ருஹானா கண்களை மூடி, காயத்தை பிடிப்பதை பார்த்த ஆர்யன் வேகமாக அவள் அருகே நெருங்கினான். சாராவை பார்த்தவன் “என் ஆட்கள் கூட இருப்பாங்க. ஆனாலும் நீயும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாற்றி சொல்ல அவளும் சரியென சொல்லவும் வெளியே சென்று விட்டான்.

“குக்கீஸ் கொண்டு போகலாமா?” என இவான் கேட்க “கண்டிப்பா, லிட்டில் சார். சின்ன பசங்க அங்க இருந்தா கொடுங்க. உன் அம்மா சந்தோசப்படுவாங்க” என சாரா சொல்ல ருஹானாக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது.

——

ருஹானா கிளம்பிக் கொண்டிருக்க அவள் அறைக்கு வந்த கரீமா, “உனக்கு நன்றி ருஹானா, உன்னால தான் இவான் அவன் அம்மா கல்லறைக்கு போக போறான். குட்பை சொல்ல போறான்” என சொல்ல

“அவன் ரொம்ப ஆர்வமா இருக்கான். பூக்கள், கப்பல்கள், குக்கீஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டான்” என ருஹானாவும் ஆவலாக சொன்னாள்.

“இவானோட வருத்தமான காலத்துல அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கவே நீ வந்துருக்கே. இங்க அவன் சிரிக்கவே மறந்திருந்தான். அவனை பற்றி நான் அதிகமா கவலைப்பட்டுட்டு இருந்தேன். இந்த வீட்ல அவன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழல. மத்த குழந்தைங்க மாதிரி ஓடவோ, விளையாடவோ அவனுக்கு வழியில்ல” என்று கரீமா பேசி ருஹானாவின் ஆவலை குறைத்தாள். அதோடு அவளை வேறு வகையில் சிந்திக்கவும் தூண்டினாள்.

“இவானை இந்த சிறை வாழ்க்கையை விட்டு வெளிய கொண்டு வர தஸ்லீம் எத்தனையோ போராடினா. உன் அக்காவோட ஒரே இலட்சியம் இவானை இங்க இருந்து கூட்டிட்டு போறது தான்” ருஹானா கழுத்து சங்கிலியை பிடித்துக்கொண்டு அமைதியாக யோசிக்க ஆரம்பித்ததும், “சரி, சீக்கிரம் கிளம்புங்க, தஸ்லீம்க்கு எனக்காகவும் பிரார்த்தனை செய்” என்றாள், கரீமா.

கதவருகே சென்றவள் “ஆர்யன் உன்னை எச்சரிச்சி இருப்பான். இருந்தாலும் நானும் சொல்றேன். கவனமா இரு. எதிரிங்க கண்ணு இவான் மேலயும் இருக்கும். யாசின்ஸ் மிக மோசமானவங்க. இந்த ஆபத்துக்களை நினைச்சி தஸ்லீம் ஆசைப்பட்டது போல இவான் வேற இடத்துல இருந்தா நல்லதுன்னு நான் கூட சில சமயங்கள்ல நினைப்பேன். இவானுக்கு அம்மா அப்பா இல்ல. நீ தான் இருக்கே. பார்த்துக்கோ” என்று ‘இவானை தூக்கிட்டு இங்கிருந்து ஓடிடு’ என்று மறைமுகமாக சொல்லிவிட்டு வெளியேறினாள்.

———

ருஹானா இவானோடு காரில் ஏறும்போது மீண்டும் வந்த கரீமா “ருஹானா! நீ ஆசைப்பட்டபடி தஸ்லீம் கல்லறை முழுதும் மலர்களால் அலங்காரம் செய்ய ஆர்யன் ஏற்பாடு செய்திட்டான்” என்று சொல்ல “நன்றி கரீமா மேம்! இவான் தன் அம்மா வீடு பூக்களால் கட்டப்பட்டதுன்னு நம்புறான். அதனால தான் நான் கேட்டேன்” என்றாள், ருஹானா.

தலையாட்டிய கரீமா “எச்சரிக்கையா இரு, ருஹானா. இவான் நலனுக்கு என்ன தேவையோ அதை செய்” என வலியுறுத்தினாள். அப்போது ஆர்யனும் வந்து வாசலில் தூரத்தில் நிற்க ‘அவனுக்கு நன்றி சொல்லலாமா?’ என யோசித்த ருஹானா பின் ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்தபடியே காரில் ஏற காரும் புறப்பட்டது. பின்னால் நின்ற காரில் ஏறிய பாதுகாவலரில் ஒருவனை பார்த்து கரீமா ஜாடை காட்ட அவனும் சரியென தலையசைத்தான்.

——–

நான்கு காவலர்கள் பின் தொடர இவானும் ருஹானாவும் கல்லறை பகுதிக்கு நடந்து வர “இங்க நிறைய வீடுகள் இருக்கே!” என இவான் ஆச்சர்யப்பட்டான். “ஆமா அன்பே! அங்க பார் எத்தனை பறவைகள் இருக்கு. உன் குக்கீஸ்ஸ நல்லா சாப்பிடும்” என்று சொன்ன ருஹானா காவலரை சற்று தள்ளி நிற்க சொன்னாள். கரீமா சைகை காட்டிய மெய்காப்பாளன் மற்றவர்களை வாசல் அருகே நிற்க சொல்லிவிட்டு தானும் இவர்களை விட்டு வெகுவாக தள்ளி நின்றான்.

அம்மாவின் கல்லறை அருகே மண்டியிட்ட இவான் சித்தியிடம் கேட்டான்.

“இங்க நெறைய பூக்கள் இருக்கே!”

“ஆமாடா செல்லம்! உன் அம்மாக்கு மலர்கள் அதிகம் பிடிக்கும். அவளும் மலரை போன்றவள் தான்” கண்கலங்க சொன்னாள்.

“இது யார் வீடு?” பக்கத்து கல்லறையிலும் பூ அலங்காரம் செய்திருக்க அதை பார்த்து கேட்டான்.

“உன் தாத்தாவோடது, அன்பே!. அவர் பேரும் இவான் தான். உன் அம்மாவும் தாத்தாவும் பக்கத்திலயே இருக்காங்க” அடக்கப்பட்ட அழுகை அவள் குரலில்.

“நான் என் தாத்தாவை பார்த்தது இல்லயே” சோகமானான், இவான்.

“அவர் உன்னை பார்த்திருக்காரே! நீ தூங்கும்போது உன் கன்னத்துல முத்தம் கொடுத்தார்.”

“தாத்தாக்கு இனிமே உடம்பு சரியில்லாம போகாது தானே சித்தி?”

“ஆமா, கண்ணே! உன் அம்மாவை போல அவரும் சுகமா இருப்பார். நீ வா. நம்ம இந்த செடிய நட்டு வைப்போம். உன் அம்மாக்கு உன் பரிசு ரொம்ப பிடிக்கும்”

இருவரும் கொண்டு வந்த செடியை நடும்போது அவள் போன் ஒலி எழுப்பியது. எடுத்து பார்த்தாள். பேட்டரி இல்லாமல் அது அணைந்து போனது. எடுத்து கைப்பையில் போட்டவள் சுற்றிலும் பார்த்தாள். தூரத்தில் ஒரு காவலன் மட்டும் நின்று கொண்டிருந்தான்.

———

சையத்தின் திறந்தவெளி உணவகத்தில் ஆர்யன் தேநீர் அருந்திக்கொண்டிருக்க, சையத் மற்றவர்களுக்கு உணவு பறிமாறிவிட்டு அவன் எதிரே அமர்ந்தார்.

“ஆர்யன் சொல்லு! அந்த பொண்ணு நல்லா இருக்காளா?”

“ஆமா. இப்போ பரவால்ல. சமாளிச்சிட்டா. இன்னைக்கு இவானை கூட்டிட்டு அவன் அம்மா கல்லறைக்கு போயிருக்கா”

“என்ன, உன் அண்ணன் பையனை அவளோட அனுப்பிருக்கியா? இந்த ஆபத்தான சமயத்துல கூடவா?” சையத் கேள்விக்கு ஆர்யனிடமிருந்து பதில் வரவில்லை.

அவரே தொடர்ந்தார். “இது தான் வாழ்க்கை. தன்னை தானே புரிந்துகொள்ள கத்துக்கொடுக்குது. வெளிய உத்து கவனிக்கும்போது தான் உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியும்”

“எனக்கு புரியலயே” ஆர்யன் புருவம் சுருக்கினான்.

“வெளிச்சம் உன் இருட்டுக்குள்ளே கசியுது, மகனே!”

ஆர்யன் எதுவும் சொல்லாமல் தேநீர் குடித்துவிட்டு எழுந்தான்.

———

“சித்தி! இந்த செடிக்கு கீழ தான் அம்மா இருக்காங்களா?”

“ஆமா செல்லம்! ஆனா நீ கவலைப்படாதே! அங்க வசதியா தான் இருக்கும்”

“தாத்தா கூட இருக்கார். அம்மாவை பார்த்துக்குவார்ல சித்தி? அம்மாக்கும் போரடிக்காது”

“ஆமா இவான்! ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா இருப்பாங்க”

“அம்மா என்னை இப்போ பார்த்துட்டு தானே இருப்பாங்க?” கல்லறையை தடவிக்கொண்டே இவான் கேட்டான்.

“ஆமா தேனே! உன்னை உணரவும் செய்வாங்க. உன்னோட கையோட இதமான சூடு படறதால அவங்க மகிழ்ச்சி அடைவாங்க”

“அம்மா! ஐ லவ் யு, என் அன்பு அம்மா” செடியை சுற்றி கப்பல்களை வைத்தவன் “என் தாத்தா வீட்லயும் என் கையால கப்பல் வைக்கிறேன்” என்று சொல்லி அங்கும் வைத்தான்.

“சித்தி அங்க பாருங்க! பறவை வருது. என் குக்கீஸ் சாப்பிடுது” என சத்தமிட்டான்.

“பறவைக்கு உன் குக்கீஸ் வாசனை பிடிச்சி வந்துருக்கும், செல்லம். உன் அம்மாக்கும் பறவைகள் அதிகம் பிடிக்கும். எங்க வீட்டு முன்னே நிறைய பறவைகள் வரும். அதை பார்த்து உன் அம்மா ஆனந்தமா குதிப்பா”

“அப்போ இப்பவும் என் அம்மா சந்தோசப்படுவாங்க தானே, சித்தி?”

“ரொம்ப சந்தோசப்படுவாங்க. நீயும் அவங்களை பார்க்க வந்துருக்கே. உன் செயலால அவங்க ஆனந்தமா இருப்பாங்க”

“சித்தி! நீங்களும் இங்க இருக்கிற வீட்டுக்கு போயிட மாட்டீங்க தானே?”

“இல்ல என்னுயிரே! உன்னை விட்டு நான் போகவே மாட்டேன்”

“நீங்க போனீங்கனா என்னையும் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க”

அவனை வாரி அணைத்துக்கொண்டவள் “இல்ல இவான்! நாம ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் சேர்ந்து இருப்போம்”

“எப்பவும் என்னை விட்டு போகக்கூடாது”

“எது நடந்தாலும், எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு போக மாட்டேன்” இவான் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

கரீமா அவளுடைய காவலனுக்கு போன் செய்து ஏதோ கட்டளையிட்டாள். அவனும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

“சரி வா, இவான்! நேரமாச்சே! நாம துவா சொல்லிட்டு கிளம்புவோம்”

இருவரும் எழுந்து கைகளை விரித்துக்கொண்டு “அல்லாஹ்! என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் தானே! உங்களுக்கு எல்லாரையும் பிடிக்கும். அம்மாவை பத்திரமா பார்த்துக்கங்க. அவங்க இந்த வீட்ல வசதியா இருக்கட்டும். அவங்க பூக்கள் வாடவே கூடாது. என்னை பத்தி அவங்க கவலைப்பட கூடாது. எப்பவும் அவங்க சிரிக்கணும்” இவான் அழாமல் சொல்ல ருஹானா கண்ணீருடன் நின்றாள்.

கைகளால் முகத்தை தடவியவன் குனிந்து உட்கார்ந்து “அம்மா! ஐ லவ் யூ சோ மச்! சித்தியும் உங்களை லவ் பண்றாங்க. பாருங்க, சித்தி என்னையும் எவ்வளவு லவ் பண்றாங்கன்னு.. நீங்க என்கிட்டே சொன்னது சரிதான். சித்தி அப்படியே உங்கள போலவே இருக்காங்க. நான் அவங்க மடில படுக்கும்போது உங்க மடில படுக்குற மாதிரியே இருக்கு. சித்தி என்கூடவே இருக்காங்க. சித்தப்பாவும் இருக்காங்க. நீங்க என்னை பத்தி கவலைப்படாதீங்க. நான் இப்போ போறேன். திரும்ப வருவேன். சரியா? புது பூ, கப்பல் எல்லாம் கொண்டு வரேன். உங்களுக்கு இங்க போரடிச்சா என் கனவுல வாங்க. உங்கள நான் அங்க பார்க்கிறேன். ஐ லவ் யூ” என்று சொல்லி அழுது கொண்டே புன்னகைக்கும் சித்தியின் கையை பிடித்துக்கொண்டான்.

“சித்தி! அம்மா இன்னைக்கு என் கனவுல வருவாங்களா?”

“நீ தூங்கும்போது அவங்களை நினைச்சிட்டே படுத்தா அவங்க கண்டிப்பா வருவாங்க, அறிவு செல்லம். வா போகலாம்” என எழுந்தவள் கண்ணில் பாதுகாவலர் யாரும் தென்படவில்லை.

சிறிது யோசித்தவள் “இவான்! நீ என்னை நம்புறியா?” என கேட்க அவன் வேகமாக தலையாட்டினான்.

“நான் சொல்றபடி கேட்பியா?” அவன் இன்னும் வேகமாக தலையாட்டினான்.

அவன் கையை இறுக பற்றியவள் “ஓடு இவான்!” என்று மிக வேகமாக ஓட ஆரம்பித்தாள். இவானும் அவளுக்கு நிகராக வேகமாக கூடவே ஓடினான்.

———

“இன்னும் ஏன் அவன் போன் செய்யல” என காலை உதைத்துக் கொண்டிருந்த கரீமா ஆர்யன் உள்ளே நுழையவும் முக பாவனைகளை மாற்றிக்கொண்டாள். வரவேற்பு அறைக்கு வந்த ஆர்யன் சமையலறையையும், மாடியையும் எட்டி பார்த்து விட்டு கரீமாவிடம் கேட்டான்.

“இவான் எங்க? அவன் ரூம்ல இருக்கானா?”

“இன்னும் வரலயே.. வந்துட்டு இருப்பாங்க”

முகம் மாறிய ஆர்யன் ‘இவ்வளவு நேரமாச்சே’ என யோசிக்கவும் அவன் போன் அடித்தது.

“என்ன! இவானை தவற விட்டீங்களா? அவ எங்க ஒளிஞ்சி இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி உடனே இங்க கூட்டிட்டு வாங்க. இவானை இங்க கொண்டு வந்து சேர்க்கலனா உங்க எல்லாரையும் கொன்னுடுவேன்” மிதமிஞ்சிய கோபத்தில் கத்தியவன் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தான். ருஹானா ஆர்யனின் இருட்டு உலகை பற்றி சொன்னதும், இவானுக்கு அங்கே பாதுகாப்பு இல்லை என சொன்னதும் அவனுக்கு நினைவு வந்தது.

உள்ளே குதியாட்டம் போட கரீமா பதட்டமாக விசாரித்தாள், “என்ன ஆச்சி, ஆர்யன்?”

“இவான் சித்தி அவனை கடத்தி கூட்டிட்டு போய்ட்டா” முஷ்டி பிடித்து நாடியில் குத்திக்கொண்டவன் போனை எடுத்து ருஹானாக்கு அழைப்பு விடுத்தான்.

“அல்லாஹ் இவானை காப்பாத்தட்டும். சின்ன பையனை கடத்த அவளுக்கு எப்படி மனசு வந்தது? அவ போனை எடுத்தாளா, ஆர்யன்?” என தன் வழக்கமான நடிப்பை ஆரம்பித்தாள்.

“அவள நம்பி இவானை அவ கூட அனுப்பினது என் தப்பு” உறுமிய ஆர்யன் ரஷீத்க்கு அழைத்தபடியே வெளியே சென்றான். கரீமாவுக்கு சிரிப்பு தாளவில்லை.

“நம்ம ஆட்களை எல்லா இடமும் அனுப்பு, ரஷீத். அவ போக கூடிய இடங்கள்ல ஒரு இன்ச் விடாம தேட சொல்லு. நம்ம கண்ணுல படாம அவ தப்பிக்க முடியாது” என்று அவன் சொல்லும் நேரத்தில் வெளியே சென்ற இரு கார்களும் உள்ளே வந்தன. காரிலிருந்து இறங்கிய நான்கு காவலர்களும் கை கட்டி கொதித்துக்கொண்டிருந்த ஆர்யன் முன் நின்றனர்.