“இல்லை.. எனக்குவேண்டாம்..” ஈஷ்வர்உறுதியாகமறுத்தவன், “பார்க்கலாம்..” என்று அர்த்தமான சிரிப்புடன், மகளிடம் சொல்லி கொண்டு கிளம்ப, பல்லவிக்கு புரிந்து போனகு இன்றிரவும் வருவான் என்று.
“பல்லவி.. உள்ள வாம்மா, சாப்பிடலாம்..” ரத்னா கூப்பிட, சாப்பிட சென்றாள். மூர்த்தியும் அப்போது தான் சாப்பிட அமர்ந்தார். பரணி மகளுடன் கடைக்கு சென்றிருந்தவன் வர, அவர்களும் சாப்பிட அமர்ந்தனர்.
“அனு குட்டிக்கு என்ன பிடிக்கும் இட்லியா..? பூரியா..?” ரத்னா பேத்தியிடம் கேட்க, அவள் அம்மாவின் கழுத்தில் முகம் மறைத்தாள்.
“இப்படி தான் நாங்களும் மடியிலே வச்சு வளர்த்தோம், கடைசில என்ன கிடைச்சுது..? ஊர் உலகத்துக்கு முன்னாடி எங்க மான, மரியாதை போனதை தவிர..” கோமதி சோபாவில் அமர்ந்தபடி வார்த்தைகளை கொட்டினார். இட்லி எடுத்த பல்லவி கைகள் அப்படியே நின்றது. ஏன் கண்ணீர் கூட வரும் போல இருந்தது.
“பாட்டி என்ன பேசுறீங்க..?” பரணி கோவமாக பேச,
“என்னடா தப்பா பேசிட்டேன், யாரையோ நம்பி ஓடி போனவ தானே, பிள்ளையோட திரும்பி வந்தா எல்லாம் மாறிடுமா..?”
“அத்தை.. உங்களை கெஞ்சி கேட்கிறேன், தயவு செஞ்சு எதுவும் பேசாதீங்க..” ரத்னா கெஞ்ச,
“நீங்க இப்படி இருக்கிறதால தான் அவ இப்படி எல்லாம் நடந்துகிறா..? இங்க நம்ம விட்டு தான் ஓடி போனான்னு பார்த்தா, அங்கேயும் புருஷனை விட்டு போய் எங்கேயோ வருஷ கணக்கா இருந்திருக்கா.. அவ்வளவு திமிர், தைரியம்..” அவ்வளவு தான் பல்லவி எழுந்தேவிட்டாள்.
“இதுக்கு தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா..?” கத்த வாய் துறுதுறுத்தது. மகளுடன் வேகமாக மேலேறினாள். வந்த ஒரு நாளிலே அவள் எடுத்த முடிவு தவறு என்று உறுதியாக புரிந்துவிட்டது.
தேவாலாவில் இருந்து வந்தே இருக்க கூடாது. அவளின் ஹாண்ட் பேக்கில் எப்போதும் இருக்கும் பிஸ்கெட் எடுத்து மகளுக்கு ஊட்டி கொண்டிருக்க, அப்பா, அம்மா, அண்ணா எல்லோரும் மேலே வந்துவிட்டனர்.
“பல்லவி.. அம்மா பேசினது தப்பு தான்மா, அதுக்காக சாப்பிடாமலே வந்திட்டா எப்படி..? குழந்தைக்கு பசிக்குமே..” பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருந்த அனுவை பார்க்க மூவருக்கும் மனம் பிசைந்தது.
“பல்லவி.. பாட்டி பேச்சை மனசில ஏத்திக்காத, சாப்பிட போலாம் வா..” பரணி கூப்பிட, ரத்னா மகளை கூப்பிட கூட வாய் வராமல் நின்றார். பல்லவியின் மனம் இப்போது என்ன பாடுபடும் என்று அம்மாவாக புரிவது விட, ஒரு பெண்ணாக புரிந்தது.
“பல்லவிம்மா உன்னை நாங்களே வற்புறுத்தி கூட்டிட்டு வந்து இப்படி பேச்சு வாங்கறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, ஆனா பாட்டி பத்தி தெரியுமேடா, எங்களுக்காக வாடா..” மகளின் வயிற்றுக்காக கூப்பிட்டார் ரத்னா.
பல்லவியால் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவள் மேலும் தவறு தான் பெற்றவர்களின் நம்பிக்கையை உடைத்திருக்கிறாள். அதையும் மீறி அவள் மேல் அவர்கள் வைத்த பாசம் தான் அவளை தேடி வரவும் வைத்தது. இங்கு கூட்டி வரவும் செய்தது.
“ம்மா.. ப்ளீஸ், நான் சரியாகிடுவேன்..” மிகவும் இறுக்கமாக பேச, மூவரும் எடுத்து வந்த உணவை சாப்பிடும் படி சொல்லிவிட்டு கீழிறங்கினர்.
ஸ்மிதாவிற்கு அன்று விடுமுறை நாள் என்பதால் அனுவிடம் விளையாட வந்தாள். உடன் வந்த மகிளா அவளிடம் பேச பல்லவி நல்ல முறையில் பேசவே விரும்பினாள். ஆனால் அண்ணியின் பேச்சு ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
“இங்கிருந்து எங்க போன..? ஏன் போன..? என்ன பிரச்சனை..? அங்க போன இடத்துல சாப்பாட்டுக்கு என்ன பண்ண..? மினிஸ்டர் வீட்ல உன்னை சேர்த்துக்கலயா..?” இது போல கேள்விகள்.
இடையிடையே எள்ளலுடன் வேற பேச, பல்லவி அமைதியாகி போனாள். மருமகளின் குணம் அறிந்து ரத்னா வந்து அவளை அழைத்து செல்வதற்குள் பல்லவிக்கே தலை வலியே வந்துவிட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பல்லவியை தேடி ஒருவர் வந்தார். நரசிம்மன் அனுப்பியதாக சொல்ல பல்லவி மகளுடன் கீழிறங்கி வந்தாள். “பெரியம்மா உங்ககிட்ட கொடுங்க சொன்னாங்கம்மா..” கங்கா கொடுத்ததாக சொல்லி ஒரு பார்சலை நீட்டினார்.
“வெளியே கார் இருக்கும்மா, ட்ரைவர் இங்கேயே இருப்பார்..” பல்லவி மறுக்க இடம் கொடுக்காமல் கிளம்பிவிட்டார். அந்த பார்சலில் இருந்து சத்தம் வர, பல்லவி அதை பிரித்தாள். உள்ளே அனுவிற்கு டாய்ஸ், மற்றும் ஒரு மொபைல் இருந்தது. அது தான் அடித்து கொண்டிருக்க, பல்லவி எடுத்தாள். வீடியோ காலில் கங்கா இருந்தார்.
“நல்லா இருக்கியாம்மா..? சாப்பிட்டியா..? அனு எங்க..?” கேட்டு பேத்தியிடம் பேச ஆரம்பிக்க, கோமதி, மகிளா அமைதியாக பார்த்து நின்றனர். பல்லவி அனுவிற்கு பேச சொல்லியபடி மகளுடன் மேலேறிவிட்டாள்.