மணிப்புறாவும் மாடப்புறாவும்-23
அத்தியாயம் 23
மருத்துவர் ஸ்டீவ் லண்டனில் இ எஸ் பி பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன் அமர்ந்திருந்த சுப்ரியா விளக்கமாக எல்லாவற்றையும் உரைத்தாள்.
“இது ஏன் சுப்ரியாவுக்கு தெரியுது?” எனக் கேட்டான் சரவணன்.
“கடந்த ரெண்டு முறை போல இந்த முறையும் அவள் கண்டது பலிச்சிடுமா?” என இன்பா அவரிடம் கேட்டான்.
“இந்த உலகத்துல நம்மளால புரிஞ்சிக்க முடியாத நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல இதுவும் ஒன்னு. நாமலே இதை சிலசமயம் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி இருப்போம். நம்ம மனசுக்கு ஏதோ நெருடலா ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு உணர்வு தோன்றும். அதே மாதிரி ஏதாவது தப்பா நடக்கும். சிலபேர் சொல்வாங்க அவங்களுக்கு மனசளவுல ரொம்ப நெருக்கமானவங்க எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவங்க கஷ்டப்படும்போது அவங்களால அதை உணர முடியும்னு. என்னோட அம்மா நிறைய தடவ போன் பண்ணி நீ நல்லா இருக்கியா? எனக்கு ஏதோ போல இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க. அந்த சமயங்கள்ல எனக்கு ஏதாவது கஷ்டம் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். இது நான் மட்டும் இல்லை எல்லோருமே எப்போதாவது எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருப்பாங்க”
“அது எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெர்ஸண்ட் பவர் அப்படின்னா…. இந்த இ எஸ் பி அதைவிட நூறு மடங்கு பெரிய பவர் அப்படின்னு வச்சுக்கலாம்”
“இரண்டு முறை அதே மாதிரி நடந்ததுனால மூன்றாவது தடவையும் அதே மாதிரி நடக்கதான் அதிகமான சேன்ஸ் இருக்கு” என்றார்.
கவலையாக சரவணனும் சுப்ரியாவும் இன்பாவின் முகத்தை பார்த்தனர்.
“டாக்டர்… சுப்ரியா மூணாவதா பார்த்த காட்சியை அவளை திரும்ப பார்க்க வைக்க முடியுமா?” எனக் கேட்டான் இன்பா.
“வாட்?”
“எஸ் டாக்டர்… அந்த காட்சியில பார்த்த ஆளாலதான் தர்ஷினிக்கு ஆபத்து வரணும். அவனை முன்னாடியே கண்டு பிடிச்சிட்டா இதை நடக்காமல் தடுத்திடலாம். அதுக்கு அவன் யாருன்னு தெரியணும். சுப்ரியாவை அன்னைக்கு பாதியிலேயே சரவணன் டிஸ்டர்ப் பண்ணிட்டார். அதனால அவளால சரியா பார்க்க முடியலை. இப்ப திரும்ப பார்த்தா அது யாருன்னு கண்டு பிடிக்கலாம்” என்றான்.
“இது முடியுமான்னு தெரியலை. பட் வீ கேன் ட்ரை” என்றார்.
“ப்ளீஸ் டாக்டர். இதனால என்னோட வைஃபோட உயிரை காப்பாத்த முடியும். ஹெல்ப் பண்ணுங்க” என்றான் இன்பா.
“சுப்ரியா எந்த மாதிரி மனநிலையில் இருந்தப்ப இதை மாதிரி பார்த்தாங்கன்னு தெரிஞ்சா…. அதை வச்சி நான் ட்ரை பண்றேன்” என்றார்.
சுப்ரியா நன்றாக யோசித்தாள். “ஃபர்ஸ்ட் டைம் என் அப்பா அம்மா இறந்ததை பார்த்தேன். அப்போ எனக்கு கல்யாணம் பண்றது பத்தி பேசினாங்க. நான் என் பேரண்ட்ஸ் கூட ரொம்ப அட்டாச்டு. மேரேஜ்க்கு அப்புறம் எங்க அவங்களை பிரிஞ்சிடுவேனோ அப்படின்னு ஒரு பயம், வருத்தம் எல்லாம் இருந்தது” என்றாள்.
எல்லோரும் அவள் சொல்வதையே கூர்ந்து கவனித்துக் கொண்திருந்தனர்.
“லிங்கேஷ் பத்தி பார்த்தப்போ…” என்றவள் அதற்குமேல் சொல்ல தயங்கி சரவணன் முகத்தை பார்த்தாள். தான் இருப்பதால் தயங்குகிறாள் என்பதை உணர்ந்த சரவணன், “நான் வெளியில இருக்கவா?” என கேட்டான்.
“வேண்டாம். இங்கேயே இருங்க” என்றவள், அவன் கையைப் பிடித்துக்கொண்டே “எனக்கு என் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு எக்ஸ் லவ் இருந்தது. அவருக்கு அப்போ கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருந்த சமயம். அதுல கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேன்” என்றாள்.
சரவணனுக்கு தன் மனைவி ஏன் தயங்கினாள் என்பது புரிந்து போனது. சுப்ரியாவின் கையை அழுந்தப் பிடித்து இதை சொன்னதால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதாக அவளுக்கு தைரியம் அளிக்க, அவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்.
இன்பாவுக்கு இந்த விஷயம் சரவணனுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. அவனுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் எதுவும் கூறிக் கொள்ளவில்லை.
“தர்ட் டைம் தர்ஷினியைப் பத்தி பார்த்தப்போ எனக்கும் இவருக்கும் சண்டை. அதுக்கு முன்னே அப்படி அவர் கோபமா பேசினது இல்லை. அவர் பேசுனது ரொம்ப ஹர்ட்டிங்கா இருந்தது. அதுல அப்செட்டா இருந்தேன்” என்றாள்.
“அப்போ உங்க மனசை பாதிக்கிற மாதிரி நிகழ்வுகள் நடக்கும் போதுதான் உங்களுக்கு இதை மாதிரி காட்சிகள் வந்திருக்கு” எனக் கேட்டார் ஸ்டீவ்.
“ஆமாம்” என்றாள்.
அன்று நடந்த சண்டையை விளக்கமாக கேட்டுக்கொண்ட ஸ்டீவ், சுப்ரியாவை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று சாய்வான நாற்காலியில் அமர வைத்து ஹிப்னாடைஸ் செய்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவளின் நினைவுகளை பின்னோக்கி அழைத்துச் சென்றார்.
“சுப்ரியா இப்போ உங்களுக்கும் சரவணனுக்கும் சண்டை. உங்ககிட்ட கோபமாக பேசிட்டு அவர் ஃபோன் எடுத்துட்டு பால்கனி போயிட்டார். நீங்க ஹால்ல உட்கார்ந்து இருக்கீங்க. இப்போ உங்களுக்கு என்ன தோணுது?” என கேட்டார்.
சுப்ரியா சரவணனின் பேச்சில் மிகவும் வேதனை அடைந்தாள். சரவணனின் நம்பிக்கையை கொன்னுட்ட என்ற வார்த்தைகளை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென தெளிவில்லாமல் போக, யாரோ ஒரு ஆள் நிழல் உருவமாக தெரிந்தான். தரையில் ரத்தமாக இருக்க தர்ஷினி கீழே கிடந்தாள். உற்று நோக்க அந்த ஆளின் கழுத்தில் கருடன் படம் போட்ட டாலர் கோர்த்த செயின் கிடந்தது. கையிலும் கருடன் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. மீண்டும் ரத்த வெள்ளம். தர்ஷினியிடம் அசைவில்லை. “தர்ஷினி….” என அலறிக்கொண்டு கண்விழித்தாள் சுப்ரியா.
குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும், சுப்ரியாவுக்கு வியர்த்துக் கொட்டியது. சரவணன் ஆதரவாய் அவளைப் பிடித்துக் கொள்ள, சுப்ரியா அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். அவளை ஆசுவாசப்படுத்தி என்ன பார்த்தாள் என கேட்டார் மருத்துவர். அவள் பார்த்ததை கூறினாள்.
“இந்த முறையும் அவன் முகம் உனக்கு தெரியலையா?” எனக் கேட்டான் சரவணன்.
“இல்லை” என்றாள்.
இன்பா தயங்கி தயங்கி “தர்ஷினியை பார்த்தியா?” என கேட்டான்.
“ஆமாம் இன்பா. முன்ன பார்த்த மாதிரிதான் தர்ஷினி கீழே கிடந்தா. தரையெல்லாம் ரத்தம்” என்றான். இன்பா முகம் திருப்பிக் கொண்டு தன் உணர்வுகளை அடக்க முயன்றான்.
மருத்துவர் அவன் தோளில் கை வைத்து, “இப்ப உங்களுக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதை வச்சி அது யாருன்னு கண்டுபிடிங்க. தர்ஷினிய அவன் பார்க்கிறதுக்கு முன்னாடி…. அவனைப் பார்க்க விடாம செஞ்சுட்டா இதைத் தடுக்கலாம்” என்றார்.
மூவரும் வெளியில் வந்தனர். சுப்ரியாவை அமர வைத்துவிட்டு இன்பாவை அழைத்துக்கொண்டு தனியே சென்றான் சரவணன்.
“அது யார்ன்னு கண்டுபிடிச்சு அவனை கொன்னுடலாம்” என்றான் சரவணன்.
“எப்படி கண்டுபிடிக்கிறது?”
“நீங்க ஏற்கனவே தர்ஷினியோட எதிரிகள்ன்னு சொல்லிக் கொடுத்த லிஸ்ட் என்கிட்ட இருக்கு. என்னால முடிஞ்சதை நான் ட்ரை பண்றேன். நீங்களும் ட்ரை பண்ணுங்க. எப்படியும் தர்ஷினிய காப்பாத்திடலாம்” என்றான்.
பின்னர் இன்பா தர்ஷினியை அழைக்க சென்றான். அன்று தர்ஷினிக்கு செக் அப்க்காக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது.
தர்ஷினிக்கு மருத்துவர் ஸ்கேன் செய்ய, இன்பாவும் அருகில்தான் இருந்தான். குழந்தையின் இதயத்துடிப்பை மருத்துவர் கேட்க வைத்தார். தர்ஷினி மகிழ்வுடன் இன்பாவின் முகத்தை பார்க்க, அவன் வேறு ஏதோ யோசனையில் இருந்தான். மருத்துவர் எல்லாம் நன்றாக இருப்பதாக கூற, இருவரும் வெளியில் வந்தனர்.
“நான் டாக்டர்கிட்ட ஒரு டவுட் கேட்கணும் இரு வந்துடறேன்” எனக்கூறி உள்ளே சென்றாள் தர்ஷினி.
அவள் வெளியில் வந்தபிறகு என்ன கேட்டாள் என்று கூட இன்பா அறிந்து கொள்ளவில்லை.
வரும் வழியிலும் மிகவும் அமைதியாக இருந்தான் இன்பா. வீட்டிற்கு வந்த பின்பும் கலையிழந்த அவனது முகத்தைதான் தர்ஷினியால் பார்க்க முடிந்தது.
அன்று இரவு தனிமையில் தர்ஷினியை சுப்ரியா பார்த்த அடையாளத்தை கூறி எச்சரிக்கை செய்தான்.
“நீ இன்னைக்கு பேய் அடிச்ச மாதிரி இருந்தப்பவே நெனச்சேன்” என்றாள்.
“தர்ஷினி கொஞ்ச நாள் நீ வீட்டிலேயே இரு” என்றான்.
“இவ்வளவு நாள் நான் டெய்லி ஆஃபீஸ் போயிட்டுதானே வரேன். ஒன்னும் பிரச்சனை இல்லைதானே…? நான் ஆஃபீஸ் போவேன். என்னை தடுக்காத”
“இனியும் நீ போறது என் மனசுக்கு சரியா படலை”
“இதையே நெனச்சி நெனச்சி வாழ்க்கையை நரகமாக்குற இன்பா. நம்ம குழந்தையோட ஹார்ட் பீட்ஸ் கேட்க வைக்கிறாங்க. நீ வேற ஏதோ யோசனையில் இருக்க. நீ என் பக்கத்திலேயே இருக்க. ஆனா எதையோ நான் மிஸ் பண்றேன்” என்றாள்.
அவளைப் பார்த்து சோபையின்றி சிரித்தான். அவனுக்கு மட்டும் ஆசையா என்ன? எந்த சந்தோஷ நிகழ்வையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவன் படும் வேதனை அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
“என்ன மிஸ் பண்ற?” எனக் கேட்டான்.
“என்னை நீ கிண்டல் பண்றது இல்லை. சண்டை போடுறது இல்லை. ஹக் பண்றது இல்லை. ஆசையா பார்க்கிறது கூட இல்லை. என்னமோ என்கிட்ட இருந்து தள்ளி நிக்குற மாதிரி ஃபீல்”
“எப்ப பாரு எதையாவது யோசிச்சிகிட்டே இருக்க. என்னை கவனமா பார்த்துக்குறேன்ங்கிற பேர்ல என் இன்பா காணாம போய்ட்டான். அவனை கொஞ்சம் கண்டுபிடிச்சி தர்றியா..? ஐ மிஸ் மை காட்டுப்பூச்சி… மிஸ் ஹிம் வெரி பேட்லி….” என்றாள்.
அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் எப்படி தர்ஷினியை போல சாதாரணமாக இருப்பது என்றுதான் தெரியவில்லை. அதை அவளிடம் கூறவும் செய்தான்.
“கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்து போறியா…?”
“எப்படி மறக்க முடியும்?”
கண்ணை மூடு என்றாள். இன்பா கண்களை மூட, ஒரு நிமிடம் கழித்து கண்களைத் திறக்கச் சொன்னாள்.
அவன் முன்பொருமுறை மணிப்புறாவும் மாடப்புறாவும் இணைந்தவாறு கொடுத்த பரிசை கையில் வைத்திருந்தாள். அவனது கையில் எதையோ கொடுத்தாள். என்னவென்று பார்த்தான். சிறிய புறா.
“இது நம்ம பேபி. எங்க இதுல அட்டாச் பண்ணு பார்ப்போம்” என்றாள்.
இன்பாவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்த சிறிய புறாவை இரு புறாக்களுக்கும் இடையில் வைத்தான். இன்பாவைப் பார்த்து முறைத்தாள் தர்ஷினி.
“என்னடி…. ஏன் முறைக்குற?”
“பின்ன… எனக்கும் உனக்கும் இடையில வைக்கிற…? உன் பக்கத்தில வை. இல்லனா என் பக்கத்துல வை. ரெண்டு பேருக்கும் இடையில இல்லை” என்றாள்.
சிரித்துக் கொண்டவன், மாடப்புறாவின் அருகில் வைத்தான்.
“குட். எங்க… நம்ம பேபிக்கு ஒரு முத்தம் கொடு” என தர்ஷினி கூற, மாடப்புறாவை அந்த சிறிய புறாவுக்கு முத்தமிட செய்தான்.
“நானும் ஒரு முத்தம் கொடுக்கிறேன்” என்றவள் மணி புறாவையும் முத்தமிட செய்தாள்.
“எங்க அப்படியே உன் பொண்டாட்டிக்கும் ஒரு முத்தம் கொடு” என்றாள்.
இன்பா மாடப்புறாவை மணிப் புறாவின் அருகில் எடுத்துச் செல்ல, “இடியட்… நான்தான் உன் பக்கத்துல இருக்கேனே….? நான் உன் கண்ணுக்கு தெரியலையா? தர்ஷினி மனசு உனக்கு புரியலையா?” என்றாள்.
அவள் கூறிய விதத்தில் மொத்தமாய் அவளிடம் வசமிழந்து போன இன்பா, தர்ஷினியின் இதழ்களை தீண்டி முத்தமிட்டான். தர்ஷினியின் உடல்மொழி வேறு எதையோ இன்பாவிடமிருந்து வேண்ட, “வேண்டாம் தர்ஷினி. இப்போ இது ரிஸ்க் இல்லையா?” எனக் கேட்டான்.
“இல்லை… நான் டாக்டர்கிட்ட கேட்டுட்டேன்” என்றாள்.
“அடிப்பாவி அதுக்குதான் திருப்பி டாக்டர் பார்க்க போனியா?”
“என்ன அடிப்பாவி? எப்ப பாரு மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கன்னு உனக்காக போய் கேட்டேன் பாரு… என்னை சொல்லணும்…. போ நான் தூங்க போறேன்” எனக்கூறி தர்ஷினி விலக, இன்பா அவளை கெட்டியாய் பிடித்துக் கொண்டான்.
“இப்படி சோக மூஞ்சி இன்பா வேண்டாம். எப்பவும் போல என் கிட்ட வம்பு செய்ற இன்பாவா இருந்தா பக்கத்துல வா… இல்லன்னா வராத” என்றாள்.
இன்பா சிரித்துக்கொண்டே “நான் வம்பு பண்ணினா தாங்குவியா நீ?” என கேட்டான்.
“அய்ய…. நீ பண்ற வம்பை எல்லாம் நான் தாங்காமதான் இப்போ உன் பிள்ளை என் வயித்துல இருக்கா?” எனக் கேட்டாள்.
“எப்படி பேசுறா பாரு…? உன்கிட்ட மாட்டிக்கிட்டு… பேரவஸ்தையா இருக்குடி…..” என்றவன் மென்மையாக அவளை அணைத்தான்.
வெகு நாட்களுக்குப் பிறகு, இன்பா தன்னையே மறந்தான். தர்ஷினியுடன் கலந்தான்.
தன்னருகில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தர்ஷினியின் முகத்தைப் பார்த்தான். சிறுவயதிலிருந்து நடந்த ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்தான். எவ்வளவு அழகான நினைவுகள்.
சமூகத்தின் மீதான அவளது அக்கறையும், எந்த விஷயத்தையும் மிகவும் எளிதாக எடுத்துகொள்ளும் அவளது பக்குவமும், சொந்தங்கள் மீது அவள் வைத்திருக்கும் பாசமும் இன்பாவை பிரமிப்படைய செய்தது.
எல்லாவற்றிலும் முதிர்ச்சியாக நடந்துகொள்ளும் தர்ஷினி, தன்னிடம் மட்டும் குழந்தை என மாறி சேட்டை செய்வதை நினைத்து சிரித்துக் கொண்டான்.
இந்த நினைவுகள் போதாது. வயதான காலத்திலும் இதைவிட பல மடங்கு அழகான நினைவுகள் கடவுள் தனக்கு தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டே எழுந்தான். இன்பா கழுத்தில் அணிந்திருந்த செயின் தர்ஷினியின் தாலிச் சரடில் சிக்கியிருக்க மெல்ல விடுவித்தான். எழுந்தமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்தான். புருவம் யோசனையில் சுருங்க, மெல்ல அவளது தாலி சரடை கழட்டினான்.
தர்ஷினி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, சிறிது நேரம் கழித்து, எப்படி எடுத்தானோ அதைப்போலவே மீண்டும் அணிவித்தான். தர்ஷினி புரண்டு படுக்க, விழித்துக் கொண்டாள்.
“தூங்காம என்ன பண்ற? படு” என அவன் கை பிடித்து அருகில் படுக்க வைத்தாள். அவனை அணைத்துக் கொண்டே மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். இன்பாவும் உறங்கிப் போனான்.
காலையில் சரவணனிடம் இருந்து கைப்பேசிக்கு வந்த அழைப்பில்தான் இன்பா கண் விழித்தான்.
அவன் கூறிய செய்தியில் அதிர்ச்சி அடைந்தான்.
“என்ன சொல்றீங்க சரவணன்?”
“ஆமாம் இன்பா. சத்ரியன் இறந்துட்டார். ட்ரெயின்ல போயிட்டு இருக்கும்போது டரெயின்ல இருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்துட்டார்”
“இது மர்டரா?”
“தெரியலை இன்பா. அவர் டிரக்ஸ் எடுத்திருப்பார் போல. ஆக்சிடென்ட்டலா கீழே விழுந்திருக்கலாம் அப்படிங்கிற கோணத்துல இன்வெஸ்டிகேஷன் போய்க்கிட்டு இருக்கு” என்றான்.
“தர்ஷினிக்கு அவரை நல்லா தெரியும். அவரைப் பத்தி நல்ல விதமாதான் சொல்லுவா. டிரக்ஸ் எல்லாம் அவர் எப்படி…?”
“தர்ஷினிக்கு அவரைத் தெரியும்னு எனக்கும் தெரியும். அதனாலதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். எதுக்கும் தர்ஷினிய வீட்டிலேயே வச்சிக்கிறது நல்லது” என்றான்.
இன்பா பதில் கூறாமல் இருக்க, “நான் தர்ஷினி ப்ரொடக்ஷனுக்கு ரெண்டு பேரை அனுப்பி வைக்கிறேன். அட்லீஸ்ட் ஒன் வீக்காவது தர்ஷினியை வீட்டிலேயே பாதுகாப்பா இருக்க வைங்க. அதுக்குள்ள அந்த ஆள் யாருன்னு நம்ம கண்டுபிடிச்சிடலாம்” என்றான்.
“சத்ரியன் அந்த ஃபேக்டரி மேட்டர்லதான் ரொம்ப இன்வால்வ் ஆனார். லிங்கேஷும் அப்படித்தான். ஒருவேளை அந்த மணிஷ் பாண்டே வேலையா இருக்குமா?”
“நான் விசாரிக்கிறேன் இன்பா. ஆனா இப்போ அந்த ஃபேக்டரியில வேஸ்ட் மேனேஜ்மென்ட் ப்ராபரா நடக்கிறதா எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. அது பொய்யா இருக்க வாய்ப்பில்லை. தர்ஷினி கொடுத்த லிஸ்ட் வச்சும் நான் விசாரிச்சுகிட்டு இருக்கேன். எப்படியும் சீக்கிரம் கேட்ச் பண்ணிடலாம். அதுவரைக்கும் தர்ஷினியை பத்திரமா பார்த்துக்குங்க” என்றான்.
சரி எனக் கூறி கைப்பேசியை வைத்த இன்பாவுக்கு இதயத்தின் துடிப்பு அதிகமானது.