அவ பாட்டுக்கு இருந்த பெண்ணை, கல்யாண ஆசை காட்டி ஏமாத்துறது எல்லாம் ரொம்பப் பாவம். உங்க அண்ணன் வந்தா சொல்லு.” என்றவர், உள்ளே சென்று விட… தீபிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதை லிங்காவிடம் சொல்ல தைரியம் இல்லாமல், பரத்திற்கு அழைத்துச் சொல்ல…

உங்க குடும்பத்துக்கு அறிவே இல்லையா… இவங்க எப்படிப் பேசி இருந்தா, அந்தப் பொண்ணு நைட் நேரம்னு கூடப் பார்க்காம கிளம்பி போயிருக்கும். எனக்குத் தெரியாது, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா எல்லோரையும் கொல்லப் போறான்.” என்றவன், “அவன்கிட்ட இப்ப எதுவும் சொல்லாத. அவன் வீட்டுக்கு வந்ததும் எனக்குப் போன் பண்ணு. நான் பேசிக்கிறேன்.” என்றான்.

லிங்கா மீண்டும் அழைக்க… “வீடு பூட்டி இருக்கு. ஆபீஸ் போயிட்டாங்க போல..” என்றதும், அவளது அலுவலக எண்ணிற்கு அழைத்தால்… அந்த எண் வேலை செய்யவில்லை.

யாதவி இரவெல்லாம் உறங்காததினால் படுத்து நன்றாக உறங்கிவிட்டாள். அவள் செல்லை அனைத்து வைக்கவில்லை. சார்ஜ் இல்லாமல் தானாக அணைந்து போனது.

பத்து மணிக்கு ஜனனி வந்து எழுப்பி, “என்ன இப்படி வந்ததுல இருந்து தூங்கிட்டே இருக்க… என்னோட பேசிட்டு இரு.” என்றதும், எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தவள், கைபேசியைப் பார்க்க… அது அணைந்து கிடந்தது. சார்ஜில் போட்டவள் அதை உயர்ப்பிக்க மறந்திருந்தாள்.

யாதவி இங்கே யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் ஜனனியின் திருமண வேலையில் இருக்க… அவர்களிடம் எதாவது சொல்லி….அவர்கள் உற்சாகத்தைக் குறைக்க விரும்பவில்லை. என்ன நடக்கிறது என்று பார்த்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

காலை உணவை உண்டுவிட்டு, அவள் எப்போதும் போல இருக்க… நாம்தான் தவறாக நினைத்துக் கொண்டோம் போலிருக்கு எனப் பெற்றோர் நினைத்துக் கொண்டனர்.

மதியம் போல லிங்கா வீட்டிற்கு வந்துவிட்டான். உடன் அத்தை மகன்களும் வந்தனர். அவனிடம் பேசுவதற்காகப் பாக்கியமும் நரசிம்மனும் முன்பே வந்து காத்திருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும், “என்ன இந்த நேரத்தில இங்க இருக்கீங்க?” என லிங்கா கேட்க,

உங்க அம்மாவை பார்க்க வந்தோம். இவனுங்க உன்னை விட இங்க வருவானுங்கன்னு தெரியும், அப்போ இவனுங்களோட போயிடலாம்னு இருந்தோம்.” என்றனர். லிங்கா அவன் அறைக்குச் சென்று விட்டான்.

லிங்கா வந்துவிட்டது தெரிந்து, பரத் அவனை அழைத்தவன், “டேய் நீ இல்லாத நேரத்தில அங்க என்னென்னவோ நடந்து போச்சு.” என்றதும், “என்ன ஆச்சு? யாதவி சந்தோஷுக்கு ஒன்னும் இல்லை தான…” என அவன் பதட்டமாகக் கேட்க…

அவங்களுக்கு ஒன்னும் இல்லை. ஆனா யாதவி இப்போ இங்க இல்லை.” என்றவன், காரணத்தையும் சொல்ல…

இவங்களை எல்லாம் மதிச்சேன் பார்த்தியா… அதுதான் என்னோட தப்பு. இரு நான் பேசிட்டு வரேன்.” என்றவன் கோபமாகக் கீழே இறங்கி சென்று, “நேத்து யாதவிகிட்ட என்ன பேசினீங்க?” என்று கேட்க…

அதுக்குள்ள உன்கிட்ட சொல்லிட்டாளா…” என்று சிவகாமி கேட்க…

அவ நேத்துல இருந்து என்கிட்டே பேசவே இல்லை. இப்போதான் எனக்கு வேற ஒருத்தர் சொல்லி தெரியும். என்ன பேசினீங்க சொல்லுங்க?” என்றான் கோபமாக.

நம்ம குடும்பத்தைப் பத்தி எடுத்து சொன்னோம். வேற என்ன சொன்னோம்.” என்றார் பாக்கியம்.

வேற நீங்க ஒன்னும் சொல்லலை… முதல்ல நான் உங்களைக் கேட்கிறேன், என் விஷயத்துல தலையிட நீங்க எல்லாம் யாரு?”

மாமான்னு உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். அதை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க. இனிமே என் விஷயத்துல தலையிட்டா அவ்வளவுதான்.” என்றதும், அவரின் மகன்களுக்குக் கோபம் வர, “அத்தான், பார்த்து பேசுங்க. உங்க நல்லதுக்குத் தான், நீங்க யார்கிட்டயும் திரும்ப மாட்டிக்கக் கூடாதுன்னு தான் பண்ணாங்க.” என்று அவர்கள் சொல்ல..

உங்களுக்கு என்ன தெரியும் யாதவியைப் பத்தி?”

நாளைக்கு அவ ஆபீஸ்க்கு போய் அவகிட்ட சம்பந்தம் இல்லாம ஒரு வார்த்தை பேசிப்பாரு, உனக்கு யாதவி யாருன்னு தெரியும். அவ அது போல ஆளுங்களை மதிக்கவே மாட்டா.”

அவ படிப்புக்கும், வேலைக்கும், அழகுக்கும், இன்னைக்கு அவ சரின்னு சொன்னா, கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பேரு வருவான்.”

அவ இன்னொரு கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்தா… என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி…. நான்தான் அவளைக் கேட்டேன். அவ ரொம்ப யோசிச்சு தான் சம்மதம் சொன்னா… அதுக்காக அந்தப் பெண்ணை என்ன வேணா பேசுவீங்களா?”

இல்லை முதல்ல அவ்வளவு அறிவு எனக்கு இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா… எத்தனை பேரைப் பார்க்கிறேன், எனக்குத் தெரியாதா யாரு எப்படின்னு? தெரியாமலா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருப்பேன்.

ஒரு பொண்ணுகிட்ட பேசுற முறை இல்லையா… விவாகரத்து ஆன பொண்ணுங்கிறதுனால என்ன வேணா பேசிடலாமா… இனிமே எனக்கு எந்தச் சொந்தமும் தேவையில்லை, கிளம்புங்க.” என லிங்கா ருத்ர அவதாரம் எடுக்க…

அவளும் தான் பேசினா. முதல்ல அவங்க உன் மாமாவும் அத்தையும். மரியாதையா பேசு.” எனச் சிவகாமி மகனை கண்டிக்க…

உங்களுக்கு உங்க அண்ணன் தான் வேணும்னா நீங்களும் அவங்களோட கிளம்புங்க. நானும் பார்க்கிறேன் எத்தனை நாள் உங்களை வச்சு சோறு போடுறாங்கன்னு.” என்றதும், “நான் ஏன் டா என் புருஷன் வீட்டை விட்டு போகணும்?” என்றார் சிவகாமி கோபமாக.

உங்களுக்கு உங்க புருஷன் கட்டின வீட்ல இருக்கணும்னா சொந்தம்னு சொல்லிட்டு இனி இங்க யாரும் வரக் கூடாது.” என லிங்கா நேரடியாக முகத்திற்கு நேராகவே சொல்லிவிட…

உனக்காகப் பார்த்து உன் பையன் எங்களை எப்படிப் பேசுறான் பாரு.” என்று பாக்கியம் சிவகாமியை திட்ட… நரசிம்மன் கோபமாகக் கிளம்பி சென்றார்.

காரில் செல்லும் வழியில் ப்ரதீப், “தேவையில்லாம இதுல அப்பாவை வேற இழுத்துவிட்டு, நமக்குத்தான் மரியாதை கெட்டுப் போனது மிச்சம். நீங்க என்னவோ சொன்னீங்க. ஆனா அத்தான் அந்தப் பெண்ணைப் பத்தி அவ்வளவு மரியாதையா சொல்றார். இனிமே தேவையில்லாம எதிலேயும் தலையிடாதீங்க மா…. இப்போ நமக்குதான் அவமானம். அவர் யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு என்ன?” எனப் பாக்கியத்தை மகன் கடிந்து கொள்ள…

இனிமே அவன் மாமான்னு நம்மகிட்ட எதுக்காவது வரட்டும்.” என்று நரசிம்மன் சொல்ல….

அவர் என்னைக்குப் பா வந்தாரு… நாமதான் அவர்கிட்ட உதவி கேட்கிறோம்.” என்றான் நவீன். அது என்னவோ உண்மைதான். சின்ன விஷயத்திற்குக் கூட லிங்காவை தான் அழைத்துக் கேட்பார் நரசிம்மன்.

அவர்கள் சென்றதும், “யாதவிகிட்ட இப்படிப் பேசி வச்சிருக்கீங்களே… இனி நான் எப்படி அவ முகத்தைப் பார்த்து பேசுவேன்.”என லிங்கா கேட்க…

அதுக்குதான் நீ பதிலுக்கு எங்களைப் பேசிட்டியே… இப்போ என் அண்ணன் கோவிச்சிக்கிட்டு போயிட்டாரே… நான் என்ன பண்றது? உன் அப்பாவும் இல்லை. எதுக்குனாலும் உன் மாமா தான் முன்ன நிக்கணும். இனி அவர் இந்த வீட்டுக்கு வராம, நீ என்னோட பேசக் கூடாது.” என்று சொல்லிவிட்டு சிவகாமி உள்ளே சென்றுவிட்டார். அவருக்கு அவருடைய பிரச்சனை.

அண்ணா நீங்க யாதவிகிட்ட பேசி பாருங்க.” எனத் தீபிகா சொல்ல…

அதுக்கு அவ போன்னை எடுக்கணும் இல்ல… என்னை வேண்டாம்னு சொல்லப் போறா பாரு. அதுதான் நடக்கப் போகுது. அப்புறம் அம்மாவை சந்தோஷமா இருக்கச் சொல்லு.” என்றவன் அறைக்குச் சென்று விட்டான்.

யாதவி மதிய உணவை உண்டுவிட்டு கைபேசியைப் பார்க்க, அது இன்னும் அணைந்தே கிடக்க.. அதை எடுத்து உயிர்பித்து வைத்தாள்.

போன் செய்தால் எடுத்து பேசுவாளோ என்ற சந்தேகத்தில், “நீ உங்க வீட்டுக்குப் பத்திரமா போயிட்டியா… அதையாவது சொல்லேன். எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு.” என லிங்கா தகவல் அனுப்ப…அப்போது கைபேசி அவள் கையில் தான் இருந்தது.

அவன் அனுப்பி இருந்த தகவலை படித்ததும், அவளுக்கும் ஒருமாதிரி ஆகி விட…

நான் பத்திரமா வந்திட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்று அனுப்பினாள்.

சந்தோஷ் எப்படி இருக்கான்?”

நல்லா இருக்கான்.”

சாரி…” என லிங்கா அனுப்ப… அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று புரிந்தது.

யாதவி பதில் சொல்லாமல் இருக்க…

என்னை வெறுத்திட்டியா? நடந்ததுக்கு நானும் தானே காரணம்.” என்று அனுப்பினான்.

நீங்க நல்லா இன்னொரு தடவை யோசிச்சு முடிவெடுங்க லிங்கா. எனக்காகப் பார்க்காதீங்க. எதுவா இருந்தாலும் என்னால் ஏத்துக்க முடியும்.” என்று அனுப்பினாள்.

அவள் அனுப்பியதை படிக்கப் படிக்க, அத்தனை வலி லிங்காவுக்கு. அப்போ நான் இல்லைனா அவளுக்குப் பரவாயில்லையா… நான் இல்லாமலும் இருக்க முடியும், அதுதானே அர்த்தம் என்று வருந்தினான். அவன் அதற்குப் பிறகு எதுவும் அனுப்பவில்லை. அமைதியாகக் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

இவள்தான் எதோ சொல்லி, அவன் செய்வது போல… அவன் வீட்டினர் தான் நினைத்துக் கொள்கிறார்களே… அதற்குதான் அவனை மீண்டும் யோசித்து முடிவு எடுக்கச் சொல்லி அனுப்பினாள். ஆனால் அதை அவன் வேறு விதமாகப் புரிந்து கொண்டான்.

அவனிடம் இருந்து பதில் வராமல் இருக்கவும், யாதவியும் மேற்கொண்டு எதுவும் அனுப்பவில்லை.

நாட்கள் செல்ல… அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. தங்களைத் தேடி லிங்கா வர மாட்டானோ என யாதவி நினைக்க…. இப்போது அவள் இருக்கும் மனநிலை அவனுக்கு தெரியவில்லை. கோபத்தில் இருக்கும் போது கேட்டு, அவள் வேண்டாம் என்று  சொல்லி விட்டாள். அதனால் லிங்காவும் கொஞ்சம்  ஆறப்போடுவோம் என நினைத்தான். 

இருவருக்குமே இனி என்ன நடக்கும் என்று தெரியாததால்… நாளையை பற்றி கனவுகளும் இல்லை. 

“கண்ணில் ஒரு வலி இருந்தால்….

கனவுகள் வருவதில்லை….”