ருஹானாக்கு தாங்க முடியாத அதிர்ச்சியென்றால், ஆர்யனுக்கு சங்கடமான அதிர்ச்சி. தன்னை விட்டுவிட்டு இவானை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல ஆர்யன் போடும் திட்டம் ருஹானாவின் வாழ்க்கையின் ஆதாரத்தையே குலைத்து போட, காதில் கேட்டதை அவள் நம்ப முடியாமல் நிற்க, அவளுக்கு மறைத்து தான் தீட்டிய திட்டம் தன் வாய்மொழியாலேயே அவளுக்கு தெரிந்துவிட்டதில் ஆர்யன் பேச முடியாமல் நின்றான்.
கண்ணில் நீர் பூக்க, “நீங்க… எப்படி..?” அதற்கு மேல் வார்த்தை வராமல் அவள் திணற, ரஷீத் போனில் சத்தமாக ஆர்யனை அழைக்க, “நான் அப்புறம் கூப்பிடுறேன்” என ஆர்யன் போனை அடைத்தான்.
இன்னும் பக்கம் நெருங்கி வந்த ருஹானா “எப்படி இதுபோல உங்களால யோசிக்க முடிந்தது?” என கேட்க, “இவானுக்கு எது நல்லதோ அதை தான் நான் செய்றேன்” என ஆர்யன் பதில் சொல்ல,“அவனை கூட்டிட்டு ஓடுறது நல்ல செயலா? அன்புக்குரியவர்கள் கிட்ட இருந்து பிரிச்சி அவனை தனிமைப்படுத்துறதா?” என்று திரும்பவும் அவள் கேட்டாள்.
“நான் அவனோட இருப்பேன். நான் தான் அவன் குடும்பம்”
“அப்போ நான்? இவானுக்கு நான் யார்?”
அவள் கேள்விக்கு நேரிடையாக பதில் அளிக்காமல் “இதான் என்னோட இறுதி முடிவு” என சொன்ன ஆர்யன் அவளை தாண்ட முற்பட, அவனை கைப்பிடித்து தடுத்த ருஹானா “நான் இன்னும் பேசி முடிக்கல. நான் இருக்கும்போது நீங்க இவானை தூக்கிட்டு போக முடியாது. நான் உங்களை போக விட மாட்டேன்” என இரைந்தாள்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆர்யன் நிற்க “சித்தி!” என அழைத்தபடி இவான் அங்கே வந்தான். கண்ணீரை துடைத்துக்கொண்ட ருஹானா “அன்பே! தூக்கத்தில இருந்து எழுந்துட்டியா?” என அவனிடம் மண்டியிட, “நீங்க சண்டை போடுறீங்களா?” என அவன் கேட்டான்.
“இல்லயே, செல்லம்! நாங்க பேசிட்டு தான் இருந்தோம். வா, நாம போய் தூங்கலாம்” என அவள் அவனின் கையை பிடித்து அழைக்க, “நான் சோபாலயே தூங்குறேன், சித்தி” என்றான். அவனை உள்ளே தூங்கவைத்துவிட்டு திரும்பவும் இவர்கள் இருவரும் சண்டை போடுவார்களோ என நினைத்தானோ, என்னவோ?
இவானை அழைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்ற ருஹானா சோபாவில் அமர்ந்துகொண்டு அவனை மடியில் படுக்க வைத்தவள், அவன் தலையை தடவி கொடுத்தவாறே தூங்க வைக்க முயல, ஆர்யன் வெளியே நடந்து கொண்டிருந்தான். அந்த ஏகாந்த இரவும், ரம்மியமான இயற்கை சுழலும் அவன் மன வெம்மையை தணிக்கவில்லை.
கண்ணாடி தடுப்பின் வழியே ஆர்யனை பார்த்துக்கொண்டே ருஹானா இவானுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அவனுக்கு நிறைய அடிபட்டு இருந்தது. எலும்புக்கூடு போல இருந்தான்”
“கடல்லயே அதிக நேரம் இருந்ததால அவன் பலவீனமா இருந்தான்”
“ஆனா அந்த பொண்ணு அவனை பார்த்து பயப்படல”
“அவளோட குடிசைக்கு அவனை இழுத்துட்டு போனா”
“அவனை நல்லா கவனிச்சிக்கிட்டா. காயத்துக்கு மருந்து தடவினா”
“தினமும் சத்தான சாப்பாடு கொடுத்தா”
“மெல்ல மெல்ல மாலுமி குணமடைஞ்சிட்டே வந்தான்”
“பலசாலியாவும் ஆகிட்டான்”
“இப்போ அந்த பொண்ணு அவனை பார்த்து பயப்படறா”
“ஏன்னா அவனை பத்தி அவளுக்கு சரியா தெரியாது”
“அவன் ஒருவேளை கெட்டவனா இருந்தா என்ன செய்றது?”
“அவனை தெரியாத்தனமா காப்பாத்திட்டோமோ?”
“அவனுக்கு உடம்பு நல்லா சரியானதும் அவளுக்கு தீங்கு செஞ்சான்னா?”
கதை சொல்லிக்கொண்டே வந்த ருஹானா, இவான் தூங்கிவிட்டதை உணர்ந்ததும் அவனை தலையணையில் படுக்க வைத்தாள். எழுந்து கதவருகே வந்தவள் ஆர்யனை உற்று கவனித்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்த அவன் நடையை நிறுத்தி அவளை திரும்பி பார்த்தான். இறைஞ்சுதலான அவள் பார்வையை கண்ட அவன், அவளை எதிர்நோக்க முடியாமல் விலகி சென்றுவிட்டான்.
——
பறவைகளின் சத்தம் கேட்டு கண்விழித்த ருஹானா தான் சோபாவில் சாய்ந்த வண்ணமே உறங்கிவிட்டதை உணர்ந்து எழுந்தாள்.
“சித்தப்பா! பாருங்க, நானும் இந்த கட்டையெல்லாம் தூக்கிட்டு வந்தேன்”
“வெல்டன் சிங்கப்பையா”
வெளியே பேச்சுக்குரல் கேட்க எழுந்து வந்தாள்.
இவான் தான் கொண்டுவந்ததை சித்தியிடமும் பெருமையாக காட்டினான்.
“குட். நீ பலசாலி, அன்பே!” என ருஹானா பாராட்ட, “சித்தப்பா போல தானே?” என இவான் கேட்க, ஆர்யன் ருஹானாவின் முகம் பார்த்தான்.ருஹானா பதில் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள்.
ஜோஹ்ரா பெரிய தட்டில் காலை உணவை கொண்டுவர, ஆர்யன் முன்னே சென்று அதை வாங்கினான்.
“ஏன் அம்மா உங்களுக்கு சிரமம்?”
“ம்ஹூம்.. நல்லா சொல்லுவியே! என் பேரனுக்காக நான் செய்றது எனக்கு சந்தோசம்”
“மருமகள் எங்க?” என அவர் கேட்கும் நேரம் அங்கே வந்த ருஹானா அவரை வரவேற்றுவிட்டு தேநீர் கொண்டு வருவதாக சொல்லி உள்ளே சென்றாள்.
“வாங்க சூடு ஆறும்முன்னே சாப்பிடலாம்” என இவானுக்கும், ஆர்யனுக்கும் அவர் பொரித்த ரொட்டிகளை பரிமாற, ருஹானா கொண்டுவந்த தேநீர்க் கோப்பைகளை ஆர்யன் எடுத்து வைத்தான்.
“ஏன் நக்கத், உன் முகம் வாடி இருக்கு? சரியா தூங்கலயா? நகரத்தில இருக்கிற உனக்கு இந்த கிராமத்து குளிர் ஒத்துக்காது, இல்லயா?”
“நான் நல்லா இருக்கேன், ஜோஹ்ரா அம்மா” என எதிரே அமர்ந்திருந்தவரிடம் சொன்ன ருஹானா, மேசையின் மறுபுறம் ஆர்யன் அருகே அமர்ந்தாள்.
ஜோஹ்ரா தன் பக்கத்தில் இருக்கும் இவானுக்கு ரொட்டியை எடுத்துக்கொடுக்க, ருஹானா “ரொட்டில உருளைக்கிழங்கும், சீஸ்ஸும் வச்சி தரவா, அன்பே?” என இவானிடம் கேட்டாள். “சரி!” என சொன்ன இவான் ஒரு நொடி விட்டு “சரியம்மா” என்றான்.
ருஹானாவின் முகம் தன்னிச்சையாக பூவாய் மலர்ந்தது. ஆர்யனும், ருஹானாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்கும் இன்னும் சமாதானம் ஆகவில்லை என புரிந்துக்கொண்ட ஜோஹ்ரா “ஃபாசில் குட்டி! பாட்டிக்கு உள்ளே போய் ஸ்வெட்டர் கொண்டுவா” என இவானை உள்ளே அனுப்பிவிட்டு இவர்களிடம் விசாரித்தார்.
“நேற்று நான் அத்தனை சொல்லிட்டு போன பின்னும் நீங்க சண்டையை விடலயா?”
“அப்படிலாம் ஒன்னும் இல்ல, அம்மா”
“சேஹான்! எனக்கு உன்னை விட அனுபவம் அதிகம். என்னை சமாளிக்காதே”
ருஹானா “நேத்து நீங்க சொன்னதை பற்றி நானும் யோசித்தேன், ஜோஹ்ரா அம்மா. ஃபாசில் எங்க ரெண்டுபேருக்கும் அல்லாஹ் தந்த பொக்கிஷம். அவனுக்காக நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து இருக்கறது அவசியம். எங்க ரெண்டுபேர்ல ஒருத்தரை பிரிஞ்சாலும் அவன் மனம் வேதனைப்படும். எங்க சண்டையால அவனை கஷ்டப்படுத்த கூடாது” ஜோஹ்ராவிடம் ஆரம்பித்து ஆர்யன் முகம் பார்த்து சொல்லி முடித்தாள்.
ஆர்யன் “வாழ்க்கை எப்பவும் எளிதா இருக்காது. சிலசமயம் சின்னவனோட நலத்துக்காக சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதை மத்தவங்க புரிஞ்சிக்கணும்” என ருஹானாவை பார்த்தே சொன்னான்.
“நீங்க ரெண்டு பேரும் சொல்றது சரிதான். ஆனா ரெண்டுபேரும் சேர்ந்து முடிவெடுங்க” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இவான் உள்ளே இருந்து வர அவர் பேச்சை நிறுத்திக்கொண்டார்.
ஜோஹ்ரா ரொட்டியில் தேன் தடவி ஆர்யனுக்கு நீட்டினார்.சில தேன்துளிகள் அவன் கையில் கொட்டிவிட “அச்சோ!… நக்கத்! உன் கணவன் கையை துடைத்துவிடு” என அவர் சொல்ல, ருஹானா முறைப்புடன் ஒரு துணியை மட்டும் எடுத்து ஆர்யனிடம் கொடுத்தாள்.
ஆர்யன் கையை துடைக்கும் சமயம் போன் வர அவன் எழுந்து சென்றான். ஜோஹ்ரா இருவரையும் கவலையுடன் பார்த்தார்.
——
சல்மா அலுவலகத்தில் ஆர்யனின் அறையை ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கும் வேளையில் ரஷீத் ஆர்யனுடன் பேசிக்கொண்டே உள்ளேவர அவள் ஓடிச்சென்று ஒரு தூணில் பின்னே மறைந்துக்கொண்டாள்.
ரஷீத் யாரும் அங்கே இல்லை என நினைப்பில் பேசிக்கொண்டிருக்க, சல்மாவிற்கு அவள் தேடிய விவரம் தானாய் காதில் விழுந்தது. அக்காவிற்கு உடனே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள், ஆர்யன் இருக்குமிடம் பற்றி.
கரீமாவும் அவள் கையாள் மூலம் அந்த இடம் பற்றி காவல்நிலையத்துக்கு துப்பு கொடுத்துவிட்டாள்.
——-
“சித்தி! அங்க பாருங்க பட்டாம்பூச்சி!”
“அன்பே! ஜாக்கிரதை! ஓடாதே. விழுந்துடுவே”
“விழ மாட்டேன். நான் கவனமா தான் இருக்கேன், சித்தி”
இருவரின் குரலையும் கேட்டுக்கொண்டே, ஆர்யன் துண்டுகளாக்கிய கட்டைகளை ஒரு கூடையில் சேகரித்துக் கொண்டிருந்தான்.
“பூக்கள் ஒன்னு கூட இல்லயே, சித்தி”
“இப்போ சீசன் இல்ல, செல்லம்”
“ஆனா அம்ஜத் பெரியப்பா செடியில நிறைய பூக்கள் பூக்குமே”