அன்று கல்லூரியில் ஏதோ கலைவிழா நடந்து கொண்டு இருந்தது. அதற்கேற்றாற்போல பூம் பூம் என்று அரங்கையே அதிர வைத்த சப்தங்களும், பாடல்களும், கல்லூரிப்பெண்களின் சிரிப்பொலியும் என்று அந்த இடமே கல கலவென இருக்க சிறிது நேரம் தனது மாணவ மாணவிகளுடன் உதவியாக நின்ற யுவரத்னா சிறிது காற்றோட்டமாக இருக்கட்டும் என்று அரங்கத்திற்கு வெளியே வந்தாள். எப்போழுதும் அடைந்து இருக்கும் இடங்கள் யுவாவிற்குப் பிடிக்காது. மூச்சு முட்டுவதைப் போல இருக்கும். வீட்டிலும் இரவு வேளைகளில் சிறிது நேரம் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொள்வாள்.
அதனால் தானோ என்னவோ இப்பொழுதும் மூச்சு முட்டுவதைப் போல இருக்க வெளியே வந்து சற்று ஓரமாக இருந்த ஆலமரந்தின் கீழ் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்து ஆழ மூச்செடுத்துக் கொண்டாள்,
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியாது “ஏய்!” என்ற கர்ஜனையான குரல் கேட்கவும் திடுக்கிட்டு விழித்தவள் முன்னால் ருத்ரமூர்த்தியாக நின்ற அரவிந்தனைக் கண்டு நடுங்கியபடியே எழுந்து நின்றாள். கல்லூரி படிக்கும் காலத்திலேயே அவளுக்கு அரவிந்தனைத் தெரியும். கல்லூரித் தோழர்கள் அனைவரும் தோழர்களின் குடும்பத்தினருடனும் நல்ல பிணைப்பொன்றை வைத்திருந்தனர்.
“அங்..அங்கிள்!” நடுங்கிய படியே எழுந்தவளின் கழுத்தைப்பற்றி அழுத்தியவர் “ச்சே! என்னை அப்படிக்கூப்பிடாத” என்று கத்தவும் கலங்கிய கண்களுடன் சுற்றிப்பார்வையிட்டவளுக்கு அங்கு யாரும் இல்லாத தனிமை ஒருவித பயத்தைத் தந்தது.
அவளது கழுத்தை இன்னும் கோவத்தில் அழுத்தியவர் அவள் மூச்சுக்குத் திணறத்தொடங்கவும் அப்படியே அவளைத் தள்ளிவிட தொப்பென்று அமர்ந்திருந்த பெஞ்சிலேயே மீண்டும் விழுந்தவளை நோக்கி ஆள்காட்டி விரலை ஆட்டியவாறே
“உன்னைப் பார்த்தாலே கொலைவெறிதான் வருது! என்னோட பையனைக் கொன்று அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்ச. அபிஷிக்த்தையும் உனக்கு சாதகமா மயக்கி அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்ச. வீடு! அலுவலகம்! இரண்டுமே இப்போ நரகமா இருக்கு எல்லாம் உன்னால” என்று குரலுயர்த்திக் கத்தவும் கெஞ்சுவது போல கையை வைத்து
“தயவுசெய்து நம்புங்க அங்கிள்! விதுரனை நான் கொல்லல!” என்று அவரது விழியைப் பார்த்து கூற இன்னும் ஆத்திரம் பெருக அவளது கன்னத்தில் தனது கையை பதித்து இருந்தார்.
அவரே அதை எதிர்பார்க்கவில்லை போலும் தனது கையையே ‘நானா இப்படி ஒரு பெண்ணை அறைந்தேன்’ என்பது போலப் பார்த்தவர் அதற்கும் காரணமாக யுவாவையே எண்ணி கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றவளை
“உன்னை நான் பார்க்கவே கூடாது என்று நினைச்சேன். பார்த்ததால இப்படி என்னையும் அரக்கனா மாத்திட்ட ல? இனி எப்போவும் என்னோட முகத்தில முழிக்காத. முழிச்ச உன்னோட உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை” என்றுவிட்டு விருட்டென விலகிச்செல்ல அப்படியே முகத்தை மூடி அழத்தொடங்கிய யுவரத்னாவிற்கு இந்தக் களங்கம் தன்னை விட்டு போகவே போகாதா என்று பயமாக இருந்தது.
********
விக்ரமும் அபியும் அபியின் வீட்டு ஹாலில் அமர்ந்து ஏதோ தீவிர விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அபி சிலவேளைகளில் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே தகவல்கள் தெரியக்கூடாது என்று எண்ணும் வேளைகளில் இப்படி வீட்டில் சில டிஸ்கஷன்களை வைத்துக்கொள்வான். அன்றும் அவ்வாறே விவாதித்துக்கொண்டு இருக்க கல்லூரி விழாவில் பங்கேற்காமல் நேரத்துடன் வந்த யுவா ஹாலில் நடுநாயகமாக அபியை எதிர்பார்க்காமல் தயங்கி நின்றாள்.
அத்தையும் தந்தையும் யாரோ உறவினர் வீட்டில் திருமணம் என்று செல்வதாகக் கூறி இருக்கவும் வேலைக்காரியிடம் கூறிவிட்டு அறையிலே அடைந்து கிடந்தால் அவர்களுக்கு நடந்ததைத் தெரிவிக்காமல் மறைத்துவிடலாம் என்று பெரிய திட்டத்துடன் வீட்டிற்கு வந்தால் மிகப்பெரிய சுழல் ஹாலில் அல்லவா இருக்கின்றது.
தயங்கி நின்றவளைக் கவனிக்கும் நிலையில் அபி இருக்கவில்லை போலும். ஏதையோ தீவிரமாக விக்ரமிற்கு விளக்கிக்கொண்டு இருந்தவனை கடைக்கண்ணால் நோக்கியவல் மெல்ல அடி எடுத்து வைத்தபடி மாடிப்படியை நோக்கி விரைந்தாள். பாவம் அபிஷிக்த்திற்கு சாரதா கூறுவதைப் போல முதுகிலும் கண்ணிருப்பதை அவள் அறியவில்லை போலும்.
மாடியை நெருங்கி ‘ஹப்பா’ என்று பெருமூச்சை வெளியேற்றிவிட்டு மாடிப்படியில் காலடி எடுத்து வைத்தவளின் உடல் “யுவா” என்ற அபியின் அழைப்பில் தூக்கிவாரிப்போட்டது. ‘அய்யோ’ என்று கையை உதறியவள் “யுவா!” என்ற அபியின் அழைப்பு இப்பொழுது அழுத்தமாகவும் “அபி மா..மாமா” என்று தந்தி அடித்தவாறே அசையாமல் நின்றாள்.
அபிக்கென்ன தெரியும் அவளது பதட்டம்? “என்ன யுவா அங்கேயே நிற்கிற? இங்க வா” என்று அழுத்திக்கூறவும் மெல்ல அடியெடுத்து வைத்து தங்களை நோக்கி வந்தவளைக் கண்ட விக்ரமின் கண்கள் சாசர் போல விரிந்தது. அவளையும் தனது பாஸையும் மாறி மாறிப்பார்த்தவன் எதையோ சொல்லப்போக “வேண்டாம்” என்றதாக யுவா காட்டிய பாவனையில் சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.
“யுவா! எங்களுக்கு இந்தக்கேஸில உன்னோட ஹெல்ப் தேவைப்படும் என்று நினைக்கிறேன்”
“எ..என்ன.. என்ன உதவி மாமா?”
“அது கொஞ்ச நாளா” என்றபடி நிமிர்ந்தவன் தலை குனிந்தபடியே தன் முன்னால் நின்ற யுவாவை விநோதமாகப் பார்த்தான்.
“என்ன யுவா? ஸ்கூல்ல பனிஷ்மென்ட்ல நிற்கிற மாதிரி நிற்கிற? நிமிர்ந்து என்னைப் பாரு” என்று கூறவும் தலையை ஒரு புறம் திருப்பியபடி நிமிர்ந்தவள் “கழுத்து வலி மாமா அதுதான்” என்கவும் அபிஷிக்த்தின் புருவம் சுருங்கியது.
இப்பொழுது அபிஷிக்திற்கு அவளது வலக்கன்னம் மட்டுமே தெரிய “கழுத்து வலிக்குதா?” என்றபடி எழுத்தவன் யுவாவை நெருங்கவும் அவளின் கால்களோ பின்னடைந்தன.