அத்தியாயம் – 25

அவர்களைக் கண்டதும் வேகமாய் அருகே வந்த கிருஷ்ணா, “சார்… அந்த அந்தகன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு… நடந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் யுவராஜோட தம்பி குருராஜ் தான்…” என்றார் பதட்டமாக.

“உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது, வர்ஷா சொன்னாளா…?”

“இல்ல சார், யுவா தான் கால் பண்ணினார்… உடனே நம்மளைக் கிளம்பி அவங்க வீட்டுக்குப் பின்னாடி உள்ள காலி குடோனுக்கு வர சொன்னார்…” கிருஷ்ணா சொல்லவும் அஜயும், கோகுலும் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர்.

“இப்ப யுவா எங்கே…?”

“அநேகமா அந்த குடோன்ல தான் இருப்பார்னு நினைக்கிறேன், கால் பண்ணறேன்…” சொன்னவர் அலைபேசியை எடுத்து யுவாவுக்கு அழைக்க அவன் உடனே லைனில் வந்தான்.

“சார், நான் குடோன்ல தான் இருக்கேன், எங்க வீட்டு பின்பக்கம் உள்ள காம்பவுண்ட்ல சின்னதா ஒரு கேட் இருக்கும், அதைத் திறந்தா குடோனுக்கு வந்திடலாம், சீக்கிரம் வாங்க…”

“யுவா, உங்க பேரன்ட்ஸ் யாரும் வீட்டுல இல்லியா…?”

“இல்ல சார், அவங்க ஒரு கல்யாணத்துக்கு மகாபலிபுரம் போயிருக்காங்க, நீங்க முன் கேட்டைத் திறந்து உள்ளே வாங்க, சீக்கிரம்…” சொன்னவன் அழைப்பைத் துண்டிக்க அவர்கள் பேசுவதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த மூவரும் வாசலில் இருந்த பெரிய கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தனர். வீட்டைச் சுற்றி பின்பக்கம் வந்து சற்று ஓரமாய் இருந்த சின்ன இரும்புக் கதவைத் திறக்க அந்தப் பெரிய குடோனின் பின்பக்கம் தெரிந்தது.

யுவராஜ் பரபரப்புடன் காத்திருந்தான்.

“வாங்க சார்…”

“மிஸ்டர் யுவா, உங்க தம்பி எங்கே…?”

“சார், உள்ள தான் கட்டிப் போட்டிருக்கேன்…” சொன்னவன் குடோனுக்குள் செல்ல மூவரும் தொடர்ந்தனர். அந்தப் பெரிய குடோனில் அங்கங்கே பழைய தட்டு முட்டு சாமான்கள் நிறையக் கிடந்தது.

“இவ்ளோ பெரிய குடோனை யூஸ் பண்ணறதில்லையா…?”

“ஒரு எலக்ட்ரிகல் ஷாப்புக்கு வாடகைக்கு கொடுத்திருந்தோம் சார், ரெண்டு மாசம் முன்னாடி அவங்க காலி பண்ணிட்டாங்க, எங்களுக்கு வீட்டுல கொஞ்சம் ரீ ஒர்க், பெயின்டிங் வொர்க் இருந்ததால சாமான் எல்லாம் போட இதை யூஸ் பண்ணிட்டு அப்புறம் வாடகைக்கு கொடுத்துக்கலாம்னு அப்பா சொல்லிருந்தார், அதனால இப்போதைக்கு பழைய சாமான் எல்லாம் போட்டு வச்சிருந்தோம்…” என்றான் யுவா.

“ம்ம்…”

“இந்த ரூம்ல உள்ள பொருள்களைப் பாருங்க, சார்…” சொன்னவன் சாத்தியிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து சுவரில் இருந்த லைட்டைப் போட்டான்.

அது முணுக் முணுக்கென்று பாட்டரி குறைந்த டார்ச் லைட் போல் சிணுங்கிக் கொண்டே எரிய, “இங்கே பாருங்க சார்…” என்றான். அந்த அறை முழுதும் இருந்த பொருட்களைக் கண்டவர்களின் விழிகள் வியப்பில் விரிந்தது.

ஒரு பக்க ரேக் முழுதும் ஐநூற்றுக்கும் மேலான ராகேஷ் குமார் எழுதிய கிரைம் நாவல்கள் வரிசையாய் தெரிய, ஒரு பெரிய மேஜை மீது கறுப்புப் பெயின்ட், ஜிகினா பேப்பர், குட்டியும் பெரிதுமாய் இரண்டு பெயின்டிங் பிரஷ், வாடிய ரோஜாப் பூக்கள், கண்டதும் திகிலடைய வைக்கும் ஹாரர் மாஸ்க் நான்கைந்து வரிசையாய் ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது.

இவற்றோடு அழகாய் செவ்வக வடிவத்தில் ஒரே அளவில் வெட்டப்பட்ட விசிட்டிங் கார்டு தடிமனில் இருந்த அட்டைகளோடு அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம் எருமை மாட்டின் மீது அமர்ந்திருந்த போட்டோ ஒன்றும் இருந்தது. அதற்குக் கீழ் ‘அந்நியன்’ என பிரின்ட் செய்திருந்த எழுத்துக்கள் அடிக்கப்பட்டு ‘அந்தகன்’ என எழுதி இருக்க அருகே நேசிகா, அரவிந்த், இதயாவின் புகைப்படம் ஒட்டி வைக்கப்பட்டு கறுப்பு ரோஜா வைக்கப்பட்டு இருந்தது. எல்லாவற்றையும் அதிர்ச்சியுடன் நோக்கியவர்கள்,

“யுவா, இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் யாருடையது…?”

“இதெல்லாம் என் தம்பி குருராஜ் படிக்க வாங்கின புத்தகங்கள்… யாருக்கும் தெரியாம இந்த குடோனை யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கான்…” என்றான் வருத்தமாக.

“அவரை எங்கே கட்டிப் போட்டிருக்கிங்க…?” என்றான் அஜய்.

“ஆப்போசிட்ல உள்ள ரூம்ல கட்டி வச்சிருக்கேன் சார், வாங்க…” என்றவனைப் பின்தொடர்ந்து மூவரும் அந்த அறையின் எதிரில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். ஓரமாய் இருந்த மர நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவனை கண்டதும் திகைத்தனர்.

அப்படியே அச்சு அசலாய் யுவாராஜின் ஜெராக்ஸ் போல இருந்தான் குருராஜ். யுவராஜை விட சற்று நிறமாய், கண்கள் சிவந்து முகம் நிறைய வெறுப்போடு வெறி பிடித்த நாய் போன்ற பார்வையின் சீற்றத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனை வியப்புடன் பார்த்தனர் மூவரும்.

“டேய் துரோகி, தம்பின்னு கூடப் பார்க்காம என்னைக் காட்டிக் கொடுத்துட்டல்ல… நான் அந்தகன் டா, உன் சாவு என் கைல தான்… உனக்கும் குருதி இல்லா மனிதன்னு ஒரு மரண ஓலை எழுதி வச்சிருந்தேன், நீ எனக்கு முந்திகிட்டு போலீசைக் கூட்டிட்டு வந்திட்டியா…” என்றான் கோபத்துடன். அஜயும் மற்றவர்களும் அவனைப் பார்த்தபடி நிற்க அவர்களை நோக்கித் திரும்பினான் குருராஜ்.

“என்ன…? கடைசி வரைக்கும் என்னைக் கண்டு பிடிக்க முடியாம உங்களுக்கு நல்லாத் தண்ணி காட்டினேனா, இப்பக் கூட, இந்த கூடப் பொறந்த நாய் போட்டுக் கொடுக்கலேன்னா இன்னொரு கிரைம் நாவலுக்கு ஸீன் ரெடி பண்ணிருப்பேன், துரோகி…” என்றவன் பல்லைக் கடித்துக் கொண்டு கண்ணில் குரோதம் வழிய அண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“யுவா, உங்க தம்பிக்கு என்னாச்சு, பார்த்தா நார்மலான ஆளு போலத் தெரியலியே…” அஜய் கேட்க யுவராஜ் சற்று வேதனையுடன் பார்த்தான்.

“ஆமா சார், அவனுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை, அப்பப்ப வெறி பிடிச்ச போல நடந்துப்பான்… எப்பவும் யாராச்சும் கூடவே இருந்து பார்த்துக்கணும், அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு ஒரு கல்யாணம் அட்டன்ட் பண்ண மகாபலிபுரம் போனதால நான்தான் கூட இருந்தேன்… இவன் புக் படிச்சிட்டு இருக்கான்னு அப்படியே தூங்கிட்டேன்… எழுந்து பார்த்தா ஆளைக் காணோம், வீட்டுல தேடிட்டு பின் பக்கம் வந்தப்ப குடோன் கதவு திறந்திருந்துச்சு, அதோட குடோன்ல யாரோ சத்தமா சிரிக்கிற போலவும் தோணுச்சு… நான் மெதுவா பின்பக்க ஜன்னல் வழியாப் பார்த்தேன்… இவன் அந்த போட்டோக்களுக்கு கறுப்பு பெயின்ட் அடிச்ச ரோஜாவை வச்சு சேர்ல உக்கார்ந்து சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்தான், அதுல என் நேசிகா போட்டோவும் இருந்துச்சு… எனக்கு பார்த்ததும் பக்குன்னு ஆயிருச்சு, அமைதியா அவன் செய்யறதை கவனிக்கவும் நாம தேடிட்டு இருக்கிற அந்தகன் இவன்தான்னு புரிஞ்சது… உடனே சாருக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்… மெதுவா குடோனுக்குள்ள வந்து அவன் கவனிக்காத நேரத்துல கயித்தை எடுத்து அப்படியே அவன் உக்கார்ந்திருந்த சேரோட சேர்த்து கட்டிப் போட்டுட்டேன், அவன் திணறிட்டு என்னை அடிக்க வந்தான்… கெஞ்சிப் பார்த்தான், இருந்தாலும் விடலை…” என்றான்.

“ம்ம்… நல்ல வேலை பண்ணினீங்க, ” கிருஷ்ணா சொல்ல எங்கேயோ பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான் குருராஜ்.

“வேஷக்காரங்க… எல்லாரும் வேஷக்காரங்க, நேசம்கிற பேருல நடிச்சு துரோகம் பண்ணுற துரோகிங்க… ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன், துரோகிங்களைக் கொல்லறதுக்கு தான் அந்தகன் நான் இருக்கேன்…” அவன் கண்கள் எங்கோ நிலைத்திருக்க ஒருவித குரூரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான் குருராஜ்.

“இவருக்கு என்னாச்சு…? எப்படி மனநிலை சரியில்லாமப் போச்சு…” அஜய் கேட்க யுவா வருத்தத்துடன் சொல்லத் தொடங்கினான்.

“அதைப் பத்தி எங்களுக்கே சரியாத் தெரியாது சார்… இவனுக்கு சின்ன வயசுல இருந்தே சின்னச் சின்ன உயிர்களை சித்திரவதை செய்து அதைத் துள்ளத் துடிக்கக் கொல்லப் பிடிக்கும்… அப்புறம் பெரியவனாகி காலேஜ் போகத் தொடங்கவும் அந்த சுபாவம் எல்லாம் மாறிடுச்சுன்னு தான் நினைச்சோம்… ஆனா இவன் லவ் பண்ண பொண்ணு கிட்ட கொஞ்சம் மூர்க்கத் தனமா நடந்திருப்பான் போலருக்கு, அது அந்தப் பொண்ணுக்குப் பிடிக்காம பிரேக்கப் பண்ணிட்டு,  உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லி, இவனோட பணக்கார நண்பனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போயிருச்சு… அதுல இருந்து இவன் யாரோடவும் சரியாப் பேச மாட்டான்… போதை மருந்தும் யூஸ் பண்ணத் தொடங்கி ஒழுங்கா காலேஜுக்கும் போகாம ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தான்… நாங்க எதுவும் சொன்னாலும் கேட்க மாட்டான், கோபத்துல வீட்டுல வளர்த்தின நாயைக் கொன்னுட்டான்… அதுல இருந்து அப்பா எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுட்டார், என்ன யோசிக்கறான், ஏன் இப்படி இருக்கான்னு எங்களுக்குப் புரியலை… அப்பதான் ஒருநாள் காலேஜுக்குப் போறேன்னு கிளம்பினவன் அவனுக்கு துரோகம் பண்ண பொண்ணையும், நண்பனையும் மொட்டை மாடிக்கு பேசணும்னு வர சொல்லி அவங்களைக் கீழே தள்ளிவிடப் பார்த்தான்… எப்படியோ அவங்க சுதாரிச்சிட்டதால யாருக்கும் எதுவும் ஆகலை… இவன் பிரண்டு போலீஸ்ல கேஸ் கொடுக்கப் போனப்ப காலேஜ்க்கு கெட்ட பேரு வரும்னு சொல்லி மேனேஜ்மென்ட் தடுத்து, இவனுக்கு வார்ன் பண்ணி டீசி கொடுத்து அனுப்பிட்டாங்க… அப்புறம் இவனுக்கு ஒரு மனநல மருத்துவர்கிட்ட ட்ரீட்மென்ட் தொடங்கினோம், நார்மலா இருக்கிற போல எல்லாமே பண்ணிட்டு இருப்பான்… சட்டுன்னு கோபம் வந்து எல்லாரும் துரோகிங்க, நேசம் எல்லாம் வேஷம்னு கத்திட்டு கைல கிடைக்கற பொருளை எடுத்துப் போட்டு உடைப்பான், அவனே கையைக் காலை கிழிச்சுக்குவான்… சின்ன வயசில இருந்தே அவனுக்கு RK கிரைம் நாவல்னா ரொம்பப் பிடிக்கும், அதனால அவர் கதைகளை வாங்கி வந்து கொடுத்தா படிச்சிட்டு அமைதியா இருப்பான்… ஆனா, அந்தக் கதைகளில் வரும் கொலை சீன்களை மண்டைக்குள்ள ஏத்திட்டு அந்த ஸ்டைலயே கொலை பண்ண யூஸ் பண்ணுவான்னு நினைக்கலை…” வேதனையுடன் சொல்லி நிறுத்தினான் யுவா.

பொறுமையாய் அவன் சொல்லுவதைக் கேட்டு நின்ற மூவரும் குருராஜ் மீது பரிதாபமாய் ஒரு பார்வையை செலுத்த அவன் இவர்கள் பேசுவதை கவனிக்காமல் வேறு ஏதோ வாய்க்குள் உளறிக் கொண்டிருந்தான்.

“நான் அந்தகன்… நேசம்னு வேஷம் போடுறவங்களைக் கொல்லப் பிறந்த அந்தகன்…” என லேசாய் காதில் விழுந்தது.

“ம்ம்… நீங்க சொல்லுற போல இவருக்கு மனநிலை சரியில்லாம கொலை பண்ணுறதா இருந்தாலும் இவரை லவ் பண்ணின அந்தப் பொண்ணைத்தானே கொல்லனும்… எதுக்கு மத்தவங்களைக் கொலை செய்யணும்…?” அஜய் கேட்க யுவா சொல்லத் தொடங்கினான்.

“நானும் இதை யோசிச்சேன் சார்… அதுக்கான காரணம் எனக்கு சரியாத் தெரியலை… ஒருவேளை, நேசிகாவை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணப் போறது பிடிக்காம அவளைக் கொன்னிருக்கலாம், மத்தவங்களை எதுக்கு கொல்லணும்னு சரியாப் புரியலை…” என்றான் யுவா.

“அதுக்கான பதிலை நான் சொல்லறேன்…” என்ற கிருஷ்ணா,

“வர்ஷா சில விஷயங்களை என்கிட்ட சொன்னா, அப்ப எனக்கு சரியாப் புரியலை, இப்ப புரியுது… அவ பேசினதை ரெகார்டு பண்ணிருக்கேன், கேட்டுப் பாருங்க…” சொன்னவர் அலைபேசியில் அந்த ஆடியோவை ஒலிக்க விட்டார். அதில் கிருஷ்ணாவின் குரலைத் தொடர்ந்து வர்ஷாவின் மெல்லிய குரல் ஒலிக்கத் தொடங்கியது.

“வர்ஷா, யாரு உன்னைக் கடத்தினாங்க, எப்படி அங்கிருந்து தப்பிச்சு வந்தன்னு சொல்ல முடியுமா…”

“ம்ம்…” என்றவள் சொல்லத் தொடங்கினாள்.

“அந்தகன்தான் என்னைக் கடத்தி கொல்லப் பார்த்தான்…”

“அவனை உனக்கு முன்னமே பழக்கம் இருக்கா…? கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா…?”