சென்னையில் இருந்து தென்காசி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்த யாதவிக்கு, தூரத்தில் தெரிந்த மலைகளும், சாலை எங்கும் இருந்த மரங்களும், தார் சாலைக்கு இருபக்கமும் பச்சை போர்வை விரித்தது போல இருந்த நிலங்களும் எனப் பார்க்க பார்க்க அந்தக் காட்சி திகட்டவே இல்லை.
சென்னையில் பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மத்தியில் தான் இதுவரை சென்று வந்திருக்கிறாள். இது போல இயற்கை சூழலில் இருந்ததே இல்லை. அதனால் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
சென்னையின் ஜூன் மாத வெயிலில் கருகி போய் வந்தவள், அந்த நேரம் வீசிய இதமான சாரல் மழையில்… முகத்தை ஜன்னல் வழியாகக் காட்டி, அந்தக் குளுமையை ரசித்து அனுபவித்தாள்.
யாதவி பேருந்தின் பின்பக்கம் இருக்க… முன்பக்கம் இருந்த இருக்கையில் இருந்த லிங்கா, இறங்க வேண்டிய இடம் நெருங்கி இருந்ததால்… சீட்டில் பக்கவாட்டில் திரும்பி இறங்க தயாரான நிலையில் உட்கார்ந்திருந்தவன் கண்ணில் யாதவி பட… சின்னப் பிள்ளையாக மழையை ரசிக்கும் அவளைப் பார்த்திருந்தான்.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க, யாதவி அதைக் கூடக் கவனிக்கவில்லை. நடத்துனர் இரண்டு முறை ஊரின் பேரை சொன்னதும் தான் கவனித்தாள். அவள் பதறி அடித்து எழுந்துகொள்ள… அவளைக் கிண்டலாகப் பார்த்தபடி லிங்காவும் எழுந்து கொண்டான்.
“வெளியூர் போயிட்டு வர்றீங்களோ? இல்லைனா நம்ம பஸ்ல வர மாட்டீங்களே… அதுதான் கேட்டேன். ” நடத்துனர் சொல்ல… ஆமாம் என்ற லிங்கா ஒரு தோள்பை மட்டுமே வைத்திருந்தான்.
ஒரு பெட்டி மற்றும் தோள்பையோடு யாதவி இறங்க…
“என்ன மா வந்த ஊரை மறந்திட்டியா?” என்று நடத்துனர் அவளிடம் கேட்க…
முன்பக்கம் ஆட்கள் ஏற… பின்பக்கம் வழியாக இறங்க வந்தவன், “ஊருக்கு புதுசு போலிருக்கு… அதுதான் மழையை ரசிச்சிட்டு இருந்தாங்க. மழையை ரசிக்கிறதை பார்த்தா… அனேகமா சென்னையா இருக்கும்.” என லிங்கா சொல்ல… நான் எங்கு இருந்து வந்தால் இவனுக்கு என்ன என்று நினைத்த யாதவி, அவனை முறைத்துவிட்டு சென்றாள்.
“ரொம்பச் சூடா இருக்கிறதை பார்த்தா கண்டிப்பா சென்னை தான்.” என்றவன், நடத்துனரைப் பார்த்து புன்னகைத்து விட்டு இறங்க… சொற்ப பயணிகளுடன் அந்தப் பேருந்து அவர்கள் இருவரையும் கடந்து சென்றது.
யாதவி சாலை ஓரமாக நின்றவள், கைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க… எங்க போகணும்னு கேட்போமா என நினைத்த லிங்கா, தனியாக இருக்கும் பெண்ணிடம் பேசினால் தவறாகப் புரிந்து கொள்வாளோ என்ற யோசனையில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவனும் சற்று தள்ளி நின்றான்.
நாமதான் ஊருக்கு புதுசு. இவனுக்கு என்ன? எதற்கு இங்கே நிற்கிறான் என்பது போலப் பார்த்த யாதவிக்கு, அவனைத் தவறாகவும் நினைக்க முடியவில்லை. அவன் பார்வையும் தோற்றமும் கண்ணியமாகத்தான் இருந்தது.
“சாரி டி சாரி… லேட் ஆகிடுச்சா…” என்றபடி வந்த தோழியைப் பார்த்த யாதவி, “இல்லை வந்து ஐந்து நிமிஷம் தான் ஆகுது.” என்றாள்.
ரேகா வந்த வண்டியில் முன்பக்கம் பெட்டியை வைத்து விட்டு, யாதவி பின்னால் ஏறிக்கொள்ள… அதே நேரம் பைக்கில் ஒருவன் வர, அவன் பின்னே அமர்ந்து லிங்கா சென்றான்.
அவனும் யாருக்கோ காத்திருந்தான் எனத் தெரிந்ததும், நல்லவேளை தப்பா நினைச்சு எதுவும் பேசிடலை என நினைத்துக் கொண்டு சென்றாள். அவனின் வண்டி சாலையின் இடது பக்கத்தில் இருந்த திருப்பத்தில் திரும்ப… இவர்களின் வண்டி வலதுபுறத்தில் இருந்த சாலையில் திரும்பியது.
மழை இப்போதும் தூறிக்கொண்டு தான் இருந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு டி உங்க ஊரு… எப்பவும் இப்படி மழை பெய்யுமா?”
“இந்தச் சீசன்ல இப்படித்தான் இருக்கும். ஆனா தினமுமே இப்படி இருந்தாலும் வெளி வேலைக்குப் போறவங்களுக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என்றதும் யாதவிக்கு நிதர்சனமும் புரிந்தது.
ரேகா வீட்டில் அவள் மாமனார் மாமியார் எனக் கூட்டுக் குடும்பம் அவர்களுடையது. இவர்கள் சென்ற போது, அவள் கணவன் வெளியே செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தான். ரேகா உணவுப் பரிமாற உண்டுவிட்டு யதாவியிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டான்.
ரேகாவின் மாமியாருக்கு இவள் வந்தது பிடிக்கவில்லை என்று அவரது உடல்மொழியே காட்டிக் கொடுத்தது.
ரயிலிலேயே பல் துலக்கி, முகம் கழுவி, தலைவாரி வந்ததால்…ரேகாவின் வீட்டில் காலை உணவை அருந்தியவள், அப்போதே அவளுக்குப் பார்த்திருக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல… ரேகா அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
வரும் போது வந்த முக்கியச் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த சாலையில் சென்றனர். இங்க பஸ் கைகாட்டினா எங்க வேணா நிறுத்துவாங்க. நீ ஆபீஸ் போகும் போது, இந்த ரோடு முனையில நின்னு ஏறிக்கோ… அவ்வளவு தூரம் நடக்க வேண்டாம் என்று ரேகா சொல்ல… ஆமாம் நானும் தினமும் எப்படி இவ்வளவு தூரம் நடக்கிறதுன்னு நினைச்சேன்.” என்றால் யாதவி.
“எங்க தெருவுல தான் வீடு தேடினேன். ஆனா கிடைக்கலை. எங்க தெருவை விட இந்தத் தெரு இன்னும் பாதுக்காப்பானது. இங்க இருக்கவங்க எல்லாம் ரொம்ப வருஷமா இங்கதான் இருக்காங்க. அதனால ஒன்னும் பயப்படாத.”
“நீ இருக்கப் போற வீட்ல, கீழே பெரிய ஸ்கூல்ல வேலைப் பார்க்கிற டீச்சரும், அவங்க வீட்டுகாரரும் இருக்காங்க. அந்தச் சாரும் வாத்தியார் தான். அவங்க பையன் வெளிநாட்டில் இருக்கான். அதனால உனக்கு ரொம்பப் பாதுகாப்புதான்.”
பேசியபடி இருவரும் யாதவிக்குப் பார்த்திருக்கும் வீட்டிற்கு வர… இவர்கள் கேட் திறந்த சத்தத்தில் நடுத்தர வயது பெண்மணி எட்டிப்பார்த்தார். ரேகாவை அடையாளம் தெரிந்து இரும்பு கதவை திறந்து கொண்டு வந்தார்.
“இவங்க தான் உன் ப்ரண்டா?” என்றவர்,வீட்டிற்குள் சென்று சாவி கொண்டு வந்து கொடுக்க… தோழிகள் இருவரும் மேலே இருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏற்கனவே வீட்டு அட்வான்ஸ் எல்லாம் ஆன்லைன் மூலம் அனுப்பி இருந்தாள். அதுவும் ரேகாவின் குடும்பத்தை அந்த டீச்சருக்கு தெரியும் என்பதால்… அதிக கேள்விகள் கேட்கவில்லை.
மேலே ஏறியதும் முதலில் பெரிய வராண்டா இருந்தது. சுற்றிலும் கிரில் இருக்கப் பாதுக்காப்பானது தான். அந்த இரும்பு கேட்டை திருந்து கொண்டு சென்றால்… கிழக்கு திசையை நோக்கி மரக்கதவு இருந்தது.
ஹால், சமையல் அறை மற்றும் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. துணிக் காயப் போட என எல்லாவற்றிற்கும் முன்பக்க வராண்டாவைத்தான் உபயோகிக்க வேண்டும். வேறு ஏதும் பால்கனி இல்லை. ஒருவகையில் வேறு பால்கனி இல்லாதது நல்லது என்றும் தோன்றியது. பாதுகாப்பு தானே முக்கியம்.
“உனக்கு வீடு பிடிச்சிருக்கா?”
“ரொம்ப நல்லா இருக்கு.”
“உனக்குத்தான் பிடிக்குமான்னு கவலையா இருந்தது. சரி டி நான் கிளம்பட்டுமா? நான் போய்த் தான் சமைக்கணும். அப்புறம் வந்து வேணா உனக்குச் சாமான் அடுக்கி தரேன்.”
“கொஞ்சம் சாமான்கள் தான். அதை அடுக்க எவ்வளவு நேரம் ஆகப் போகுது. நீ வர வேண்டாம் நானே பார்த்துக்கிறேன்.”
“மதியத்துக்கும் ராத்திரிக்கும் சேர்த்து சாப்பாடு நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்.” என்றவளிடம்,
“இங்க பாரு ஆத்திர அவசரத்துக்கு நான் உன்னைத்தான் கூப்பிடுவேன். ஆனா அதுக்காகச் சும்மா உனக்குத் தொந்தரவு கொடுக்க முடியாது. இங்க ரோட்டு முனையிலேயே ஹோட்டல், கடை எல்லாம் இருக்கு. நான் தேவையானது வாங்கிப்பேன். தனியா இருக்கிறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை. எனக்கு என்னைப் பார்த்துக்க முடியும்.”
ரேகாவுக்கும் யாதவியைப் பற்றித் தெரியும். ஏற்கனவே இவள் வந்தது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரியும். மேலும் எதாவது செய்து தோழிகள் இருவருக்கும் இருக்கும் நல்லுறவையும் கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. ஆத்திர அவசரத்திற்கு அவள்தான் இருக்கிறாள் யாதவிக்கு.
“சரி ஏதாவதுன்னா போன் பண்ணு. நானும் ப்ரீயா இருக்கும் நேரம் வந்து பார்த்துக்கிறேன். என் வீட்டுகாரர் நம்பரும் உனக்கு அனுப்பி இருக்கேன். எந்த நேரம்னாலும் கூப்பிடு.” என்றுவிட்டு சென்றாள்.
ரேகா சென்றதும் யாதவி அப்படியே ஹாலில் தரையில் உட்கார்ந்து விட்டாள்.
சற்று நேரத்தில் கைபேசியின் அழைப்பு வர… எடுத்து பேசியவள், “நான் வந்துட்டேன். அதே விலாசம் தான். சீக்கிரம் வாங்க.” என்றாள்.
சாமான்கள் வருவதற்குள் கடைக்குச் சென்றுவிட்டு வரலாம் என நினைத்தவள், கைப்பை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு, தெருமுனை வரை சென்று, அங்கிருந்த கடையில் பால், தயிர், அதோடு கொஞ்சம் வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு மட்டும் வாங்கிக் கொண்டு வந்தாள்.
லிங்கா குளித்துவிட்டு வர, அவனைப் பார்க்க யாரோ வந்திருப்பதாகச் சொல்ல… வெளி வராண்டாவுக்குச் சென்றான். அங்கே அவனுக்காக சிலர் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை முன்பக்கம் இருக்கும் தன் அலுவலக அறைக்கு அழைத்து சென்று பேசினான்.
“எப்படி இருக்கீங்க தம்பி?” நல்லா இருக்கேன் என்றவன் உள்ளே சென்று அவர்களுக்கு குடிக்க டீ கொண்டு வந்து கொடுத்தான்.