வாசலில் நின்று வேடிக்கை பார்த்த கரீமா சல்மாவையும் அழைத்தாள். “இந்த காட்சியை தவற விடாதே. உன் ஒளிமயமான எதிர்காலத்தை நான் உறுதிப்படுத்தறேன். நான் செய்த வேலையை இப்போ வேடிக்கை பார்க்குறேன். உனக்கும் ஆர்யனுக்கும் நடுவுல இனிமேல் யாரும் இல்ல” என கரீமா சொல்ல சுவையான நாடகம் பார்க்கும் ஆவலில் சல்மாவும் எட்டி பார்த்தாள்.
கரீமாவின் கையாளை பளார் என அறைந்த ஆர்யன் “எப்படி தொலைச்சீங்க? எதுக்கு தான் நீங்க லாயக்கு? ஒரு சின்ன பொண்ணு, ஐந்து வயசு பையன் இவங்கள கூட உங்களால பார்த்துக்க முடியாதா?” என்று சொல்லி இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து இன்னொருவன் தலையில் வைத்தான்.
“நாங்க கவனமா தான் இருந்தோம். வாசல் வரை நின்னோம். எப்படி காணாம போனாங்கன்னு தெரியல” என அடி வாங்கியவன் சொல்ல “அப்புறம் எதுக்கு உங்கள கூட அனுப்பினேன்? உங்க அத்தனை பேரையும் அந்த பொண்ணு ஏமாத்திட்டு ஓடியிருக்கா. இங்க இருந்து போய்டுங்க. என் கண்ணு முன்னால நின்னு சாகாதீங்க. போய் தேடுங்க” என ஆர்யன் உக்கிரமாக திரும்பி நின்றான்.
நால்வரும் தொங்கிப் போன முகத்துடன் வெளியே செல்ல அவர்களை பார்த்திருந்த கரீமாவின் கண்கள் விரிந்தது. முகம் சுருங்கியது. காரணம் இவானை கையில் பிடித்தபடி ருஹானா உள்ளே வந்துக் கொண்டிருந்தாள்.
“சித்தப்பா!” என இவான் கூப்பிட்டதும் திரும்பி நின்றிருந்த ஆர்யன் இவான் பக்கம் திரும்பினான். திகைப்பும், குழப்பமும், ஆங்காரமும் போட்டி போட, போட்டிருந்த கோட் காற்றில் பறக்க இவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தான். பாவமாக ருஹானா பார்க்க, கோபமாக ஆர்யன் பார்க்க, இடையே இவான் இவர்கள் இருவரின் முகம் பார்த்தான்.
அவளை பார்த்து கோபமூச்சு விட்டவன் “உன் ரூம்க்கு போய் எனக்காக காத்திரு” என சொல்ல, பிடித்திருந்த இவான் கையை விட்டவள் மெல்ல நடந்து வாசலில் நின்ற இரு சகோதரிகளை ஏறெடுத்து நோக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
சித்தி மறையும்வரை சித்தப்பாவை தாண்டி எட்டி பார்த்த இவான், பின் பழைய இடத்தில் நின்றுக்கொண்டான். அவனை நோக்கி ஆர்யன் கை நீட்ட சித்தப்பாவின் கையை பிடித்துக்கொண்டான். இவானை கூட்டிவந்து கரீமாவிடம் கொடுத்தவன் “இவனை பார்த்துக்கங்க” என்று சொல்லி மேலே சென்றான்.
ருஹானாவின் அறைக்கதவை வேகமாக திறந்து வந்தவன், சுவரில் சாய்ந்து நின்றிருந்த ருஹானாவின் கையை பற்றி மடக்கி “என் கோவத்தை சோதிக்கிறியா இல்ல உன் உயிரை விட ஆசைப்படுறீயா? எப்படி நீ இவானை கடத்த பார்ப்பே?” என அவள் முகம் அருகே வந்து கண்களை உருட்டி கேட்டான்.
“என் கை! கை! வலிக்குது” என்று அவள் கத்திகொண்டே கையை விடுவிக்க முயல அவள் கையை இன்னும் அழுத்தமாக பற்றியவன் “மூச்சு விடமுடியுதேன்னு சந்தோசப்படு. உன் வாழ்க்கைல மிகப்பெரிய ரெண்டு தப்பு செஞ்சிட்டே. ஒன்னு இவானை கடத்தினது. இன்னோன்னு அது முடியாம இங்க திரும்பி வந்தது” என அவளை நெருங்கி சொன்னான்.
“போதும்!” என அவன் கையை வேகமாக உதறியவள் அவனுக்கு மேலாக கத்தினாள். நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “ஆமா! உண்மை தான். நான் ஓடினேன். இவானை கூட்டிட்டு ஓடினேன்” என்று சொல்ல ஆர்யனுக்கு அவள் மேல் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் சிதறியது.
முகத்தை முழுவதுமாக சுருக்கியவன் கை முஷ்டியை அவள் அருகே சுவரில் மோதினான். பயத்தில் அவள் கண்களை மூடிக்கொள்ள கண்ணில் நீர் வடிந்தது. “உன்னை நான் வீட்டுக்குள்ளேயே விட்டுருக்கக் கூடாது. பாய்லர் ரூம்லயே அடைச்சி வச்சிருக்கணும்” அவன் கோபத்தில் கொதித்தான்.
“ஆமா! நான் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டுச்சி. ஏன்னா உங்க ஆட்கள்லாம் காணாம போய்ட்டாங்க” அவள் கோவமாக கத்த அவன் குழப்பமாக பார்த்தான். “துவா முடிச்சிட்டு பார்த்தப்ப உங்க ஆள் ஒருத்தரும் காணோம். மரத்துக்கு பின்னால சிலர் மறைஞ்சி நின்னாங்க. அதுல ஒருத்தன் அன்னைக்கு உங்கள கொல்ல வந்தவன். இவானை பிடிக்க வந்துருக்காங்கன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சி.
நான் இவானுக்கு பயம் காட்டாம அவன்ட்ட ஒரு விளையாட்டுன்னு சொல்லி அவனை கூட்டிட்டு காட்டுக்குள்ளே ஓடிட்டேன். அவங்களும் எங்களை துரத்திட்டு வந்தாங்க. என் போன்ல சார்ஜ் இல்ல. உங்களுக்கு சொல்ல முடியல” என்று கோபமும் கண்ணீருமாக சொன்னாள்.
அவன் நம்பாமல் பார்க்க அவள் போனை எடுத்து காட்டினாள். “நீங்களே பாருங்க. நான் இவான் கூட்டிட்டு ஓடணும்னு நினைச்சிருந்தா இங்க எதுக்கு வரணும்? அந்த ஆளுங்ககிட்ட இருந்து தப்பிச்சி ஓடினவளுக்கு வேற இடத்துக்கு போக தெரியாதா? ஆனா நான் இங்க தானே வந்தேன். ஏன்னு உங்களுக்கு அதிசயமா இருக்கலாம். ஏன்னா நீங்களே ஒருநாள் உங்க கையால இவானை என்கிட்டே கொடுப்பீங்க” பல்லை கடித்துக்கொண்டு அவள் பேச பேச ஆர்யன் அவள் கண்களையே உற்று நோக்கினான்.
குனிந்து அவன் துப்பாக்கியை பார்த்தவள் ஏளனமாக இதழ்களை வளைத்து “இடுப்பில் உங்க துப்பாக்கி. உங்க இருட்டு உலகம். உங்க காட்டுமிராண்டித்தனம். இதைவிட அவன் சித்தி தான் அவனுக்கு நல்லதுன்னு உங்களுக்கே புரியும். நான் இவானை கடத்த மாட்டேன். உங்க அனுமதியோட கூட்டிட்டு போவேன்” என்று சபதம் போல சொன்னாள்.
இரண்டு எட்டு எடுத்து அவளை நெருங்கியவன் அவள் கண்கள் அருகே வந்து “இந்த வாழ்க்கையை இவான் பழகின பின்னாடி இந்த வீட்ல உனக்கு வேலை இல்ல” என்று சொல்லி கதவை படாரென அடித்து அடைத்து சென்றான்.
மெல்ல விலகிய
கருப்பு உலகின்
இரும்புத்திரை..
விழித்திரை முதலில்
சிறிதாய் விலகி
மனத்திரையின் மறுவோரம்
நெருங்கிய நேரம்
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்
மேகம் மறைத்தாலும்
சூரியனின் சூடு குறையுமா.. ?
“கடத்த முயற்சி செய்தா. பயந்து போய் திரும்பி வந்துட்டா” என சொல்லியபடி அவன் அறையில் நடந்து கொண்டிருந்தான், ஆர்யன். பின் எதையோ நினைத்தவன் வெளியே நடந்தான்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் ருஹானா சமையலறையில் இவானுக்கு உணவு தயாரிக்க கைகளில் சூப்பை ஊற்றிக்கொண்டாள். பதறிய சாரா அவளை உடை மாற்ற அனுப்பிவிட்டு தானே இவானுக்கு கொண்டு சென்றார்.
சூப் முழுதும் சாப்பிட்ட இவான் சாராவிடம் கேட்டான். “சித்தி எங்க? சித்தப்பா இன்னும் சித்தி மேல கோவமா இருக்காங்களா?”
“லிட்டில் சார்! உங்க அழகு சித்தி மேல யாராவது கோவமா இருப்பாங்களா?”
அப்போது ஆர்யன் உள்ளே வரவும் சாரா எழுந்து “லிட்டில் சார் எல்லாமே சாப்பிட்டார்” என சொல்ல “நல்லா சாப்பிட்டியா? வெரிகுட்” என ஆர்யன் பாராட்ட சாரா வெளியே சென்றார்.
கட்டிலில் அமர்ந்த ஆர்யன் “உனக்கு சோர்வா இருக்கா?” என கேட்டான்.
“இல்ல சித்தப்பா! சித்தி கூட சேர்ந்து அம்மா கல்லறைல பூக்கள் வைச்சோம். துவா சொன்னோம்”
“வேற என்ன என்ன செய்தீங்க?”
“ஒரு விளையாட்டு ஓடி விளையாடினோம்”
“நீங்க ஓடும்போது உங்க பின்னால யார் வந்தாங்க?”
“எனக்கு தெரியலயே” தோளை குலுக்கி இவான் சொன்னான்.
ஆர்யன் முகம் யோசனைக்கு போனது. லேசான ஏமாற்றமும்.
“நீ யாரையும் பார்க்கலயா?”
“இல்லயே! சித்தி என் கையை பிடிச்சிட்டு சொன்னாங்க. நம்ம வீடு வரை நாம ஓட போறோம்”
அந்த ஏமாற்றமும் மறைந்தது. முகமும் தெளிவானது.
“சரி அக்னி சிறகே! நீ தூங்கு” என்று எழுந்தவன் வெளியே வந்து ரஷீத்துக்கு போன் செய்தான்.
“ரஷீத்! இவான் சித்தி அவனை கடத்த நினைக்கல. இன்னைக்கு கல்லறைல என்ன நடந்ததுன்னு கண்டுபிடி. யாசின்ஸ் மட்டும் இதை செஞ்சிருக்கட்டும்.. இருக்கு அவனுக்கு” என ஆத்திரத்துடன் கட்டளையிட்டான்.
———-
சித்தியின் மடியில் தலை வைத்து படுத்திருந்த இவான் கேட்டான். “சித்தி! இன்னைக்கு நாம லேட்டா வந்ததால சித்தப்பா உங்க மேல கோவப்பட்டாங்களா?”
அவன் தலையை தடவியபடி ருஹானா சொன்னாள். “இல்லயே செல்லம்! லேட் ஆனதால கவலையாகிட்டாங்க. அது நார்மல் தான். அன்பா இருக்குறவங்க மேலே கவலைப்படறதும் இயற்கை தான்”.
“நீங்க என்கிட்ட வச்சிருக்கற அளவுக்கு சித்தப்பாவும் என்மேல அன்பு வச்சிருக்காங்களா?”
“ஆமா கண்ணே! சித்தப்பாவும் உன்மேலே அதிக அன்பு வச்சிருக்காங்க. அந்த அளவு அன்பு இல்லனா உன்னை ஏன் தேட போறாங்க, கவலைப்பட போறாங்க?
“நானும் உங்கள நினைச்சி கவலைப்பட்டேன். என் சித்தி மேல சித்தப்பா கோவப்படக் கூடாதுன்னு அல்லாஹ்ட்ட துவா கேட்டேன். சித்தி எப்பவும் என்னை விட்டு போகக்கூடாதுன்னும் கேட்டேன்”
“அடடா! நான் எப்படி உன்னை விட்டு போவேன். உனக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துருக்கேனே! உன்னை விட்டு போகவே மாட்டேன்”
இவான் தலையாட்ட ருஹானா மேலும் சொன்னாள். “குழந்தைங்க ஆசைப்பட்டதை அல்லாஹ் கண்டிப்பா நிறைவேற்றுவார். நாம பிரியவே மாட்டோம், என்ன நடந்தாலும்.. வா.. நம்ம துவா சொல்வோம்” இருவரும் கைகளை ஏந்திக் கொள்ள இவான் ஆரம்பித்தான்.
“சித்தி என்னை விட்டு எங்கயும் போகக் கூடாது. எப்பவும் என்கூடவே இருக்கணும்”
“ஆமின்”
“சித்தியும் சித்தப்பாவும் சண்டை போடக்கூடாது”
“ஆமின்”
இவானும் ஆமின் சொல்ல இருவரும் முகத்தை தடவிக் கொண்டனர்.
——–
வெளிமாடத்தில் நின்று இருட்டை வெறித்துக்கொண்டிருந்த ஆர்யனை ரஷீத் போனில் அழைத்தான். “ஆர்யன்! நம்ம பொண்ணு சொன்னது சரிதான். சிசிடிவி கேமரால பார்த்தேன். யாசின்ஸ் ஆளுங்க அங்க இருந்தாங்க. இவான் சித்தி அவங்களை சாமர்த்தியமா ஏமாத்திட்டு ஓடிட்டா. அவ அப்படி செய்யலனா அவங்க இவானை தூக்கிட்டு போயிருப்பாங்க” என ரஷீத் சொல்ல “யாசின்ஸ்க்கு என்ன தைரியம்?” என கொந்தளித்த ஆர்யன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே போட்டு உடைத்தான்.
“இப்போ என்ன செய்றது, ஆர்யன்?”
“இன்னைக்கு நைட் யாசின்ஸ் கூட மீட்டிங் ஏற்பாடு செய். நான் தனியா போறேன்”
“ஆர்யன், தனியாவா?”
“ஆமா! சொன்னதை செய், ரஷீத்”
போனை அடைத்தவன் ருஹானாவின் அறை நோக்கி நடந்தான். கதவருகே சென்றவனுக்கு தயக்கம் மேலிட அங்கேயே நின்றான். இவானை தூங்க வைத்துவிட்டு அவன் அறையிலிருந்து வெளியே வந்த ருஹானா அதை பார்த்தவள் ‘ஆர்யன் எதோ தன்னிடம் சொல்ல போகிறான் போல’ என அவனை கேள்வியாக நோக்கினாள். அவளை ஓரப் பார்வை பார்த்தவன் அவள் அருகே வரவும் விலகி சென்றுவிட்டான், அவளை பார்த்தபடியே.
——–
“ஆர்யன் அர்ஸ்லான்! கடைசியில் நாம் சந்தித்து விட்டோமா?” கிண்டலாக கேட்டான், யாசின்.
அவனை முறைப்புடன் பார்த்த ஆர்யன் “நீ என்மேல ஏவின நாய்கள் ஒன்னும் தேறலயே! இப்போ என் குடும்பம் மேல, என் அண்ணன் பையன் மேல உன் வேலைய காட்றியா?” என்றான்.
“அதான் ஒன்னும் ஆகலயே! அந்த பொண்ணு தைரியசாலி. நம்ம ரெண்டு பேரோட ஆட்களை விட புத்திசாலி. உன் அண்ணன் பையன் தப்பிச்சதுக்கு அவளுக்கு நன்றி சொல்லு. உனக்கு வேட்டையை பத்தி சொல்லணுமா, என்ன? சில நேரம் குறி தப்பிடும் தானே?” என நக்கலாக கேட்டான்.
“ஆனா என் குறி என்னைக்கும் தப்பாது. என்கிட்டே வம்பு வச்சிக்காதே” ஆர்யன் விறைப்பாக சொன்னான்.
“நீ கோட்டையை கட்டி வச்சிருக்கே, ஆர்யன் அர்ஸ்லான்! பலமான கையாள்களும் உன்கிட்டே இருக்காங்க. உன் தைரியமும் அளவிட முடியாதது. ஆனா ஒன்னு ஞாபகம் வச்சிக்கோ. என்கிட்டே நிறைய திட்டங்கள் இருக்கு. அதனால கவனமா இரு” என்று எச்சரித்து விட்டு யாசின் சென்றுவிட்டான்.
ஆர்யன் அங்கேயே நிற்க அவன் முதுகில் கத்தி பாய்ந்தது. வலியை விட கோபத்தில் அவன் முகம் சிவந்தது.