1

மார்கழி முடிந்து தை மாதம் பிறந்து சில நாட்களே ஆகி இருந்தாலும் குளிர் இன்னும் விலகாதிருந்தது. குளிர் உடலை துளைக்க தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு காலைக் குறுக்கி படுத்திருந்தாள் நம் நாயகி இதழினி.

 

இன்னமும் இவளுக்கு திருப்பள்ளியெழுச்சி ஆரம்பித்திருக்கவில்லை அவள் அன்னை. அவர் முக்கிய பணியாய் ஆண்டாள் திருப்பாவை சொல்லிக் கொண்டு காலை பூஜையை தொடங்கியிருந்தார்.

 

இதழினிக்கு ஒரு தங்கை ஒரு அக்கா. அவள் தமக்கை யாழினி திருமணம் முடிந்து சிவகங்கையில் கணவர் இரு குழந்தையுடன் வசிக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவள் மூன்று மாத மகவை அழைத்துக்கொண்டு ஊருக்கு  சென்றிருந்தாள்.

 

இதழினியின் தங்கை மகிழினி கல்லூரி இறுதியாண்டில் இருக்கிறாள். நம் நாயகி படித்து முடித்து மூன்று வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்.

 

அவளுக்கு தான் வரன் பார்க்கும் வைபவம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது இந்த ஆறு மாதமாக. வீட்டில் பிடித்திருக்கிறது என்று சொன்னால் இவள் பிடிக்கவில்லை என்பாள்.

 

இவளுக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சரியாக இருக்காது இப்படியே அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது தள்ளிக் கொண்டே இருக்கிறது. எட்டு மணிக்கெல்லாம் அவள் அலுவலகம் செல்ல வண்டி வந்துவிடும் ஏழு மணி வரை உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“இதழ்…” என்ற அவளின் அன்னையின் குரலிலேயே சட்டென்று விழிப்பு தட்டிவிட்டது அவளுக்கு. இருந்தாலும் அவரிடம் இருந்து ஓரிரு வசவு வாங்கினால் தான் அவளின் பொழுதே விடியும் என்பாள் அவள்.

 

“இதழு… இன்னும் என்னடி உறக்கம் எந்திரி. உனக்கு பின்னாடி பிறந்தவ பத்து மணி காலேஜுக்கு இப்போவே கிளம்பி நிக்குறா பாரு…” என்று அவர் அடுக்கிக் கொண்டிருக்க அவளோ அசைவேனா பார் என்பது போல் சத்தமே இல்லாமல் படுத்திருந்தாள்.

 

“இதழு…” என்றவர் ஓங்கி ஒரு அடி அடிக்க “என்னம்மா” என்று அப்போது தான் உறக்கம் கலைபவள் போல் அவள் போர்வை விலக்கிப் பார்க்க “உன் சாகசம் எல்லாம் தெரியும் எந்திரி… அப்புறம் மணியாச்சி போகணும்ன்னு கத்திக்கிட்டு கிடப்ப…”

 

“நான் ஏன்மா மணியாச்சி போகணும்?? நான் ஆபீஸ்க்கு தானேம்மா போகணும்”

 

“அடிவாங்க போறே இதழு எந்திரி எனக்கு கிட்சன்ல வேலை கிடக்கு. அப்பா இப்போ வந்திடுவாரு, அடுத்து அவரை கவனிக்கணும்”

 

இதழினி போனால் போகட்டும் என்பது போல் ஒரு வழியாக எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள். குளித்து முடிக்கும் வரை தான் நிதானம் எல்லாம். அதன்பின் தன்னைப் போல அவளிடம் வேகம் பிறந்துவிடும்.

 

“இதழ் உனக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கு…” என்றவாறே அவள் பின்னால் வந்து நின்றாள் மகிழ்.

 

“தேங்க்ஸ் மகிழ், உனக்கும் இதே போல வேற கலர்ல ஆர்டர் பண்ணியிருக்கேன். உனக்கு பிடிச்ச கலர் தான் டிரஸ் நாளைக்கு வந்திடும்… அடுத்த வாரம் பேர்வெல் பார்ட்டி இருக்குன்னு சொன்னியே போட்டுட்டு போ…”

 

“அய்ய பேர்வெல்க்கு சுடிதார் போட சொல்றே… எனக்கு சாரி தான் வேணும் நீ போன மாசம் வாங்கினியே அந்த பர்பிள் கலர் சாரீ மாதிரி இன்னம் கிராண்டா வேணும் ஓகே வா… நம்ம டீல் அதான் பார்த்துக்கோ இதழ்”

 

“சரிடி வாங்கித் தர்றேன். அப்போ சுடியை என்ன செய்ய ரிடர்ன் பண்ணிறவா??” என்று தங்கையை ஓரப்பார்வை பார்த்து கேட்டாள்.

 

“ஏன்?? எதுக்கு?? நான் பார்ட்டிக்கு தான் போடலைன்னு சொன்னேன். காலேஜ்க்கு போட்டுட்டு போவேன்”

 

“பார்றா எவ்வளவு நல்லபிள்ளை… நீ ரொம்ப சமத்தாம், நான் தான் ரொம்ப அடாவடியாம் இந்தம்மா சொல்றாங்க. நீ பண்ணுறது எனக்கு தானேடி தெரியும்” என்றாள் இதழ்.

 

மகிழ் ஈயென்று இளித்து வைக்க அவள் தலையில் லேசாய் தட்டிவிட்டு தன் மடிக்கணினி சகிதம் ஹாலுக்கு வந்து நிற்க அவள் தந்தை வெங்கடராமன் வாக்கிங் முடித்து வந்திருந்தார்.

 

“என்ன இதழ் கிளம்பிட்டியா??”

 

“ஆமாப்பா கிளம்பிட்டேன்… நீங்க இன்னைக்கு ரொம்ப லேட் ஏன்பா??”

 

“வழியில பிரண்ட் ஒருத்தரை பார்த்தேன்ம்மா. பேச்சு வாக்குல உனக்கு வரன் அமையலைன்னு பேசிட்டு இருந்தேன், அவர் ஒரு வரன் சொன்னாரு. அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர லேட் ஆகிட்டு. நீ ஆபீஸ் போயிட்டு வா நாம அதைப்பத்தி அப்புறம் பேசுவோம்” என்று முடித்துவிட்டார்.

 

“உங்களுக்கு எப்போ பார்த்தாலும் என் கல்யாணம் பத்தி தான் பேச்சா… நான் இங்க இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா…” என்று சலிப்பாய் சொன்னாள் அவள்.

“என்னம்மா செய்ய பெத்தவங்களுக்கு அது தானே ஓடிட்டு இருக்கும் எப்பவும். உனக்கு அடுத்தவளும் ரெடியா இருக்காளே”

 

“அதான் உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டேனேப்பா”

 

“வேணி” என்று தன் மனைவியை அழைத்தார் அவர்.

 

“இதோ வர்றேங்க” என்றவர் சமையலறையில் இருந்து வெளியில் வந்தார்.

 

“இதழ் கிளம்புறா பாரு அவளை கவனி” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

 

“இவரு சொல்லலைன்னா எங்களுக்கு தெரியாதா அவர் பொண்ணு கிளம்புறான்னு. ரொம்ப தான்…” என்றுவிட்டு உள்ளே சென்றவர் காலை டிபனுடன் வெளியில் வந்தார்.

 

“அம்மாம்மா எனக்கு இன்னைக்கு பொங்கல் வேணாமே ப்ளீஸ்…”

 

“ஏன்டி?? நேத்தே உன்கிட்ட கேட்டேன் தானே, அப்போ சரி சரின்னு மண்டையை ஆட்டிட்டு இப்போ வேணாம்ன்னா என்ன செய்ய…”

 

“ம்மா பொங்கல் சாப்பிட்டா எனக்கு ரொம்ப தூக்கம் வருதுமா…”

 

“அப்போ கொஞ்சமா சாப்பிடு” என்றார் அவர் விடாமல்.

 

“அம்மா நீ செய்யற பொங்கலை நான் கொஞ்சமா சாப்பிட முடியுமா சொல்லு. நெய் மிதக்க முந்திரிபருப்பு, மிளகு, சீரகம் வாசத்தோட அந்த பொங்கலை எடுத்து அப்படியே வாயில போட்டா…” என்று ரசித்து கண்ணை மூடி அவள் சொல்ல கிருஷ்ணவேணி சிரித்துவிட்டார்.

 

“உனக்கு ரொம்ப கொழுப்பு தான்டி. என்னை பாராட்டுறியா இல்லை கிண்டலடிக்கிறியான்னு எனக்கு புரியலை போ…”

 

“இப்போ உனக்கு என்ன டிபன் செய்ய?? தோசை மாவு இருக்கு ஊத்தவா??”

 

“ரெண்டு பொடி தோசை போடுங்கம்மா ப்ளீஸ்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “அம்மா எனக்கும்…” என்று வந்து அமர்ந்தாள் மகிழினி.

 

“அடிங்க என்னங்கடி ரொம்பவும் பண்ணுறீங்க ரெண்டு பேரும். சாப்பாடு விசயத்துல மட்டும் நீங்க ஒண்ணு கூடிருவீங்களே. யாழினி ஒருத்தி தான் என் பேச்சை கேக்குறவ”

 

“ஆமாமா உங்க பெரிய பொண்ணு தான் உங்களுக்கு எல்லாமே. அவ பெருமை பேசலைன்னா உங்களால இருக்க முடியாதே…” என்றாள் மகிழினி.

 

“அவளை சொன்னாலும் நீங்க ஒண்ணு கூடிருங்க போங்க ரெண்டு பேருக்கும் தோசை கிடையாது…” என்றுவிட்டு உள்ளே சென்றவர் அடுப்பில் கல்லை ஏற்றியது தான் முதல் வேலையே.

 

மாலை வீட்டிற்கு வந்த வெங்கட்ராமன் “வேணி” என்றழைத்தார்.

 

“என்னங்க” என்றவாறே பூஜையறையில் இருந்து வெளியில் வந்தார் கிருஷ்ணவேணி.

 

“காலையில சொன்னேன்ல நம்ம இதழினிக்கு ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு. இப்போ தான் சந்துருவை பார்த்து வாங்கிட்டு வர்றேன். இன்னைக்கு நாளும் நல்ல நாளா இருக்குன்னு சொன்னியே. இப்போவே கிளம்பலாமா ஜாதகம் பார்க்க”

 

“ஆமாங்க நானும் அதுக்கு தான் ரெடியா இருக்கேன். ஒரு நிமிஷம் அந்த ஜாதகத்தை கொண்டாங்க, சாமிக்கிட்ட வைச்சுட்டு எடுத்திட்டு வந்திடறேன்” என்றவர் கணவரிடம் வாங்கிய கவரை எடுத்துக் கொண்டு சாமி படத்தின் முன் வைத்து கையெடுத்து கும்பிட்டவர் அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

 

“சரி கிளம்புவோமா??”

 

“காபி சாப்பிடுங்க நீங்க வந்திடுவீங்கன்னு போட்டேன்” என்றவர் தனக்கும் தன் கணவருக்கும் காபி எடுத்துவர இருவரும் சேர்ந்தே அதை அருந்தினர்.

 

இதழினி இரவு எட்டு மணிக்கு தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் தந்தை டிவியில் நியூஸ் சேனலை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருக்க, மகிழினி அன்னையுடன் இரவு சமையலுக்கு உதவி செய்துக் கொண்டிருந்ததை பார்த்தவாறே தங்களறைக்கு சென்றாள் அவள்.

 

ஹீட்டர் ஆன் செய்து ஒரு குட்டி குளியல் போட்டு இரவு உடைக்கு மாறியவள் ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.

 

“வா இதழ் எப்போ வந்தே?? உன்னை பார்க்கவே இல்லையே…” என்றார் டிவியில் இருந்து பார்வையை திருப்பிய வெங்கட்ராமன்.

 

“அதெப்படி பார்ப்பீங்க நீங்க தான் நியூஸ் பார்த்திட்டு இருந்தீங்களே”

 

அப்போது உள்ளிருந்து வெளியே வந்த கிருஷ்ணவேணி “ஏன்டி வந்தா உன்னோட லன்ச் பாக்சை கொண்டு வந்து சிங்ல போட மாட்டியா. ஒவ்வொரு வாட்டியும் நானே தான் எடுக்கணுமா, எப்போ தான் பொறுப்பு வருமோ…” என்றவர் அவள் பேக்கை தேடி உள்ளே சென்றார்.

 

“மறந்திட்டேன்ம்மா, டயர்டா இருந்துச்சா அதான் போய் குளிச்சுட்டு வந்திட்டேன், செமையா பசிக்குதும்மா…” என்று இவள் சொல்ல அதற்குள் அவள் லன்ச் பாக்சை எடுத்துக்கொண்டு வேணி வெளியில் வந்திருந்தார்.

 

“தெரியுமே நீ வரும் போதே பசின்னு தான் வருவேன்னு அதான் நைட்க்கு பூரி கிழங்கு ரெடி பண்ணி வைச்சிருக்கேன். நீ வரவும் சூடா போட்டுக்கலாம்ன்னு மகிழ் தேய்ச்சு வைச்சுட்டு இருக்கா…” என்றவர் பேசிக்கொண்டே சமையலறை சென்றுவிட்டார்.

 

சிறிது நேரத்தில் தன் கணவருக்கு சப்பாத்தியும் மகளுக்கு பூரி கிழங்கும் கொண்டு வந்து வைத்தார்.

 

“எனக்கு மட்டும் சப்பாத்தியா??”

 

“நமக்கு வயசாகுது, உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் சப்பாத்தி தான். காலையில வேணா பூரி போட்டு தர்றேன் உங்களுக்கு…” என்று கணவரை சமாதானம் செய்து மகிழையும் வெளியே அனுப்பியிருந்தார் அவர்.

 

ஒருவழியாக நால்வரும் உணவருந்தி முடித்து சோபாவில் அமர்ந்திருந்தனர். வேணி பூஜையறைக்கு சென்றவர் கையில் ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தார்.

 

“என்னதும்மா அது??” என்று அதை அவரிடம் இருந்து பிடுங்கினாள் மகிழினி.

 

“ஏய்!! நானே தரப்போறேன் அதுக்குள்ளே எதுக்குடி வாங்குற… அதை முதல்ல இதழ்கிட்ட கொடு” என்றார் வேணி.

 

“ஹான் அதெல்லாம் முடியாது நான் தான் பார்ப்பேன். மாப்பிள்ளை போட்டோ தானே அது, என்கிட்ட ஏன் காட்டலை முதல்ல”

 

“உனக்கு எதுக்கு முதல்ல காட்டணும், கட்டிக்க போறவகிட்ட தானே காட்டணும்”

 

“உங்களுக்கு எல்லாம் எப்படி மாப்பிள்ளை பிடிக்குதோ அது போல எனக்கும் பிடிக்கணும் இவர் மாமாவா வந்தா நல்லா இருக்கும்ன்னு” என்று நீட்டி முழக்கினாள் அவள்.

 

“ம்மா அவ பார்த்திட்டு தரட்டுமே என்ன இப்போ…” என்றாள் இதழ்.

 

மகிழினி அதிலிருந்த போட்டோவை எடுத்து பார்த்தவள் பின் ஒன்றும் சொல்லாமல் இதழினியிடம் கொடுத்தாள்.

 

“என்னடி ஒண்ணுமே சொல்லலை”

 

“நான் பார்க்கணும்ன்னு தான் சொன்னேன். உன்கிட்ட கருத்து சொல்றேன்னு எப்போ சொன்னேன்” என்று விதண்டாவாதம் பேசினாள் தங்கை.

 

“போடி” என்றவள் அந்த போட்டோவை பார்த்தாள்.

 

‘ஹ்ம்ம் நல்லா தான் இருக்கான், ஹைட்டாவும் இருக்கான்… ஓகே தான்’ என்று பார்த்தவள் அதை தன் தாயிடம் கொடுத்தாள்.

 

தந்தையும் தாயும் அவள் எதுவாவது சொல்வாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“என் மூஞ்சியை எதுக்கு பார்க்கறீங்க??”

 

“அவ எதுவும் சொல்லலை ஓகே. நீ கட்டிக்கப் போறவ உனக்கு என்ன விருப்பம்ன்னு சொன்னா தானே புரியும் எங்களுக்கு” என்றார் வேணி.

 

“உங்களுக்கு ஓகே ஆனபிறகு தானே எனக்கு காட்டியிருக்கீங்க. நல்லா தான் இருக்கார்… என்ன பண்றார்??” என்றாள்.

“என்டிஆர்எப்ல இருக்கார்”

 

“என்ன??”

 

“தேசிய பேரிடர் மீட்பு குழுல இருக்கார்…”

 

“அதுல என்ன பண்ணுவாங்க??”

 

“இது கூட தெரிஞ்சுக்காம நீ பண்ணுறே??” என்று கடிந்த வெங்கட்ராமன் “போன வருஷம் ஒரு குழந்தை ஆழ்துளை கிணத்துல விழுந்தது ஞாபகம் இருக்குல”

 

“ஹ்ம்ம்…”

 

“அப்போ ஒரு மீட்பு குழு வந்தாங்கல்ல அதுல அவரும் இருந்தாரு…”

 

“ஓ இந்த அறம் படத்துல காட்டினாங்களே அது மாதிரியா” என்றவளை என்ன செய்ய எப்போது போல பார்த்தார் வேணி.

 

“ஏன்மா சாக்கடை அள்ளுறவன் கூட ஒரு குழியில இறங்கி தான் வேலை பார்க்கறான்ல” என்று ஆரம்பித்தாள் மகிழினி.

 

“மகிழ்!!” என்று கண்டிப்பாய் பார்த்தார் வேணி. அவர் முகத்தை கண்டு கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் அவள்.


“இதழ் நீ என்ன சொல்றே?? உனக்கு வேணாம்ன்னா வேற பாக்கலாமா…”

 

“அதெல்லாம் வேணாம்மா இதையே பாருங்க. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு ஓகே தானே, நீங்க மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய்ங்க” என்று தன் முடிவை சொல்லிவிட்டாள் அவள்.

 

“இதழு நிஜமா தான் சொல்றியா உனக்கு ஓகேவா…” என்றாள் மகிழினி.

 

“நல்லா தானேடி இருக்கார், உனக்கு பிடிக்கலையா??”

 

“எனக்கும் ஓகே தான். மாமான்னு சொல்லிக்கிற மாதிரி தான் இருக்கார்…”

 

“ஏன்டி இப்படி பண்றீங்க ரெண்டு பேரும். கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை போங்க…” என்று சலித்தார் வேணி.

 

“இதழ் மேற்கொண்டு பேச்சுவார்த்தை வைச்சுக்கலாம் தானே…” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார் வெங்கட்ராமன்,

 

“அதான் ஓகேன்னு சொல்லிட்டேனேப்பா…” என்றவள் “எனக்கு தூக்கம் வருது” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

 

“மகிழ் நீயும் போய் தூங்கு” என்று சின்ன மகளையும் அனுப்பி வைத்தார் வேணி.

 

“சந்துரு அண்ணாகிட்ட பேசிடுங்க நாளைக்கே” என்றார் தன் கணவரிடம்.

 

“ஹ்ம்ம் பேசறேன் வேணி…” என்றவர் யோசனையோடே இருந்தார்.

 

“என்னங்க யோசிக்கறீங்க??”

 

“இல்லை இவ ஏன் எப்படியோ இருக்கா… அவளுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியலையே”

 

“அதான் சொல்லிட்டாலே பாருங்கன்னு அப்புறம் என்ன… பிடிக்கலைன்னா வேண்டாம்ன்னு அவளே சொல்லிருவா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டா” என்றார் அவர்.

 

“பாரேன் நம்ம யாழினிக்கு நாம பாக்குற மாப்பிள்ளை தான் செட் ஆகும்ன்னு ஒரு ஜோசியர் சொன்னார். இதழ் லவ் மேரேஜ் தான் செய்வான்னு சொன்னாரு. இங்க பாரு எல்லாமே உல்டாவா நடக்குது… யாழினி கூட படிச்ச பையனை விரும்பி கட்டிக்கிட்டா, இதழ் நாம பாக்குற மாப்பிள்ளையை தான் கட்டிக்குவேன்னு இருக்கா…”

 

“இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தான்னு சும்மாவா சொன்னாங்க” என்றார் வேணி.