திகம்பரனின் திகம்பரி அவள்  11

“ம்ப்ச் என்ன மகா இது..? காலேஜ்க்கு  நேரம் ஆச்சு பாரு, கிளம்பு,  அப்பா வெளியே வர போறாரு,  சீக்கிரம் கிளம்புடி..”  கங்கா மகளிடம் போராடி கொண்டிருந்தார்.

அவளோ காலேஜ் போக மாட்டேன் என்று முகம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள். “மகா.. படுத்த கூடாது, ஏற்கனவே ரெண்டு நாள் லீவ், இன்னிக்கும் போக மாட்டேன் சொன்னா என்ன அர்த்தம்..?” கங்காவிற்கு மகளின் செயலில் கோவம் வந்தது.

“ம்மா.. ப்ளீஸ்ம்மா.. நான் போகல.. அப்பாகிட்ட எப்படியாவது சொல்லு ப்ளீஸ்..” மகா கெஞ்சி கொண்டிருக்க,

“என்ன ஆச்சு..?” என்று வந்தான் ஈஷ்வர்.

“நீயே கேளு ஈஷ்வர், இன்னிக்கும் காலேஜ் போக மாட்டேன் சொல்றா..” கங்கா மகனிடம் புகார் வாசித்தார்.

“ஏன்..? என்ன ஆச்சு மகா..? ஏதாவது ப்ராப்ளமா..?” ஈஷ்வர் கேட்க,

“இல்லைண்ணா.. அது..” அவள் பார்வை கங்காவை தொட,

“ம்மா.. நீங்க போய் எனக்கு டிபன் எடுத்து வைங்க, போங்க..” என்று அவரை அனுப்பினான்.

“க்கும்.. என் முன்னாடி சொல்ல மாட்டாளாமா..? எல்லாம்  என்கிட்ட மறைச்சு மறைச்சு ரகசியம் பேச வேண்டியது, இந்த  வீட்ல  நான் யார்ன்னே தெரியல..” கங்கா கடுப்புடன் முணுமுணுத்து சென்றார்.

“இப்போ சொல்லு என்ன பிரச்சனை..?”

“அது.. என்னோட சீனியர் ஒரு பையன்.. கொஞ்ச நாளா.. ம்ஹூம்.. நான் காலேஜ் சேர்ந்த இந்த இரண்டு வருஷமாவே என் பின்னாடி சுத்துறான்..”

“என்ன..? இதை அப்போவே சொல்ல வேண்டியது தானே..? யார் அவன்..?” ஈஷ்வர் கோவத்தோடு கேட்க, மகா கண்கள் அங்கும் இங்கும் சுழன்றது.

“மகா உன்னை தான் கேட்கிறேன், சொல்லு, யார் அவன்..?” ஈஷ்வர் அதட்ட,

“அது.. அது.. அவன்.. ஒன்னும் பெருசா.. இல்.. இல்லைண்ணா..”

“அப்பறம் ஏன் காலேஜ் போக மாட்டேங்கிற, உண்மையை சொல்லு, என்ன உன்னை மிரட்டுறனா..? எவ்வளவு தைரியம் இருக்கனும் அவனுக்கு..”  ஈஷ்வர் ஆத்திரத்துடன் பல்லை கடித்தவன், போன் எடுத்து விஷ்ணுவிற்கு அழைத்து விட்டான்.

“ண்ணா.. ண்ணா.. என்ன பண்ற..? யாருக்கு போன்..?” மகா சந்தேகத்துடன் பதற,

“நீ சும்மா இரு, இதை எல்லாம் விட கூடாது..” தங்கையிடம் கத்தியவன், “விஷ்ணு.. என்னடா பண்ணிட்டிருக்க நீ..? எவனோ மகாவை தொல்லை பண்ணிட்டிருக்கான்.. அவ பயந்துகிட்டு காலேஜ் போக மாட்டேங்கிறா..”  அந்த பக்கம் விஷ்ணு போன் எடுத்ததும் ஈஷ்வர் கத்தவே செய்தான்.

“இவன் வேற..?” விஷ்ணு அங்கு நெற்றி நீவியவன்,  “முதல்ல என்ன பிரச்சனைன்னு கிளியரா சொல்லு..” என்றான்.

“ச்சு.. அதான் சொன்னேனே, எவனோ மகா பின்னாடி சுத்தி அவளை தொல்லை பண்ணிட்டிருக்கான்னு, நீயும் அதே கேம்பஸ்ல தானே இருக்க, உன்னை நம்பி தானே நான் எதுவும் கேட்டுக்காம இருந்தேன்.. நீ என்னடான்னா..”

“ ஈஷ்வர்.. ஸ்டாப்.. நிறுத்து முதல்ல..”  விஷ்ணு இடையிட்டு ஈஷ்வரை நிறுத்தியவன்,   “அந்த ராங்கி என்ன சொன்னாலும் நம்பிடுவியா..? அவளை பத்தி தெரியாதா உனக்கு..? நீ ஒன்னு செய்.. நீயே இன்னிக்கு அவளை காலேஜ் கூட்டிட்டு வா..” என்று வைத்துவிட, ஈஷ்வர் திரும்பி தங்கையை பார்த்தான்.

“என்ன.. என்னண்ணா..?”

“நீ என்கிட்ட பொய் எதுவும் சொல்லலையே..?” ஈஷ்வர் கண்டிப்புடன் கேட்க,

“இல்லை.. இல்லையே.. ஏன் கேட்கிற..? அந்த பாய்லர்  என்ன பொங்கிச்சு..?”

“அவன் என்ன சொன்னான் இருக்கட்டும், நீ பொய் சொன்ன தெரிஞ்சது.., செத்த.. காலேஜ் கிளம்பு, நானே இன்னிக்கு உன்னை கூட்டிட்டு போறேன்..” ஈஷ்வர் சொல்ல, மகா தொங்கி போன முகத்துடன் குளிக்க சென்றாள்.

“என்ன சொல்லுச்சு தெரியலயே அந்த சுடு தண்ணி.. ம்ஹ்ஹ்ம்ம்..”  அழுகையுடன் சிணுங்கி கொண்டே கிளம்பி கீழே வர, அவளின் குடும்பம் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

“கிளம்பிட்டியா..? வா முதல்ல சாப்பிடு..” கங்கா மகளுக்கு பிளேட் வைத்து டிபன் வைத்தார்.

“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா மகா..?” நரசிம்மன் கனிவுடன் கேட்க,

“ம்ம்.. ஓகேப்பா..” குனிந்து கொண்டாள் மகள்.

“இந்தா லன்ச்..” கங்கா மகளுக்கு கொடுத்தவர், “பை..” என,

“ம்ம்.. வரேன்..  பை ப்பா..” ஈஷ்வர் பைக்கில் ஏறியவள்,   சிறிது தூரம் சென்றதும்,

“ண்ணா.. நாளைக்கு உனக்கு செமஸ்டர்  எக்ஸாம் இருக்கு  இல்லை, படிக்கணும் தானே,  மாஸ்டர் டிகிரி ரொம்ப கஷ்டம், நீ உன் ஸ்டடிஸ் பாரு,  நான் பஸ்ல போயிக்கிறேன்..” மகா  நைசாக கேட்க,

“எனக்காக கவலைப்பட்டத்துக்கு மிக்க நன்றி உடன்பிறப்பே.. நான் பார்த்துகிறேன்..” ஈஷ்வர் அவளுக்கு கொட்டு வைத்தவன், அந்த மெடிக்கல் காலேஜிக்குள் பைக்கை விட்டான்.

“வாடா..”  விஷ்ணு ஈஷ்வரை கூப்பிட்டவன், மகாவை கேலியாக பார்த்தான். அவனின் பார்வையில் மகாவிற்கு புகைந்தது.

“பர்ஸ்ட் உன் தொங்கச்சியை அந்த சீனியரை காட்ட சொல்லு..” விஷ்ணு சொல்ல, ஈஷ்வர் திரும்பி தங்கையை பார்த்தான்.

“அது.. அவன் எங்கிருக்கானோ..?” மகா அலட்சியத்துடன் சொல்வது போல தோளை குலுக்கினான்.

“அப்படியா..? சரி இரு நானே அவனை வர சொல்றேன்..” விஷ்ணு போன் எடுத்து யாருக்கோ பேசி வைத்தவன்,  “வாடா..” என்று சற்று தள்ளி நின்று ஈஷ்வரிடம் பேச ஆரம்பித்துவிட, மகா குனிந்து புக் பார்ப்பது போல, மொபைல் உள்ளே வைத்து மெசேஜ் அனுப்ப பார்த்தாள்.

“கேடிடி நீ.. கொடு அந்த போனை..” விஷ்ணு மொபைலை பிடுங்கி அந்த மெசேஜை  பார்த்தவன், நிமிர்ந்து மகாவை முறைத்தான்.

“என்ன விஷ்ணு..?”  ஈஷ்வர் மகாவை சந்தேகமாக பார்த்து கேட்க,

“வெய்ட் பண்ணுடா உன் பாசமலர் கோக்கு மாக்கு எல்லாம் மொத்தமா தெரிஞ்சிக்கிட்டு போ..” விஷ்ணு அவளின் மொபைலை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டான்.

“ஹீட்டர் இது தான் சேன்ஸ்ன்னு என் மொபைலை எடுத்துகிடுச்சு..” மகா விஷ்ணுவை கடுப்பாக பார்த்து கொண்டிருக்க,

“ஏய் ஸ்வீட் சர்ப்ரைஸ்  ஏஞ்சல்.. அட்லாஸ்ட் காலேஜ் வந்துட்ட, நீ வராம இந்த இரண்டு நாள் எனக்கு பிடிக்கவே இல்லை.. எப்போடா உன்னை பார்ப்போம்ன்னு இருந்தது தெரியுமா..? உன்னை பார்க்காம எனக்கு எதுவும் ஓடல.. சரியா தூங்க முடியல, சாப்பிட முடியல..” மகாவிடம் வந்து மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருந்தான் ஒருவன். மகாவோ திருதிருவென விழித்து நின்றாள்.

“ஏஞ்சல் ஏன் வொரியா இருக்க, நீ  சொன்ன நோட்ஸ் எல்லாம் நான் பக்காவா எடுத்து வச்சுட்டேன், இந்த இரண்டு நாள் உங்க கிளாஸ் நோட்ஸும் வாங்கி எழுதி வச்சுட்டேன், அப்பறம் ரிக்கார்ட் நோட்டுக்கும் ப்ரீபேர் பண்ணிட்டேன்.. இந்தா..” அவளிடம் நோட் புக்ஸ் கொடுத்தவன்,

“அப்பறம்  இது உனக்காக நான் தினமும் கொடுக்கிறது..” அவனின் பேக்கில் இருந்த ரெட் ரோஸ் எடுத்து நீட்டினான். மகாவிற்கோ ஈஷ்வரை பார்க்கவே முடியவில்லை. “செத்தேன்..”

“வாங்கிக்கோங்க  மேடம்.. அதான் தினமும் சார் உங்களுக்கு கொடுக்கிறது தானே, இப்போ மட்டும் என்ன..?” விஷ்ணு அருகில் வந்தான்.

“சீனியர்..”  அந்த மாணவன் இவனை பார்த்து பம்ம,

“எங்க போறீங்க ரோமியோ.. இருங்க, ஒரு முக்கியமான ஆளை இண்ட்ரோடியூஸ் பண்றேன், இது ஈஷ்வர்.. உங்க ஜுலியட்டோட அண்ணன்..”

“அண்ணனா..? ஐயோ..” அந்த கண்ணாடி சீனியர் இன்னும் பம்ம, ஈஷ்வரோ தங்கையை தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.

“ஈஷ்வர்.. இது தான் உன் உடன்பிறப்பு சொன்ன பிள்ளை பூச்சு.. பேர் இஷான்.. போர்த் இயர் MBBS..”

“ஹ.. ஹலோ சார்..” இஷான் ஈஷ்வருக்கு கை நீட்ட,

அவனோ.. “போடா..” என்றான்.

“சா.. சார்..”

“இப்போ நீ ஓடல..” ஈஷ்வர் மிரட்ட,

“ஏஞ்சல்.. நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சுன்னு  நீ பயப்படாத, நான் பார்த்துகிறேன்..”  அவளிடம் சொல்லி கொண்டே அங்கிருந்து ஓடினான் அவன். அதில் விஷ்ணு சத்தமாக சிரிக்க, மகாவிற்கோ அவனின் சிரிப்பில் எரிந்தது.

“மகா என்ன இது..?” ஈஷ்வர் தங்கையிடம் அதிருப்தியுடன் கேட்டான்.

“ண்ணா.. அது..”

“நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல..”

“சாரிண்ணா..”

“என்ன சாரி..? உன் பேச்சை நம்பி நான் அந்த பையனை ஏதாவது செஞ்சிருந்தா..? எதுல விளையாடன்னு இல்லை, இன்னும் நீ சின்ன பிள்ளையா..? செகண்ட் இயர் MBBS படிக்கிற, இப்படியா..?”

“விடு ஈஷ்வர்..” அவனை அமைதிப்படுத்திய விஷ்ணு, மகாவிடம், “என்ன பிர்ச்னை..?” கேட்டான்.

அவள் சொல்ல முடியாது என முகம் திருப்ப, “மகா..” விஷ்ணு குரல்.. அந்த ஆளுமை அதிகாரம்.. அவனை பார்க்க வைத்தது.

“ஏன் காலேஜ் வர பிடிக்கல..? என்ன செகண்ட் இயர் சிண்ட்ரோமா..?”  விஷ்ணு கூர்மையாக கேட்க, மகா கலங்கிவிட்ட கண்களுடன் ஆம் என்று தலை ஆட்டினாள்.

“என்ன சொல்ற விஷ்ணு..? சிண்ட்ரோமா..?”  ஈஷ்வர் புரியாமல் கேட்டான்.

“ம்ப்ச்.. அது ஒன்னுமில்லைடா, செகண்ட் இயர்ல மோஸ்டலி நிறைய  மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ்க்கு வரது தான், நாம படிக்கிற டிசீஸ்.. அந்த அறிகுறி நமக்கே இருக்கிற மாதிரி, இல்லை நம்மளை சுத்தி இருக்கிறவங்களுக்கு இருக்கிற மாதிரி  ஒரு பிரம்மை, பயம். அது தான்..”  ஈஷ்வருக்கு விளக்கமாக சொல்ல, அவனுக்கு தங்கை மேல் இருந்த கோவம் கொஞ்சம் குறைந்தது.

“இதுக்கு என்ன செய்ய விஷ்ணு..?” ஈஷ்வர் கவலையாக கேட்டான்.

“இங்குள்ள ப்ரொபஸர்ஸே அதை பார்த்துப்பாங்க, கவலைபட தேவையில்லை..” என,

“ஓஹ்.. இப்படின்னு முதல்லே சொல்லியிருக்கலாம் இல்லை மகா..”

“சாரிண்ணா..”

“ஓகே.. பட்  எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு, இல்லைண்ணா எங்களுக்கு எப்படி தெரியும்..?”

“விடு.. ஈஷ்வர்.. நான் அவளை பார்த்துகிறேன், நீ கிளம்பு போய் படி..” விஷ்ணு அவனை அனுப்பி வைக்க,

“சரிடா.. பை மகா.. ஈவ்னிங் பேசலாம்..” சில அடி நடந்தவன், திரும்ப தங்கையிடம் வந்தான்.

“மகா.. அந்த பையன் விஷயத்துல நீ பண்றது தப்பு, அவன் ரொம்ப இன்னொசண்ட்டா இருக்கான், அதை நாம யூஸ் செய்றது தப்பா இல்லையா நீயே சொல்லு, இனி அவன்கிட்ட சரியா இரு..”  அண்ணனாக தங்கையை கண்டித்து, அறிவுரை சொல்லி கிளம்பினான்.

“இப்போ சந்தோஷமா உங்களுக்கு..?” மகா விஷ்ணுவிடம் சீறினாள்.

“அப்போ நீ பொய் சொன்னது தப்பில்லையா..?” விஷ்ணு கண்டிப்புடன் கேட்டான்.

“இப்படின்னு சொன்னா அப்பா ஏத்துக்க மாட்டார்,  அதான்..”

“இப்போவும் நீ சொன்ன பொய்க்கு ஜஸ்டிபை தான் பண்ற..”

“ஸ்ஸ்ஸ்..  நான் பொய் சொன்னது தப்பு தான் போதுமா..?”

“பெட்டர்.. வா..”  அவளுடன் நடக்க ஆரம்பித்தவன், “உனக்கு பிடிச்சு தானே மெடிக்கல் எடுத்த, அப்பறம் ஏன் ஓடி ஒளியற..?”

“இப்படி எல்லாம் இருக்கும்ன்னு நீங்களும், அத்தை எனக்கு சொல்லவே இல்லை.. தெரிஞ்சிருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்..”