இரண்டு வாரங்கள் சென்றிருக்கும் லிங்காவுக்கு அவன் வேலை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாலும், மனதில் ஒரு அமைதி என்பது இல்லவே இல்லை. எதோ ஒரு விஷயம் அவனை மன அமைதியில்லாமல் எரிச்சல் படுத்திக் கொண்டே இருந்தது.
ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வந்தவன், வீட்டிற்குள் நுழையும் போதே… ஹாலில் யாருடனோ உட்கார்ந்து சிவகாமி பேசிக் கொண்டிருந்தார்.
மரியாதைக்காக வாங்க என்றவன், அங்கேயே உட்கார்ந்து யார் என்று தெரிந்துகொள்ளத் தன் அம்மாவைப் பார்க்க…
அவனுக்கு ஐயோ என்று இருக்க… ஆனால் அவர் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
பெண்ணின் தகப்பனாருக்கு எல்லாமே திருப்தி தான். ஆனால் லிங்காவின் மாஜி மாமனார் விவாகரத்து கேட்டானே என்ற கோபத்தில், லிங்காவின் மீது இல்லாததும் பொல்லாததுமாக நிறையவே வெளியே பரவவிட்டிருந்தார்.
லிங்காவுடனான மணவாழ்க்கையில் மகளுக்குத் திருப்தி இல்லை என்பது போலவும் அவர் பேசி இருக்க… உண்மையோ பொய்யோ தெரிந்தவர்கள் மத்தியில் அந்த விஷயம் அப்படியும் இருக்குமோ என்ற எண்ணத்தை விதைத்து இருந்தது.
இதற்காக அவனிடம் யாரும் மருத்துவச் சான்றிதழ் வாங்கி வா என்று கேட்க முடியாது தான். ஆனால் நம்பிக்கையான வார்த்தையை, அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்ப்பார்த்தார்.
சிவகாமி தான் பேசினாரே தவிர, லிங்கா வாயே திறக்கவில்லை. பெண்ணின் தகப்பனார் அவனின் முகத்தை முகத்தைப் பார்க்க…
“நாங்க வீட்ல பேசிட்டு சொல்றோம்.” என லிங்கா சொல்ல… அவர் சரியென்று கிளம்பி விட்டார்.
“அம்மா, ஏன் மா இப்படி அவங்களையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி, என்னையும் தர்ம சங்கத்துக்கு ஆளாக்குறீங்க?”
“என் மேல நம்பிக்கை இல்லாம பெண்ணைக் கொடுத்திட்டு, நாளைக்கு எல்லோருக்கும் தானே கஷ்ட்டம்.”
“நீ கல்யாணம் பண்ணி நல்லா வாழ்ந்து காட்டு.”
“மத்தவங்களுக்காகக் கல்யாணம் பண்ணி, குழந்தையைப் பெத்து, என்னை அப்படி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி நினைச்சிருந்தா எப்பவோ பண்ணி இருப்பேன்.”
“அப்போ நீ கல்யாணமே பண்ணிக்க மாட்ட.”
“வாழ்க்கை சந்தேகத்துல ஆரம்பிக்கக் கூடாது. ஒரு பெண்ணோட வாழ்க்கையை நான் பாழக்க மாட்டேன்னு என் மேல நம்பிக்கை இருக்கணும்.” என்றவன், “இனிமே பொண்ணு பார்க்கிறேன், அது இதுன்னு ஆரம்பிக்காதீங்க. எப்போ கல்யாணம் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
தன் அறைக்கு வந்தவனுக்குத் தலை வலித்தது. கட்டிலில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான்.
அவனின் முன்னால் மனைவியின் பெயர் ஐஸ்வர்யா . அவள் வீட்டில் இளவரசியாக வளர்க்கப்பட்டவள். பெற்றோர் பார்த்திருந்தாலும், அவளின் அழகு லிங்காவை கவர்ந்தது என்னவோ உண்மை.
அவனின் மனைவியின் ஊர் தூத்துக்குடி. அங்கே அவன் மாமனார் பெரிதாகத் தொழில் செய்து கொண்டிருந்தார். ஒரே மகள் என்பதால் ஐஸ்வர்யாவுக்குச் செல்லம் அதிகம்.
திருமணம் முடிந்து சில நாட்கள், அவர்கள் வீட்டில் இருக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. இங்கே எப்போது வந்தார்களோ அப்போதிருந்து பிரச்சனை தான்.
“காலை எழும் போதே, அவள் அம்மா அழைத்து விடுவார். குளிச்சிட்டு இந்த டிரஸ் போடு என்பதில் இருந்து இன்னைக்கு என்ன டிபன்? உனக்கு இட்லி பிடிக்காதே, தோசை சுட்டு தர சொல்லு.” என மகளுக்குக் கைபேசி வழியே உபதேசம் நடத்துக் கொண்டே இருக்கும்.
ஒருநாளைக்கு இரண்டுமுறை பேசலாம், மூண்டு முறை பேசலாம். ஆனால் அதையே பொழுதுக்கும் செய்து கொண்டிருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகத்தானே இருக்கும். லிங்கா எதாவது சொன்னால்… அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்வாள். கோபத்தில் எதாவது செய்து கொள்வாளோ என்று சிவகாமிக்கு வேறு பயமாக இருக்கும். அவர் கதவை திறக்க சொல்லி, வெளியே இருந்து கெஞ்சிக் கொண்டிருப்பார்.
“டேய் அவளை எதுவும் செய்யச் சொல்லாத டா… நானே செஞ்சிட்டு போறேன்.” என்பார்.
இதில் எதாவது நாள், கிழமை, விசேஷ வீடு என்று எதாவது சாக்கு வைத்து, மகளை அழைத்து அவர்களோடு வைத்துக்கொள்வர். லிங்காவுக்கு இங்கேயும் அங்கேயும் அலைய முடியவில்லை. சும்மா சும்மா எதற்கு உங்க வீட்டுக்கு போற என்பதில் ஆரம்பித்தது பிரச்சனை.
“எங்களுக்கு ஒரு பொண்ணு தானே… எங்களோட இருக்க வேண்டாமா?” என அவன் மாமனார் கேட்க….
“அப்படி நினைக்கிறவர் எதுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுத்தீங்க?” என லிங்காவும் பதிலுக்குக் கேட்டிருந்தான்.
“நான் அப்படிச் சொன்னேனா… பொழுதுக்கும் இவ இங்க வந்து உட்கார்ந்திட்டா… நான் என் வேலையைப் பார்ப்பேனா… இல்லைனா இவளை பார்ப்பேனா?” லிங்கா அப்போது ஒரு வக்கிலிடம் ஜூனியராக இருந்தான்.
“நீங்க அப்படி எல்லாம் வேலைப் பார்க்கனும்னு ஒன்னும் இல்லை. நீங்க ஒரு இடமா இருக்கணும்னு நினைச்சா, இங்க இருங்க.” என்றதும்,
கதை நல்லா இருக்கே என்று நினைத்த லிங்கா, “இப்படியொரு எண்ணம் இருந்தா… அதை நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும். நானும் எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது எல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லி இருப்பேன்.” என்றான் கோபமாக.
உண்மையில் அவர்கள் திட்டம் அதுதான். வீட்டோடு மாப்பிள்ளை என்றால்… நல்ல இடம் வராதோ என்று நினைத்தவர்கள், நல்ல படித்த பையன், வசதியான வீட்டுப் பையனை தேடித் பிடிப்போம், பிறகு வீடோட்டு மாப்பிள்ளை ஆக்கிகொள்ளலாம் என்று திட்டம் போட்டிருந்தனர். ஆனால் அவர்கள் திட்டத்திற்கு லிங்கா ஒத்துவரவில்லை.
லிங்காவின் பெற்றோர் அவர்கள் தான் புரியாமல் பேசுகிறார்கள், நாமும் அப்படி இருக்க வேண்டாம் என்று மகனை சமாதானம் செய்தனர்.
ஐஸ்வர்யா இங்கே சில நாட்களும், பெற்றோர் வீட்டில் பல நாட்களுமாகப் பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள். இங்கிருந்தால் ஏதாவது சின்னச் சின்ன வேலையாவது செய்யும்படி இருந்தது. அம்மா வீட்டில் கைபேசியுடன் ஏசி அறையில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கலாம். நேரத்திற்கு உணவு வரும். கவலை இல்லாத வாழ்க்கை.
திருமணம் முடிந்து ஆறு மாதமாகியும் ஐஸ்வர்யா உண்டாகவில்லை. ஐஸ்வர்யாவுக்கு எப்போதுமே மாதவிடாய் ஒழுங்காக வராது. எப்போதுமே நன்றாகத் தின்றுவிட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தால்… உடலுழைப்பு என்பதே இல்லை.
மருத்துவரை சென்று பாருங்கள் என்று சிவகாமி சொல்லிவிட்டு, பெண்ணைக் குழந்தை இல்லை என்று மாமியார் கொடுமைப்படுத்துகிறார் என்று பெயர் வாங்கினார். அப்படி இப்படிச் சமாதானம் செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தனர்.
மருத்துவர் அவளிடம் தாம்பத்திய உறவு எப்படி என்று கேட்டதற்கு, அவள் அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று சொல்ல… ஆரம்பக்கட்ட சோதனையில் ஐஸ்வர்யாவுக்குத் தான் கர்ப்பபையில் நீர் கட்டிகள் இருப்பது தெரிந்து, அதற்கு உரிய வைத்தியம் செய்ய மருத்துவர் ஆலோசனை வழங்கி இருந்தார்.
லிங்காவின் தந்தை பாக்கு போடுவார். அவருக்கு வாயில் புற்றுநோய். அவர் அதை வீட்டில் வேறு சொல்லாமல் மறைக்க… வெகு நாட்கள் கழித்தே தெரிந்ததால்…. நோய் பரவி இருக்க… ஆபத்தான கட்டத்தில் இருந்தார்.
உடல் நலமில்லாத தந்தையை வைத்துக்கொண்டு, மனைவியிடம் சரசம் கொள்ள முடியுமா? ஏற்கனவே தந்தை சொல்லாமல் இப்படி இழுத்து வைத்துக் கொண்டாரே என்ற கவலையில் இருந்தவன், தந்தைக்கும் உடம்பு முடியாததால் தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு, அவன் வேலைக்கும் சென்று வந்தான். தந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்து கொண்டிருந்தான்.
தீபிகா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தந்தைக்கு இப்படி என்று தெரிந்ததும், அவள் அழுதே கரைய… கணவரின் நிலைப்பார்த்து சிவகாமி உடைந்து போனார். கணவருக்கு எப்படியாவது சரியாகி விட வேண்டுமே என்று, அவரும் யார் என்ன சொன்னாலும், அதைச் செய்து தந்து கொண்டிருந்தார்.
வீடு இந்த நிலையில் இருக்க… இங்கிருப்பவர்களுக்கு ஆறுதலாக, உதவியாக ஏதும் செய்யாமல்…. “உங்களுக்கு என்னோட இருக்கவே நேரம் இல்லை. நீங்க என்னோடவே இருக்க மாட்டேங்கிறீங்க.” என்று சண்டை பிடித்தாள். பிறகு, “இதுக்கு நான் எதுக்கு இங்க இருக்கணும்?” என்று அவள் பெற்றோர் வீட்டில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.
திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் கணவன் மனைவி இடையில் புரிதலோ… அன்போ இல்லை. திருமணம் செய்து கொண்டோமே என்று கடனுக்குத் தான் வாழ்ந்தனர்.
சில மாதங்கள் கஷ்ட்டப்பட்ட லிங்காவின் தந்தை இறந்து போனார். அதற்கு எதோ உறவினர் வீட்டு துக்கத்துக்கு வந்தது போல…. பெற்றோரோடு வந்துவிட்டு, மூன்றாம் நாளே ஐஸ்வர்யா கிளம்பி சென்றாள். மகள் இவர்களுக்கு இங்கே கிடந்தது ஊழியம் செய்ய வேண்டுமா என நினைத்தவர்கள், மகளுக்கு உடல்நலம் சரியில்லை என்று பொய்யான காரணம் சொன்னார்கள்.
அப்போதுதான் லிங்கா மனைவியை முழுமையாக வெறுத்தான். கணவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டியவள், அவனின் துன்பமான நேரத்தில் விட்டு விலகி சென்ற பிறகு, இவள் தனக்கு இனி எப்போதுமே தேவையில்லை என்ற முடிவுக்கு லிங்கா வந்திருந்தான்.