இதயம் இணையும் தருணம்


இறுதி அத்தியாயம் 



நிச்சயத்தன்று காலை வரை முரளி முடிவெடுக்க முடியாமலே சுற்றிக் கொண்டு இருந்தார். தேவகிக்கு தான் கடுப்பாக இருந்தது. அவரும் பலவாறு எடுத்து சொல்லி விட்டார்.

சாருமதி தங்கைக்கு அலங்காரம் செய்ய அழகு நிலையத்தில் இருந்து ஆள் ஏற்பாடு செய்திருந்தாள். உணவுக்கு ஒரு ஹோட்டலில் சொல்லியாகி விட்டது. வேறு எதுவும் வேலை இல்லை. 


மதிய உணவு உணடுவிட்டுச் சகோதரிகள் இருவரும் உட்கார்ந்து இருந்தனர். பெற்றோர் பார்த்துச் செய்ய வேண்டியது, இப்படி நாமே செய்ய வேண்டியது இருக்கிறதே என்ற வருத்தம் இருவருக்குமே இருக்க… இருவருமே சந்தோஷமாக இல்லை. 


அந்த நேரம் முரளியும் தேவகியும் வீட்டிற்குள் நுழைய… இருவருக்கும் ஆச்சர்யமே…. 


தலைக்குக் குளித்துக் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த நிவேதாவை பார்த்து, “என்ன நீ இன்னும் ரெடியாக  ஆரம்பிக்கலையா?” எனக் கேட்டபடி வந்த தேவகி, மகளுக்கு வரும் போதே பூ வாங்கி வந்திருந்தார். 

நிவேதா சாருமதி இருவருக்கும் பேச்சே வரவில்லை. அவர்கள் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். பெற்றோர் வந்துவிட்டது அப்படியொரு மகிழ்ச்சி இருவருக்கும். 


“இங்க இருக்க ஹால் தானே… நாம போய் ஒருதடவை பார்த்திட்டு வந்திடலாமா…” என முரளி மனோகரை அழைக்க… அவர்கள் இருவரும் சென்றதும், பார்லர் பெண்ணும் வந்துவிட… நிவேதாவுக்கு அலங்காரம் செய்யும் வேலைகள் தொடங்கியது. தேவகி நிவேதாவின் நகைகளைக் கொண்டு வந்திருந்தார். அதை எடுத்து கொடுத்தார். 


வினோதா சற்று முன்பே வந்துவிட… அதோடு உறவினர்களும் வரத் தொடங்கினர். வீடே கலகலப்பாக இருந்தது. சாருமதியுடையது காதல் திருமணம் என்பதால், அவள் வீட்டிற்கு இதற்கு முன்பு உறவினர்கள் வந்தது இல்லை. இப்போது தான் வந்திருக்கிறார்கள். 


அவர்களின் பெரியப்பா பெண் வனிதாவும் வந்திருந்தாள். கிடைத்த சந்தர்ப்பத்தில்… “காதலிச்சா மட்டும் பத்தாது. அதுக்காகப் போராடவும் செய்யணும். உங்களைப் போல உறிதியா இருக்க எனக்குத் தெரியலை.” என அவள் வருந்த… 


“எனக்கும் தைரியம் இல்லை. உங்களைப் பார்த்து தான் அக்கா… நான் இந்தக் காதலே வேண்டாம்னு ஒதுங்கினேன். ஆனாலும் நான் விட்டாலும் காதல் என்னை விடலை.” என நிவேதா சொல்ல… 


“முகேன் விடலைன்னு சொல்லு.” எனத் திருத்தினாள் சாருமதி. 

ஆறு மணி ஆனதும், அந்த அபார்ட்மெண்ட் கீழ் தளத்தில் நீச்சல் குளம் அருகில் இருந்த விழா அரங்கிற்குச் சென்றனர். அந்த அரங்கை வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். 


மாலை ஆறுமணிக்கு மேல் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் படை சூழ வந்த முகேனுக்கு, உள்ளுக்குள் எப்படி நடக்கப் போகிறதோ என உதறல் இருக்கவே செய்தது. ஆனால் வாசலில் நின்று வரவேற்ற மாமனார் மாமியாரைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. 


மாப்பிள்ளை வீட்டினரை நன்றாகவே உபசரித்தனர். அவர்கள் ஜெயஸ்ரீயிடம் சென்று எப்படி நிச்சயம் செய்வது எனக் கேட்க, “உங்க பக்கம் எப்படிச் செய்வீங்களோ அப்படியே செய்யுங்க. எங்களுக்கு நிவேதா மருமகளா வரணும் அவ்வளவு தான்.” என்றுவிட்டார். சம்பந்தி வீட்டினர் வெட்டி அதிகாரம் செய்யாமல் இருப்பது பார்த்து, நிவேதா பக்கம் எல்லோருக்கும் அவ்வளவு ஆச்சர்யம். 


அனிலாவை எடுக்கவில்லை என ஜெயஸ்ரீயின் சகோதரர் கோபித்துக் கொண்டு நிச்சயத்திற்கு வரவில்லை. இத்தனைக்கும் ஜெயஸ்ரீ முன்பே அழைத்து முகேன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகச் சொல்லித்தான் இருந்தார். 


நிச்சய புடவை வாங்க வந்த நிவேதா முகத்தில் இப்போது தான் நிறைவான மகிழ்ச்சியைக் காண முடிந்தது. 


மணமகள் அலங்காரத்தில் அவ்வளவு அழகாக இருந்தாள். முகேனுக்கு அவளிடம் இருந்து பார்வையைத் திருப்பவே முடியவில்லை. நிவேதா முகேனைக் காணும் ஆவலில் பார்வையைச் சுழல விட… முகேன் வேண்டுமென்றே மறைந்து நின்றான். 


“எவ்வளவு காய விட்டா… கொஞ்ச நேரம் தேடட்டும்.” என நினைத்தான். அவனைக் காண முடியாத ஏமாற்றத்தில் நிவேதா புடவையை வாங்கிக் கொண்டு மாற்ற சென்றாள். 


நிவேதா புடவை மாற்றி வந்ததும், மாப்பிள்ளை வீட்டினரும் பெண் வீட்டினரும் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பிறகு நிவேதாவை உட்கார வைத்து நலங்கு வைத்தனர். 


நிவேதாவும் முகேனைப் பார்த்து விடலாம் என நினைத்தால்… முடியவே இல்லை. வினோதா வந்த போது, அவளிடம் முகேன் எங்க?” என அவள் மெதுவாகக் கேட்க, அவளும் தேடித் பார்த்துவிட்டு, கடைசி இருக்கையில் இருக்கிறான் என்றாள். 


நிவேதா எதோ சொல்வது, வினோதா தன்னைத் தேடுவது எல்லாமே முகேன் பார்த்திருந்தான். நிவேதாவுக்கு அவனைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. 


எல்லோரும் நலங்கு வைத்து முடிந்ததும், நிவேதா எழுந்து நிற்க… அப்போது முகேன் வந்தான். நிவேதா முகேனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு தலை நிமிராமல் இருக்க… 

“நிவேதா என்னைப் பாரு.” என்றான் முகேன். 


நிவேதா அவனைப் பார்க்காமல் இருக்க… “நீ தானே என்னைத் தேடின.” என்றதும், லேசாக விழி உயர்த்தி உனக்கு எப்படித் தெரியும் என்பது போல அவள் பார்க்க… அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியவன், “நீ சூப்பரா இருக்க… நான் நல்லா இருக்கேனா?” எனக் கேட்க…. நிவேதா அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பி நேராக நின்றாள். 


நண்பர்களின் கேலி கிண்டலுக்கு இடையே… இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள. மிகவும் மகிழ்ச்சியான தருணமது. 


நிச்சயத்தில் ஆரம்பித்த மகிழ்ச்சி திருமணம் வரையிலும் குறையாமல் இருந்தது. 


நிச்சயத்தன்றே மகள்கள் இருவரையும் தேவகி வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். இரு பக்க உறவினர்கள் முன்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்ததால்… அதன் பிறகு முரளியும் எதுவும் பிரச்சனை செய்ய வில்லை. அவரே திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டார். 


இதோ முகேன் நிவேதா திருமணமும் இனிதாக முடிந்து விட்டது. முன்தின மாலையே திருமண வரவேற்பும் முடிந்து இருக்க… வீட்டிற்கு வந்த மணமக்களை முகேனின் சகோதரி தேவி ஆரத்தி எடுத்து வரவேற்றாள். 


அதிகாலை முஹுர்த்தம் என்பதால்… மதியம் சீக்கிரமே உணவு உண்டு வீடு வந்திருந்தனர். மூன்றாம் நாள்தான் பெண் வீட்டுக்குச் செல்லும் சாஸ்த்திரம் என்பதால்… நிவேதா அவள் வீட்டினரிடம் மண்டபத்தில் இருந்தே விடைபெற்றுக் கொண்டாள். மனோகரும் சாருமதியும் மட்டும் உடன் வந்திருந்தனர். முகேனின் உறவினர்கள் எல்லாம் சென்னையில் தான் இருப்பதால்… அவர்கள் எல்லாம் மண்டபத்தில் இருந்தே விடைபெற்று சென்றிருந்தனர். 


ஜெயஸ்ரீயின் உடன்பிறந்த சகோதரியின் குடும்பமும், நாத்தனாரின் குடும்பமும் மட்டும் உடன் வந்தனர். அவர்களும் வந்து மாப்பிள்ளை பெண்ணை விட்டுவிட்டு உடனே கிளம்பி விட்டனர். 


சாருமதி தங்கைக்குத் தலை அலங்காரம் கலைக்க உதவியவள், சிறிது நேரம் நிவேதா அங்கே சகஜம் ஆகும் வரை இருந்துவிட்டு கிளம்பி விட்டாள்.

நிவேதா இன்றுதான் முகேனின் வீட்டை பார்க்கிறாள். அவளுக்கு வெளி வராண்டாவில் இருந்த ஊஞ்சல் மிகவும் பிடித்திருக்க… அவள் அதில் உட்கார்ந்து இருக்க… முகேனும் அவளுடன் இருந்தான். 


அறையில் தேவியும் அவள் குடும்பமும் ஓய்வெடுக்க…. ஜெயஸ்ரீயும் ஓய்வெடுக்கச் செல்வதற்கு முன், “நீயும் மாடியில இருக்க ரூம்ல போய் டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடு நிவேதா.” என்றார். 


“இன்னைக்கு வேற எதுவும் ப்ளான் இருக்கா மா…” என முகேன் கேட்க, 


“இல்லை டா, நீயும் போய் ரெஸ்ட் எடு. நாளைக்குக் காலையில கோவிலுக்குப் போயிட்டு வாங்க.” என்றார். 

நிவேதா தன் உடமைகளுடன் மாடி அறைக்குச் செல்ல, முகேனும் அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு உடன் சென்றான். 

அறை என்றதும் வெறும் அறை மட்டும் இருக்கும் என நிவேதா நினைத்திருந்தாள். ஆனால் ஏறியதும் ஒரு ஹால் இருக்க… இரண்டு படுக்கை அறைகள் இருந்தது. அதில் ஒரு படுக்கை அறைக்கு நிவேதாவுடன் முகேன் உள்ளே சென்றான். 


பெரிய அறையின் நடுவே கட்டில் இருக்க… பக்கவாட்டில் குளியல் அறைக்கு வெளியே உடை மாற்றும் பகுதி தனியாக இருந்தது. 


நிவேதா உடைமாற்றும் அறையின் முன்பு தனது உடமைகளை வைத்துவிட்டு, அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்க்க… கதவை சாற்றிவிட்டு வந்த முகேன் அவளைப் பின் நின்று அனைத்துக் கொண்டான். 


நிவேதாவை தன் பக்கம் திருப்பியவன், அவள் முகம் முழுவதும் முத்த கவிதை வாசிக்க.. அவளோ தனது பெரிய விழிகள் மூடி மயக்கத்தில் நின்றாள். 


அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்த முகேன், அவளையும் இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன், அவள் இதழ்களில் சுவைக்க… நிவேதாவின் அதீத ஒத்துழைப்பால்… முத்தம் நீண்டு கொண்டே செல்ல… அதை நிறுத்தும் எண்ணம் இருவருக்கும் இல்லாமல் போக… முதலிரவு இரவில் தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? பகலிலும் நடக்கலாம். 


மூன்றாம் நாள் நிவேதா வீட்டிற்குச் சென்றவர்கள், அங்கே ஒரு நாள் தங்கி விட்டு தேன்நிலவுக்குத் துபாய் சென்று வந்தனர். 


நிவேதா திருமணத்திற்குப் பிறகும் எப்போதும் போல அலுவலகம் சென்று வந்தாள். அவள் இருக்கை முகேனின் அறைக்கே மாற்றப்பட்டது. முகேன் மனைவி சி. ஏ படிக்க உதவினான். 


இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தாம்பத்திய பாடத்தில் தேறிய இருவரும், அடுத்த ஒரு வருடத்தில் பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆகி இருக்க…. மகிழ்ச்சிக்கு குறைவில்லாத இல்லறம். 


சாருமதியின் மகனை தேவகி பார்த்துக்கொள்ள… சாருமதி எப்போதும் போல வேலைக்குச் சென்று வந்தாள். நிவேதா கணவன் மகளுடன் மாதம் ஒருமுறை வந்து, இங்கே எல்லோரோடும் சேர்ந்து இருந்துவிட்டு செல்வாள். 


மருமகன்கள் மாமனாருக்கு வீட்டின் அருகேயே கடை வைத்து கொடுத்தனர். முரளியின் பெரும் பகுதி சேமிப்பு கரைந்து இருக்க… வெறும் வாடகை வருமானத்தை மட்டும் நம்பி இருக்க வேண்டாம், அதோடு எதாவது வேலை செய்வது அவருக்கும் நல்லது என்றுதான். உதவிக்கு ஒரு பையனும் கடையில் இருந்தான். பள்ளி பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள் என வைத்திருக்க, வியாபாரமும் நன்றாக நடந்தது. 


நாமே பார்த்துத் திருமணம் செய்திருந்தாலும், இப்படி மருமகன்கள் கிடைத்திருப்பர்களா என முரளியே நினைத்துக் கொள்வார். அப்படிதான் இருந்தனர் இரு மருமகன்களும். 


ஜெயஸ்ரீ வீட்டையும் பேத்தியையும் பார்த்துக் கொண்டாலும், நிவேதா அவருக்கு வீட்டில் உதவி விட்டுத்தான் அலுவலகம் செல்வாள். 

முகேனின் தொழில் மேலும் மேலும் வளர… செல்வ செழிப்பும் அதிகம் தான். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் எதாவது வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வான். மாமியார் மாமனாரையும் அழைத்துச் செல்வான். 


சிலர் நன்றாகச் சம்பாதிப்பர்கள். ஆனால் அனுபவிக்க மாட்டார்கள். ஆனால் முகேன் அப்படி அல்ல… வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. 


இவர்கள் திருமணம் முடிந்து சென்ற வினோதா மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் சென்னை வந்திருக்கிறாள். முகேன் நண்பர்கள் எல்லோருக்கும் சேர்த்து பீச் ரெசார்ட்டில் அறை பதிவு செய்திருந்தான். இரண்டு நாட்கள் அங்கே தான். 


உள்ளுரில் இருக்கும் நண்பர்கள் அடிக்கடி இல்லையென்றாலும் எப்போதோ ஒருமுறை பேசி வைத்து சந்தித்துக்கொள்வார்கள். இப்போது வினோதா வந்திருப்பதால் எல்லோரும் வந்திருந்தனர். 


இரண்டு நாட்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம் தான். அடுத்த மாதம் வினோதாவின் மகனுக்கு ஊரில் கிராமத்தில் மொட்டை அடித்துக் காது குத்த… எல்லோரும் அதற்கும் சென்றுவிட்டு, அப்படியே கொடைக்காணல் சென்றுவிட்டு வந்தனர். 


முன்பு தான் நட்பை தொடராமல் விட்டு விட்டோம். இனி எப்போதும் அப்படி இருக்கக் கூடாது. நாம் இறுதிவரை தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்க… அவர்களின் நட்பு ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்தது. 


விடுமுறை முடிந்து வினோதா அமெரிக்கா கிளம்ப.. அவளை வழியனுப்ப முகேனும் நிவேதாவும் வந்திருந்தனர். அவளை வழியனுப்பி விட்டு இருவரும் காரில் வீடு திரும்ப… நிவேதா எதோ சிந்தனையில் இருக்க… முகேன் என்ன என விசாரித்தான். 


“நீங்க எல்லாம் என்னைத் தேடி கண்டுப்பிடிக்கலைனா… நான் எப்படி இருந்திருப்பேன்னு நினைச்சு பார்க்கவே முடியலை.” என்றாள். 


“ஒருவேளை நாம திரும்பச் சந்திக்காம இருந்திருந்தாலும், நீ இப்ப நல்லாத்தான் இருந்திருப்ப. அப்ப நீ எதோ கஷ்டத்தை அனுபவிக்கனும்னு இருந்திருக்கு… அதுக்காக நீ எப்பவும் அப்படித்தான் இருந்திருப்பேன்னு இல்லை. வீணா மனசை போட்டு குழப்பாதே…” என்றான் முகேன். 


என்னைத் திருமணம் செய்ததால்தான் நீ நன்றாக இருக்கிறாய் என்று சொல்லாமல்… நீ எங்கு இருந்தாலும் இப்போது நன்றாகத்தான் இருந்திருப்பாய் எனச் சொல்லும் கணவனைப் பார்த்து நிவேதாவுக்கு ஆச்சர்யமே… ஒருவர் துன்பபட்டால் அவர் எப்போதும் துன்பத்தில் தான் இருப்பார் என்று இல்லை. கோடை காலம் முடிந்து வசந்த காலம் வரத்தான் செய்யும். 


“நான் உங்களை வேண்டாம்னு விலகிப் போனேன்னு உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?” வெகு நாட்களாக நிவேதா கேட்கவேண்டும் என நினைத்தது, இப்போது கேட்டும் விட்டாள். 

“நிறைய வருத்தம் இருந்தது. ஆனா நீ என்னைப் பிடிக்காம விலகிப் போகலை. உனக்கு என்னைப் பிடிக்கும். அது எனக்கும் தெரியும்.” 


“நான் அம்மாகிட்ட சொன்ன போது, அவங்க இதைத்தான் சொன்னாங்க. உன்னையும் ஏமாத்தி அவளையும் ஏமாத்திக்கனும்னு சொல்றியா… உன்னைப் பிடிச்சும் விலகி போறான்னா… அவளோட சூழ்நிலையை நினைச்சு பாருன்னு சொன்னாங்க. அதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்னு சொன்னாங்க.” 


“அப்போதைய சந்தோஷத்துக்காகக் காதலை சொல்லிட்டு… பிறகு விட்டு விலகி போறது ரெண்டு பேருக்கும் இன்னும் வலியை தான கொடுக்கும். நானும் அதை நினைச்சு தான் உன் முடிவை ஏத்துகிட்டேன்.”

 
“உனக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைச்சேன். ஆனா திரும்ப உன்னைப் பார்ப்பேன், நமக்குக் கல்யாணம் நடக்கும்னு எல்லாம் நினைச்சதே இல்லை.” 


“ஆசை ஆசையாய் காதலிச்சிட்டு விலகி போறதை விட… முதல்ல கஷ்டபட்டலும் வாழ்க்கையில நாம ரெண்டு பேரும் சேர்ந்திட்டோம். இப்ப சந்தோஷமாவும் இருக்கோம். வேற எதையும் நினைக்காத டா…” என்ற கணவனின் தோளில் நிவேதா சாய்ந்து கொண்டாள். 


பேசினால் பெரும் வலியை தரும் என்றுதான் இருவரும் இதைப்பற்றி இதுவரை பேசியது இல்லை. 


காதலிப்பது காதலிக்கப்படுவது எல்லாமே சுகம் தான். ஆனால் கொண்ட காதலில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாது எனத் தெரிந்தால்… மறுக்கவும் நிறைய மன தைரியம் வேண்டும். 


காதலை ஏற்றுக்கொள்வதால் மட்டுமே நல்ல காதலர்கள் ஆகிவிட முடியாது. கொண்ட காதலுக்கு நம்மால் உண்மையாக இருக்க முடியாது என்னும் பட்சத்தில் அதை ஏற்காமலாவது இருக்கலாமே… 


இப்போது எல்லாமே காதல் என்றாகி விட்டது. யாருக்கும் யாருடனும் காதல் வரலாம். காதல் என்ற வார்த்தையின் புனிதமே மாறி விட்டது. 


உண்மையாகக் காதல் கொண்டவர்கள், தான் காதலிப்பவரை புனிதபடுத்தித் தான் பார்ப்பார்கள். அவர்கள் சேரலாம் சேராமலும் போகலாம். ஆனால் அவர்கள் கொண்ட காதல் அது சாகாது. 


யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் அந்தக் காதல் என்ற சொல்லுக்கு உரிய புனிதத்தை மரியாதையைச் சிலர் மட்டுமே காக்கிறார்கள். 


முகேனும் நிவேதாவும் இப்போது வரை நான் உன்னைக் காதலிக்கிறேன் எனச் சொன்னதே கிடையாது. ஆனால் இருவரும் அப்போதிருந்தே அந்தக் காதலை உணர்ந்திருக்கிறார்கள். 


காதலை சொல்வதை விட, கேட்பதை விட, உணர்த்துவதே மேலானது. 


கண்ணும் கண்ணும் மோதுமம்மா….
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்…. 


ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும் காதல்…. 


காலமெல்லாம் காதல் வாழ்க….