அடுத்த சில மணி நேரங்களில் விக்ரம் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவினாஷிற்கு அழைத்தான்.

“அவினாஷ் நான் வந்திட்டேன்”

“பிப்த் ப்ளோர்”

“ஓகே வர்றேன்” என்றவன் உள்ளே நுழைந்தான். இவனை கண்டவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க தலையசைத்து லிப்ட் இருக்குமிடம் நோக்கி விரைந்தான். உள்ளே நுழைந்து ஐந்தாம் எண் பொத்தானை அழுத்த லிப்ட் மேலே நகர்ந்தது.

லிப்ட் ஐந்தாம் தளத்தில் நின்று கதவை திறக்கவும் அவினாஷ் அவனை வாசலிலேயே எதிர்க்கொண்டான். “எல்லாம் ரெடியா தானே இருக்கு” என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் நண்பனிடம்.

“பக்காவா இருக்கு, நீ பார்த்து சொன்னதும் பிக்ஸ் பண்ணிறலாம்”

“ஜேக்கப் தானே வந்திருக்கான்”

“அவனே தான்”

“அவன்கிட்ட அந்த விஷயத்தை சொல்லிட்டியா??”

“தெரியும் அவனுக்கு பிரச்சனைன்னா அவனோட ஆள் தான் சரண்டர் ஆவான். அங்க சுத்தி இங்க சுத்தி அவன்கிட்ட வந்தாலும் அவன் வாயே திறக்க மாட்டான். உனக்கே தான் தெரியுமே”

“ஹ்ம்ம்… இருந்தாலும் இப்போ நடந்த பிரச்சனைப்பத்தி தான் ஒரே யோசனை எனக்கு”

“அதைவிடு” என்று அவினாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த தளத்தில் இருந்தா நான்கு வீடுகளில் ஒன்றிற்குள் நுழைந்திருந்தனர்.

“எந்த பிரச்சனையும் இல்லாத பேமிலி தானே அவினாஷ்”

“அதான் அன்னைக்கு நீயே விசாரிச்சியே விக்ரம். இவங்க மிடில் கிளாஸ் பேமிலி தான். பேங்க்ல நகை வைச்சு, லோன் போட்டுன்னு தான் இந்த வீட்டையே கட்டுறாங்க. என்ன பண்ணாலும் எங்கயும் போக மாட்டாங்க”

“அதானே நமக்கு வேணும்” என்ற விக்ரம் அவன் முன் வந்து நின்ற ஜேக்கப்பை பார்த்து சிரித்தான்.

“என்ன ஜேக்கப் எப்படியிருக்கே?? வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு??”

“உங்க கருணை என் மேல இருக்க வரைக்கும் நல்லா இருப்பேன் ஜி”

“ஜிலாம் சொல்லதாடா”

“எல்லாம் ஒரு மரியாதை தான்”

“சரி இருக்கட்டும் வேலையை ஆரம்பிச்சிடு நான் ஒன்ஸ் பார்க்கணும் அதுக்கு தான் வந்தேன்”

“எங்கன்னு சரியா சொல்லிடுங்க நான் வேலையை முடிச்சிடறேன்”

“என்ன புதுசா கேட்கறே?? பெட் ரூம்ல இருக்கற வார்ட்ரோப்ல தான் பிக்ஸ் பண்ணணும். நீ பிக்ஸ் பண்ண முன்னாடி வைச்சுக்காட்டு ஆங்கிள் சரியா இருக்கான்னு மட்டும் நான் பார்த்திடறேன்”

“ஓகே ஜி” என்றவன் தன் கையில் இருந்த மைக்ரோ கேமிராவை வார்ட்ரோபில் போடப்பட்டிருந்த சிறு துளையில் வைத்து ஏதேதோ செய்தான் சில நொடிகள். பின் விக்ரமிடம் வந்தவன் “ஜி சரியா இருக்கான்னு பாருங்க” என்று சொல்ல தன் கையில் இருந்த டேபில் மேலும் கீழும் தள்ளிய அவினாஷ் தன் நண்பனிடம் அதைக் கொடுத்தான்.

“பெர்பெக்ட் ஜேக்கப்”

“ஜேக்கப் அதுல தான் ஸ்பெஷல் ஆச்சே” என்றான் அவினாஷ்.

“நெக்ஸ்ட் எங்கே ஜி”

“ட்டுவெல்த் பிளோர்” என்ற விக்ரம் “இனிமே நீங்க பார்த்துக்குவீங்க தானே, அவினாஷ் நான் கிளம்பறேன் எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.

அவன் சென்றதும் ஜேக்கப் அவினாஷிடம் “ஏன் சார் வைக்கிற கேமிராவை எல்லா வீட்டிலையும் வைக்கலாம்ல. காசு இன்னும் அதிகமா புரளும்ல”

“டேய் மடையா காசு புரளாதுடா நம்மளை போலீஸ் தான் புரட்டி எடுக்கும் நீ சொல்ற மாதிரி செஞ்சா… ஒருத்தன் இல்லைன்னா இன்னொருத்தன் தைரியமா போலீஸ் போய்டுவான் அதுவும் ஒரே இடத்துல இருக்கிற அத்தனை பேரும் ஒண்ணா கூடிட்டா நம்ம கதி அதோகதி தான்”

“எல்லா இடத்துலயும் இது போல செய்ய முடியாது. இடம் பார்த்து ஆள் பார்த்து தான் எல்லாம் செய்யணும். இங்க வைச்சிட்டா இனி அடுத்து ஒரு நாலு மாசத்துக்கு எங்கயும் இதை செய்ய மாட்டோம். என்னமோ புதுசா கேட்குற மாதிரி கேட்டுட்டு இருக்க, உனக்கு தெரிஞ்சது தானேடா”

“தெரியும் சார் எனக்கு இந்த கேமிரா ஏன் எல்லா வீட்டிலையும் வைக்கலைன்னு தான் டவுட்டு தான் கிளியர் பண்ணிட்டீங்களே. சரி சார் வாங்க அடுத்த வீட்டில போய் பிக்ஸ் பண்ணிடுவோம்” என்ற ஜேக்கப்புடன் அவினாஷும் உடன் சென்றான்.

ஆம் அவர்கள் செய்வது சைபர் கிரைம். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமலே பதிவு செய்து அதை வெளிநாட்டிற்கு விற்று காசாக்குவது அவர்களுக்கு பொழுதுபோக்கல்ல பணம் கொழிக்கும் வியாபாரம் அது.

கல்லூரியில் தான் அவினாஷும் விக்ரமும் நண்பர்களானார்கள். விக்ரம் சிறு வயது முதலே ஹாஸ்டல் வாசம் தான், அவன் படிப்பு ஒன்றே குறியாய் அவனின் தாயும் தந்தையும் சேர்ந்தே தான் அவனை விடுதியில் சேர்த்துவிட்டனர்.

ஆறாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தவன் பின் ஆத்திரேயன் படித்த அதே பள்ளியில் அவன் பெற்றோரால் சேர்த்துவிடப் பட்டான்.

அங்கு தான் அவனுக்கு ஆத்திரேயன் பழக்கமானான். பள்ளியில் அவன் நண்பன் ஆதி மட்டுமே. பன்னிரண்டாவது முடிக்கவும் கல்லுரிக்காய் மீண்டும் அவனுக்கு விடுதி வாசம்.

விடுதியில் அவனுக்கு துணை அவினாஷ். விக்ரமிற்கு பணமிருந்தாலும் அவனை பகட்டாய் வளர்க்க நினைக்கவில்லை அவன் பெற்றோர். மாறாய் விக்ரம் பகட்டாய் மட்டுமே வாழ நினைத்தான்.

அவனுக்கு செலவுக்கென்று தனியே எந்த காசும் கொடுக்க மாட்டார்கள் அவன் பெற்றோர்கள். மற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் சில நூறுகள் பணம் கூட அவனுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.

ஆனால் அவன் கேட்டது கேட்கும் முன்பேயே வாங்கிக் கொடுக்க நினைப்பவர்கள் தாம் அவர்கள். விடுதி வாசத்தில் அவன் நல்லதை கற்றுக்கொள்வான் என்று பெற்றோர்கள் எண்ணியிருக்க அவன் கற்றுக்கொண்டது அனைத்தும் கெட்ட பழக்க வழக்கங்களே.

பெண்கள் ஹாஸ்டலுக்கு திருட்டுத்தனமாய் சென்று ஒளிந்திருந்து பார்ப்பது. பெண்கள் குளியறையில் சிறு சிறு ஓட்டைகளை ஏற்படுத்தி அதன் வழியே பார்ப்பது என்று நிறைய கெட்ட சகவாசம் அவனிடத்தில்.

எதை செய்தாலும் மாட்டிக்கொள்ளாது செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தேர்ந்துக் கொண்டிருந்தான் அங்கேயே. படிப்பு முடிந்து தந்தையின் அலுவலகத்தில் அவரிடமே அனைத்தும் கற்றுக்கொண்டவன் அவினாஷை தனக்கு துணையெனச் சொல்லி அவன் அலுவலகத்திலேயே சேர்த்துக் கொண்டான்.

அப்படியொரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அது போன்ற எண்ணமே விக்ரமிற்கு வந்தது. “மச்சான் நம்ம ஹாஸ்டல்ல எவ்வளவு ஜாலியா இருந்தோம்லடா. லேடீஸ் ஹாஸ்டல் போய் மறைஞ்சு இருந்து எட்டிப்பார்க்கறதுன்னு எவ்வளவு கலாட்டா பண்ணியிருக்கோம்ல” என்று தங்கள் கல்லூரி நாட்களைப் பற்றி ஆரம்பித்த மலரும் நினைவுகள் தான் அந்த விபரீத எண்ணத்திற்கு வித்திட்டது.

“அதெல்லாம் ஒரு காலம்டா. எவ்வளவு என்ஜாய் பண்ணியிருப்போம், எனக்கு தெரிஞ்சு நாம தான்டா மாட்டிக்காம என்ஜாய் பண்ணோம். நம்ம குண்டுமணி சார்க்கெல்லாம் நாம ரொம்ப நல்ல பசங்கன்னு இப்போ வரைக்கும் நினைப்புடா”

“அப்படியா சொல்றே, நீ எப்போடா அவினாஷ் அவரைப் பார்த்தே”

“போன வாரம் நம்ம திருமழிசை சைட் பார்க்க போனேன்ல அங்க தான் சாரை பார்த்தேன். எப்பவும் போல அவரை பார்த்ததும் வணக்கம் வைச்சேன், மனுஷன் வழக்கம் போல குளிர்ந்திட்டார்”

“அவினாஷ் எனக்கு மறுபடியும் அதே போல இருக்கணும்ன்னு ஆசையா இருக்குடா”

“என்னடா காலேஜ் போகணுமா??”

“இல்லை”

“அப்புறமென்ன லேடீஸ் ஹாஸ்டல் பாத்ரூம்க்கு போய் எட்டிப் பார்த்தோமே அப்படி”

“உனக்கு ஏன்டா இப்படி புத்தி போகுது. நீ என்ன மாதிரி ஒரு பொசிஷன்ல இருக்கே. எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கே, ரொம்ப ஆசையா இருந்தா வீட்டில சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லு. இல்லையோ நீயே ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ”

“அதெல்லாம் எல்லாருக்கும் எல்லா காலத்துலயும் நடக்கறது தானேடா. நாம புதுசா எதுவாச்சும் செய்வோம்” என்றவன் அடுத்து சொன்னதை கேட்டு அவினாஷ் மயக்கம் போடாத குறை தான்.

“எனக்கு ஒரு ஐடியா மச்சான்”

“வேணாம்டா”

“நீ முதல்ல கேளு” என்றவன் “நாம பெரிய பெரிய அபார்ட்மென்ட்ஸ் கட்டிக் கொடுக்கறோம்ல. அதுல மோஸ்ட்லி இன்டீரியரும் நாம தான் பண்ணிக்கொடுக்கறோம். கண்டிப்பா பெட்ரூம்ல வார்ட்ரோப், செல்ப் வித் டோர்ஸ்ன்னு ஏதாச்சும் ஒண்ணு பண்றோம்ல” என்றவன் விவரித்தது விவகாரமான விஷயத்தை.

அங்கு மைக்ரோ கேமிரா வைப்பது என்று அவன் சொல்ல முதலில் மறுத்த அவினாஷும் விக்ரமுடன் சேர்ந்துக் கொண்டான்.

எப்போதும் போல் செய்யும் தவறை சரியாய் செய்ய அவர்கள் எடுத்த முயற்சி தான் அங்கு குடிவருபவர்கள் பற்றிய விபரமும் பின்புலமும் அறிவதும்.

குடி வருபவர்களின் பின்புலம் செல்வாக்கானதாகவோ காவல்துறையுடன் தொடர்பு கொண்டதாகவோ இருந்தாலோ அவர்களை எல்லாம் ஒதுக்கிவிடுவர். ஐடி துறையில் கணினியில் புகுந்து விளையாடுபவர்கள் கூட விதிவிலக்கு தான் அவர்களுக்கு.

அவர்கள் தேர்ந்தெடுப்பது நடுத்தர குடும்பம் மட்டுமே. விளையாட்டு போல அதை ஆரம்பித்தவர்கள் ஆரம்பத்தில் அந்த வீடியோக்களை அவர்கள் மட்டுமே பார்த்து வந்திருக்க அவினாஷ் விக்ரமிடம் அதை இன்டர்நெட்டில் விட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்றான் ஒரு நாள்.

“டேய் நீ நம்மளை மாட்டிவிட வழி சொல்ற. நாம இதை நெட்ல போட்டா நம்ம ஐபி அட்ரஸ் எல்லாம் பார்த்து நம்மளை கொத்தா பிடிச்சு உள்ள போட்டிருவாங்கடா”

“அப்போன்னா இதை வெளிநாட்டுக்கு வித்திடலாம். சும்மாவே ஒரு வருமானம் வந்தா வேண்டாம்ன்னு சொல்வியா”

“அப்படியா சொல்றே” என்று யோசித்த விக்ரம் “சரி பிப்டி பிப்டி ஷேர்” என்று ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.

“சொல்லுங்கக்கா வாயே திறக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தா எதுக்கு இங்க வந்தீங்க?? உங்ககிட்ட யாரு கேட்டாங்கன்னு சொல்லுங்க. என்ன சொல்லி மிரட்டினாங்க உங்களை??”

“மெல்லினா என்னை மன்னிச்சுடு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”

“அக்கா என்ன பிரச்சனைன்னு மட்டும் சொல்லுங்க”

“பிரச்சனை எனக்கில்லை”

“என்ன உங்களுக்கு இல்லையா?? அப்போ யாருக்கு??”