன் வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்டு விடுவானோ என்ற அச்சத்தில்தான் லிங்கா இருந்தான். ஆனால் சந்தோஷ் எதுவும் கேட்கவில்லை என்றதும் நிம்மதியாக இருந்தது.
“ஆழாக்கு சைஸ்ல இருக்க இவனுக்கு எல்லாம் நான் பயப்பட வேண்டியதா இருக்கு பாரு. இதுதான் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைன்னு சொல்வாங்களோ…” என யாதவியிடம் அவன் சொல்லி சிரிக்க… அவளும் மகனை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
உண்மையில் மகன் சற்று வளரும் வரைக்கும் தான். பிறகு தனக்குத் துணை தேவையில்லை… மகனே தனக்குப் போதும் என்றுதான் யாதவியும் நினைத்து இருந்தாள். ஆனால் லிங்காவைப் பார்த்ததும் எல்லாம் மாறி விட்டது.
பத்து நாட்களில் வீட்டு வேலைகள் முடிந்து விட… ஆட்களை வைத்து சாமான்களை அங்கே மாற்றி விட்டான்.
அந்தப் பெரிய அறையில் கட்டில் சுவற்றை ஒட்டி ஓரமாக இருக்க.. குளியல் அறைக்கு முன்பு வாஷிங் மெஷினை வைத்திருந்தனர். பெரிய டிவியும் இருந்தது. அப்போதும் அந்த அறை பெரிது தான்.
சந்தோஷை நடுவில் விட்டு லிங்கா சுவர் ஓரமும், யாதவி கட்டிலின் ஆரம்பத்திலும் என மூவரும் சேர்ந்து தான் படுப்பார்கள். சந்தோஷுக்கு இப்போது தான் லிங்கா வெளி ஆள் இல்லை என்ற எண்ணம் வந்திருந்தது.
கேரளா ஓடு போட்ட அந்தத் திறந்த வெளி மெத்தையும் தேவையான போது மூடிக்கொள்ளும்படி சுற்றிலும் மூங்கில் தட்டி அமைத்திருந்தனர். அந்த இடத்தைத் தான் ஹாலாக உபயோகித்தனர். அங்கே நிறையப் பூ செடிகள் இருக்க… யாதவிக்கு அந்த இடம் ரொம்பப் பிடிக்கும். அங்கே ஒரு சோபா செட்டும் இருக்க… பகல் வேளைகளில் அங்கே தான் இருப்பாள். அதிலேயே ஒரு பக்கம் கதவு இல்லாத சின்னச் சமையல் அறை.
வெளி மெத்தில் சந்தோஷுக்கு விளையாடவும் நிறைய இடம் இருந்தது. அவனுக்கு இங்கே மிகவும் பிடித்திருக்க….“அங்கி வீடு.” எனச் சந்தோஷ் சொல்ல…
“இது சந்தோஷ் வீடு. இது நம்ம வீடு.” என லிங்கா அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
அவர்களுக்கு என்று இருந்த சின்ன வீட்டையும் அழகாக வைத்திருந்தனர்.
சிபிக்குச் சிங்கப்பூரில் சில மாதங்கள் தொடர்ந்து வேலை இருக்க… அவனோடு ஜனனியும் சென்றிருந்தாள்.
திருமணமாகி ஒரு மாதம் சென்றிருக்க… யாதவியின் பெற்றோர் ஒரே ஒரு நாள் வந்து மகளை மருமகனை பேரப் பிள்ளையைப் பார்த்து விட்டு அன்றே திரும்பி இருந்தனர். இருந்துவிட்டுச் செல்லுங்கள் என்றால் கேட்கவில்லை. யாதவி நன்றாக இருப்பதாகச் சொன்னாலும், நேரில் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று வந்திருந்தனர்.
அவர்கள் கிளம்பும் சமயம் லிங்கா அவர்களைக் கீழே அழைத்துச் சென்றான். சிவகாமி அவர்களிடம் எதுவும் கோபத்தைக் காட்டவில்லை. அதே சமயம் இயல்பாகப் பேசவும் இல்லை. ஆனால் உண்ண கொருக்க கொண்டு வந்து வைத்தார். இவர்களும் புரிந்து கொண்டு உடனே கிளம்பி விட்டனர். இப்போதுதான் யாதவியின் பெற்றோருக்கு பெரிய மகளைப் பற்றிய கவலை தீர்ந்தது.
அன்று அலுவலகத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் சமையல் அறையில் நின்று யாதவி புடவைக் கட்டிக் கொண்டு இருந்தாள். அறையில் நின்று உடைமாற்ற எந்த மறைப்பும் இல்லாததால்… சமையல் அறையில் நின்றுதான் புடவை கட்டுவாள். இதே சுடிதார் என்றால்… குளியல் அறையிலேயே அணிந்து கொள்வாள்.
குளித்து விட்டு வரும்போதே நைட்டிக்கு உள்ளே ரவிக்கையும் பாவடையும் அணிந்திருந்தாள். நைட்டியை கழட்டிவிட்டு புடவையை அவள் கட்டிக் கொண்டிருக்க…. லிங்கா அப்போது அவள் உடைமாற்றுவதைக் கவனிக்காமல் சமையல் அறைக்குள் வந்துவிட்டான்.
உள்ளே வந்த பிறகே அவள் நின்ற அழகை பார்த்தான். யாதவியும் அவனைப் பார்க்க… இருவருக்குமே அதிர்ச்சிதான்.
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?” என யாதவி சிடுசிடுக்க…. அப்போதுதான் நிகழ் காலத்திற்குத் திரும்பியவன், மனைவியின் பேச்சில் கடுப்பானான்.
நான் என்ன யாரோவா? என நினைத்தவன், உடனே வெளியே செல்லாமல்… அவன் வேண்டுமென்றே தண்ணீரை எடுத்துக் கொண்டே வெளியேற….. அவசரமாக அள்ளி மேல போட்டிருந்த புடவையை யாதவி மீண்டும் கட்ட ஆரம்பித்தாள்.
அறைக்குள் வந்த லிங்கா யோசனையில் இருந்தான். பையனுக்கு மூனரை வயசு… அவனுக்குதான் நான் யாருன்னு புரியலை சரி… இவளுக்குமா நான் யாருன்னு புரியலை? இவளுக்கும் நான்தான் புரிய வைக்கணும் போலவே என நினைத்துக் கொண்டான்.