வெங்கடேசன் புவனேஸ்வரி தம்பதியின் பெண்.. பத்மாவதி. வெங்கடேசனின் தம்பி லட்சுமணன். லட்சுமணன் நிர்மலா தம்பதியின் பிள்ளைகள் சாம்பவி, பார்த்திபன்.
வெங்கடேசன் லட்சுமணன் இருவரும்.. தென்னை விவசாயம்தான். பள்ளி படிப்பு மட்டுமே முடித்தனர். பின் எல்லாம் அந்த காடுதான். எந்த வம்பிற்கும் செல்லாதவர்கள். உழைப்பாளிகள்.. கௌரவமான.. பொறுப்பான.. மனிதர்கள் என பெயர் உண்டு ஊரில்.
பதினாறு வருடத்திற்கு முன்பும்,
ஊரின் முக்கிய கோவில்.. கொடியேற்றி பத்துநாட்கள் திருவிழா தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல்.. ஊரே மாலை நேரங்களில் அங்கேதான் நின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலாங்காரத்தில் சுவாமி மக்களை காண கோவில் விட்டு வெளியே வர.. ஊரே பக்தி பரவசம்தான்.
ஊரின் முக்கிய கட்டளைதாரர்கள் கருணாகரனும், வெங்கடேசன் குடும்பமும். எனவே, மாலையில் சிறப்பு தரிசனம், மாலை மரியாதை என எப்போதும் இருவர் குடும்பமும் வந்து செல்லும் கோவிலுக்கு. இயல்பாக ஊர்காரர்கள் தெரிந்தவர்கள் என பேச்சு எழும் எல்லோரிடமும்.
எப்போதும் பண்ணையம் செய்யும் ஆட்களிடம் ஒரு ஈகோ இருக்கவே இருக்கும். அப்படி பேச்சுகள் பெருந்தன்மையாக இருந்தாலும், ஒரு மேல்பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வர் ஊர் பெரிய தலைகள்.. இது எல்லா இடத்திலும் சகஜம்.
பத்தாவது நாள், தேர்பவனி இன்று. ஊர் கூடி தேர் இழுத்து. தேர் நிலைக்கு வரவே மாலை ஆனது. எனவே மீண்டும் பெண்களும் குழந்தைகளுமாக எல்லோரும் கோவிலில் திரண்டனர்.
மாலையில் வானவேடிக்கைகளும்.. கடைவீதிகளும் களைகட்டியது. குழந்தைகளும், சிறுவர்களுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடிரென என்னமோ சத்தம்.. ஒரு குழந்தை அங்கிருந்த ராட்டினத்திலிருந்து கீழே விழுந்திருந்தது.. என்னவென ஏதோவென அங்கிருந்த ஆண்கள்.. பார்க்க.. அது சாந்திதேவியின் நான்கு வயதான பெண் அக்ஷரா. விளையாட கூட்டி வந்த ஈசன் தன் வயது பசங்களை பார்த்ததும்.. அந்த சின்ன ராட்டினத்திலிருந்து குதித்து.. கீழே இறங்கி, தன் நண்பர்களுடன் பேச தொடங்கிவிட்டான், அருகில் நின்று. அப்போது அவன் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
அப்போது தன் மாமா இறங்கியதை பார்த்து.. அக்ஷராவும் தாவி கீழே குதிக்க எத்தனிக்க.. அருகில் இருந்த பார்த்திபன் அவளை பிடித்தக் கொண்டான். அவனும் ஐந்து வயது பாலகன். அவளை வலுவாக பிடிக்க முடியவில்லை.. திமிரியவள்.. படபடவென அவனின் கைக்கு தப்பி.. மேலிருந்து கீழே விழுந்தாள். அது மர ராட்டினம் எனவே கொஞ்சம் அடி குறைச்சல்.. கைமுட்டியில் ரத்த சிராய்ப்பு.. குழந்தை வீரிட்டு அழ தொடங்க.. இப்போது கூட்டம் கூடியது.
யாரோ ஒருவர் “ஏன் டா தள்ளி விட்ட குழந்தையை” என பார்த்திபனை பார்த்து அதட்ட.. அவன் அழுதுக் கொண்டே தன் தாயை தேடி ஓடினான்.
அங்கிருந்த சங்கர் “யாரு என் மாப்பிளையை மிரட்டுறது.. என்னாங்கடா பிரச்சனை” என தாய்மாமனாக கேள்வி எழுப்ப.. கூட்டம் கொஞ்சம் சூடு கொண்டது.
பதில் சொல்லிக் கொண்டிருந்தது கூட்டம்.. “பிள்ளை விழுந்திடிச்சி..” என சொல்லிக் கொண்டிருந்தது.
பார்த்திபனின் தாய்மாமா சங்கரும் “விடுங்கைய்யா.. பிள்ளைக்கு அடி பட்டிருக்கா.. யாரு புள்ள” என கிட்டே வர..
இப்போது காமாட்சிதேவியின் கணவர்.. குணசேகர் சத்தம் கேட்டு கூட்டத்திற்குள் வந்தார். வந்தவர், யாரோ ஒருவரின் கையிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு.. “என்னாச்சு “ என கேட்க.. பொதுவாக “பார்த்திபன் புள்ளையை தள்ளி விட்டுட்டான்” என கூட்டம் சொன்னது.
குணசேகர் வீட்டு மனிதராக.. “என்ன பிள்ளைய தள்ளி விட்டுட்டு போறான்.. பிடிங்கப்பா ப்பா..” என்றார்.
சங்கர் “அதெல்லாம் இருக்காதுங்க.. குழந்தைங்க.. எதோ..” என்க.
சலசலவென பேச்சு சத்தம் “அதெப்படிங்க சுத்துற ராட்டினத்திலிருந்து தள்ளி விட முடியும், இது வேற யாரோ செய்திருக்காங்க.. இன்னிக்கு அப்படிதான்.. கொஞ்சம் தப்பி இருந்தா நம்ம அய்யா கையே போயிருக்கும். காலையிலிருந்து, தேர் வடம் பிடிக்க.. இவங்க ஆளுங்கதானே முன்ன நின்னாங்க.. அய்யாவை தள்ளி விட்டுட்டு. அவரும் தடுமாறி போயிட்டாரு… நாங்கதான் பிடிச்சோம்..” என எதோ சத்தமாக கூட்டத்தில் இரண்டுபேர் சொல்லினர்.
கூட்டம் இருபக்கமும் பிரிந்துக் கொண்டது சட்டென.. மீண்டும் குணசேகரிடம் “காலையிலிருந்து அவங்க அப்படிதான் நம்மகிட்டயே வம்பிழுக்கிறாங்க… என்னான்னு கேளுங்கண்ணே.. சரியில்லை” என ஆரம்பித்து.
பேச்சுதானே என சங்கர் அசால்ட்டாக பிள்ளையை தொட எத்தனித்தபடி “அதெல்லாம் இல்லைங்க… பாப்பாக்கு என்ன..” என பேச.. இப்போது ஒரு கை, அவரின் கையை தட்டிவிட.. சங்கரின் பக்கமிருந்தவர்கள்.. நாலுபேர் தட்டிவிட்டவனின் சட்டையை பிடித்திருக்க.. சங்கரை கூட்டம் உள்ளே இழுத்துக் கொண்டு தள்ளி நிறுத்தி இருந்தது.
அதற்குள்.. குணசேகர் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்திருக்க.. கூட்டம் கத்திக் கொண்டிருந்தது.
அதை பார்த்து, இரண்டு மூன்று ஊர் தலைகள் சமாதனம் செய்ய வந்தனர்.. பேச்சு ஆரம்பித்த பிரச்சனையை விட்டுவிட்டு.. எதுக்கு சட்டையை பிடித்தான் என வந்து நின்றது.. மன்னிப்பு கேட்க சொல்லுங்க.. என பேச்சு நீண்டது.
வெங்கடேசன் வந்தார் “என்ன ப்பா இது குழந்தைங்க விளையாட்டு” என எதோ பேச.. குணசேகர் “எதுய்யா விளையாட்டு.. சட்டையை பிடிக்கிறதா” என்றார் நேரடியாக.
இப்போது “என்ன..” என எங்கிருந்தோ வந்தவன் “எங்க அண்ணன பார்த்து கை நீட்டி பேசுவீங்களா” என லட்சுமணன் வர.
பொங்கி விட்டது குணசேகர் பக்கம் “எங்க வீட்டு மாப்பிள்ளை அவர்.. யார பார்த்து என்ன சொன்ன” என லட்சுமணன் மேல் பாய்ந்தனர் எல்லோரும்.. இப்படி கைகலப்புக்கு மாறியது, வாய் சண்டை. ஒருவர் விலக்க, மற்றொருவர் மீண்டும் அடிக்க என சற்று நேரத்தில் என்னவென யூகிக்க முடியாதபடி.. சத்தமாக மாறியது அந்த இடம்.
சற்று நேரத்தில் குணசேகரின் சத்தம் மட்டும் ஓலமாக மாறி அந்த கூட்டத்தை அதிர செய்தது. யார் என்ன செய்திருந்தனர் என தெரியவில்லை.. குணசேகர் கீழே விழுந்திருந்தார்.. கண் திறந்திருக்கவில்லை.. அருகில் எதோ கல் இருந்தது.. அவர் மயங்கி இருந்தார்.. என ஊகிக்க முடிந்தது, பக்கவாட்டில் லட்சுமணன் மூச்சு வாங்க நின்றிருந்தார்.
இப்போது மீண்டும் கூட்டம் அலைமோதியது, குணசேகரை ஒரு சாரார் தூக்கிக் கொண்டு ஓட… இன்னொரு கூட்டம் லட்சுமணனை பிடிக்க, லட்சுமணனை சார்ந்தவர்கள்.. அவனை அவர்களிடமிருந்து பிரித்து கூட்டி செல்ல என.. மீண்டும் ஒரு கலவரம்.
ஊர் முழுவதும் இந்த கலவரம் பேசப்பட தொடங்கியது. பெண்கள் குழந்தைகள் கோவிலிருந்து வீடு வந்தனர். குழந்தைகள் சத்தம் இல்லை, சற்று நேரத்தில் அந்த ஊரும் கோவிலும் விரோச் என ஆனது.
வெங்கட் லட்சுமணன் கூட்டம் தங்கள் தோப்பில் அமர்ந்துக் கொண்டது தங்கள் கூட்டத்தோடு. குணசேகருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. இன்னும் போலீஸ் வரவில்லை, வெங்கடேசன் ஆயிரமாவது முறையாக தம்பியை கடிந்துக் கொண்டிருந்தார் ‘ஏன் டா, அவசரபட்ட…’ என.
லட்சுமணன் அப்படியே அமர்ந்திருதார் கல்லாக.. அந்த நேர ஆவேசம்.. கண்மண் தெரியவில்லை என்பார்களே அப்படி, ஒன்றும் புரியாமல் லட்சுமணனின் செய்கை அமைந்துவிட்டது. திரும்ப திரும்ப நடந்ததை யோசிக்கிறார்.. பாவம், ஏதும் கண்முன் விரியவில்லை.. எனவே அண்ணனின் திட்டுகளை அமைதியாக ஏற்றுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அங்கே மருத்துவமனையில் குணசேகரை சேர்ப்பித்துவிட்டனர். வீட்டில் எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை.. கருணாகரன் இன்னும் வீடு வரவில்லை. கருணாகரனுக்கு அப்படி ஒரு கோவம் ‘தன் வீட்டு மாப்பிள்ளை என தெரிந்து எப்படி அவர்கள் கை வைத்தார்கள்..’ என தீரவே இல்லை கோவம். குணசேகரை சென்று பார்க்க வேண்டும் என்பது அடுத்து, இப்போது அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியில் நின்றார் கருணாகரன்.
இரண்டுமணி நேரத்தில் குணசேகரின் தோள்பட்டை மூட்டு இறங்கிவிட்டதென தகவல் வந்தது போனில், அதை சரி செய்வது மிகவும் சிரமம்.. அவர் இனி முன்போல செயல்பட முடியாது என்ற தகவல் வந்துவிட்டது.
கருணாகரனுக்கு மிகவும் அவமானமாக போனது இந்த செய்தி.. தான் எப்படி இதை சும்மா விடலாம் என தோன்ற.. இப்போது, அவர்களை பற்றி அறிய ஆட்களை அனுப்பினார்.
இப்போது தோப்பில்,
கூட்டத்தில் சிலர் “வெங்கடேசா, நீங்க இரேண்டு பேரும் இங்க இருக்க வேணாம் கிளம்புங்க.. பெரியவர் வேற வக்கீலு.. நேரம் பார்த்து ஏதாவது செய்துடுவாங்க.. நீங்க கிளம்புங்க.. நாங்க நாலுபேர் போய்.. நம்ம வக்கீல பார்த்துட்டு என்ன செய்யலாம்ன்னு கேட்டுட்டு வரோம்.. போலீசுகிட்ட பிடிபட்டுட்டா.. அவ்வளவுதான்.. நீங்க கிளம்புங்க” என்றனர்.
சிலர் எங்கே செல்வது.. எப்படி போவது.. என எல்லாம் கூட்டத்தில் பேச.. அதை கருணாகரன் ஆட்கள் பிடித்துக் கொண்டனர்..
அதிகாலை மணி மூன்று. சங்கரின் டாட்டா சுமோவில் இருவர் மட்டும் ஈரோட்டில் உள்ள.. தங்கள் நண்பனின் சாயப்பட்டறை செல்வதாக ஏற்பாடு. அது ஒரு ஓடையை ஒட்டியபடி இருக்கும், பெரிதாக ஆள் நடமாட்டம் இருக்காது, எனவே இரண்டு நாளில், ஏதேனும் வக்கீல் யோசனை சொல்லுவார் அதுவரை இருக்கலாம் என எண்ணி கிளம்பினர்.
செல்லில், தன் மனைவி மக்களிடம் ‘இரண்டு நாளில் வந்திடுவேன்.. சங்கர் பார்த்துப்பான்.. பத்திரமா இருங்க.. பிள்ளைகளை பார்த்துக்கங்க’ எனதான் இருவரும் இறுதியாக குடும்பத்தாரிடம் பேசியது.
வீட்டில், புவனா நிர்மலா இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.. பனிரெண்டு வயதில் பத்மா.. அவளை விட நான்கு வயது சின்னவள் சாம்பவி.. ஐந்து வயதில் பார்த்தி.. என ஒன்றும் புரியாமல் பிள்ளைகள். அந்த குழந்தைகள் எதிரில் அழவும் முடியாமல்.. நடப்பது ஒரு அமானுஷத்தை உணர்த்த.. இரு பெண்களும் தலையசைத்து.. ‘சரிங்க சரிங்க’ என்றனர்.