“எதுக்குடி ஒரு நிமிஷம்… ஒரு சீரியல் பார்க்க நிம்மதியா விடறிங்களா, அடுத்து ஏதாச்சும் பஞ்சாயத்து கொண்டு வந்திருக்கியா என்ன… நேத்து காலைல சென்னை கிளம்பிப் போனவ இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வர்ற… ஹால்ல உக்கார்ந்திருக்கிற என்னை மதிச்சு ரெண்டு வார்த்தை பேசுனியா… யாரோ உக்கார்ந்திருக்கிற போல கண்டுக்காம உள்ள போற, எல்லாம் உன் மாமா கொடுக்கிற இடம், என்னத்த சொல்லுறது, நம்மளை மதிக்க யாருமில்லை…” அவர் புலம்பிக் கொண்டே இருக்க சட்டென்று காலில் விழுந்தாள் பாரதி. பதறிப் போனவர் தனது எம்பது கிலோ உடம்பை தூக்கிக் கொண்டு வேகமாய் எழுந்தார்.

“ஏய், என்னடி பண்ணற… எதுக்கு என் கால்ல விழற…”

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கத்தை…”

“எதுக்கு ஆசிர்வாதம், எங்களுக்குத் தெரியாம யாரையாச்சும் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டியா…?”

“ஐயோ அத்தை, எனக்கு வேலை கிடைச்சிருச்சு… அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க முடியாது, நீங்களும் எனக்கு அம்மா போலதானே… அதான், உங்க கால்ல விழுந்தேன்…” பாரதி சொல்லவும் சட்டென்று திகைத்துப் போனார் அஷ்டலட்சுமி.

“எ..என்ன சொன்ன…? நான் உனக்கு அம்மா போலவா…?”

“பின்ன இல்லியா அத்த, என் அம்மாவை விட நீங்கதானே நான் சென்னைக்குப் போயிட்டு, வர வரைக்கும் கவலைப் பட்டீங்க, எனக்கு வேலை கிடைக்கலைன்னு வருத்தப்பட்டே இருந்தீங்க… ஆசிர்வாதம் பண்ணுங்கத்தை…” எனவும் சரியாய் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் மாமா கோபால கிருஷ்ணன்.

“என்னடா பாரும்மா, எதுக்கு ஆசிர்வாதம்…? அதும் உன்னைக் கரிச்சுக் கொட்டிட்டே இருக்கிற உன் அத்தை கிட்ட…?”

“அதானே, அவ நல்லாப் பேசினாலும் உங்களுக்குப் பொறுக்காதே… சரி, சரி… இப்படி வந்து நில்லுங்க, ரெண்டு பேருமா வாழ்த்துவோம்…” என்றார்.

“அளவோட பேசி வளமோட வாழுடிம்மா… நல்லாரு, எழுந்திரு…” அஷ்டலட்சுமி சொல்ல மனைவியை நோக்கிப் புன்னகைத்தவர், “வாழ்த்துறது கூட இப்படிதான் உன்னால சொல்ல முடியுமா…?” என்பது போல் பார்த்தாலும் தேவை இல்லாமல் புதிதாய் ஒரு பிரச்னைக்கு கமா போட வேண்டாமென்று நினைத்து பாரதியிடம் திரும்பினார்.

“என்னடாம்மா, உனக்கு வேலை கிடைச்சிடுச்சா… நல்லா இருடாம்மா…” என்ற மாமாவிடம் சந்தோஷமாய் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை நீட்டினாள் பாரதி.

“ஆமா மாமா… சென்னைல ஒரு பெரிய கம்பெனில மார்க்கெடிங் ஜூனியர் ஆபீசரா வேலை, இருபதாயிரம் சம்பளம், மூணு மாசம் டிரெயினிங் முடிஞ்சு பர்மனன்ட் ஆனதும் முப்பதாயிரம் சம்பளம்…” என்றாள் புன்னகையுடன்.

“அடடே, ரொம்ப நல்ல விஷயமாச்சே… உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்…” என்றார் மகிழ்ச்சியுடன்.

“ம்ம்… சின்னவளுக்கு வேலை கிடைச்சது இருக்கட்டும், இன்னைக்கு அந்தத் திலகா வந்து எப்படிக் கத்தினா தெரியுமா…?” என சக்தி முகம் வாடி குனிந்து கொண்டாள்.

“எப்ப சக்தியை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க… இப்படி அவன் காத்திட்டே இருந்தா டைரக்டா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்… அவன் என்னமோ ஊரு உலகத்துல பொண்ணு இல்லாத போல மாமன் மகளைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்கறான்… இவ என்னாடான்னா படுக்கைல கிடக்கற அம்மாவுக்கு சேவை பண்ணிட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறா… நீங்களும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பற ஐடியாவே இல்லாம, பேச்சே எடுக்காம இருக்கீங்க… இப்படியே இருந்தா எப்பதான் இதுக்கு ஒரு முடிவு வரும்… ஒண்ணா, சீக்கிரம் கல்யாணத்தை வைக்கணும், இல்லன்னா நான் வெளிய பொண்ணு பார்த்து, என் மகன் கைல கால்ல விழுந்தாச்சும் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடுவேன்னு மிரட்டுற போல சொல்லிட்டுப் போறா…” படபடப்பாய் சொல்லி முடித்தார் அஷ்டலட்சுமி.

“ம்ம்… திலகா சொன்னதுல தப்பெதுவும் இல்லையே… ஒரு பையனைப் பெத்த அம்மாவா ஆதங்கத்துல கொஞ்சம் சுருக்குனு வார்த்தைய விட்டுட்டுப் போயிருக்கா… நாம இன்னும் இதைப் பேசி முடிக்காம தாமதிக்கிறதும் தப்புதான்…” என்றார் கோபால கிருஷ்ணன்.

சக்தி அமைதியாய் கண்ணீருடன் நிற்க, “மாமா… நான் ஒண்ணு சொல்லலாமா…?” என்றாள் பாரதி.

“என்னடா சொல்லு…”

“மாமா, மூணு மாசம் நான் ஹாஸ்டல்ல இருந்து வேலைக்குப் போயிட்டு, பர்மனன்ட் ஆனதும் சென்னைல ஒரு வீடு பார்த்து அம்மா, அக்காவை அங்கே அழைச்சிட்டுப் போயிடறேன்… அம்மாவைப் பார்த்துக்க யாரையாச்சும் ஏற்பாடு பண்ணிக்கலாம், அக்காவுக்கு கடன் வாங்கியாவது கல்யாணம் பண்ணிடலாம் மாமா… அந்தக் கடனை நான் வேலைக்குப் போயி அடைச்சுக்கறேன்…” என்றாள்.

அஷ்டலட்சுமி திகைப்புடன் பாரதியைப் பார்க்க, அவள் தோளில் சிநேகமாய் தட்டி புன்னகைத்த கோபால், “பாரும்மா, உன் கூடப் பிறந்தவளுக்கு உன்னால முடிஞ்சதை செய்யணும்னு நீ நினைக்கறது நல்ல விஷயம் தான்… நான் அதைத் தப்பு சொல்ல மாட்டேன், அதுக்காக, என் கூடப் பிறந்தவளை நான் சிரமப்படுத்த விரும்பலை… அவளைப் பார்த்துக்கற பொறுப்பு எனக்கும் இருக்கு தானே… சக்தி கல்யாணத்துக்கு நான் வேற யோசனை பண்ணி வச்சிருக்கேன், அதான் இவ்ளோ நாளா அமைதியா இருந்தேன்… ஒரு சீட்டு போட்டிருக்கேன், அதை எடுத்து அவ கல்யாணத்தை முடிச்சுடலாம்…” என்றவர் அஷ்டலட்சுமியை தயக்கத்துடன் பார்க்க முறைத்தார் அவர்.

“இப்ப எதுக்கு என்னைப் பாக்கறீங்க… நான் அந்த சீட்டுப் பணத்துல சக்தி கல்யாணத்தை நடத்த வேண்டாம்னு சொல்லிடுவேன்னு பார்க்கறிங்களா… அந்த அளவுக்கு ஒண்ணும் நான் கொடுமைக்காரி இல்லை… எப்படி இருந்தாலும் இவங்க குடும்பத்தை நம்ம தோள்ல ஏத்திட்டோம், அப்ப இவங்க கல்யாணமும் நம்ம பொறுப்பு தான… கொஞ்சம் சிம்பிளா கடன் வாங்காத அளவுல கல்யாணத்தை முடிச்சு வச்சிடலாம்… தேவிகாவை சென்னைக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம், முன்னப் பின்னத் தெரியாத ஆளுங்களை எல்லாம் நம்பி விட முடியாது… அவளை நான் பார்த்துக்கறேன், முடியலேன்னா பக்கத்து வீட்டு ராணியை அழைச்சுக்கறேன்… இவ ஹாஸ்டல்ல இருந்தே வேலைக்குப் போகட்டும், வாரவாரம் இங்க வந்து அம்மாவைப் பார்த்துக்கட்டும்…” என்றார்.

அவர் சொன்னதை மூன்று பேரும் நம்ப முடியாதது போல் ஸ்தம்பித்து கேட்டுக் கொண்டிருக்க, “ஹூக்கும்… எப்பப் பார்த்தாலும் என்னை அரக்கி மாதிரியே பார்க்க வேண்டியது… அப்படி, இப்படி பேசுவேன் தான், அதுக்காக இவங்க மேல எனக்கு அக்கறை இல்லன்னு ஆயிடுமா… மூணு பேரும் வாய்க்குள்ள ஈ போறது கூடத் தெரியாம ஆன்னு பார்க்காதீங்க… சக்தி, மாமாவுக்கு காபி போட்டுக் குடு…” அதிகாரமாய் சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே செல்ல பிரமிப்பு மாறாமலே மாமாவைப் பார்த்தாள் பாரதி.

“மாமா…! அத்தை நல்லவங்களா, கெட்டவங்களா…?”

“எனக்கும் புரியலையேமா, ஏதாச்சும் போதி மரத்தடியில போயி உக்கார்ந்துட்டு வந்தாளோ, என்னவோ…? திடீர் ஞானோதயம் வந்திருக்கு… எப்படியோ நல்லா இருந்தா சரிதான்… சக்திமா, காபி…” என்றதும், “இதோ தரேன் மாமா…” என்றவள் சந்தோஷமாய் அடுக்களைக்கு சென்றாள்.

“சரி மாமா, நானும் பிரஷ் ஆகிட்டு வரேன்…” சொன்ன பாரதி அவளது அறைக்கு சென்று மொபைலை சார்ஜரில் குத்திவிட்டு மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

குளிக்கும்போது மொபைல் ரிங் ஆகும் சத்தம் கேட்க, “வானுகிட்ட ரீச் ஆயிட்டோம்னு கல்பனாவுக்கு சொல்ல சொன்னமே, சொல்ல மறந்துட்டா போலருக்கு…” என நினைத்தவள் நிதானமாய் குளித்து வந்து போனை எடுக்க அதில் புதிய ஏதோ நம்பர் இருந்தது.

“யாரா இருக்கும்…?” யோசிக்கும்போதே அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ…”

“ஹலோ, மிஸ் பாரதியா…?” என்றது கம்பீரக் குரல் ஒன்று.

“இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறோமே…” என நினைத்தபடி, “எஸ், பாரதிதான்… நீங்க யாரு…?” என்றாள்.

“நா..நான் ரிஷி பேசறேன்…” அவனது குரல் தயங்கி பின் ஒலிக்க, “சொல்லுங்க…” என்றாள்.

“உங்க பிரண்ட் கல்பனாகிட்ட பேசினேன், உங்களைப் பத்தி நிறைய விஷயம் பெருமையா சொன்னாங்க, கேட்கவே சந்தோஷமா இருந்துச்சு… அவங்ககிட்ட உங்க நம்பர் வாங்கினேன், உங்களுக்கு டிஸ்டர்ப் இல்லேன்னா ரெண்டு நிமிஷம் பேசலாமா…” நிதானமாய் கேட்டான்.

“ம்ம், என்ன விஷயம் பேசணும், சொல்லுங்க…”

“முன்னப் பின்னத் தெரியாத உங்ககிட்ட சட்டுன்னு ஐ லவ் யூன்னு சொன்னது கண்டிப்பா தப்பு தான்… அதுக்காக என்னை மன்னிச்சிருங்க, பாரதி…”

“இட்ஸ் ஓகே மிஸ்டர் ரிஷி, மன்னிச்சுட்டேன் விடுங்க…”

“ரொம்ப தேங்க்ஸ் பாரதி… ஆனா, அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்… இப்பதான் உங்களைப் பத்தி எனக்குத் தெரியுமே, இனி ஐ லவ் யூ சொல்லறதுல தப்பில்லையே… சோ, ஐ..லவ்..யூ ரதி…” ரிஷி நிறுத்தி நிதானமாய் சொல்ல இதயம் தொண்டைக்குள் துடிப்பது போல் உணர்ந்தாள் பாரதி.

என் அத்தனை

தைரியங்களும்

உன் ஒற்றைப்

புன்னகையின் முன்

மண்டியிட்டுக்

கொள்கின்றன…

நீ என் மனசாட்சியா…

என் மனதில்

உன் அரசாட்சியா…