திகம்பரனின் திகம்பரி அவள் 14

இன்னும் சற்று நேரத்தில் எலெக்ஷன் ரிசல்ட் வெளிவர இருக்க, நரசிம்மன் தைரியத்துடனே இருந்தார். அவரின் தொகுதியில் ஒன்றிரண்டு வாக்கு சாவடி  தவிர மீதி எல்லாம் எண்ணப்பட்டு, அவர் மிகவும் முன்னிலையில் தான் இருந்தார். மீதம் இருக்கும் இடங்களும் அவருக்கு நம்பிக்கை தான். 

“தலைவா.. இந்த முறையும் நீங்க தான் MLA.. ரிசல்ட் வந்து நம்ம கட்சி ஆட்சி அமையற நேரம் நீங்க மினிஸ்டரா பதவி ஏத்துக்க சட்டசபைக்கு உள்ள போக போறீங்க..” கலையசரசு மிகவும் ஆரவாரத்துடன் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.

கட்சி தொண்டர்களும் அவர் வீட்டு வாசல் முன், கட்சி ஆபிஸ் முன் குவிந்து விட்டனர். இரவு போல மொத்த வோட்டு எண்ணிக்கையும் முடிந்து நரசிம்மன் வெற்றி வேட்பாளராக அறிவிக்கபட்டார். அடுத்த நொடியே  பட்டாசு வெடித்து,  ஸ்வீட் கொடுத்து அவரின் வெற்றியை அமளிதுமளி செய்தனர் கட்சியினர். 

நரசிம்மன் கட்சி ஆபிசில் இருந்தவர் மூத்த அரசியல் பிரமுகர்களிடம் பேசிவிட்டு, தொண்டர்களுக்கு இனிப்பு கொடுத்துவிட்டு, நேரே வீட்டிற்கு சென்றார். கங்கா, ஈஷ்வர், மகா உடன் விஷ்ணு குடும்பமும் அங்கு தான் இருந்தனர். 

நரசிம்மன் நேரே ஈஷ்வரிடம் தான் சென்று நின்றார். “வாழ்த்துக்கள்ப்பா..” அவன் வாழ்த்திய நொடி அவனை அப்படியே கட்டி கொண்டார் மனிதர். ஈஷ்வர் ஹாஸ்பிடலில்  வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் தலையில் உள்ள கட்டு எடுக்கபட்டிருந்தாலும் வடு இருந்தது.  

அடுத்து வீட்டில் உள்ள எல்லோரும் வாழ்த்தினர். அன்றிரவு வீட்டில் அவரின் வெற்றியை முன்னிட்டு கட்சி ஆட்களுக்கு தனியே விருந்து ஏற்பாடு செய்திருக்க, வீட்டு ஆட்களுக்கு வீட்டின் தோட்டத்தில் ஏற்பாடாகியிருந்தது. 

அடுத்த மூன்றாம் நாள் நரசிம்மன் கட்சி ஆட்சி அமைத்ததோடு, அவரும் மினிஸ்டராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். மிகவும் வலுவான துறை என்பதால், அவரின் மதிப்பு, மரியாதையும் இன்னும் கூடியது. 

அப்பா மினிஸ்டரானதை முன்னிட்டு பார்ட்டி கொடுக்க சொல்லி ஈஷ்வரை அவனின் நண்பர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.  “இருங்கடா.. இந்த வார கடைசில தரேன்..” சொன்னவன், முதலில் விஷ்ணுவிற்கு தான் அழைத்தான். 

“என்னடா பண்ணலாம் ரொம்ப படுத்துறானுங்க..” அவனிடம் கேட்க, 

“வேறென்ன கூட்டிட்டு போய் பப்ல தள்ளு, அவனுங்க அதை தான் எதிர்பாக்கிறாங்க..” என்றான் அவன். 

“ம்ப்ச்.. அதான் கடுப்பா இருக்கு, லன்ச், அவுட்டிங் ஓகே, இதென்ன..? போடா..” பிடிக்காமல் எரிச்சல் கொண்டான். 

“விடுடா.. இதெல்லாம் தவிர்க்க முடியாது, நானே உனக்கு ஒரு பப் புக் பண்ணி கொடுத்துடுறேன்..” என்றவன், சொன்னது போல புக் செய்து கொடுத்துவிட்டான். 

ஈஷ்வரும் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டவன், நரசிம்மனிடம் சென்று இப்படி என்று சொன்னான். 

“கொடுங்க தம்பி.. பசங்க கலாட்டா எதுவும் செய்யாம இருந்தா போதும், எந்த இடத்திலும் அப்பா பேர் கெட கூடாது, இத்தனை நாள் நான் அப்படி தான் இருக்கேன், அதனால தான் கட்சி என்மேல நம்பிக்கை வச்சு இவ்வளவு பெரிய துறையை நமக்கு கொடுத்திருக்காங்க..” என, 

“புரியுதுப்பா.. அப்படி எதுவும் ஆகாது, நாங்க பார்த்துகிறோம்..” என்றான் மகன்.

“உங்க மேல எனக்கு எப்போவும் முழு நம்பிக்கை உண்டு தம்பி, ஆனா வர பசங்க எப்படின்னு தெரியாது இல்லை, அதுக்கு தான் அப்பா சொன்னேன்..”

“ப்பா.. நீங்க சொல்றது சரி, பார்த்துகிறேன்..” என்றுவிட்டவன், நண்பர்களிடமும் அழுத்தி சொல்லியே பப் அழைத்து சென்றான். விஷ்ணுவும் நேரே அங்கு வந்துவிட, முழு பப் இவர்கள் கண்ட்ரோலில்.

விடியும் வரை ஆட்டம் போட்டவர்களை பத்திரமாக வீட்டில் சேர்க்க ஏற்பாடு செய்த ஈஷ்வர், விஷ்ணு இருவரும் நேரே ஈஷ்வர் வீட்டிற்கு வந்துவிட்டனர். “நான் ஆப்டேர்நூன் கிளம்பிடுவேன்.. நீ தூங்கு..” விஷ்ணு சொல்லி கட்டிலில் விழுக, 

“ஓகே.. அப்போ நீ போகும் போது என்னை  எழுப்பிவிட்டுட்டு போ, லவியை லன்ச்க்கு கூப்பிட்டிருக்கேன்..” என்ற ஈஷ்வர்,  எதற்கும் இருக்கட்டும் என்று அலாரம் வைத்தே படுத்தான். 

விடியும் நேரத்தில் தூங்கியதால்  மாலை  போல தான் ஈஷ்வருக்கு விழிப்பு வந்தது. வேகமாக மொபைல் எடுத்து பார்க்க, ஸ்விட்ச் ஆப். “ஜார்ஜ்ல தானே இருக்கு..” மொபைலை ஆன் செய்ய, மணி மூன்றை கடந்து ஓடி கொண்டிருந்தது. 

பல்லவி  பல முறை அழைத்திருந்தாள். அலாரமும்  அணைத்து வைக்க பட்டிருக்க, விஷ்ணு வேலை என்று புரிந்து பல்லை கடித்தவன், முதலில் பல்லவிக்கு அழைத்தான். அவள் எடுக்கவே இல்லை. 

“போச்சு..” பல்லவியின் கோவம் அதிலே புரிந்தது. திரும்ப அழைத்தவன், அவள் எடுக்க மாட்டாள் என்று புரிய, “சாரி..” மெசேஜ் அனுப்பினான். ம்ஹூம்.. அதற்கும் பதிலில்லை. 

“அங்கேயே இரு.. நான் டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்..” திரும்ப மேசேஜ் செய்ய, 

“வேகமாக பைக் ஒட்டி வரக்கூடாது.. நான் இருக்கேன்..” அதற்கு மட்டும் பதில் மெசேஜ் வந்தது பல்லவியிடம் இருந்து. 

மனதில் அவளை கொஞ்சி கொண்டே அவசர அவசரமாக குளித்து  கீழே வந்தான்.  “வா வா எவ்வளவு நேரம் சாப்பாடு, தண்ணி இல்லாம தூங்கிறது..? முதல்ல சாப்பிடு..” ஈஷ்வர் கீழே வரவும், கங்கா அவனை பிடித்து கொண்டார். 

“ம்மா.. நான் கொஞ்சம் அர்ஜெண்டா வெளியே போறேன், அங்க பார்த்துகிறேன்..” அவன் மறுக்க, 

“என்ன..? அதெல்லாம் முடியாது, அப்பா காலையில இருந்து போன் போட்டுட்டே இருக்கார், ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு, நைட்ல சாப்பிட்டது, எல்லாம் அந்த விஷ்ணுவால தான், அவன் மட்டும் உன்னை எழுப்ப கூடாது சொல்லலைன்னா முன்னேயே உன்னை எழுப்பி சாப்பிட வச்சிருப்பேன்..” அவன் மேல் பொரிந்தார் கங்கா. 

“ம்மா.. ப்ளீஸ்.. நான் கண்டிப்பா அங்க சாப்பிட்டுப்பேன்.. அப்பா கேட்டா சொல்லிடு.. ப்ளீஸ், ப்ளீஸ்..”  கெஞ்சி கொண்டே வெளியே வந்தவன், பைக் எடுத்து பல்லவி இருக்கும் இடம் சென்றான்.

IAS அகாடமி.. போர்ட் தாங்கியிருந்த பில்டிங் முன் நின்றவன், பல்லவியை கூப்பிட போன் எடுக்க அவளே வெளியே வந்தாள். ஹெல்மெட் கழட்டியவன், “சாரிடி.. தூங்கிட்டேன்..” என, அவளோ உர்ரென்று அவளின் ஸ்கூட்டி எடுத்து கிளம்பினாள். 

ஈஷ்வரும் பைக்கில் அவளின் பின் செல்ல, அவளே நேரே ஹோட்டல் சென்றாள். இவனும் அவளை தொடர்ந்து உள்ளே செல்ல, மாலை நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருக்க, இரண்டு ஆள் அமரும் டேபிளில் அமர்ந்தனர். 

“மதியம் சாப்பிடலையா..? சாரிடி..” ஈஷ்வர் திரும்ப மன்னிப்பு கேட்க, அவளோ அவனை கண்டு கொள்ளாமல் அவளுக்கு மட்டும் தோசை சொன்னாள். 

“லவி.. எனக்கும் பசிக்குதுடி..” ஈஷ்வர் பாவமாக சொல்ல, யாரோ போல முகம் திருப்பி கொண்டவள்,  தோசை சுட சுட வரவும், எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். 

“நேத்து நைட் சாப்பிட்டதுடி..” ஈஷ்வர்  சொல்ல,  பதிலே இல்லை.

அமைதியாகிவிட்டவன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட, பல்லவி தோசை முடித்து கை கழுவ சென்றவள், “மீல்ஸ் இருக்கா..?”  என்று கேட்டு ஆர்டர் செய்து டேபிளுக்கு வந்தாள். 

ஈஷ்வர் அவளை பார்க்க, அவளோ காபி வர, குடிக்க ஆரம்பித்தாள். “அட்லீஸ்ட் காபியாவது கொடுடி..” முன் வந்த கேட்க, தள்ளி சீட்டில் சாய்ந்து குடித்தாள். 

“நீயே குடி.. ரொம்பத்தான்..” என்றவன்  முன் மீல்ஸ் வைக்கப்பட்டது. “எனக்கா..?” பல்லவியை பார்த்தவன், மலர்ந்த சிரிப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.  

“நான்வெஜ் ஹோட்டல் போயிருக்கலாம் இல்லை. ஆம்லெட் கூட இல்லை..” அவளை சீண்டி கொண்டே சாப்பிட, முறைத்தவள் கோபி மஞ்சூரியன் சொன்னாள். 

“தேங்ஸ்டி..” சாப்பிட்டு முடிக்க, அவனுக்கும் ஒரு காபி சொன்னாள். பில் வரவும் ஈஷ்வர் பர்ஸ் எடுக்க, அவனை நேர் பார்வையாக பார்த்தாள். அதிலே அவன் பர்ஸ் வைத்துவிட, இவள் பணம் கொடுத்து வெளியே வந்தனர். 

“வீட்டுக்கு கிளம்பிடாத.. ப்ளீஸ்..” ஈஷ்வர் அவள் ஸ்கூட்டி முன் நின்றான். 

“ம்ப்ச்.. உங்களை நேர்ல பார்க்கணும்ன்னு தான் வெய்ட் பண்ணேன், அதோட கிளாஸ் மதியமே முடிஞ்சது, டவுட் கேட்டு அகடாமியிலே படிக்கிறேன்னு  தான் வீட்ல சொல்லியிருக்கேன், இதுவே ரொம்ப லேட்..” எங்கோ பார்த்து முணுமுணுத்தாள். 

“ஒரு பைவ் மினிட்ஸ்..” ஈஷ்வர் விடாது கேட்க, அவள் முகத்தில் முழு மறுப்பே. 

“நான் கிளம்புறேன், அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க..” மொபைல் தூக்கி காட்டியவள் கிளம்ப, 

“இன்னிக்கு பிளான் சொதப்பிடிச்சு, இன்னொரு நாள் லன்ச் போலாம்..” என,  பல்லவி  முறைத்தவள், 

“ஒன்னும் வேண்டாம் உங்க லன்ச், அப்பா மினிஸ்டர் ஆனதுக்கு ட்ரீட் தரேன்,  வந்தே ஆகணும்ன்னு வரவச்சு பட்டினியா காத்திருந்தது தான் மிச்சம்..” சலிப்பாக  கடிந்தாள். 

“பசங்களுக்கு பார்ட்டி கொடுத்துட்டு விடியறப்போ தான் தூங்க போனேன், இந்த விஷ்ணு வேற ஸ்க்ரீன் இழுத்து விட்டு போயிட்டான், ஏசில நல்ல தூக்கம்..” அவன் பேசி கொண்டிருக்க, அவள் ஸ்கூட்டியை கிளப்பிவிட்டாள். 

“என்னடி கிளம்பிட்டே..? ஏய்.. பை..” அவன் கத்த, பல்லவி கண்ணாடி வழியே அவனை பார்த்து தலையாட்டி வீடு சென்றாள். வாசலிலே காத்திருந்த ரத்னா மகள் வரவும் பிடிபிடியென பிடித்துவிட்டார். 

“எத்தனை முறை போன் பண்றது, மதியம் வர வேண்டியவ, இப்போ வந்திருக்க, சாப்பாடு என்ன பண்ண..?” கேள்வியாய் கேட்க, பல்லவி எல்லாற்றுக்கும் பதில் சொல்லி ஓய்ந்து போனாள். 

கோமதி வேறு, “இதுக்கு தான் சொன்னேன், என் பேச்சை யார் கேட்டா..?” என்று ஒருபாடு பேசி முடிக்க, பல்லவிக்கு ஏன் தான் ஈஷ்வர் கேட்டதுக்கு ஒத்து கொண்டோம் என்று இருந்தது. இரவு படிக்க ரூம் வர, ஈஷ்வர் அழைத்துவிட்டான்.