வீட்டிற்கு வந்த பிறகும் சந்தோஷ் உறங்கிக் கொண்டிருக்க…அவனை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, யாதவி குளித்து விட்டு வந்தவள், மாவு அரைத்து வைத்து விட்டு சென்றிருந்ததால்… இட்லியும் சிறுபருப்பு சாம்பாரும் செய்து வைத்து விட்டு வந்து பார்க்க, சந்தோஷ் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தான்.
காலையில் பால் கூடக் குடிக்கவில்லை. எவ்வளவு நேரம் வெறும் வயிற்றில் இருப்பான் என்று நினைத்தவள், மகனை அள்ளி மடியில் போட்டு, அவன் சிகையைக் கோத சந்தோஷ் கண் விழித்துப் பார்த்தான்.
“எவ்வளவு நேரம் டா குட்டி தூங்குவீங்க.” என்றவள், மகனின் ஆடைகளைக் களைந்து, குளியல் அறைக்கு அழைத்துச் சென்று பல் துலக்கி, வெந்நீரில் குளிக்க வைத்து அழைத்து வந்தாள்.
அவனுடைய சைக்கிளை பார்த்ததும், அவன் அதில் உட்கார்ந்து வீட்டை வட்டம் அடிக்க… யாதவி இதுதான் சமயம் என்று இட்லியை ஊட்டிவிட்டாள். பிறகு அவளும் உண்டு, வீட்டை சுத்தம் செய்து விட்டு, மதியத்திற்குப் பருப்பு இருந்ததால்… உருளைக் கிழங்கு வருவலும் சாதமும் மட்டும் செய்தாள்.
புது இடம் என்பதால் சந்தோஷ் அம்மா இருக்கும் இடத்திலேயே, அவனின் விளையாட்டுச் சாமான்களை வைத்துச் சமத்தாக விளையாடிக் கொண்டிருந்தான்.
சமைத்து முடித்துத் துணிகளைத் துவைக்க… குளிர்ந்த நீரில் துணி துவைப்பதே கஷ்டமாக இருந்தது. முதலில் வாஷிங் மெஷினை மாட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டாள். துணிகளை உலரவைத்துவிட்டு வந்தவள், அன்று மழை தூறிக் கொண்டே இருந்ததால்… மதியமே மாலை நேரம் போல இருக்க…
சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என அறையின் கதவை சாற்றித் தாழிட்டவள், மெத்தையில் சென்று படுக்க… அவளையும் அறியாமல் உறங்கி விட்டாள். அவள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷும் அம்மாவுடன் வந்து படுத்துக் கொண்டான்.
முதலில் சந்தோஷ் தான் எழுந்தான். அவன் எழுந்து யாதவியை எழுப்ப… பிறகே அவள் விழித்தாள்.
உறங்கி விட்டால் மகன் தனியாக வெளியே சென்றுவிடக் கூடாது என்றுதான், கதவை தாழிட்டு விட்டு படுத்தாள். அதே போல நன்றாக உறங்கி இருந்தாள். நேரம் பார்க்க மதியம் இரண்டரை மணி.மகனுக்கு உணவு கொடுத்து, தானும் உண்டு முடிக்க, யாதவிக்குத் தலைவலியோடு உடலும் லேசாகச் சுடுவது போல இருக்க… அப்போதே மாத்திரைப் போட்டுக் கொண்டாள்.
சாரல்மழை தானே என்று குடை எடுக்காமல், நனைந்து கொண்டே சென்றது தான் காரணம் என்று புரிந்தது. இத்தனை நாள் சென்னை வெயிலில் இருந்துவிட்டு, இப்போது குளிர்ச்சியான இடத்திற்கு வந்திருப்பதால்… கவனமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். மகனுக்கும் காலில் சாக்ஸ் போட்டு விட்டாள்.
அந்த ஊர் குளிர்ச்சிக்கு நன்றாக உறக்கம் வந்தது. பயணம் செய்த களைப்பும் சேர்ந்து கொள்ள… அம்மாவும் மகனும் மீண்டும் படுத்து உறங்கி விட்டனர். மாலை எழுந்த யாதவிக்குத் தலைவலி கூட இல்லை.
சந்தோஷ் வந்திருப்பது தெரிந்து ரேகா அவள் மகளை அழைத்துக் கொண்டு வந்தாள். வரும் போதே இரவுக்கு சிற்றுண்டி செய்து கொண்டு வந்திருந்தாள். இரவு வரை இருந்து, இரவு உணவும் உண்டுவிட்டே கிளம்பினாள்.
அன்று பொழுது அம்மாவுக்கும் மகனுக்கும் நன்றாகவே சென்று விட்டது. திங்கள்கிழமையில இருந்து ஸ்கூல் போகணும் சரியா… என மகனிடம் அடிக்கடி சொல்லி, அவனைப் பள்ளிக்கு செல்ல தயார் செய்து கொண்டிருந்தாள்.
ஞாயிறு அன்று காலை எழுந்து வேலைகளை முடித்தவள், இன்னும் சந்தோஷ் உறங்கிக் கொண்டிருந்ததால்… மகன் இருந்த அறைக் கதவை கதவை சாற்றிவிட்டு, கீழே சென்று ஜெயந்தியிடம், வாஷிங் மெஷின் மாட்ட யாராவது கிடைப்பாங்களா எனக் கேட்க…
“நீ வந்து கூடத் தெரியலை…நேத்தே வந்துட்டியா… எனக்கும் யாரையும் தெரியாது. எதிர்வீட்ல லிங்காவை தான் கேட்கணும். அவன்கிட்ட சொன்னா ஆள் அனுப்புவான்.” என்றவர், இரு வரேன் என எதிர்வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர், “ஆள் பார்த்து அனுப்புவனாம்.” என்றார்.
“எங்க பையன் வெளிநாட்டில் இருக்கிறதுனால… ஆத்திர அவசரத்திற்கு நாங்களே எதுனாலும் லிங்காவைத் தான் கேட்போம். அவன் சரியான ஆள் அனுப்புவான்.” என்றதும், அவருக்கு நன்றி சொல்லி மேலே வந்துவிட்டாள்.
காலை உணவை முடித்து விட்டு இருந்த போது, வீட்டின் அழைப்பு மணி அடிக்க… சென்று பார்த்தால்… வாஷிங் மெஷின் மாட்ட என்று ஒருவர் வந்திருந்தார்.
லிங்கா அண்ணன் சொன்னார் என்றதும், எதிர்த்த வீட்டு வக்கீல் அனுப்பி இருக்கிறார் என்று புரிந்து கொண்டு கேட்டை திறந்தாள். அவர் வந்து வேலை முடித்துப் பணம் வாங்கிக் கொண்டு சென்றதும், இந்த வேலையும் இன்றே முடிந்துவிட்டது என்று நிம்மதியாக் இருந்தது.
இன்றே அந்த வாரத்திற்குத் தேவையான சாமான்கள் வாங்கி விடலாம் என்று மகனோடு கடைக்குக் கிளம்பினாள். பக்கத்தில் இருந்த கடையிலேயே தேவையான சாமான்கள் வாங்கிக் கொண்டு தாயும் மகனும் வீடு வந்து சேர்ந்தனர்.
அன்று விடுமுறை தினம் என்பதால், நான்கு மணிக்கே எதிரே இருந்த காலி மனையில், பையன்கள் வந்து விளையாட… அந்தச் சத்தத்தில் விழித்த சந்தோஷ், ஜன்னல் அருகே சென்று திரைசீலையின் உள்ளே தலையை விட்டு ஜன்னல் வழி பார்த்தவன், அங்கிருந்தவர்களைப் பார்த்து விட்டு உற்சாகமாகக் குரல் கொடுத்தான்.
அந்தச் சத்தத்தில் தான் யாதவி உறக்கத்தில் இருந்து விழித்தாள். மகன் என்ன செய்கிறான் என்று ஜன்னலின் அருகே சென்று பார்க்க… அவன் அங்கே விளையாடுபவர்களை வேடிக்கை பார்க்க… யாதவியும் அவனை விட்டு அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சமையல் அறையில் இருந்தவளை சந்தோஷ் கைபிடித்து இழுத்து வந்தவன், வாசல் கதவை திறந்து விடச் சொல்லி கைகாட்டினான். கதவைத் திறந்ததும் வெளியே பால்கனியில் நின்று பார்த்தவன், அவனுக்குத் தெரியவில்லை என்று உள்ளே இருந்து பிளாஸ்டிக் சேரை இழுத்து வந்து போட்டு, அதன் மீதி ஏறி நின்று கம்பியை பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க… மகன் செய்வதை எல்லாம் யாதவி ஒரு சிரிப்புடன் பார்த்திருந்தாள். அவள் அங்கேயே சுவற்றில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
ஒரு கட்டத்தில் சந்தோஷிற்கு அங்கே விளையாடுபவர்களைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுக்க… வெளி வாயிலில் இருந்து வந்தால்.. முதல் அறை லிங்காவின் அலுவலக அறைதான். கணினியில் எதோ தட்டச்சுச் செய்து கொண்டிருந்தவன், தொடர்ந்து கேட்ட சிறுவனின் குரலில்… வேலையை விட்டுவிட்டு, ஜன்னலில் வந்து நின்று பார்க்க… எதிரே மாடியில் சந்தோஷ் கைதட்டி உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து லிங்காவின் முகமும் அகமும் மலர… வீட்டிற்குள் சென்று டீ எடுத்து வந்தவன், அதைப் பருகியபடி சந்தோஷை பார்த்திருந்தான். ஒரு கட்டத்தில் அவன் சேரில் குதிக்கத் தொடங்க… மகன் விழுந்து விடப் போகிறானோ என்ற அச்சத்தில் யாதவி அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
காலை எழுந்து உணவு தயாரித்து, மகனுக்கும் தனக்கும் தனித் தனி டப்பாவில் வைத்தவள், கூடவே மகனுக்குத் தேவையான பழங்கள், குடிக்கத் தண்ணீர் என எல்லாம் எடுத்து வைத்தாள். அவள் குளித்து விட்டு வந்து மகனையும் எழுப்பினாள்.
வேறு எந்த வேலைக்கும் அப்போது நேரம் ஒதுக்கவில்லை. அதனால் மகனை கிளப்பித் தானும் நிதானமாகக் கிளம்பினாள். மாலை வந்து வேலைகளை நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.
காலை உணவை முடித்துவிட்டு, மஞ்சள் நிற நீள மேலாடையும், கருப்பு நிறத்தில் லெக்கிங்க்ஸ் அணிந்து, தன் நீல கூந்தலை பின்னலாகப் போட… அவளின் ஜடை இடையைத் தாண்டி சென்றது. லேசான ஒப்பனையில் விழிகளுக்கு மைதீட்டி, கருப்பு பொட்டும் வைத்துக் கொண்டாள்.
மகனுக்கும் மஞ்சள் நிறத்தில் காட்டன் சட்டை ,கருப்பு நிற பேண்ட், காலில் ஷூ எனப் போட்டு விட்டிருந்தாள்.
கிளம்பும் நேரம் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்தவள், தனது கைப்பை மற்றும் மகனின் பையையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, கதவை பூட்டி சாவியைக் கைபையில் பத்திரபடுத்திவிட்டு, மகனை நடக்க வைத்து அழைத்து வந்தாள்.
முதல் நாள் என்பதால் சற்று சீக்கிரமே கிளம்பி சென்றாள். வெளியே ஜெயந்தியும், சிவகாமியும் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இவளைப் பார்த்ததும் இருவருமே புன்னகைத்தனர். பதிலுக்கு யாதவியும் புன்னகைத்தாள்.
“என்ன முதல் நாளுன்னு அம்மாவும் மகனும் மங்களகரமா மஞ்சள் கலர்ல கிளம்பிடீங்களா?” என ஜெயந்தி கேட்க… அவருக்குப் பதிலாகப் புன்னகையைத் தந்தவள், “ஆண்டிக்கு பாய் சொல்லு.” என மகனிடம் சொல்ல… அவன் டாட்டா காட்ட… பொதுவான தலையசைப்புடன் அவர்களிடம் விடைபெற்றவள், மகனை தூக்கிக் கொண்டு விருவிருவென நடக்க ஆரம்பித்தாள்.
“அந்தப் பெண்ணோட புருஷன் வரலையா?” எனச் சிவகாமி கேட்க…
சொல்லுவோமா வேண்டாமா என்று ஜெயந்தி யோசித்தவர், பிறகு ரேகா அவரிடம் சொல்லியதை சொல்லி விட்டார்.
“எனக்குக் கூட வீடு கொடுக்க யோசனை தான். ஆனா புருஷன் சரி இல்லைனா அந்தப் பொண்ணு என்ன பண்ணும்.” என்றார்.
சிவகாமி எதுவும் சொல்லவில்லை. ஆனால் எதையோ நினைத்து அவர் முகம் மாற…. “அண்ணி விடுங்க. எதையும் யோசிக்காதீங்க.” என்றவர், “நானும் ஸ்கூலுக்குக் கிளம்பணும்.” என்றதும், சிவகாமியும், “ம்ம்… நிறையக் காய் இருக்கு. அந்தப் பொண்ணுக்கு கூடச் சாயங்கலாம் வந்தாக் கொடு.” என்று சொல்லிவிட்டு சென்றார்.
தெருமுனைக்கு வந்து சாலையைக் கடந்தவள், பஸ் இங்கே நிற்குமோ என்ற சந்தேகத்தில் தான் நின்றாள். ஆனால் அப்போது வந்த பேருந்தை பார்த்து விட்டு இவள் கைகாட்ட… குழந்தையுடன் வேறு நின்றதாலோ என்னவோ, பேருந்து நிற்க… அதில் ஏறிக் கொண்டாள்.
அடுத்த இருபது நிமிடத்தில் தென்காசியில் இறங்கி முதலில் நேராக மகனின் பள்ளிக்கு சென்றவள், இன்னும் அவள் அலுவலகம் செல்ல நேரம் இருந்ததால்… மகனோடு அங்கேயே இருந்தாள்.
இதற்கு முன் சந்தோஷ் ப்ளே ஸ்கூல் சென்றிருக்கிறான். அதனால் பள்ளி ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல… ஆனால் மதியம் வரை தான் பள்ளி, அதற்கு மேல் இங்கேயே வேலைப் பார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளைப் பார்த்துகொள்ள ஆள் இருப்பதால்… அவர்களோடு சேர்த்து சந்தோஷையும் மாலை வர பார்த்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இவள் கிளம்பும் போது சந்தோஷ் சிணுங்க, “அம்மாவுக்கு இங்க பக்கத்தில் தான் ஆபீஸ். சாயங்கலாம் நானே வந்து கூடிட்டு போவேன். நீ அதுவரை ஜாலியா விளையாடுவியாம். வீட்டுக்குப் போனா தனியா தான இருக்கணும். இங்க உனக்கு நிறை பிரண்ட்ஸ் இருக்காங்க.” என்று சொல்லி விட்டுவிட்டு சென்றாள்.
ஒன்பதரைக்கே இவள் அலுவலகம் வந்ததைப் பார்க்க… அங்கிருந்த பியுனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அரசாங்க அலுவலகத்திற்குப் பத்து மணிக்குள் யார் வேலைக்கு வருவார்கள்.
பத்து மணிக்குப் பிறகுதான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். இவள் புதிதாக வந்திருப்பதால்… இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரவர் இருக்கையில் சென்று உட்கார்ந்தனர்.
மேல் அதிகார் வர பத்தரை மணி ஆனது. அவரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு தனது இருக்கையில் உட்கார்ந்து யாதவி வேலைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடையது நடுத்தரக் குடும்பம். பெரிதாகச் செலவு செய்து படிக்க வைக்க எல்லாம் அவளின் பெற்றோரிடம் வசதி இல்லை. அதனால் கல்லூரியில் பட்டபடிப்பு படிக்கும் போதே… அரசாங்க பணி தேர்வுகளுக்கும் படித்துக் கொண்டிருந்தாள். பட்டபடிப்பு முடிந்ததும் தகுதி தேர்விலும் வெற்றிப் பெற்று அராசாங்க பணியிலும் சேர்ந்திருந்தாள்.
கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவள், இதற்கு முன் இந்த இடத்தில் இருந்தவர், நிறைய வேலைகளைப் பெண்டிங் வைத்துவிட்டுச் சென்றது தெரிந்தது. அதை முதலில் முடிப்போம் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதே அலுவகத்தில் கிளெர்க்காக இன்னொரு பெண்மணி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் யாதவியும் மட்டுமே பெண்கள் மற்ற எல்லோரும் ஆண்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி சிர்த்தபடி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் சதீஷ் என்று ஒருவன் இருந்தான். பார்வையாலையே யாதவியை விழுங்கிக்கொண்டு இருந்தவன், அடிக்கடி ஜோக் என்ற பெயரில்…. கண்டதையும் உளறிக் கொண்டிருக்க… அதற்கு மற்றவர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
யாதவி காதே கேட்காதது போல வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கே சென்றாலும் இது போல ஒன்று இருக்கும் போல என நினைத்துக் கொண்டாள்.