யுகம் சுகம் தானே 13

இப்படி எல்லாம் உதய் பேசுவான் என்று ஷா நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்தோடு நின்றிருந்தவள் தன் முகத்தை உரசி நின்ற உதய்யின் நெஞ்சில்  கை வைத்து அவனை பின்னால் தள்ளினாள். 

“ம்ம்.. ஷா மேடம் பேக் டூ பார்ம்..” என்றான் உதய் அவள் தள்ளிவிட்டதில் ஒரு அடி தள்ளி நின்று. 

“இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..?”  அவனின் பேச்சில் சிவந்துவிட்ட முகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து கேட்டாள். 

“பேசிட்டு இருக்கீங்கன்னா.. ஓஹ் பேச வேண்டாம், செயல்ல பார்க்கலாம் சொல்றயா..?”

“ம்ப்ச்.. உங்களுக்கு நான் கேட்டது புரிஞ்சது..”

“வேறென்ன செய்ய..? பேச்சுலயாவது ஒரு கிக்கு இருக்கட்டும்ன்னு பார்த்தேன்.. என்ன இருந்தாலும் நம்ம முதல் இரவு, கொண்டாட வேண்டாமா..?” கண்ணடித்து கேட்க, 

“முதல்ல இப்படி செய்றதை நிறுத்துங்க..” என்றாள் ஷா. 

“எதை..?” உதய் புரியாமல் கேட்டான். 

“அதான் இப்படி கண்ணடிக்கிறது..?”

“ஏன் உன்னை டிஸ்டர்ப் பண்ணுதா..?”  ஷா  பதில் சொல்லாமல் முறைத்துவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள். உதய் சிரிப்புடன் கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தான். 

ஷா இரவு உடை மாற்றி வந்தவள், அணிந்திருந்த இரண்டு மூன்று நகைகளை கழட்டி வைத்தாள். அடுத்து பின்னிய தலையில் கை வைக்க, “ஏய்.. ஏய் வேண்டாம்.. இருக்கட்டும்..” அவளையே பார்த்திருந்த உதய் சொன்னான். 

“ச்சு.. எனக்கு இது உறுத்தும், தூங்க கஷ்டமா இருக்கும்..”  ஷா கண்ணாடி வழியே இவனை பார்த்து சொன்னாள். 

“என்ன உறுத்துமா..? க்கும்.. எனக்காக இந்த ஒரு மேட்டரை பழகிக்கோயேன்..”  ஷா என்ன நினைத்தாளோ விட்டுவிட்டவள் கட்டிலுக்கு வர, உதய் தள்ளி அமர்ந்து வழி விட்டான். 

“பால் குடிச்சிடலாமா..? தூங்கணும் இல்லை..” ஷா கேட்க, 

“கொஞ்ச நேரம் பேசலாம், அப்பறம் குடிக்கலாம்..”  என்றான். 

“ம்ம்..” ஷா அவனை பார்த்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவள், “சொல்லுங்க..” என்றாள்.  இத்தனை வருடங்களில் ஷாவை இவ்வளவு இலகுவாக பார்த்ததில்லை அவன். அவனின் செயின், அதனுடன் மஞ்சள் கையிறு பின்னி கொண்டிருக்க, தலையில் மல்லி பூ தோளில் வழிய அமர்ந்திருந்தாள். ரசித்தான். 

“நீ தான் சொல்லணும் இன்னிக்கு நாள் எப்படி இருந்ததுன்னு..”  ரசனை அவன் பேச நினைத்ததை தடை செய்ய விடவில்லை. 

“ரொம்ப நல்லா இருந்தது.. அப்பா ரொம்ப ரொம்ப ஹாப்பி..” ஷா முகத்தில் மகிழ்ச்சி மின்ன சொன்னாள். 

“மாமா சந்தோஷம் தெரிஞ்சது, உனக்கு சொல்லு..?”

“எனக்கும் தான்..”

“அப்படியா..? அப்பறம் ஏன் அடிக்கடி கண் கலங்குச்சு..?”

“அப்படி எல்லாம் எதுவுமில்லை..”  ஷா மெல்லிய குரலில் மறுக்க, அவளின் கை பிடித்து கொண்டவன், 

“இன்னிக்கு புல் டே நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன்..”  தட்டி கொடுத்து சொல்ல, ஷா கண்களில் கலக்கத்தோடு அழுகை. 

“ஷா நீ இப்படின்னு நான் நினைச்சதே இல்லை, என்ன இது புதுசா கண்ணுல தண்ணி  எல்லாம்..? உனக்கு இது கொஞ்சம் கூட சூட் ஆகலை..”

“என்ன செய்ய நானும் என் அப்பாக்கு பொண்ணு தானே..?”

“மாமாவை நினைச்சு ஏன் இவ்வளவு அழகை..? நாம இருக்கோம் அவருக்கு..” ஷா முகத்தில் ஒரு விரக்தியான முறுவல்.  அவனின் கையில் இருந்து தன் கைய உருவி கொண்டவள், நேராக பார்த்து அமர்ந்தாள். 

ஏசி சத்தம் மட்டும் மெலிதாக கேட்டு கொண்டிருக்க, அழுத்தமான அமைதி. அவளே பேசட்டும் என்று உதய் அமர்ந்திருக்க, ஷா நேராக இருந்த ஓவியத்தை பார்த்து அமர்ந்திருந்தாள். சில நொடி சென்று, 

“இந்த பெயிண்ட் அம்மா எனக்கு வாங்கி கொடுத்தது..” என்றாள். உதய் அந்த ஓவியத்தை பார்க்க, அதில் ஆண் நடந்து கொண்டிருக்க, பெண் ஒருவள் ஓடி சென்று அவர் கை பிடிப்பது போல். 

“அது எங்க அப்பா.. அவரை நான் பார்த்துக்கணும்ன்னு அம்மா என்கிட்ட சொல்ற மாதிரி இந்த பெயிண்ட்..”  உதய்க்கு புரிந்தது அவளின் கடந்த காலம் வருகிறது என்று. 

“நான் அப்போ ப்ளஸ் டூ எக்ஸாம் முடிச்சிட்டு லீவ்ல  இருந்தேன், அடுத்து என்ன படிக்கணும்ன்னு வீட்ல தீவிர டிஸ்கஷன், பிஸ்னஸ் மேனேஜ்மேண்ட் படிக்க சொல்லி  அம்மா  சொல்ல, எனக்கு விருப்பம் இல்லை. விஸ்காம் படிக்க தான் எனக்கு ஆசை. அம்மா பிஸ்னஸ், பிஸ்னஸ் சொல்லி சொல்லியே அது மேல ஒரு வெறுப்பு..” 

“ஆனா அப்பாக்கு அடுத்து நான் தான். சோ நான் தான் பிஸ்னஸ் பார்த்தாகணும்.. வற்புறுத்தலே இல்லா வற்புறுத்தல். அம்மாகிட்ட பிடிக்கல சொன்னா அவங்களுக்கு என்மேல் வருத்தம். உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல பவ்யான்னு ஒரு பார்வை பார்த்தாங்க, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..”

“என்னை புரிய வைக்க முயற்சி பண்ணா அம்மா ஏத்துக்கவே இல்லை. நீ பிஸ்னஸ் சம்மந்தமான படிப்பு தான் படிக்கணும்ன்னு அடமே பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, என்னால அவங்களுக்கு என்னை புரிய வைக்க முடியல,  கொஞ்ச நாள் முயற்சி பண்ணி பார்த்துட்டு போங்கன்னு விட்டுட்டேன், இவங்க ஆசை, அந்தஸ்துக்கு நான் தான் பிணையான்னு அவங்க மேல கோவம்கூட வர ஆரம்பிச்சுடுச்சு..”

“நான் அப்பாகிட்டேயே பேசிக்கிறேன் அவர் என்னை புரிஞ்சுப்பார்ன்னு எனக்குள்ள நினைச்சுகிட்டேன், அப்பா பிஸ்னஸ்  விஷயமா டெல்லி  போயிருக்க, அவர் வரட்டும்ன்னு அம்மாகிட்ட எதுவும் சொல்லிக்கல..”

“சரிம்மா பார்த்துக்கலாம்ன்னு அவங்களுக்கு ஒத்து பேச அவங்களுக்கு சந்தோஷம். உடனே இருக்கிறதுல பெஸ்ட் காலேஜ்ல எல்லாம் அப்பிளிக்கேஷன் வாங்கி குவிக்க ஆரம்பிச்சுட்டாங்க, அப்போ தான் ஒரு நாள் அம்மாக்கு.. அவங்க.. அவங்க..”  ஷா தொண்டை அடிக்க பேச முடியாமல் திணறினாள். 

“தண்ணி குடி..” உதய் எடுத்து  கொடுக்க வாங்கி குடித்தாள். 

“இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்ல வேண்டாம், விடுப்பா..”  உதய் சொல்ல, 

“எனக்கு சொல்லணுங்க, எனக்குள்ளே இருந்து இருந்து ரொம்ப பாரமா இருக்கு..” என, உதய் அதற்கு மேல் மறுக்கவில்லை. அவளின் கை பிடித்து அமர்ந்து கொள்ள, ஷா கண்கள் அந்த ஓவியத்தில். 

“அம்மாக்கு இந்த ஓவியம், பாட்டு, கார்டன் எல்லாம் ரொம்ப பிடிக்கும், இந்த ஓவியத்தை கூட அவங்களுக்கு அப்படி ஆகுறதுக்கு முன்னாடி நாள் தான் ஆர்டர் கொடுத்திருந்தாங்க..”

“அப்படி தான் அங்க பவுண்டைனும். அவங்களுக்கு தோட்டத்துல ஒரு பெரிய பவுண்டைன் வைக்க ஆசை, நம்ம தோட்டத்துலயும் ஒரு பெரிய பவுண்டைன் வச்சாங்க அம்மா ஆசைக்காகவே..”

“அன்னிக்கு பவுண்டைன் மெயின்டனன்ஸ்  பண்ண, டேப் பைப்  எடுத்துவிட்டிருந்தாங்க, ஈவினிங் ஆகவும் நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு அந்த பைப்பை அப்படியே கீழே போட்டுவிட்டுட்டு போயிட்டாங்க, அம்மா எப்போவும் போல அங்க ஒரு வாக் போய்ட்டு இருக்கும் போது கீழே இருந்த பைப்ல கால் மாட்டி  அப்படியே பின்னாடி சாய்ஞ்சுட்டாங்க..”

“அவங்க பின் தலை பவுண்டைன் கல் மேலே விழ, பிளீடிங்.  ஜின்னா அண்ணா அப்போதான் ஆபிஸ் முடிச்சுட்டு வந்தவர், அம்மா சத்தம் கேட்டு பார்த்துட்டு கத்த, நானும் ஜோதிம்மாவும் ஓடினோம். அப்போ அவங்க மூக்கிலும் பிளீடிங் ஆரம்பிச்சது. ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு ஓடினோம். அம்மா பாதி வழியிலே மயக்கம் போட்டுட்டாங்க, நேரா ஐசியூ தான்..”

“அப்பாக்கு போன் பண்ணி சொல்ல, அவரும் உடனே கிளம்பிட்டார். அவ்வளவு டெஸ்ட், ஸ்கேன்.. சில மணி நேரம் கழிச்சு  தான் தெரிஞ்சுது அவங்களுக்கு பின் தலையில ஒரு கட்டி முன்னமே இருந்திருக்குன்னு, அதுவும்  பைனல் ஸ்டேஜ், உடைஞ்சி போய் பிளீடிங் ஆக ஆரம்பிச்சிடுச்சுன்னு,  பொழைக்க வழியே இல்லை. இன்னும் சில மணி நேரம் தான் சொல்லிட்டாங்க..”

“எனக்கு அது புரியவே ரொம்ப நேரம் ஆச்சு. மனசு ஏத்துக்கவே இல்லை. அப்பா பிளைட்ல இருக்க சொல்ல முடியல. அப்பா வந்தா அம்மாவை காப்பாத்திடுவார்ன்னு அவரை தான் எதிர்பார்த்து ஹாஸ்பிடல் வாசலே பார்த்துட்டு இருந்தேன். அம்மாக்கு மயக்கம் தெளிஞ்சுது, என்னை உள்ள கூப்பிட்டாங்க..”

“தலையில ஒரு கட்டு, மத்தபடி ரொம்ப சாதாரணமா தான் இருந்தாங்க, அவங்க முகத்துல அப்படி ஒரு தேஜஸ். பார்த்ததும் எனக்கு சந்தோஷம் டாக்டர் எதோ தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க, அம்மா நல்லா தான் இருக்காங்கன்னு ஓடி போய் கட்டி பிடிச்சுக்கிட்டேன்..”

“டாக்டர், நர்ஸ் எல்லாம் என்னை தள்ளி போக சொல்ல, அம்மா என்னை அவங்க பக்கத்துல உட்கார வச்சு கை பிடிச்சுக்கிட்டவங்க, டாக்டர், நர்ஸ் எல்லாம் வெளியே போக சொன்னாங்க, அம்மாக்கு விஷயம் தெரிஞ்சிருந்தது.  அவங்க முகத்துல அப்படி ஒரு அமைதி..”

“அப்பாகிட்ட சொல்லிட்டியா..?” முதல்ல கணவரை தான் கேட்டார் ஷாக்க்ஷி 

“சொல்லிட்டேன்ம்மா.. வந்துடுவார்.. உங்களுக்கு ஒன்னுமில்லைம்மா, நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க..” ஷாக்க்ஷியின் கை பிடித்து சொன்னாள் மகள்.  

ஷாக்க்ஷி மகளையே பார்த்தவர் அப்படியே அவளை தன்னோடு வாரியணைத்து கொண்டார். அதுவரை அடக்கி கொண்டிருந்த கண்ணீர் வெடித்து சிதற, அப்படி ஒரு அழுகை அவரிடம். 

“ம்மா.. உங்களுக்கு ஒன்னுமில்லம்மா, இவங்க எதோ சும்மா சொல்றாங்க, அப்பா வந்ததுக்கு அப்பறம் நாம  வேற ஹாஸ்பிடல் போயிடலாம்..”  அவரின் அழுகையில் பயந்து போன ஷா அம்மாவை அணைத்து கொண்டு தானும் கதறினாள். 

“ம்மா.. ம்மா.. ஒன்னும் இல்லைம்மா, நீங்க சரியாகிடுவீங்க, அப்பா.. அப்பா இப்போ வந்துடுவார், நாம வேற ஹாஸ்பிடல் போயிடலாம்.. உங்களுக்கு எதுவும் ஆகாது, ஆகாது..”  திரும்ப திரும்ப சொல்லி அழுதாள் மகள்.