ருஹானாவை துப்பாக்கி முனையில் வரவேற்ற ஆர்யன் அவளை பிடித்திருந்த கையை மெல்ல விடுவித்தான். துப்பாக்கியை கீழே இறக்கியவன் “நீ எப்படி இங்க வந்தே?” என கேட்டான். பயத்தில் வாய் திறக்க முடியாமல் ருஹானா நிற்க, அவனுக்கே விடை கிடைத்தது.
“சையத் பாபா சொல்லியிருப்பார்” என அவன் சரியாக யூகிக்க, அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
“தனியாவா வந்தே?”
அதற்கும் தலையாட்டல்.
“நீ இங்க வர்றது யாருக்காவது தெரியுமா?”
இப்போதுதான் ருஹானாவின் வாய்பூட்டு திறந்தது. “நான் மட்டும் தான் வந்தேன். யார்க்கும் சொல்லல”
ஆர்யன் நம்பாமல் பார்க்க, “உண்மையா தான் சொல்றேன். தனியா தான் வந்தேன். இந்த இடம் பத்தி யார்க்கும் தெரியாது” என்று சத்தமாக சொன்னாள்.
பேச்சு சத்தம் கேட்டு இவான் உள்ளிருந்து வர, ஆர்யன் துப்பாக்கியை மறைத்து இடுப்பில் செருகிக்கொண்டான்.
“சித்தி!!” என சிரிப்புடன் ஓடிவந்த இவான் அவளை கட்டிக்கொள்ள, “என்னுயிரே!” என கண்கலங்க அவளும் அவனை இறுக்கிக்கொண்டாள்.
“உன்னை ரொம்ப தேடினேன், செல்லம்”
“நான் கனவு காணுறேனா, சித்தி?”
“இல்ல அன்பே. நிஜமாவே நான் இங்க இருக்கேன். அல்லாஹ் என் பிரார்த்தனையை கேட்டுட்டார். நான் இப்போ உன்னை பார்த்துட்டேன்” என இவான் கையை பற்றி முத்தமிட்டாள்.
ஆர்யன் இவர்களின் பாசப்பிணைப்பை பார்த்துக்கொண்டிருக்க, “சித்தி! நீங்க வரும்போது கப்பல்லாம் பார்த்தீங்களா?” என இவான் கேட்க, ருஹானா தலையசைத்தாள்.
——–
“ஆஹ்! இந்த பொடிசு எதுக்கு விடுதில இருந்து தப்பிச்சான்?”
“அக்கா! கொஞ்சம் நிதானமா இரு”
“எப்படி இருக்க முடியும் சல்மா? நான் இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போகும் போலயே! எனக்கு பயமா இருக்கு. இவான் விசயத்துல ஆர்யன் எதுவும் செய்வான். எதையும் தியாகம் செய்வான்”
“இப்போ என்ன செய்றது அக்கா? ஆர்யன் போன் லைன் கிடைக்கலயே?”
அப்போது போன் அடிக்க, கரீமாவின் கையாள் “நீங்க சொன்னது சரிதான். ரஷீத் போன் எப்பவும் பிஸியா இருக்கு. அவன் ஏதோ செய்றான்” என தகவல் சொல்ல, “ஆர்யன் எங்க போயிருப்பான்னு ஏதாவது தெரிஞ்சதா?” என கரீமா கேட்டாள்.
“அது ஒன்னும் கண்டுபிடிக்க முடியல. ரஷீத் அதிக கவனமா இருக்கான்”
“வேற எந்த வழிலயாவது கண்டுபிடி.. சீக்கிரம்” என கரீமா போனை வைத்துவிட்டு “சல்மா! நீ ஆபிஸ் போ. ரஷீத்ட்ட இருந்து எப்படியாவது க்ளு கிடைக்குதான்னு பாரு. அவனுக்கு கண்டிப்பா ஆர்யன் இருக்குற இடம் தெரியும். ஆர்யன் கிறுக்குத்தனமா எதாவது செஞ்சி நம்ம எதிர்காலத்தை பாழாக்கறதுக்கு முன்னாடி நாம அவனை நிறுத்தணும்”
———
தோட்டத்தில் இவான் ஆட்டுக்குட்டிக்கு புல்லை வாயில் ஊட்டிக்கொண்டிருக்க, ருஹானாவும் அவனுடன் நின்றிருந்தாள். ரஷீத்திடமிருந்து தகவல் எதிர்பார்த்து பொறுமையற்று காத்திருந்த ஆர்யனும் வீட்டினுள் இருந்து இவர்களை பார்த்திருந்தான்
“சித்தி! நாம எப்பவுமே இங்க தான் இருக்க போறோமா?”
இவானுக்கு பதில் சொல்லாமல் ஆட்டுக்குட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதாக சொல்லி திரும்பிய ருஹானா, அந்த கேள்வியை ஆர்யனும் கேட்டுக் கொண்டிருப்பதை கண்டாள்.
உள்ளே வந்த ருஹானா “நான் உங்ககிட்டே பேசணும்” என்றாள்.
ஆர்யன் கோபமாக முகத்தை திருப்ப, அவள் அதற்கு ஒன்றும் பயப்படவில்லை.
“நீங்க இவானை காப்பாத்தினதுக்கு நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்ருக்கேன். ஆனா நீங்க ஏன் இவானை இங்க கூட்டிட்டு வந்தீங்க? விடுதியில ஏன் ஒப்படைக்கல? நீங்க என்ன தான் மனசுல நினைச்சி இதெல்லாம் செய்றீங்க?” என அவள் கடுமையாக கேட்க, அதை விட கடுமையாக ஆர்யனிடமிருந்து பதில் வந்தது.
“இவான் என்கூட பத்திரமா இருக்கான்னு நீ பார்த்திட்டேல? மத்தது உனக்கு தேவை இல்லாதது.”
“இவானை பத்தின ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு எப்படி முக்கியமோ அதை போலவே எனக்கும் முக்கியமானது” கண்களை உருட்டி அதட்டி சொன்னாள்.
“ஏன் அவனை இங்க தூக்கிட்டு வந்தீங்கன்னு எனக்கு புரியவே இல்…” ருஹானா வார்த்தையை முடிக்கும்முன் ஆர்யன் பெருங்குரலெடுத்து பேசினான்.
“இன்னொரு முறை அவனை இழக்க என்னால முடியாது. அதனால தான் இங்க கூட்டிட்டு வந்தேன்”
காவலனே காவல்துறைக்கு
சொல்லவேண்டுமாம்..
பதுங்கி எத்தனைநாள்
இருந்திட முடியும்..?
உரிமை தலைதூக்குகிறது
நியாயம் கோருகிறது…
இன்னுயிரின் நன்மைதீமை
அவனன்றி யாரறிவர்..?
“இதுக்கு மேலே என்ன ஆகும்? காலத்துக்கும் இங்கயே இருக்க முடியுமா? இவானை நாம நிரந்தரமா பிரிய வேண்டி வந்தா என்ன செய்றது?” என ருஹானா கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் போன் அடித்தது.
அழைப்பது கரீமா அர்ஸ்லான் என பார்த்த ஆர்யன், ருஹானாவை முந்திக்கொண்டு மேசையில் இருந்த போனை கையில் தூக்கிக்கொண்டான்.
ருஹானா போனை பறிக்க முயல, ஆர்யன் “நீ இங்க இருக்குறது யாருக்கும் தெரியக்கூடாது. இந்த இடத்தை பற்றி ஒரு தகவல்கூட வெளிய போகக்கூடாது” என கோபமாக கத்தும்போது ஒரு வயதான மாது உள்ளே நுழைந்தார்.
“இங்க இருக்குற மலைக்கு கூட நீ பேசுறது கேட்குது, சேஹான்!” என சொன்னபடியே உள்ளே வந்த அவர் “நீ வந்ததை இப்படித்தான் நான் தெரிஞ்சிக்கனுமா? எதுக்கு என் மருமகளை திட்டிட்டு இருக்கே?” என வினவினார்.
ருஹானா திகைத்து பார்க்க, “நல்வரவு மருமகளே!” என அவர் நெருங்கி வந்து அவளை அணைத்துக்கொண்டார். அவர் முதுகின் புறம் ஆர்யன் கண்ணை மூடி சைகை செய்ய, ருஹானாவும் அவர் கையை பற்றி முத்தமிட்டு நெற்றியில் வைத்து வணங்கினாள்.
“நாங்க நேத்து ராத்திரி வந்தோம், ஜோஹ்ரா அம்மா! உங்களுக்கு தொல்லை கொடுக்கவேணாம்னு அப்போ உங்களை எழுப்பல” என ஆர்யன் மென்மையாக சொல்ல, ருஹானா அவனை அதிசயமாக பார்த்தாள்.
ஆர்யனை முறைத்தபடியே ஜோஹ்ரா “என் பேரன் எங்கே? அவனை நீ கூட்டிட்டு வரலயா?” என கேட்க, ஆர்யன் “கூட்டிட்டு தான் வந்தோம், அம்மா. வெளிய விளையாடுறான்” என சொல்ல ருஹானாவின் திகைப்பு அதிகரித்தது.
“என் செல்லத்தை நான் போய் பார்த்துட்டு வரேன்” என ஜோஹ்ரா வெளியே செல்ல, ருஹானா ஆர்யனை கேள்வியாய் பார்க்க, இத்தனை நேரம் இருந்த மென்மை மறைந்து அவளை உக்கிரமாக பார்த்தான்.
——
கை நிறைய ப்ளம்ஸ் பழங்களை இவானுக்கு கொடுத்த ஜோஹ்ரா “இதை சாப்பிட்டு பார், தங்கம். உனக்கு பிடிக்குதா, பார்க்கலாம்” என சொல்ல, அதை சுவைத்து பார்த்த இவான் “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான். மகிழ்ந்து போன ஜோஹ்ரா “அப்போ இன்னும் பறிக்கலாம், வா” என அவனை அழைத்துப் போனார்.
அவர்கள் இருவரும் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த ருஹானாவிடம் ஆர்யன் “அவங்களுக்கு அல்சைமர் பாதிப்பு இருக்கு. உன்னை அவங்க மருமகளா, இவானை பேரனா நினைக்கிறாங்க. நக்கத் அவங்க மருமகள். ஃபாசில் அவங்க பேரன். இங்க இருக்குறவரை நாம அப்படித்தான் நடந்துக்கணும்” என சொல்ல அவளும் சம்மதித்தாள்.
போனில் ரஷீத் அழைக்க “சொல்லு ரஷீத்” என கேட்ட ஆர்யன், அவன் சொன்ன விவரத்தில் கோபமானான்.
“என்னோட முழு அனுமதி இருக்குனு நீ அவங்களுக்கு சொல்லு. பணத்தை எடுக்குறதுல எந்த சிக்கலும் வர கூடாது. புரியுதா?”
ருஹானா அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருக்க, “என்னோட போனுக்காக காத்திரு” என சொல்லி ஆர்யன் போனை நிறுத்த, ருஹானா வீராப்பாக அவன் முன்னே வந்து நின்றாள்.
“என்ன திட்டம் போடுறீங்க? இவானை பத்தி என்ன யோசனை வச்சிருக்கீங்க?” என அவள் கேட்க “இவான் நல்லா இருக்கான்னு பார்த்துட்டேல. அதோட உன் வேலை முடிஞ்சது. இப்போ நீ கிளம்பலாம்” என சொல்லி, அவன் நகர்ந்து சென்று அங்கிருந்த மரத்திண்டின் மேல் பெரிய கட்டைகளை வைத்து கோடாரியால் வெட்ட தொடங்கினான்.
“இவானை இங்க விட்டுட்டு நான் போய்டுவேன்னு நினைச்சீங்களா?” அவள் பக்கம் வந்து பல்லை கடித்துக்கொண்டு கேட்க, அவளை இலட்சியம் செய்யாமல் வெட்டிக்கொண்டே இருந்தான்.
“நீங்க என்னை புறக்கணிச்சாலும், திட்டினாலும் பரவால்ல. உங்க திட்டம் என்னன்னு எனக்கு தெரியணும்” என அவள் கடகடவென பேச ஆர்யனும் கோபமாக அவள் புறம் திரும்ப “சித்தி” என இவான் ஓடி வந்தான்.
“நான் என்ன கொண்டு வந்திருக்கேன், பாருங்க”
“வா அன்பே! எல்லாம் இனிக்குதான்னு பார்க்கலாம்”
“சித்தி! அந்த பாட்டி ஏன் என்னை ஃபாசில்னு கூப்பிடுறாங்க?”
ஆர்யன் வேலை செய்துக்கொண்டே ருஹானா என்ன சொல்கிறாள் என கவனிக்க “அவங்களுக்கு லேசா உடம்பு சரியில்ல, செல்லம். சிலது மறந்து போய்டுச்சி. நீ அவங்க பேரன் ஃபாசில்னு நினைக்கறாங்க. நான் உன்னோட அம்மா நக்கத்“ அவள் சிறுவனுக்கு புரியும்படி விளக்கி சொன்னாள்.
“அப்படியா? அப்போ அவங்க என் சித்தப்பாவை என்னன்னு நினைக்கறாங்க?” அறிவாக கேள்வி கேட்டான், இவான்.
ருஹானா ஆர்யனை திரும்பி பார்க்க, அதை ஆர்யன் உணர்ந்தாலும் அவன் அவள் பார்வையை சந்திக்கவில்லை.
“உன் சித்தப்பாவை உன் அப்பான்னு நினைக்கறாங்க”
ஆர்யன் அசையாது நின்று கவனிக்க “கொஞ்ச நாளைக்கு இது ஒரு விளையாட்டுன்னு நினைச்சிக்கோ, அன்பே” என்று ருஹானா சொல்ல, ஆர்யன் மனதில் எண்ணங்கள் அலைமோதின.
இவானுக்கு ஒரே ஆனந்தம் தான். “அப்போ நான் உங்க பையன். நீங்க என் அம்மா. சித்தப்பா என் அப்பா. எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”
ஆர்யன் ருஹானாவின் முகம் பார்க்க அவளோ முறைத்துக்கொண்டு தான் பார்த்தாள். அதற்குள் “ஃபாசில்… நக்கத்..“ என ஜோஹ்ரா அழைக்க இருவரும் அங்கே செல்ல, ஆர்யன் முறைப்புடன் கட்டைகளை பிளக்க ஆரம்பித்தான்.
——–
“ஆர்யன் சார் சொன்னதுதான். அவரோட வங்கிக்கணக்குல இருக்குற எல்லா பணமும் வேணும். சீக்கிரம் வேலை நடக்கணும்” என ரஷீத் போனில் சொல்லிக்கொண்டிருக்கும்போது சல்மா ஒரு கோப்பை கையில் வைத்துக்கொண்டு சோகமாக உள்ளே வந்தாள்.
“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க, சல்மா மேம்”
“ஆர்யனும், இவானும் எங்க இருக்காங்கன்னே தெரியல. நானும் அக்காவும் என்ன செய்றதுன்னே தெரியாம கவலையா இருக்கோம்” என அவள் சொல்ல, அவள் பேச்சை கண்டுக்கொள்ளாத ரஷீத் “அது என்ன ஃபைல்?” என கேட்டான்.
“இதுல ஆர்யன் கையெழுத்து வேணும்” என சல்மா கேட்டாள். ஆர்யன் இருக்கும் இடத்திற்கு அந்த கோப்பை ரஷீத் அனுப்புவான் என அவள் திட்டமிட, மேசையின் இழுப்பறையை சாவிகொண்டு திறந்த ரஷீத் ரப்பர் ஸ்டாம்ப் எடுத்து ஆர்யன் கையெழுத்தை அந்த கோப்பில் பதிக்கலானான்.
ஏமாற்றமடைந்த சல்மா, ரஷீத் போன் அடிக்கவும் யார் அழைப்பது என எட்டி பார்க்க முனைந்தாள். அதற்குள் போனை எடுத்த ரஷீத் “ஒரு நிமிசம். போன் பேசிட்டு வரேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
பின்னால் யாரும் வரவில்லை என உறுதி செய்துக்கொண்ட ரஷீத் போனை எடுத்து “சொல்லுங்க, எல்லா பணமுமா?” என கேட்டான்.
“ஆமா, பணப்பெட்டியை நம்ம கப்பல்ல கொண்டுவச்சிடு. இங்கிருந்து வேகமாக வெளிநாட்டுக்கு போறதுக்கு அதான் சிறந்த வழி”
தூரத்திலிருந்து ருஹானா போனில் ஆர்யன் பேசுவதை கேட்க முயல, ஜோஹ்ரா அவளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவன் பேசுவது கேட்காவிட்டாலும் இவான் விஷயமாக ஏதோ முக்கியமாக பேசுகிறான் என புரிந்து கொண்டாள்.
“லாயர்ஸ்ட்ட பேசி நாங்க வெளிநாட்டில இருக்குற நேரத்துல இங்க தீர்வு கிடைக்கிறது போல வேலை நடக்கணும். அப்படி இல்லனா நாங்க திரும்பி வர முடியாது”
“உறுதியா தான் சொல்றீங்களா? முதல்ல இவானை கூட்டிட்டு போறீங்க. அப்புறம் அம்ஜத் அண்ணா, கரீமா மேம் இவங்களையும் வரவழைச்சிக்குவீங்களா? அப்படித்தானா?” என ரஷீத் உறுதிபடுத்திக்கொள்ள கேட்க, ஆர்யன் திரும்பி ருஹானாவை பார்த்தபடி பேசாமல் நின்றான்.
“ஆர்யன்! லைன்ல இருக்கீங்களா?”
“ஆமா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலை நடக்கணும். நேரம் வீணாகக் கூடாது”
“சரி ஆர்யன். நீங்க சொன்னபடி” என ரஷீத் சொல்ல ஆர்யன் போனை அணைத்தான். ருஹானா புரியாமல் பார்த்திருந்தாள்.
——–
தரையில் அமர்ந்து அக்ரூட் கொட்டைகளை உடைத்தபடி ஜோஹ்ரா, பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆர்யனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“இந்த வருஷம் விவசாயம் அவ்வளவு சரியில்ல. வானிலை கை கொடுக்கல. ஆனா அல்லாஹ் காப்பாத்திட்டார்” என சொன்னவர் “இந்தா! இதை உடைச்சி கொடு” என்று அக்ரூட் கொட்டைகளை ஆர்யனிடம் கொடுக்க, ருஹானா மூவருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.
“மாஷா அல்லாஹ்! எப்பவும் போல அருமையா டீ போட்டு கொண்டு வந்திட்டியே, நக்கத்!” என அவளை பாராட்டியபடி தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டார்.