மறந்து போ என் மனமே
அத்தியாயம் 4
வெண்மதி தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டிருந்தாளே… அதோடு தன்னோடு இருப்பவர்களே அவளுக்குத் தான் எங்கே போகிறோம், வருகிறோம் எனத் தகவல் கொடுக்கிறார்கள் என நினைத்து இளமாறன் முன்பு போலச் சுந்தரியை தனியாகச் சந்திப்பதோ, பேசுவதோ இல்லை. அதற்காக முழுதாகத் தொடர்பை விடவும் இல்லை. போன்னில் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்.
இளமாறனுக்குச் சுந்தரிக்காக வெண்மதியை பிரியும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் சுந்தரி அப்படியில்லை. அவள் வெண்மதியின் இடத்தைப் பிடிக்க நினைத்தாள்.
தன் பிடி தளர்வதாகச் சுந்தரி உணர்ந்தாள். இளமாறனை இழக்க அவள் விரும்பவில்லை. ஒருமுறை கோவிலில் வைத்து மணிமேகலையைப் பார்க்க… அவள் இவளைப் பார்த்துப் புன்னதைத்தது, சற்று நம்பிக்கையைத் தந்திருக்க… வேறு விதமாக முயற்சி செய்ய வேண்டும் என நினைத்தாள்.
மணிமேகலையின் கணவன் பேன்சி ஸ்டோர் வைத்திருக்க… மணிமேகலையும் கணவனுடன் கடையில் இருப்பாள். அங்கே பொருட்கள் வாங்குவது போல சுந்தரி செல்ல… மணிமேகலைக்கும் அவளை யார் என்று தெரிந்தது. அவள் இவளிடம் நன்றாகப் பேச… சுந்தரிக்கு நம்பிக்கை வந்தது.
மணிமேகலைக்கு வெண்மதியைப் பிடிக்காது. தன்னை விட வசதியாக வாழ்கிறாள் என்ற பொறாமை. இத்தனைக்கும் வசந்தா தன் கணவரின் பென்ஷன் பணத்தை மகள்களுக்குதான் செலவழிப்பார். அதனால் இளமாறன் தங்கைகளுக்கு எனத் தனியாகப் பணம் கொடுக்க மாட்டான். வீட்டுக்கு வரும் போது நன்றாகக் கவனிப்பதோடு சரி.
வெண்மதி தான் தன் அண்ணனிடம் சொல்லிக்கொடுத்து, தங்களுக்குச் செய்ய விடுவது இல்லை என மணிமேகலை நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது சுந்தரியோடு நட்பு பாராட்டுவது வெண்மதியை பழி வாங்குவது போலச் சந்தோஷமாக இருந்தது.
சுந்தரி வரும்போதெல்லாம் மணிமேகலைக்கு எதாவது வாங்கிக் கொண்டுதான் வருவாள். மணிமேகலை தான் கெட்டதும் இல்லாமல், தன் அம்மா மற்றும் சகோதரியையும் சேர்த்து கெடுத்தாள்.
“அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு மா… அண்ணனுக்கு ரொம்பப் பொருத்தம். அந்தப் பெண்ணையே அண்ணன் கல்யாணம் பண்ணியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என மணிமேகலை தூண்டி விட்டுக் கொண்டே இருந்தாள்.
இப்படியே மூன்று மாதங்கள் சென்றிருந்தது. இளமாறன் சுந்தரியிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க, இன்றைக்குத் தருகிறேன் நாளைக்குத் தருகிறேன் என இழுத்தடித்துக் கொண்டிருந்தாள்.
“உன்னோட பழகின பாவத்துக்கு வட்டி போனாப் போகுது. அசலையாவது கொடு.” எனக் கேட்டுக் கொண்டிருந்தான். அதில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது.
மணிமேகலை இருப்பது ஏற்கனவே சொந்த வீடு தான். ஆனால் சின்ன வீடு. இப்போது புதிதாக இன்னும் ஒரே அறை எடுத்து, மாடியிலும் ஒரு அறை கட்டி… வீட்டை பெரிதாக்கி இருந்தனர்.
நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துப் பால் காய்ச்சினர். காலையில் இளமாறனும் வந்திருந்தான். ஆனால் காலை உணவு முடிந்ததும் கடைக்குச் சென்றுவிட்டான். வெண்மதியும் பிள்ளைகளும் மாமனார் மாமியாரோடு மாலை வீடு திரும்புவதாக இருந்தது.
மணிமேகலை வீட்டில் மதிய விருந்து வீட்டிலேயே தயாராக… வெண்மதியும் அவர்களுக்கு உதவி கொண்டு இருந்தாள். அப்போது சுந்தரி நன்றாக உடை அணிந்து வந்தாள். மணிமேகலை ஆவலாகச் சென்று வரவேற்க… வசந்தாவும், அவரது மூத்த மகள் ரஞ்சிதாவும் யார் என்பது போலப் பார்க்க…. மணிமேகலை அவர்கள் காதில் கிசுகிசுக்க… ஓ… அவளா என இருவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
வேலை முடித்து உட்காரலாம் என வந்த வெண்மதி, அப்போதுதான் சுந்தரியைப் பார்த்தாள். ஆனால் அவளுக்குத்தான் யார் என்று தெரியாதே…. யார் இது என்பது போலப் பார்த்தவள், “யாரு அண்ணி இவங்க.” என்றதற்கு,
“இவங்க எங்க ரெகுலர் கஸ்டமர்.” எனப் பேரை சொல்லாமல் மணிமேகலை சமாளிக்க… யாரோ என நினைத்து வெண்மதியும் சுந்தரியைப் பார்த்து புன்னகைத்து வைத்தாள். பட்டுப் புடவை நகைகள் அணிந்து லட்சனமாக இருந்த வெண்மதியைப் பார்த்து சுந்தரிக்குப் பொறாமையாக இருந்தது.
வெண்மதிக்குத் தெரியாமல் ரகசிய உபசரிப்பும் சுந்தரிக்கு நடந்தது. வசந்தா வேறு சுந்தரி மீது மிகுந்த அக்கறை காட்டினார். மதிய உணவு நேரத்தில் சுந்தரிக்கு, இது வை, அது வை என வசந்தா அதிக அக்கறை காட்ட…. எதுக்குத் தெரியாதவங்களுக்கு இவ்வளவு உபசரிப்பு என நினைத்து வெண்மதிக்குச் சந்தேகம் வந்தது.
அவள் மணிமேகலையின் கணவனிடம், “அண்ணா, அவங்க பேர் என்ன?” என்று கேட்க, அவன் உடனே சத்தமாக மணிமேகலையிடம், “அவங்க பேர் சுந்தரி தானே.” எனக் கேட்டதும், எல்லோருக்கும் அதிர்ச்சி என்றால்.. வெண்மதிக்குப் பேரதிர்ச்சி.
சுந்தரியின் அருகில் உட்கார்ந்து உண்டு கொண்டிருந்த தன் பிள்ளைகளை எழுப்பி அழைத்து வந்தவள், “தூ… இதுக்கு நீ வேற தொழில் பண்ணலாம். வீட்டுக்கு முன்னாடியே போர்டு மாட்டிடு…. உங்க அம்மாவையும் கூட வச்சுக்கோ.” என மணிமேகலையிடம் ஆத்திரமாகக் கத்திவிட்டு, சுந்தரியைப் பார்த்து பார்வையில் நெருப்பை உமிழ்ந்தவள், மேலும் ஒரு நொடி கூடத் தாமதிக்காது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல…
“இரும்மா என்ன ஆச்சு?” என மணிமேகலையின் கணவனும், ரஞ்சிதாவின் கணவனும் பின்னே வர… “உங்க பொண்டாட்டியை கேளுங்க.” என்றவள், வந்த ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டாள்.
“ஐயோ என்னால அவங்க போயிட்டாங்களே…” என வருந்துவது போலச் சுந்தரி நடிக்க…
“இவங்க யாரு?” எதுக்கு உங்க அண்ணி கோவிச்சிட்டு போறாங்க.” என மணிமேகலையின் கணவனும் புகுந்த வீட்டினரும் கேட்க, மணிமேகலை என்ன சொல்லுவாள்.
அவளுக்கு என்ன வேலை என வசந்தா சமாளிக்க… சுந்தரியும் அங்கிருந்து உடனே கிளம்பி விட்டாள்.