யுகம் சுகம் தானே 14 1 16139 யுகம் சுகம் தானே 14 கணவனின் நெஞ்சில் சாய்ந்திருந்த ஷாவிற்கு முன் போல் இல்லாமல் மனம் இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. அவளின் இத்தனை வருட பாரத்தை உதய்யிடம் சொல்லி அழுதிருக்க, லேசான உணர்வு. அப்படியே தூங்கி போக, மறுநாள் மிகவும் தாமதமாக தான் எழுந்தனர். அவர்களை யாரும் எழுப்பவும் செய்யவில்லை. அனிதாவும், அனிதா கணவரும் காலை டிபன் முடித்து பிள்ளைகளுக்காக ராமிடம் சொல்லி கொண்டு கிளம்பினர். ராம் வீட்டில் இருந்தடியே போனில் ஜித்தன், ஜின்னா மூலம் ஆபிஸை பார்த்துக்கொள்ள, அங்கு கணபதியும் மகனுக்காக ஆபிஸ் சென்றார். காலை பத்து மணி போல எழுந்த உதய், தன்னில் இருந்து தள்ளி படுத்திருந்த ஷாவை பார்த்துவிட்டு குளித்து வந்தவன், கிளம்பி கீழே சென்றான். “வாங்க உதய்.. முதல்ல சாப்பிட்டு வந்துடலாம்.. நேரம் ஆச்சு..” சோபாவிலே அமர்ந்திருந்த ராம் மருமகனை நேரே டைனிங் டேபிள் அழைத்து சென்றார். “நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா..? அனிதா.. மாமா எங்க..?” எல்லாம் கேட்டு கொண்டே சாப்பிட, ராம் அவனுடனே இருந்தார். ஜோதி சுட சுட பூரியை கொண்டு வந்து வைக்க, உதய் பசியில் நன்றாகவே சாப்பிட்டான். “காபி..” உணவு முடியவும் ராம் கேட்டு, ஜோதியிடம் ஹாலுக்கு எடுத்து வர சொன்னவர், மருமகனுடன் அமர்ந்தார். இன்று தான் இருவருக்கும் தனியே பேசும் சமயம் வாய்த்தது. உதய் எடுத்தவுடனே, “பிரசாத், கலாதரனை விட்டுட்டிங்களா மாமா..?” என்று தான் கேட்டான். “காலையில தான் விட்டேன்..” அவருக்கு அவன் கேட்டதில் அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவருக்கென இப்போதும் ஒரு உளவு படையே கையில் இருந்தது. அவருக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யார் என்ன செய்தாலும் அவருக்கு தெரிய வந்துவிடும். அப்படி இருக்க மருமகன் பற்றி தெரியாதா..? ஜோதி காபி எடுத்து வந்து கொடுக்க உதய் எடுத்து கொண்டவன், “உங்களுக்கு மாமா..?” என்றான். “டாக்டர்ஸ் அட்வைஸ் உதய் காபி எனக்கு வேண்டாம்ன்னு.. டீ மட்டும் தான். அதுவும் ஒரு நேரம் தான்..” என, உதய் காபியை குடித்து வைத்தான். “உதய் உங்க விஷயத்துல நான் ஏதாவது சொல்லலாமா..?” ராம் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார். “தாராளமா மாமா.. ஏன் இவ்வளவு தயக்கம்..?” உதய் சொல்ல, “நீங்க முன்ன இருந்தது போல நீங்களாவே இருங்க உதய்.. உங்களுக்கு இந்த சிட்டு பழக்கம் எல்லாம் வேண்டாமே, அவங்க ஆளுங்க எல்லாம் அனுப்பிடுங்க, நம்ம ஆளுங்க வச்சு நான் பார்த்துகிறேன்..” என, உதய் சற்று நேரம் யோசித்தான். “மாமா.. நீங்க சிட்டு அண்ணாவை சந்தேக படுறீங்களா..?” “நோ.. நோ உதய், அவங்க ஒருத்தங்ககிட்ட பழகிட்டா அவங்களுக்காக உயிரையே கொடுப்பாங்க, நான் அதுக்கு சொல்லலை, இந்த லைன் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன் கொடுக்கும்ன்னு தான்..” “புரியுது மாமா.. நானும் முதல்ல பிஸ்னஸ்க்கு எதுக்கு ஒரு அண்டர்கிரவுண்ட் ஆளுங்க நினைச்சிருக்கேன், ஆனா இப்போ இருக்கிற பிஸ்னஸ் உலகம் ரொம்ப மோசமா இருக்கு, யாரும் யாரையும் நேரா அடிக்க மாட்டேங்குறான், முதுகுல தான் குத்துறான், நாம அப்படி செய்ய போறதில்லை தான், ஜஸ்ட் உங்களை மாதிரி நானும் என் எதிரிகளை என் பார்வையில் வைக்க நினைக்கிறேன் அவ்வளவு தான்..” “அண்ட் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிற டென்க்ஷன் போதும் மாமா, எனக்கும் சேர்த்து நீங்க ப்ரெஷர் எடுத்துக்க வேண்டாம், என்னால மேனேஜ் பண்ண முடியும்.. முடியலன்னா கண்டிப்பா உங்ககிட்ட கேட்கிறேன்..” முடித்துவிட, அதற்கு மேல் என்ன பேச முடியும்..? இவன் இப்படித்தான் என்று ராமிற்கு தெரியாமல் இல்லை. அதனால தானே தன் ஒரு மகளை அவனக்கு கொடுக்க நினைத்ததும். “மாமா.. பிரசாத், கலாதரன் விஷயத்துல ஏதாவது யோசிச்சு இருக்கீங்களா..?” என்று உதய் கேட்க, “நிறைய யோசிச்சு விட்டுட்டேன் உதய்.. பிரசாத் அப்பா முகுந்தனுக்காக. காலேஜிலிருந்து ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ். என்னோட எல்லா நல்லது கெட்டதிலும் எனக்கு இருந்த ஒரே ஒரு ஆத்மார்த்தமான நண்பன். நிறைய விஷயங்கள்.. என் ஷாக்க்ஷிகிட்ட கூட ஷேர் பண்ண முடியாத என் வருத்தத்தை, கோவத்தை அவன் தான் தாங்கியிருக்கான், ஆறுதல் சொல்லியிருக்கான், ஒரு மாரல் சப்போர்ட் கொடுத்திருக்கான். அவன் மகனை போய்..” “மாமா.. இப்படின்னு முகுந்த் சார்கிட்ட பேசலாமே நீங்க..?” “நான் பேச வேண்டியதே இல்லை உதய்.. அவன் தான் முதல்லே பிரசாத் கலாதரன் பத்தி என்கிட்ட சொன்னதே, இன்பேக்ட் அவனுக்கு ஷாவை ரொம்ப பிடிக்கும், மருமக.. மருமகன்னு உயிர் விடுவான். ஆனா மகன் பத்தி தெரிஞ்சு அந்த ஆசையை அவனே ஓரங்கட்டிட்டான்..” “உங்களுக்கு தெரியும் இல்லை அவனுக்கு ஸ்ட்ரோக் அட்டேக் ஆனது, மகன், தம்பின்னாலே நிறைய பட்டுட்டான். அவங்க கம்பெனிக்கு இப்போ வெளியே நல்ல பேரே இல்லை. அடாவடி, ரவுடிசம் தான். பிஸ்னஸ் எதிக் எதுவும் இல்லைன்னு இப்போ யாரும் அங்க இன்வெஸ்ட் பண்ணவே யோசிக்கிறாங்க..” “இவன் இருந்தவரை கட்டுக்கோப்பா, ஒரு ஒழுக்கத்தோட இருந்த கம்பெனிஸ் இப்போ வேற பாதையில போயிட்டிருக்கு, கேள்விப்பட்டு உடம்புல மட்டும் இல்லை மனசுலயும் ரொம்ப டவுன் ஆயிட்டான். எங்கேயும் வெளியே வரதே இல்லை..” “அதான் கல்யாணத்துக்கு கூட வரலையா மாமா..?” “ஆமா உதய்.. ரொம்ப கேட்டுட்டேன், நான் வரலைன்னுட்டான். முடிஞ்சா நீங்களும், ஷாவும் ஒரு எட்டு அவனை பாத்துட்டு வந்தா ரொம்ப சந்தோஷ படுவான். உண்மையை சொல்லணும்ன்னு உங்களை எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பான்..” நண்பனை தெரிந்தவராக ராம் சொல்ல, உதய் சரி என்றுவிட்டான். “ஷா எழுந்ததுக்கு அப்புறம் போய் வரோம் மாமா..” என, ராம் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். எங்கே உதய் மறுத்துவிடுவானோ என்று தயக்கத்துடனே தான் கேட்டார். உதய்க்கு புரிந்து போனது ராம் நண்பனுக்காக பிரசாத்தை தொட மறுக்கிறார் என்று. இதுவே பிரசாத்திற்கு அட்வாண்டேஜஜ் ஆகி போனது. “ஆனா அவனை இப்படியே விட்டா எப்படி..? ஷாக்கு தானே பிரச்சனை அவனால..” யோசித்து அமர்ந்திருக்க, ராம் புரிந்து கொண்டவர், “உதய்.. நான் கம்பனி விட்டு விலகி இருக்கிற வரை தான் அவங்க ஆட்டம். ஒன்ஸ் நான் உள்ள வந்திட்டா என் வழியில் அவங்களை நான் பார்த்துப்பேன்..” “அது ஏன் மாமா..? ஷாக்கும் இதெல்லாம் ஹாண்டில் பண்ண வேணும் தானே..? அந்த பிரசாத் பொண்ணுன்னு தானே ஷாகிட்ட ரொம்ப பேசுறான். எழவே முடியாத அளவு அவனை அடிக்கணும், ஷாவே அதை செய்யணும் அப்போ தான் அவனுக்கு புத்தி வரும்..” “வேண்டாம் உதய்.. அவளுக்கு இதெல்லாம் வேண்டாம், நாம பார்த்துக்கலாம், அதான் அவகிட்ட பிஸ்னஸ் மட்டும் கொடுத்திருக்கேன், மத்த வேலை எல்லாம் ஜின்னா, ஜித்தா, என் கண்ட்ரோல் தான்..” என, உதய் அமைதியாக இருந்தான். “ஷா யாரை கண்ட்ரோல் பண்ண நினைச்சாலும் அவளோட புத்தி கூர்மையால, பிஸ்னஸால அடிக்கட்டும்.. இந்த அண்டர்கிரவுண்ட் வேலை நம்மளோட போகட்டும்..” தந்தையாக முழுதும் யோசித்து சொல்ல, உதய்க்கு புரிந்தது. “சரி மாமா..” உதய் அரை மனதுடன் சொன்னான். அவனுக்கு என்னமோ பிரசாத் அவனை தூக்கிய கோவத்தில் ஏதாவது செய்வான் என்று தோன்றியது. “எப்படியும் ஷா, மாமா அவனை எதுவும் செய்ய மாட்டாங்க முகுந்தன் அங்கிளுக்காக, நாம தான் அவனை பார்த்துக்கணும்..” உள்ளுக்குள் முடிவெடுத்து கொண்டான். “அப்பறம் உதய்.. ரிசப்ஷன் இன்விடேஷன் ஜின்னா கொடுப்பான், உங்க பிஸ்னஸ் சர்க்கிள்ல கொடுத்துடுங்க, ரிசப்ஷன் இந்த வீக் எண்ட்ன்றதால நேர்ல கூப்பிட கஷ்டமா இருக்கும், முடிஞ்சவரை மெயில், போன்ல பார்த்துக்கோங்க, நாமளும் அப்படித்தான் செய்யணும்..” ராம் பேசி கொண்டிருக்க, “ப்பா.. அதுக்கு முன்னாடி உங்க செக் அப் போகணும்..” என்று வந்தாள் மகள். அவசரமாக குளித்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. “ஷா முதல்ல சாப்பிட்டு வா..” ராம் சொல்ல, “பசிக்கலைப்பா.. உங்களோட லன்ச்சே சாப்பிட்டுகிறேன்..” என்றவள் எப்போதும் போல ராம் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். தந்தையோ மகளிடம் கண் காண்பித்தார் உதய் பக்கத்தில் அமர சொல்லி. ஷா சங்கடத்துடன் திரும்பி உதய் பார்க்க, அவனோ வீட்டிற்கு போன் பேசி ஆரம்பித்திருந்தான். “அவர் ஒன்னும் நினைக்க மாட்டார்ப்பா..” ஷா மெல்லிய குரலில் சொல்ல, “யாரும் சொல்றதுக்காகவோ, நினைக்கிறதுக்காகவோ நாம செய்ய கூடாது ஷா..” தந்தை கண்டிப்பாக சொன்னார். “சாரிப்பா..” என, “இனி பார்த்துக்கோ..” என்றுவிட்டவர், “பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஏதாவது குடி, லஞ்சுக்கு இன்னும் நேரம் இருக்கு..” ஜோதியிடம் சொல்லி மகளுக்கு கொடுக்க வைத்தார். உதய் போன் பேசி முடித்து, ஷாவிடம் கொடுக்க அவளும் புகுந்த வீட்டு ஆட்களிடம் பேசி வைத்தாள். லஞ்சிற்கு இன்னும் நேரம் இருக்க, மூவரும் பொதுவாக பேசி கொண்டிருந்தவர்கள் லன்ச் முடித்து, முகுந்தனை பார்க்க கிளம்பினர். செல்லும் வழியில் அவருக்கான பழம், சுவீட் வாங்கி கொண்டு சென்றார்கள். “வாங்க.. வாங்க..” முகுந்தனின் மனைவி இவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். “ஆன்ட்டி எப்படி இருக்கீங்க..?” ஷா அவரிடம் நலம் விசாரிக்க, “நான் நல்லா தான் இருக்கேன் பவி குட்டி.. எப்படி இருக்கீங்க தம்பி..?” உதய்யிடம் நலம் விசாரித்தார் அவர். “லன்ச் சாப்பிடலாம் வாங்க..” அவர் உணவிற்கு அழைக்க, “வேண்டாம் ஆன்ட்டி, வீட்ல சாப்பிட்டு தான் கிளம்பினோம்..” என்றுவிட்டவர்கள், முகுந்தனை பார்க்க ரூம் சென்றனர். “வாடா.. காலையில் இருந்து எதிர்பார்த்திட்டே இருந்தேன்..” முகுந்தன் பேச்சு கொஞ்சம் திக்கி திணறி வர, படுக்கையில் இருந்தார் அவர். “மாமா சொல்லி தான் அனுப்பினார் எங்களை எதிர்பார்த்திட்டு இருப்பீங்கன்னு..” உதய் சொன்னவன், ஷா என்று மனைவிக்கு கண் காட்ட, இருவரும் கணவன், மனைவியிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். “தீர்க்க சுமங்கலியா.. சகல சௌபாக்கியதோடு வாழணும்..” மனதார ஆசீர்வாதம் செய்தவர்கள் புது தம்பதிக்கு திருநீறு பூசினர். “ராம் எப்படி இருக்கான்..?” முகுந்தன் திணறி கேட்க, “ரொம்ப ரொம்ப நல்லா இருக்கார் அங்கிள்.. உங்களை ரொம்ப விசாரிச்சுதா சொல்ல சொன்னார்..” ஷா அவரின் கை பிடித்து சொன்னாள். “நேத்து கல்யாண போட்டோ எல்லாம் அனுப்பி வீடியோ கால் பேசினார் அண்ணா..” முகுந்தன் மனைவி சொன்னவர், “அவருக்கு எப்போ ஆபரேஷன் ஷா..? நாள் போகுது இல்லை, சீக்கிரம் செய்ங்க..” என்றார். “இந்த வீக் கண்டிப்பா செக் அப் போயிடுறோம் ஆன்ட்டி, எப்படியும் சீக்கிரமே இருக்கும்..” என, அங்கேயே அமர்ந்து பேசினர். “ம்மா..” என்று பிரசாத் வர, உதய் முகத்தில் கோவம் தோன்றாமல் இல்லை. கவனித்த முகுந்தன் கண்களாலே உதய்யிடம் மன்னிப்பு வேண்ட, உதய்யால் என்ன செய்ய முடியும்..? “ஓஹ்.. புதுமண தம்பதிகள்.. வாங்க.. வாங்க..” பல்லை கடித்து தான் வரவேற்றான் பிரசாத். யார் தூக்கியது..? எங்கு இருக்கிறோம்..? என்ன செய்ய போகிறார்கள்..? என்று எதுவும் தெரியாமல் ஓடி கொண்டிருந்த ட்ரக் உள்ளே ஒரு முழு நாளும் சுற்றிய கோவம். வெளியே வந்துவிட்ட பின்னும் யார் இதை செய்தது என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக தீவிரமாக துப்பு துலக்கி கொண்டிருந்தவனுக்கு உதய் மீதும் சந்தேகம் இல்லாமல் இல்லை. “ம்மா.. என்ன சொல்றாங்க கெஸ்ட்..” மேலும் நக்கல் கலந்த கோவத்தோடு கேட்க, “பிரசாத்.. நீ வெளியே இரு அம்மா வரேன்..” மகனின் குணம் தெரிந்து அவனை வெளியே அனுப்ப பார்த்தார் முகுந்தன் மனைவி. “ஏன்ம்மா.. இங்கேயே இருந்தா தானே கெஸ்ட்கிட்ட பேச முடியும், அப்பறம் சொல்லுங்க மிஸ்டர் உதய் கிருஷ்ணா.. புது மாப்பிள்ளை, நல்லா ஜோரா இருக்க போல..” நேரடியாக உதய்யை சீண்டினான். அவனுக்கு இப்போது ஷாவை தவறவிட்ட ஏமாற்றத்தை விட, உதய்யிடம் தோற்ற ஆத்திரமே மிஞ்சி நின்றது. “நான் ரொம்ப நல்லா இருக்கேன், ஆமா நீங்க ஏன் கல்யாணத்துக்கு வரல பிரசாத்..? உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஏன் எங்கயாவது ட்ராவல்ல இருந்தீங்களா என்ன..?” உதய் வேண்டுமென்றே தான் கேட்டான். அவன் முடிவெடுத்துவிட்டான் பிரசாத் இனி நேரடியாக தன்னிடம் மட்டுமே மோத வேண்டும் என்று, ஷா, ராமிடம் இல்லை.