திகம்பரனின் திகம்பரி அவள் 7 2 18204 “அது எப்படி தான் உங்களுக்கு காதல் வருதோ, தொடர்ந்து பார்த்துட்டே இருந்தா ஒரு கட்டத்துல குரங்கு கூட அழகா தான் தெரியும், அப்படி தான் உங்களுக்கும் போல..” விஷ்ணு கேலியாக சிரித்தான். “இப்போ நீ யாரை குரங்கு சொல்ற..?” ஈஷ்வர் கடுப்பாக கேட்க, “லவ் பண்ற எல்லா ரோமியோ, ஜுலியட்டையும் தான்..” “ஸ்ஸ்ஸ்.. உன்கூட பேசி என் மூடை நான் கெடுத்துக்க விரும்பலை..” “பாரு.. இது தான் சொல்றேன், இந்த காதல் நம்மையே கட்டுப்படுத்துதுன்னு, அப்படி ஒரு விலங்கு நமக்கு தேவையா..?” “நீங்க எல்லாம் ஆறறிவு உள்ள ஜீவன், யோசிக்க தெரிஞ்சவங்க, ப்ரீயா இருங்கன்னு தான் நம்மளை ப்ரீயா இருக்க விட்டிருக்கு இயற்கை, ஆனா நீங்க காதல், கடமை, கட்டுப்பாடுன்னு உங்களுக்குன்னு ஒரு விலங்கு மாட்டிகிட்டு அலையறீங்க..” நக்கலாக சிரித்தான் விஷ்ணு. “டேய்.. இப்போ பிரசங்கம் பண்ண தான் என்னை கூட்டிட்டு வந்தியா..? இதுக்கு என் கிளாஸே பரவாயில்லடா..” ஈஷ்வர் சலித்து கொண்டான். “நல்லதை சொன்னா யார் கேட்கிறீங்க..?” “நல்லா சொன்ன, இப்படி உன்கிட்ட வர பேஷண்ட்ஸ்க்கு நீ பிரசங்கம் நடத்துன ஒருத்தரும் திரும்பி வரமாட்டாங்க..” “ஹாஹா.. நான் ஏண்டா இவங்களுக்கு பிரசங்கம் பண்ண போறேன், இவங்களுக்கு எல்லாம் உங்க அத்தை மாதிரி கை நிறைய மாத்திரை கொடுக்கிற டாக்டர்ஸ் தான் வேணும், நானும் டாக்டராகி அதை தான் பண்ணனும், இல்லை என்னை டாக்டர்ன்னு ஒருத்தரும் நம்ப மாட்டாங்க..” கிண்டலாக சொன்னாலும், உள்ளுக்குள் கோவமே விஷ்ணுவிற்கு. மெடிசின் படிக்க ஆரம்பித்த இந்த மூன்று வருடத்திலே ஏன் இதை எடுத்தோம் என்று கோவப்பட்ட, வருத்தப்பட்ட தருணங்கள் கணக்கில்லாமல் தான் இருந்தது. அவன் படிக்கும் காலேஜ், அவன் அம்மா ஹாஸ்பிடல் என்று எல்லாம் அவன் நினைத்ததற்கு மாறாக இருக்க, அவனின் விருப்பு வெறுப்பாக மாறிவிடுமோ என்று அவனே பயப்பட ஆரம்பித்திருந்தான். அதுவே வர வர அவனுக்கு மன அழுத்தத்தையும் கொடுக்க ஆரம்பித்தது. “சரி வா.. உனக்கு ஷர்ட் பார்ப்போம்..” ஈஷ்வர் அவன் மனநிலை மாற்ற லைப் ஸ்டைல் ஷாப்பிற்குள் அழைத்து சென்றான். அடுத்த ஒரு மணி நேரம் அங்கேயே போக, இருவருக்கும் உடை எடுத்து, ஜுஸ் குடிக்க சென்றனர். “என்ன டைம் ஆச்சா..? போகணுமா..?” ஈஷ்வர் வாட்ச் பார்ப்பதை பார்த்து விஷ்ணு கேட்க, ஆமாம்.. என்றவனுக்கு விஷ்ணுவை தனியே விட்டு செல்ல முடியவில்லை. “ஒரு பைவ் மினிட்ஸ் தான் லவிகிட்ட பேச முடியும்.. நீயும் என்னோடே வா..” அவனையும் தன்னுடன் அழைத்து சென்றான் ஈஷ்வர். {ஹாஹா.. அவனுக்கு தெரியவில்லை அவன் கூட்டி செல்வது ஒரு வில்லங்கத்தை என்று..} பல்லவி கேங் மால் வெளியே இருக்கும் நீரூற்றுக்கு அருகில் இருந்தனர். இன்று தான் கடைசி நாள் என்பதால் நண்பர்கள் எல்லாம் கண்ணீருடன், சிரிப்புடன், ஆரவாரத்துடன் விடைபெற, சில நிமிடங்கள் அங்கு கலவையான உணர்வுகள். “பைடி, டைம் கிடைக்கும் மீட் பண்ணலாம், போன் பண்ணு..” ரேகா ஈஷ்வரை பார்த்து கண்ணீருடன் விடைபெற, பல்லவிக்கும் அழுகை. ரேகா, இவள் இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள். பல்லவியின் சிவந்த கண்கள் அவள் நிலைய சொல்ல, ஈஷ்வருக்கு அச்சோ என்று இருந்தது. இதையும் எல்லாம் கடந்து வந்து தானே ஆக வேண்டும். கர்சீப்பில் முகம் துடைத்தபடி ஈஷ்வர் இருக்கும் இடம் வர, விஷ்ணு சற்று தள்ளி அமர்ந்திருந்தான். “படம் எப்படி இருந்தது..?” ஈஷ்வர் கேட்க, “ம்ம்.. ஓகே..” தலை ஆட்டி சொன்னாள். “ம்ம்..” என்றவன் நீண்ட நாட்களுக்கு பிறகு அருகில் நின்றவளை ரசித்து பார்த்தான். இருவரும் ஒரே பள்ளி. ஒருவருட சீனியர் ஈஷ்வர். இதுவரை டீனேஜ் பருவம் என்று பார்ப்பதோடு நிறுத்தி கொள்வான். அவளின் அருகில் சென்று பேச முயன்றதில்லை. அவனின் கிரஷ் அவள் என்பது இரு பக்க நண்பர்களுக்கு தெரியும். ஆனால் இருவருமே அதை பெரிதாக கொண்டு செல்ல விட்டதில்லை. ஈஷ்வர் யார் என்ன கேட்டாலும், கிண்டல் செய்தாலும் ஜஸ்ட் கிரிஷ் என்றதோடு முடித்து கொள்ள, பல்லவி வாயே திறக்க மாட்டாள். அவளுக்கு இவனை பிடிக்கும், பிடிக்காது என்பது அவளின் நண்பர்களுக்கே கேள்வி குறியே. ஈஷ்வர் என்றாலே அமைதியாகிவிடுவாள். அதனாலே ஒரு கட்டத்தில் அவளின் நண்பர்கள் அதை பற்றி கேலி பேசுவதை கூட விட்டுவிட்டனர். அதிலும் போன வருடம் ஈஷ்வர் பள்ளி படிப்பை முடித்து கிளம்ப, எல்லோரும் அவன் வந்து இவளிட பேசுவான், ப்ரொபோஸ் செய்வான் என்று பலதும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை. பல்லவியிடம் பேசாமலே கிளம்பிவிட்டான். அதற்கு பிறகு அவளின் நண்பர்களுக்கே அதில் இன்டிரெஸ்ட் குறைந்து போக, அதை மறந்துவிட்டு அடுத்த ஜோடியிடம் போய்விட்டனர். இந்த வருடம் அவள் ப்ளஸ் டூ முடிக்க, அவள் முன் நின்றான். அவன் வருவான் என்பது பல்லவிக்கு தெரியுமோ என்பது ரேகாவிற்கு சந்தேகம் தான். படம் பார்க்க உள்ளே நுழையும் போது பல்லவியிடம் கேட்க, அவள் எப்போதும் போல அமைதியாக சென்றுவிட, ரேகா விட்டுவிட்டாள். இதோ இப்போது எல்லோரும் கிளம்பி விட்டிருக்க, பல்லவி கண்களோ கேட்டில் ஒரு நேரம், ஈஷ்வர் மேல் ஒரு நேரம் என்று நாட்டியம் ஆடி கொண்டிருந்தது. அந்த கண்கள் அப்படி அங்கும் இங்கும் செல்வது ஈஷ்வருக்கு சிரிப்பை கொடுக்க, உதட்டுக்குள் தன் சிரிப்பை மறைத்தான். பல்லவி அதை கண்டு கொண்டு, முகத்தில் லேசான கோபத்துடன் மொத்தமாக கேட் பக்கம் திரும்பிவிட்டாள். அவளின் அந்த கோவம், ஈஷ்வருக்கு மேலும் சிரிப்பை கொடுக்க, அவளை இன்னும் பார்த்தான். ஸ்கர்ட், ஷார்ட் டாப் அணிந்திருந்தவளின் கலைந்த தலை முடி காதோரம் சுருண்டு அசைய, நெற்றியில் கோடாக இழுத்திருந்த குங்குமம் லேசாக வளைந்திருக்க, உதடுகள் லிப் பாமின் மினுமினுப்பில் மின்னி கொண்டிருந்தது. இதுவரை இருந்த சுய கட்டுப்பாடு இன்று இல்லை. நன்றாகவே அவளை ரசித்து பார்த்தான். “நான் கிளம்பவா..” பல்லவி கேட்டுவிட, “அடேய் பேச வந்ததை விட்டுட்டு சைட் அடிச்சிட்டு இருக்க..” தன்னை தானே குட்டி கொண்டவனுக்கு அதுவரை இல்லாத டென்க்ஷன் வந்தமர்ந்தது. மனதில் ஓராயிரம் முறை ஒத்திகை பார்த்தது இப்போது பிளாங்காக இருந்தது. சப்போர்டுக்காக விஷ்ணுவை பார்த்தான். அவனோ இவனை பார்த்து குறும்பாக ஒற்றை புருவம் தூக்கி சிரித்தான். உன்னை போய் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.. ஈஷ்வர் திரும்ப பல்லவியை பார்க்க, அவளிடமும் பதட்டம் தென்பட்டது. “க்கும்.. சும்மாவே எனக்கு சொல்ல முடியல, இதுல இவ வேற இப்படி பயந்தா விளங்கிடும்..” உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்டவன் “எதுக்கு இவ்வளவு டென்க்ஷன்..? ரிலாக்ஸா இரு..” என்றான் தனக்கும் சேர்த்து. “அண்ணா வந்துடுவாங்க..” “லவி.. உனக்கு என்னை புரியுது தானே..?” ஈஷ்வர் மெதுவாக பேச்சை துவக்கினான். பல்லவி ஆமாம்.. இல்லை என்று எதுவும் சொல்லவில்லை. “லவி.. என்னை நீ நாலு வருஷமா பார்க்கிற, நான் உன்னை பார்க்கிறேன்னு உனக்கும் தெரியும், என்னை உணர்ந்திருக்க தானே..?” ஈஷ்வர் கொஞ்சம் பரவசத்துடனே பேசினான். ஆனால் பல்லவியோ வாயை திறக்காமல், முகத்திலும் எதுவும் காட்டாமல் நின்றாள். “லவி.. உனக்கு நான் கேட்கிறது என்னன்னு தெரியுது தானே..?” பல்லவி மௌன கவசத்தால் தன்னை வசதியாக மறைத்து நின்றாள். “சோ நீ எதுவும் பேச மாட்ட..?” ஈஷ்வர்க்கு அவளை புரிந்தது. “உனக்கு என்னை பிடிக்கும்.. பிடிக்காது இதை விடு, என்கிட்ட என்ன பிரச்சனை சொல்லு..?” கூர்மையாக கேட்டான். “இது நமக்கு செட் ஆகாது..” பல்லவி மெதுவாக சொன்னாலும், கொஞ்சம் உறுதியுடனே சொன்னாள். “ஏன்..?” “இல்லை வேண்டாம்..” அவளின் உடல் மொழியில் இதுவரை இருந்த தளர்வு மறைந்தது. “ஏன் வேண்டாம் சொல்லு..” “ப்ளீஸ்.. வேண்டாம்..” “லவி.. எனக்கு காரணம் சொல்லு..” வார்த்தைகள் கடித்து வந்தது. “நிறைய வித்தியாசம் இருக்கு நமக்குள்ள..” ஈஷ்வருக்கு அவள் சொல்வது புரிவது போல இருக்க, கோபம் வேற வந்தது. தன்னை கட்டுப்படுத்தி நின்றான். விஷ்ணு ஏதோ சரியில்லை என்று புரிந்து இவர்களிடம் வந்தவன், “என்ன ஆச்சு..?” என்று கேட்க, ஈஷ்வர் பல்லவியை பார்த்து நின்றான். “என்ன இவன் உனக்கு வேண்டாமா..?” விஷ்ணு நேரடியாக பல்லவியிடம் கேட்க, அவள் இவன் யாரென்று பார்த்தாள். “இவனோட ப்ரண்ட்..” என்றான் விஷ்ணு. “ஓஹ்..” பல்லவி அமைதியாக இருந்தாள். விஷ்ணுவிற்கு அவளிடம் ஏதோ புரிவது போல இருக்க, “இவனோட பேக் கிரவுண்ட் நினைச்சு வேண்டாம் சொல்றியா..?” பல்லவியின் மௌனம் அதை உறுதி படுத்த, ஈஷ்வர் முகம் இறுகி போனது. “இவங்க அப்பா அரசியல்ல இருக்கார், அது ஒரு சாக்கடைன்னு எல்லாம் சொல்றாங்களேன்னு நினைச்சு வேண்டாம் சொல்றியா..?” விஷ்ணு விளக்கி கேட்க, ஈஷ்வர் திரும்பி அவனை முறைத்தான். “அடுத்த முறை இவங்க அப்பா கட்சி தான் ஆட்சிக்கு வரும் சொல்றாங்க, அப்படி ஜெயிச்சா நரசிம்மன் மாமா மினிஸ்டர் ஆகவும் வாய்ப்பிருக்கு.. அப்படி ஆனா உங்க விஷயம் தெரிஞ்சு பெருசா பிரச்சனை பண்ணுவார் நினைச்சு வேண்டாம் சொல்றியா..?” மேலும் விளக்கமாக விளக்க, ஈஷ்வருக்கு அடக்கி வைத்த கோவம் முழுதும் விஷ்ணு மேல் பாயும் போல இருந்தது. “இவங்க அப்பா கட்ட பஞ்சாயத்து, அடிதடி, ரவுடிசம் எல்லாம் பண்ணுவார் தான். ஆனா அது எல்லாம் ஓன்லி அரசியலுக்கு மட்டும் தான்.. நாட் பர்சனல்.. என்னடா..?” ஈஷ்வரிடமே கேட்க, இதெல்லாம் உன்னை கேட்டாளா அவ பார்வை பார்த்தான் அவன். “அண்ணா வந்துட்டாங்க..” மாலுக்குள் நுழைந்த பரணியின் பைக் பார்த்து பல்லவி கிளம்ப பார்க்க, ஈஷ்வர் வழி மறைத்து நின்றவன், அவளின் பர்ஸுக்குள் இருந்த மொபைல் எடுத்து தன் நம்பரை டயல் செய்து மிஸ்ட் கால் கொடுத்து கொண்டான். “நைட் கால் பண்ணுவேன்..” உரிமையாக சொல்ல, பல்லவி தலை கூட அசைக்காமல் ஓடிவிட்டாள்.