திகம்பரனின் திகம்பரி அவள் 5 1 20488 திகம்பரனின் திகம்பரி அவள் 5 பல்லவியின் திடீர் அணைப்பிலும், இதழ் முத்தத்திலும் ஈஷ்வரின் காதல் விழித்து கொள்ள, அந்த நொடி அவளின் நெருக்கத்தை விரும்பி ஏற்று கொண்டான். வருடங்கள் சென்று கிடைத்த நெருக்கம் அல்லவா..? கணவனாக அவனின் உணர்வுகள் மனைவியை தேடத்தான் செய்தது. அது தானாக கிடைக்கும் போது அனுபவிக்க செய்தான் காதல் கணவன். “ஈஷ்வர்..” பல்லவி காதலுடன் அவனின் டாலரோடு சேர்த்து கழுத்திலும் இதழ் பதிக்க, ஈஷ்வரின் கைகள் தன்னை போல எழுந்து மனைவியை தன்னுடன் இன்னும் நெருக்கமாக அணைத்தது. அவனின் அணைப்பில் பல்லவி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவளின் உதடுகள் அடுத்த நொடி ஈஷ்வரின் உதடுகளால் மூடப்பட்டது. அணைத்த கைகள் அவளின் இடையை இன்னும் தன்னோடு வளைக்க, உதடுகள் பிரிய முடியாமல் மீண்டும் மீண்டும் இணைந்தது. சிறிது தூரத்தில் விளையாண்டு கொண்டிருந்த அனுவின் பில்டிங் பிளாக்குகள் கீழே விழும் சத்தத்தில் சட்டென்று சுய நினைவிற்கு வந்த ஈஷ்வர், மகளை பார்த்து மனைவியை விலக்கி நிறுத்தினான். நல்ல வேளை அனு இவர்களை கவனிக்கவில்லை. “ச்சு..” ஈஷ்வர் பின் தலையை கோதி கொண்டு மனைவியை பார்க்க, அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் கணவன் மீதான காதல் வெளிப்படையாக தெரிய, ஈஷ்வர் கண்கள் சுருங்கியது. “முன்ன விட இன்னும் மேன்லியா இருக்கீங்க..” பல்லவி அவனை முழுதும் பார்த்து ரசித்து சொல்ல, அவனின் உதடுகளில் ஒரு கவர்ச்சி சிரிப்பு. அதனுடன் ஒரு மர்மமான சிரிப்பும் கூட. “ம்மா..” அனு திரும்ப பிளாக்குகளை அடுக்க முடியாமல் சிணுங்க, ஈஷ்வர் மகள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். மகள் இவனை பார்த்ததும் ஒரு விலகளுடன் பல்லவியை தேடினாள். புரிந்த பல்லவி உள்ளே சென்று ஒரு போட்டோ எடுத்து வந்தவள், “இது யாரு..?” கேட்டாள் மகளிடம். அனு மலர்ந்த சிரிப்புடன் “ப்பா..” என்றாள். “அப்போ இது யாரு..?” ஈஷ்வரை காட்டி கேட்க, அவள் அவனை ஆராய்ச்சியுடன் பார்க்க, “அப்பா கழுத்துல என்ன இருக்கு பாரு..” என்று டாலரை சுட்டி காட்ட, மூன்று வயது குழந்தை முழிக்கவே செய்தது. ஈஷ்வர் மனைவியை கடுங்கோவத்துடன் பார்க்க, பல்லவிக்கு அவனின் கோவம் நியாயம் என்பது புரிய தான் செய்தது. “அனு குட்டி.. இவர் தான்..” “என் பொண்ணுகிட்ட நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை.. வாயை மூடு..” ஈஷ்வர் பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினான். “ஈஷ்வர்..” “பேசாத..” அவனின் கண்கள் அவளின் கைகளில் இருந்த போட்டோவிடம் சென்றது. அது இருவரும் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்ற போது எடுத்த போட்டோ. பிரேம் போட்டு வைத்திருந்தாள். “ம்ப்ச்.. புரிஞ்சுக்கோங்க ஈஷ்வர் அவளுக்கு இப்படி இருக்கிற உங்களை தெரியும், இப்படி முகம் புல்லா முடியா இருந்தா..” பேசி கொண்டே சென்றவளுக்கு அப்போது தான் ஒன்று மண்டையில் இடித்தது. அதிர்ச்சியுடன் கணவனை ஆராய, கிடைத்த பதில் அவளுக்கு ஒப்பவில்லை போல. “ஈஷ்வர்.. உங்க முடி.. தாடி..” அவளின் கைகள் அதை தொட்டு கணவனை கேள்வியாக பார்க்க, ஈஷ்வர்க்கு ஒரு நொடி சென்று அவளின் கேள்வி புரிய முகத்தில் ஒரு சிரிப்பு. அந்த சிரிப்பு நிச்சயமாய் பல்லவிக்கு நல்லதாக படவில்லை. “ஈஷ்வர்..” உதடு வளைத்து மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தவன், பதில் ஏதும் சொல்லாமல் கன்னத்தில் இருந்த அவளின் கையை எடுத்துவிட்டவன், மகளிடம் திரும்பி பேச செய்தான். “உங்களுக்கு இந்த பிளாக் கட்டணுமா..? நான் ஹெல்ப் பண்ணவா..?” தங்களையே பார்த்து கொண்டிருந்த மகளிடம் தானாக நெருங்க முனைய, அவள் சிறிது தயக்கத்துடனே தலை ஆட்டினாள். அம்மா உடன் இருக்கும் தைரியமும் குழந்தைக்கு. அவளின் ஒப்புதல் ஈஷ்வர்க்கு மகிழ்ச்சியை கொடுக்க, மண்டியிட்ட அமர்ந்த படியே மகளுக்கு பிளாக் செய்ய கற்று கொடுக்க, அனுவும் கீழே சிதறி கிடந்த பிளாக்குகள் எடுத்து கொடுத்தாள். “பேபிக்கு இதுல எந்த கலர் பிடிக்கும்..? அதை மேல டாப்ல வைக்கலாம்..” ஈஷ்வர் கேட்க, அனுவும் மகிழ்ச்சியுடன் அவளுக்கு பிடித்த வெள்ளை கலர் பிளாக் எடுத்து நீட்டினாள். “ஏஞ்சல்க்கு ஒயிட் கலர் தான் பிடிக்குமா..? பேபியும் ஏஞ்சல் தானே..” ஈஷ்வர் கைகள் மகளின் தலையை வருட பரபரத்தது. ஆனால் தொட்டால் மகள் விலகிவிடுவாளோ நினைத்தவன், அவளிடம் பேச்சு கொடுத்த படியே வித விதமாக பிளாக்குகள் கட்டி கொடுத்தான். அதில் குஷியான அனு தன் ஒதுக்கத்தை விட்டு தானும் அவனுடன் சேர்த்து விளையாட ஆரம்பித்தாள். “ஏய்.. பேபி சூப்பரா வீடு கட்டிடீங்களே..? இது தான் உங்க வீடா..?” ஈஷ்வர் பாராட்ட, அனு முகத்தில் மலர்ந்த சிரிப்பு. “பேபிக்கு ஒரு ஆபிஸ் கட்டலாமா..?” ஈஷ்வர் கேட்க, ம்ம்.. அனு வேகமாக தலை ஆட்ட, பல்லவிக்கு பொறுமை பறந்தது. “அனு.. நீ உள்ள போய் டிராயிங் வரை, போ, அம்மா வந்துடுறேன்..” மகளை அங்கிருந்து அனுப்ப, அவள் முகம் சுருக்கி பார்த்தாள். “இப்போ எதுக்கு அவளை விரட்டுற..?” மகளின் சுருங்கிய முகம் பார்த்து மனைவியிடம் கடுப்பாக கேட்டான். “அனு.. போ..” பல்லவி மகளை எழுப்பி ரூமில் விட்டு படம் வரைய எல்லாம் கொடுத்து வெளியே வர, ஈஷ்வர் அப்படியே வெறுந்தரையில் படுத்திருந்தான். “ஈஷ்வர்.. இந்த தாடி, ஹேர் கட்.. இதெல்லாம் என்ன..?” படுத்தபடியே அவளின் முகம் பார்த்தவன், “ஏன் இதுக்கு என்ன..?” நக்கல் சிரிப்புடன் கேட்டான். “உங்களுக்கு நான் என்ன கேட்கறேன்னு புரியும்..” “புரிஞ்சா..?” அப்படியே நிறுத்தினான். “உனக்கு பதில் சொல்லனுமா என்ன..?” அவன் நிறுத்திய மீதி வார்த்தைகள் பல்லவிக்கு ரசிக்கவில்லை. இவர்களின் இத்தனை வருட பிரிவிற்கு காரணமான ஒன்றை பேசும் போது கணவனின் பதில்கள் பல்லவிக்கு கோவத்தை கொடுத்தது. “நீங்க இப்படி இருக்க கூடாது தானே..?” இழுத்து பிடித்த பொறுமையுடன் அவனின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து கேட்டாள். “யார் சொன்னது..?” “ஈஷ்வர்..” “சொல்லுடி..” அவனின் கைகள் அவளை இழுத்து தன் மேல் போட, பல்லவி உதறி வெளியே வந்தாள். “போடி..” கைகளை தலைக்கு கொடுத்து கால் மேல் கால் போட்டு படுத்தான். “இப்போ தான் உங்க கோவத்தை என்கிட்ட காட்டணுமா..? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..” “நீ கேட்கிறதை சரியா கேளுடி..” ம்ஹா.. மூச்சை இழுத்து விட்டவள், தன்னை நிதானப்படுத்தினாள். “உங்க வேலை என்ன ஆச்சு..?” “நான் எந்த வேலையில இருக்கேன்..?” “ஈஷ்வர் அப்போ நீங்க வேலையை விட்டுட்டீங்களா..?” “முதல்ல நான் எப்போ வேலைக்கு போனேன்..?” “அப்போ..” பல்லவி அதிர்ச்சியுடன் நிறுத்த, அவளின் முகம் பார்த்தவன், ஹாஹா.. என்று மெதுவாக சிரிக்க ஆரம்பித்து, தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தான். “ஈஷ்வர்.. முதல்ல இந்த சிரிப்பை நிறுத்துங்க..” “ஏன் உனக்கு தான் என் சிரிப்பு பிடிக்குமே.. மறந்துட்டியா..” கண்ணடித்து கேட்க, பல்லவிக்கு உண்மையிலே அவனிடம் எப்படி பேச என்று தெரியவில்லை. “ஏன் வேலைக்கு போகல..? உங்க பேரை நான் IPS பாஸ் அவுட் லிஸ்ட்ல பார்த்தேன்.. அதுவும் மூணாவது கிரேட்ல செலக்ட் ஆகியிருந்தீங்க..” “ஆமாம்.. அதுக்கு என்ன..?” “அப்பறம் ஏன் டியூட்டில ஜாயின் பண்ணல..” “பண்ணல..?” “அதான் ஏன்..?” “எனக்கு பிடிக்கல..” “கொஞ்சம் பொறுப்பா பேசுங்க ஈஷ்வர்..” “என்னடி இது..? நீ கேட்ட கேள்விக்கு தானே நான் பதில் சொல்லிட்டு இருக்கேன்..” “இது பதிலா..? ஏன் IPS செலெக்ட் ஆகியும் வேலையில ஜாயின் பண்ணலன்னு சொல்லுங்க..” “ஜாயின் பண்ணலைன்னு யார் சொன்னா..?” “ஈஷ்வர்ர்ர்ர்..” “ஏன் இவ்வளவு டென்க்ஷன்..? கூல் பேபி..” அவளை மீண்டும் இழுக்க, பல்லவி கோபத்துடன் அவனின் கையை தட்டிவிட்டாள். “க்கும்.. ரொம்பத்தான்..” “ஈஷ்வர்.. எனக்கு சரியான பதில் சொல்லுங்க..” “நான் வேலையில ஜாயின் பண்ணேன்.. ஆனா ஜாயின் பண்ண அடுத்த செகண்டே ரெசிக்னேஷன் லெட்டரையும் கொடுத்துட்டேன்..” “என்ன..?” “ஹாஹா..” “ப்ளீஸ் சிரிக்காதீங்க ஈஷ்வர்..” “ஆமாம் இல்லை சிரிக்க கூடாது.. உன்கிட்ட கோவமா பன்ச் டைலாக் பேசணும்..” “அப்போ வேணும்ன்னே தான் இதை செஞ்சிருக்கீங்க..?” “ஆமாம்டி என் பொண்டாட்டி..” “எங்களை கஷ்டப்படுத்தவா இப்படி செஞ்சிங்க..?” “ம்ஹூம்.. எனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த உனக்கும், உன் மாமனாருக்கும் நானும் ஒரு ஷாக்கிங் கிப்ட் கொடுக்கணும் நினைச்சேன்.. கொடுத்துட்டேன்.. என்ன பிடிச்சுதா..?” கேட்டவன் முகத்தில் ஒரு சீறலான சிரிப்பு. “ஈஷ்வர்..” பல்லவியின் கண்கள் கலங்கியது. “ஆனந்த கண்ணீர் விடுற அளவுக்கா என் கிப்ட் பிடிச்சுது..?” “ப்ளீஸ் ஈஷ்வர் போதும்..” “இன்னும் ஆரம்பிக்கவே இல்லைடி..” “எங்களை பழிவாங்க உங்க ஐடன்டிட்டியை ஏன் தொலைச்சீங்க..?” “அது என் ஐடன்டிட்டின்னு நான் சொல்லவே இல்லையே பேபி.. நீயும், உன் மாமனாரும் தானே சொல்லிட்டு இருந்தீங்க..?” “நீங்களும் தானே என்னோட அகாடமி ஜாயின் பண்ணீங்க..?” “அது நீ upsc கோச்சிங் சேர்ந்ததால தான் நானும் சேர்ந்தேன்னு உனக்கு தெரியாதா..? புதுசா கேட்கிற..?” “ஓஹ் காட்.. ஆனா நான் கேட்டதுக்கு படிக்கிறேன் தானே என்கிட்ட ப்ராமிஸ் பண்ணீங்க..?” “இப்போவும் படிச்சு செலக்ட் ஆகிட்டேன் தானே..?” “அப்போ இத்தனை வருஷம் நான் உங்களை பிரிஞ்சதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனை இது..” “பரவாயில்லையே.. டக்குன்னு பிடிச்சுட்ட..” “ஈஷ்வர்.. ஏன் ஈஷ்வர்..?” இத்தனை வருட வேதனைகள் எல்லாம் வீண், நினைக்க நினைக்க பல்லவி கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிய, ஈஷ்வர் முகத்தில் சிறிது இளக்கமும் இல்லை. “உனக்கு என்னை விட அந்த ஐபிஸ் தான் முக்கியமா தெரிஞ்சது.. உன் மாமனார் ஏதோ கேட்டார்ங்கிறதுக்காக என்னை பத்தி கொஞ்சமும் நினைக்காமல் என்னை பிரிஞ்சு வந்த இல்லை.. என்னை கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு..?” “உங்க அப்பாவும் உங்களுக்கு தப்பா எதுவும் நினைக்கலையே..? அவர் மனசுல எதாவது இருக்கும் இல்லை, பொறுமையா அவர்கிட்ட பேசியிருக்கலாம் நீங்க..” பல்லவி கேட்ட நேரம் சாப்பிட சென்றிருந்தவர்கள் உள்ளே வர, அவர்களின் பேச்சு கேட்டு அப்படி அப்படியே நின்றனர். வீட்டுக்கு வெளியவே நின்றுவிட்ட நரசிம்மனுக்கு பல்லவி கேள்வி காதில் விழுக, மகனின் பதில் என்னவாக இருக்கும் என்று புரிய அவரின் முகத்தில் அவ்வளவு வேதனை. உள்ளே நுழைந்த இவர்களை பார்த்த ஈஷ்வரின் பார்வையில் வெளியவே நின்றுவிட்ட நரசிம்மன் பட, வார்த்தைகள் சத்தமாகவே வந்தது. “எனக்கு தப்பா எதுவும் நினைக்கலையா..? ஹாஹா.. சிரித்தவன், உன் மாமனார் சரியா நினைச்சாரோ, தப்பா நினைச்சாரோ.. அவருக்கு எதாவது காரணம் இருந்துச்சோ..? இல்லையோ..? அது எல்லாம் எனக்கு இனி தேவையில்லை. நான் கேட்க போறதும் இல்லை..” “நீங்க ரெண்டு பேரும் ஆசைப்பட்ட ஐடன்டிட்டி எனக்கு இப்போ இல்லை.. அந்த ஐடன்டிட்டி மட்டும் இல்லை இந்த ஈஷ்வர்க்கு எந்த ஐடன்டிட்டியும் இல்லை.. ம்ஹூம் அப்படி சொல்ல முடியாது, இருக்கு.. அது நீயே நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ..” கேலியான சிரிப்புடன் முடிக்க, அது கண்டிப்பாக நல்லதாக இருக்க போவதில்லை என்பது பல்லவிக்கு புரிந்து போனது. கங்காவிற்கு இது பழக்கம் என்றாலும் திரும்பி கணவனை வருத்தத்துடன் பார்க்க, பரணி, ரத்னா இருவருக்கும் இது புதிது. ஏதோ புரிந்தும் புரியாமலும் பார்த்து நின்றனர். பல்லவி கண்களை துடைத்து எழுந்து மகளிடம் செல்ல, ஈஷ்வர் படுத்த இடத்தை விட்டு அசையவில்லை. “ஈஷ்வர்.. சாப்பிட வா..” கங்கா மகனிடம் சென்று கூப்பிட, “கொடுங்கம்மா பசிக்குது..” எழுந்து அமர்ந்தவன், “பேபியை கூப்பிடுங்கம்மா..” என்றான் அம்மாவிடம்.