மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(1)

அத்தியாயம் 24(1)

தர்ஷினி எழுந்து கொள்ளவும் உடனே சத்ரியன் இறந்த விஷயத்தை கூறாமல் சிறிது நேரம் காத்திருந்தான் இன்பா. பின்னர் மெதுவாக அவளிடம் விஷயத்தை கூறினான்.

“அவர் டிரக்ஸ் எல்லாம் எடுக்கிறவர் கிடையாது. கண்டிப்பா இது மர்டர்” என்றவளது முகம் வேதனையை பிரதிபலித்தது.

“என்னனு போலீஸ் விசாரிப்பாங்க தர்ஷினி”

“என்னத்த விசாரிச்சாங்க? லிங்கேஷ் சூசைட் பண்ணியிக்க மாட்டார்ன்னு நான் சொன்னேன். கடைசில அது சூசைட்தான்னு போலீஸ் சொன்னாங்க”

“இப்பதான் சிஐடி விசாரிச்சுகிட்டு இருக்காங்கல்ல…”

“எல்லாம் ஐ வாஷ். மக்களை ஏமாத்தறதுக்கு இது ஒரு டெக்னிக். ஏதாவது கேஸ்ல டவுட் இருக்குன்னு மக்கள் கொந்தளிச்சா உடனே சிஐடிக்கு மாத்துவாங்க. இல்லனா சிபிஐக்கு மாத்துவாங்க. மக்களும் இனி உண்மை தெரிஞ்சிடும் நியாயம் கிடைச்சுடும்ன்னு அமைதி ஆயிடுவாங்க. அதுக்கப்புறம் அதை மறந்தும் போயிடுவாங்க. இதெல்லாம் மக்களை மறக்க வைக்கிற டெக்னிக்” என பட படவென பேசினாள்.

“கொஞ்சம் அமைதியா இரு தர்ஷினி”

“என்னையவே அமைதியா இருக்க சொல்லாத. இந்த வாரம் கண்டிப்பா இதை பத்தி எழுததான் போறேன். சத்ரியன் எவ்ளோ இன்டலிஜென்ட் தெரியுமா? அவர் நினைச்சிருந்தா அப்ராட்ல நல்ல வேலை பார்த்துகிட்டு அவருக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். பொது சேவையில் இருந்தார். அநியாயமா அவரை கொன்னுட்டாங்க. இதை நான் விடமாட்டேன்” என்றாள்.

“நீ கொஞ்ச நாளைக்கு ஆஃபீஸ் போக போறது இல்லை. வீட்லதான் இருக்க போற” என்றான் இன்பா.

“என்னைக் கேட்காம நீயா ஏதாவது முடிவு பண்ணிக்குவியா? நான்தான் நேத்து நைட்டே முடியாதுன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன? நான் ஆஃபீஸ் போவேன்” என்றாள்.

“போடி போ… என்னை கொன்னு போட்டுட்டு அப்புறமா நீ எங்க வேணா போ” என கத்தினான்.

அவனின் கோபத்தில் திகைத்துப்போய் பேசாமல் நின்றிருந்தாள் தர்ஷினி.

“உனக்கு உன்னைப் பத்தி கவலை வேண்டாம். உன் வயித்துல இருக்கிற என் குழந்தையை நெனச்சு பார்த்தியா?”

“சும்மா அதையே சொல்லாதே. நான் கர்ப்பமா இருக்கிறது ஒன்னும் என்னோட வீக்னஸ் கிடையாது”

“நானும் வீக்னஸ்னு சொல்லல. ஆனா நீ கவனமா இருக்க வேண்டிய அவசியத்தை சொல்றேன்” என்றவன், சிறிது நிதானித்து, கெஞ்சுவது போல, “நீ ஆஃபீஸ் போகாம இருக்க நான் என்ன பண்ணனும் தர்ஷினி? என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சிப் பார்க்கவே மாட்டியா?” எனக் கேட்டான்.

“சரி நான் போகலை” என்றாள் மெல்லிய குரலில்.

“ வீட்டுக்கு ரெண்டு போலீஸ் காவலுக்கு வருவாங்க”

“அதெல்லாம் எதுக்கு இன்பா? நான் வீட்லதானே இருக்கப் போறேன். வீட்டில் எல்லாரும் பயந்துக்குவாங்க”

“நான் ஒரு கேஸ் நடத்துனதுல சில பேர் மிரட்டினாங்க. அதுதான் பாதுகாப்புன்னு சொல்லிக்கிறேன். வேற எதுவும் சொல்ல வேண்டாம். வீட்ல பயந்தா பயந்துக்குறாங்க. கொஞ்ச நாளைக்கு நான் சொல்றதை மறுத்துப் பேசாம கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணு” என்றான்.

தர்ஷினி அமைதியாக இருக்க, “இன்னைக்கு ஒரு முக்கியமான கேஸ். நான் போயே ஆகணும். நாளையிலேயிருந்து நானும் வீட்டிலேயே இருக்கேன். போதுமா?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ எப்பவும் போல கோர்ட்டுக்குப் போ. வீட்லதானே இருக்கேன் பிரச்சனை இல்லை” என்றாள்.

“ உனக்கு எதுதான் பிரச்சனை? இன்னைக்கு நான் போயே ஆகவேண்டிய சூழ்நிலை. அதான் போறேன். சீக்கிரம் வர ட்ரை பண்றேன். நாளையிலிருந்து உன் கூடவே இருக்கேன்” என்றான்.

ஆயிரம் முறை தர்ஷினிக்கு பத்திரம் சொல்லிவிட்டு, காவலுக்கு வந்திருந்த 2 காவலர்களையும் பலமுறை எச்சரித்துவிட்டு அதன் பின்னரே இன்பா கிளம்பி சென்றான்.

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் அந்த மூவரும் இருந்தனர்.

“அவன் கையில் பென்டிரைவ் இருக்கு. அதை எடுத்துட்டு வாங்கடான்னா…? பென்டிரைவை வாங்கிட்டுதானே அவன் கதையை முடிக்க சொன்னேன்…?” என கோவமாய் கேட்டுக்கொண்டிருந்தான் பாண்டுரங்கன்.

“அவன் கையில பென் டிரைவ் இல்லை. எவ்வளவு அடிச்சு கேட்டும் அவன் சொல்ற மாதிரி இல்லை. இந்த மாரிதான் மருந்து கொஞ்சம் ஏத்தி விட்டா உண்மையைச் சொல்லிடுவான்னு ஐடியா கொடுத்தான். அப்பவும் அவன் சொல்லலை. சொல்லலைன்னா ரயிலிலிருந்து பிடிச்சி தள்ளிடுவோம்னு மிரட்டினோம். ஆனா தவறி விழுந்துட்டான்” என்றான் தாஸ்.

“நான் ஐடியாதான் அண்ணா கொடுத்தேன். செஞ்சது எல்லாம் இந்த தாஸ்தான். இவன்தான் கையை விட்டுட்டான். அவன் விழுந்துட்டான்” என்றான் மாரி.

“நேத்து அவன் ஏதோ ஆட்டோல போனான்னு சொன்னியே… அந்த ஆட்டோகாரனை பிடிச்சி கேளுங்க”

“நம்ம சின்னா போயிருக்காண்ணா” எனச் சொல்லும்போதே அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுத்து பேசிய பாண்டுரங்கன், “ஆல்ரெடி நம்ம போட்டுத் தள்ற லிஸ்ட்ல இருக்காளே அந்த பத்திரிக்கைகாரி…. அவளுக்குதான் சத்ரியன் பென்டிரைவை போஸ்ட் பண்ண சொல்லியிருக்கான். அது அவ கைக்கு போறதுக்கு முன்னாடி என் கைக்கு வரணும். அப்படியே அவளுக்கும் முடிவுகட்டிட வேண்டியதுதான்” என்றான் பாண்டுரங்கன்.

“காலங்காத்தாலேயே நான் அவ வீட்டை நோட்டம் விட்டுட்டுதான் வந்தேன். அங்க போலீஸ் எல்லாம் நிக்குதுண்ணா” என்றான் மாரி.

“நிக்கட்டும். நான் சொல்ற மாதிரி செய்யுங்க” என்ற பாண்டுரங்கன் அடுத்து செய்ய வேண்டியதை அவர்களுக்கு கட்டளைகளாக பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

ரவியும் ரம்யாவும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வேலை எதுவும் இல்லாததால் லட்சுமியும் அன்றாடம் பார்க்கும் சீரியல்களில் ஆழ்ந்துவிட்டார். தர்ஷினிக்கு பொழுது போகாமல் இருக்க, ரஹீம் பாய் வீட்டிற்கு செல்ல நினைத்து வெளியே வந்தாள்.

“எங்க போறீங்க மேடம்?” எனக்கேட்டார் காவலுக்கு இருந்தவர்.

“எனக்கு ரொம்ப போரடிக்குது அதான் பக்கத்து வீட்டுக்குதான் போறேன். நீங்க இங்கே இருந்து கூட பார்க்கலாம்” என்றாள்.

“சார் ரொம்ப தடவை எச்சரிச்சிட்டு போனார். சரவணன் சார் கூட கவனமாய் இருக்க சொல்லியிருக்காரு. இங்கேயே இருங்களேன்” என அவர் கூற,

“வெளியில எங்கயும் போகலை. வேணும்னா நீங்களும் என் கூட வாங்க. அங்க நிறைய பெட் அனிமல்ஸ் இருக்கும். உங்களுக்கும் பொழுது போகும்” என அவரையும் அழைத்தாள்.

இருவரில் ஒருவர் தர்ஷினி உடன் செல்ல மற்றொருவர் அங்கேயே அமர்ந்து கொண்டார்.

ரஹீம் பாய் வீட்டிற்கு சென்றாள் தர்ஷினி. இவள் வந்தது வீட்டிற்குள் இருந்த நூர்ஜஹானுக்கும், சிராஜ்நிஷாவுக்கும் தெரியவில்லை. ரஹீம் பாய் வீட்டில் இல்லை.

தர்ஷினி ஃ பெலிஸுடன் பேசிக்கொண்டிருந்தாள். “ஹேய் ஃபெலிஸ் இந்த இன்பாவை பாரு…. என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சுட்டான். நாளையிலிருந்து அவனும் வீட்டிலேயே இருக்க போறானாம்… நான் பண்ற டார்ச்சர்ல அவனே என்னை தயவு செய்து நீ ஆஃபீஸ்க்கே போய்டுன்னு சொல்ல போறான் பாரு” எனக் கூறி சிரித்தாள்.

“என்ன மேடம் புறா கூட எல்லாம் பேசறீங்க… அதுவும் பதிலுக்கு பேசுமா என்ன?” எனக் கேட்டார் அந்த காவலர்.

“என்கிட்ட பேசுதே… உங்களுக்கு காதுல விழலையா?” என அவரை திருப்பிக் கேட்க, அவர் தர்ஷினியை பார்த்து விழித்தார்.

லட்சுமி பாதுகாப்புக்கு இருந்த இரண்டு காவலர்களுக்கும் தேநீர் கொண்டுவந்தார். இன்பாவின் வீட்டில் அமர்ந்திருந்த காவலர் அங்கிருந்தே ரஹீம் பாய் வீட்டின் வெளியே நின்றிருந்த காவலரை தேநீர் அருந்த அழைத்தார். அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் ஏதோ விசேஷம் நடந்துகொண்டிருக்க, ஒலி பெருக்கியில் சத்தமாக பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததால் தர்ஷினியுடன் நின்று கொண்டிருந்த காவலருக்கு காதில் விழவில்லை.

“உங்களை டீ சாப்பிட கூப்பிடுறாங்க. நீங்க போங்க. நான் இங்கேதானே இருக்கேன். நீங்க அங்க இருந்து கூட என்னை பார்க்கலாம்” எனக் கூற அவரும் சென்று விட்டார்.

தேநீர் அருந்திய பிறகுகூட காவலர் அங்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

தர்ஷினியின் பெயருக்கு தபால் ஒன்று வந்தது.

“மேடம் உங்களுக்கு தபால் வந்திருக்கு” என அங்கிருந்தவாறே காவலர் தர்ஷினியிடம் கூறினார்.

“ இங்க வர சொல்லுங்க” என சத்தமிட்டாள் தர்ஷினி.

ரஹீம் பாய் வீட்டில் இருந்தவாறே அதை வாங்கிக் கொண்டாள். பிரித்துப் பார்த்தாள். ஒரு கவரில் மடித்து வைக்கப்பட்ட சிறிய காகிதமும் பென் டிரைவும் இருந்தது. அந்த சிறிய காகிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

தர்ஷினி,
நான் ஆபத்தில் இருக்கேன். இந்த பெண் டிரைவ் ல பல உண்மைகள் இருக்கு. நீதான் வெளில கொண்டு வரணும். கமிஷனரை நம்பாத. அந்தாளும் ஒரு ஃ ப்ராட். உயிரோட இருந்தா மீட் பண்ணுவோம்.
சத்ரியன்.

என்று எழுதப்பட்டிருந்தது. அவசரத்தில் எழுதியதால் எழுத்துக்கள் கொஞ்சம் கோணல் மாணலாக இருந்தது. கடிதத்தை புறாக்கூண்டுக்குள் வைத்தவள் அந்தப் பென் டிரைவை பார்த்தாள். அது கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடியது. தன் கைப்பேசியை எடுத்து பென்டிரைவை போட்டு முதலில் அதில் இருந்ததை அவளுடைய கூகுள் டிரைவுக்கு அனுப்பினாள்.

பென் டிரைவில் இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தாள். இன்பாவுக்கு உடனே அழைத்து சொல்ல வேண்டும் என்றெண்ணி அவனுக்கு அழைக்க ஆரம்பிக்க, அதற்கு முன் வேறு எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசினாள்.

“உன்னோட வாட்ஸ் ஆப்ல ஒரு ஃபோட்டோ வந்திருக்கும். அதை பாரு” என்றான் பாண்டுரங்கன்.

“நீ யாரு?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“முதல்ல போட்டோவ பாரு” என்றான் அவன்.

தர்ஷினி வாட்ஸ் ஆப்பில் வந்திருந்த ஃபோட்டோவை பார்த்தாள். ஒரு மர நாற்காலியில் கை கால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தான் நசீர். அடித்திருப்பார்கள் போலும். முகம் கன்றி சிவந்து போய் இருந்தது.

கைப்பேசியை காதுக்கு கொடுத்த தர்ஷினி, “யாருடா நீ…? நசீரை ஏன் பிடிச்சு வச்சிருக்க? மரியாதையா அவனை விட்டுடு” என கத்தினாள்.

நல்ல சத்தமாக பாட்டுகள் ஒலித்துக்கொண்டிருக்க, இவள் பேசுவது காவலர்கள் காதில் விழவில்லை.

“அவளை விடனும்னா உனக்கு பார்சல் வந்த பென் டிரைவை எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வீட்டுக்கு வெளியில வா. ஒரு இன்னோவா கார் வரும். அதுல நீயாவே ஏறிக்க. எதுவும் பிரச்சினை பண்ணினா இவன் உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை” என்றான்.

தர்ஷினி விக்கித்துப்போய் நின்றிருக்க, “உன் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சி” என கூறி கைப்பேசியை வைத்து விட்டான். அவன் வைக்கும் சமயத்தில் நசீர் அலறும் சத்தம் தர்ஷினியின் இதயத்தை பிளப்பதாக இருந்தது.

அங்கிருந்த காவலர்களை பார்த்தாள். இப்போது இருவரும் ஏதோ பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விஷயத்தை சொன்னால் தன்னை போக அனுமதிக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு தெரியும். நசீரின் அடிபட்ட முகமும், அவனது அலறலும் நினைவுக்கு வந்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாய், பென்டிரைவையும் கைப்பேசியையும் கையில் எடுத்துக்கொண்டு கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தாள். சரியாக அந்த நொடி இன்னோவா கார் ஒன்று வாசலில் வந்து நின்று காரின் கதவு திறந்தது. தர்ஷினி காரில் அமர்ந்து கொண்ட நொடி கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் கிளம்பியது. காவலர்கள் இருவரும் அதிர்ந்து போய் வெளியே ஓடி வர, தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் இன்பா தர்ஷினியின் பாதுகாப்புக்காக நியமித்திருந்த நபர் அந்தக் காரை பின்தொடர்ந்து பைக்கில் புறப்பட்டான்.