“அங்கிள், இங்க இருந்து அங்க போக ட்ரைன் இருக்கு. ஏறினா ஒரு மணி நேரத்தில இறங்கப் போறா… அதனால தூரம் பத்தி பிரச்சனை இல்லை.” என்றாள்.
வீட்டிற்குள்லையே இருப்பதற்கு வேலைக்குச் சென்று வரட்டும், நல்ல வரன் வந்தால் திருமணம் முடித்து விடலாம் என்ற எண்ணம் முரளிக்கும், அதனால் சரி என்றார். 


“நான் உங்ககிட்ட சம்மதம் எல்லாம் கேட்கலைப்பா…நான் கண்டிப்பா போவேன்.” என்றாள் நிவேதா வெடுக்கென்று. 


“நானும் போன்னு தானே சொன்னேன்.” என்றார் முரளி தணிவாகவே…. என்ன அதிசயம் என்று தோன்றியது நிவேதாவுக்கு, தான் முன்பே இப்படிப் பேசி இருக்க வேண்டும் என நினைத்தாள். தோழிகள் இருவரும் அறைக்குள் சென்று பேசினர். 


“இங்க பாரு. அது நல்ல கம்பெனி. பார்க்க பளிச்சுன்னு நல்லா டிரஸ் பண்ணிட்டு போகணும்.” என வினோதா சொல்ல… நிவேதாவும் சரி  என்றாள். 


தோழியின் பயத்தை அறிந்து, “அது நம்ம ஆகாஷோட ப்ரண்ட் கம்பெனி தான். அதனால பயப்படாத. எல்லாம் நம்ம ப்ரண்ட்ஸ் தான். எந்தக் காரணத்துக்காகவும் வேலையை மட்டும் வேண்டாம்னு சொல்லாத. இதை விட நமக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது.” என்று எடுத்து சொல்ல, நிவேதாவும் சரி என்றாள். 


“என் மாமியார் போன் மேல போன் போட்டு அரிச்சு எடுத்திட்டாங்க. நாளைக்கு நான் என் மாமியார் வீட்டுக்கு போறேன். திரும்ப வர பத்து நாளாகும்.” 


“என்னை அவங்க தான வரவழைக்கிறாங்க. ஆனா அங்க போனா நான்தான் வேலைப் பார்க்கணும். வெளிநாட்டில தனியாவும் நான்தான் செய்யணும், இங்க வந்தும், நான் தான் செய்யணும். எங்க அம்மா வீட்ல என்னை ரெஸ்ட் எடுக்க விடலாம் இல்ல… அதுவும் விட மாட்டாங்க.” 

“கல்யாணம் பண்ணா இந்தத் தொல்லை எல்லாம் இருக்கு. கல்யாணம் பண்ணலைனா கூடச் சில நேரம் நிம்மதியா இருந்திருக்கலாம்னு நினைச்சுப்பேன்.” என்ற தோழியைப் பார்த்து நிவேதாவுக்கு வருத்தமாக இருந்தது. 


“நீ டென்ஷன் ஆகாத.” என நிவேதா தோழியைத் தேற்றி அனுப்பி வைத்தாள். 


நிவேதா சாருமதியை அழைத்து, தான் வேலைக்குச் செல்ல போவதாகச் சொன்னவள், “எனக்குப் போட்டுட்டு போக ஒன்னும் சரியாவே இல்லை. நீ உடனே வந்து வாங்கிக் கொடு.” என்றாள்.

நிவேதா சாருமதியிடம் தான் உரிமையாகப் பேசுவாள். அவளுமே தங்கை மனம் நோக விடமாட்டாள். நிவேதா உடைகள் விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தாலும், சாருமதி தான் எதாவது வாங்கி வந்து கொடுத்து அணிய செய்வாள். 


“என்ன வேணும் சொல்லு. நான் வரும் போது வாங்கிட்டு வரேன்.” 


“ஆபீஸ்ல காலையில இருந்து சாயங்காலம் வரை இருக்கணும் இல்ல… அதுக்கு என்ன வேணுமோ பார்த்து வாங்கிட்டு வா… என்கிட்டே முகத்துக்குப் போட கிரீம் கூட இல்லை.” என்றாள். 


சாருமதி தேவைப்படுவதெல்லாம் வாங்கி வந்தவள், ஒரு வாரத்திற்கு அணிய வேண்டிய ஆடைகள் அதற்கு உரிய அணி மணிகள் எல்லாம் தங்கைக்கு எடுத்து வைத்து விட்டே சென்றாள். 


மறுநாள் காலை சீக்கிரமே எழுந்த நிவேதா, குளித்து இள ரோஜா நிற சுடிதார் அணிந்து, முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து கிளம்பினாள். அப்போது ஆகாஷ் அழைத்தான். 

“எனக்குப் பயமா இருக்கு.” என்றாள். 


“என்ன பயம்?” 


“நான் வேலைக்குப் புதுசு. என்னால உன் ப்ரண்ட்கிட்ட உனக்குப் பிரச்சனை ஆகிடப் போகுது. அதுதான் பயமா இருக்கு.” என்றதற்கு, 


“அவனுக்கு எல்லாம் தெரியும். நீ அங்க சொல்றபடி கேளு போதும்.” என்றான். 


இருந்த படபடப்பில் காலை உணவு இறங்கவே இல்லை. அங்கே போய் மயக்கம் போட்டு விழப்போகிறோம் என்ற அச்சத்தில் உணவை விழுங்கி வைத்தாள். தேவகி மதியத்திற்கு உணவை டப்பாவில் போட்டுக் கொடுத்தார். 


தானும் ஆபீஸை பார்த்து விட்டு வருவதாகக் கூறி முரளியும் உடன் வந்தார். இருவரும் டேக்ஸ்யில் தான் சென்றனர். 


கீழே வங்கி அலுவலகமும், முதல் தளத்தில் ஈகிள் ஐ ஆடிட்டிங் ஸல்யூஷன்ஸ் என இருக்க… தந்தையும் மகளும் முதல் தளத்திற்குச் சென்றனர். 


நுழைந்ததும் சின்ன வரவேற்பு பகுதி இருக்க… கண்ணாடி கதவுக்குப் பின்னே நிறையப் பேர் வேலைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நிவேதா வந்த காரணத்தைச் சொல்ல… அவளைக் காத்திருக்கும்படி சொல்ல… இருவரும் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தனர். 


உள்ளே இருந்து வந்த வயதானவர் ஒருவர், “நிவேதா…” என்றதும், நிவேதா எழுந்து நிற்க, “உள்ள வாங்க.” எனச் சொல்லிவிட்டு செல்ல… நிவேதா முரளியைப் பார்க்க… 


“நல்ல இடமா தான் தெரியுது. சாயங்காலம் பார்த்து வந்திடுறியா.” என்றதும், நிவேதா சரியென.. முரளி மெதுவாகக் கீழே இறங்கி செல்ல… அவர் சென்று டேக்ஸ்யில் ஏறும்வரை பார்த்திருந்துவிட்டு நிவேதா உள்ளே சென்றாள். 


உள்ளே நிறையத் தடுப்புகள் அமைத்து, எல்லா இருக்கைக்கும் முன்பும் கணினி இருந்தது. நிவேதாவுக்குக் கொடுத்த இருக்கையிலும் கணினி இருக்க… அவளை அங்கே உட்கார சொல்ல… நடுக்கத்துடன் தான் உட்கார்ந்தாள். 


“என்னோட பேர் அஷோக். இது ஒரு ஆடிட்டிங் கம்பெனி. இங்க நிறைய விஷயத்துக்காக வாடிக்கையாளர் வருவாங்க. கம்பெனிகளுக்குத் தொடர்ந்து நாமே தான் வேலை செய்வோம். ஆனா தனி வாடிக்கையாளர்களுக்கு நாம அப்பப்ப நம்மை நினைவு படுத்தனும்.” என்றவர், கணினியை நிவேதாவையே இயக்க சொல்ல… அவர் சொன்னபடி செய்தாள். 


முன்புறம் திரையில் இருந்த இரு கோப்புகளைத் திறக்க சொன்னார். அதில் ஒன்றில் வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி இருக்க, இன்னொன்றில் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதம் இருக்க, அந்தக் கடிதத்தைப் பிரதி எடுத்து இன்னொரு கோப்பில் வைத்து வாடிக்கையாளர் பெயரை மட்டும் மாற்றி… அப்போதே அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். 


வருகிற புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல… வாடிக்கையாளர்களுக்குத் தங்களை நினைவூட்டவே இந்த மின்னஞ்சல் என அவளுக்குப் புரியாமல் இல்லை. அதோடு இப்போதுதான் ஆண்டுக் கணக்கை சரிபார்த்து வருமானவரி ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். அதையும் வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்தியது போல ஆகிவிடும். 


சின்ன வேலைதான். ஆனால் அதையும் கவனமாகச் செய்ய வேண்டும். நிவேதா ஒரு கடிதம் தயாரித்து அனுப்புவதைச் சரி பார்த்துவிட்டே அசோக் அங்கிருந்து சென்றார். 

பள்ளி படிப்பு முடிந்ததும் எதற்கும் இருக்கட்டும் என்று தட்டச்சு மற்றும் கணினி வகுப்புக்கு சென்றது இப்போது பயன்பட்டது. அதோடு கல்லூரியிலும் அவர்களுக்கு கணினி பாடம் இருந்தது. அதெல்லாம் இப்போது உபயோகமானது.


பெயர்கள் எல்லாம் அகர வரிசையில் இருந்ததால்… நிவேதா குழப்பம் இல்லாமல் வரிசையாகச் செய்து கொண்டே வந்தாள். என்ன வேலையோ என்று பயந்து போய் இருந்தாள். எதோ செய்ய முடிவதாக இருந்ததே மகிழ்ச்சியாக இருக்க… எதுவும் தவறு நேர்ந்து விடக் கூடாது எனக் கவனமாகவே செய்தாள். 


மதிய உணவுவேளை வர.. அவள் கர்மமே கண்ணாக வேலை செய்ய… எல்லோரும் உணவுவேளைக்கு வெளியே செல்வது தெரிந்தது. ஆண்கள் பெரும்பாலும் உணவுக்கு வெளியே சென்று விட… நிவேதா அங்கு எழுந்த சலசலப்பில் தான் தலை நிமிர்ந்து பார்த்தாள். 


அசோக் அவளிடம் வந்து, “நீயும் சாப்பிட்டு வேலை பாரு.” எனச் சொல்லிவிட்டு சென்றார். எழுந்து ரெஸ்ட் ரூம் தேடி சென்றுவிட்டு வந்தவள், வீட்டில் இருந்து கொண்டு வந்த சப்பாத்தியை அவள் இருக்கையிலேயே உட்கார்ந்து உண்டுவிட்டு, மீதம் இருந்த வேலையைத் தொடர்ந்தாள். 


இரவு விழித்து நாவல் படிப்பதால்… மதியம் சிறிது நேரம் படுத்து உறங்கி விடுவாள். இன்றும் உண்டதும் உறக்கம் வர…. ஒருமுறை அவளையும் அறியாமல் மேஜையில் உறங்கி விழ… நல்லவேளை அப்போது யாரும் இல்லை. 


சேர்ந்த அன்னைக்கே வேலைப் போகப் போகுது என்ற அச்சத்தில், எழுந்து சென்று முகம் கழுவிக் கொண்டு வந்து உட்கார்ந்து வேலைப் பார்க்க… அங்கே அவனின் அறையில் மேஜையின் பக்கவாட்டு திரையில், நிவேதாவின் செயல்கள் அனைத்தையும் பார்த்த முகேன் சிரித்துக் கொண்டான். 


அவன் வேலை பார்ப்பதும், சிறிது நேரம் அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதுமாகத்தானே இருந்தான். 


நான்கு மணிப் போல எல்லோருக்கும் டீ வந்தது. அதைக் குடித்ததும் இன்னும் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்தாள். மாலை ஆறு மணிக்கு எல்லோரும் கிளம்ப… அசோக் மீதியை நாளை வந்து செய்யச் சொன்னார். நிவேதா செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டு கிளம்பினாள். 


வெளியே வந்து சிறிது தூரம் நடந்தால் ரயில் நிலையம் இருக்க… அதிலே ஏறி வீடு வந்தவள், முகம் எதையோ சாதித்த பெருமையில் இருக்க… பெற்றோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளே வினோதா மற்றும் ஆக்ஷுக்கு அழைத்துச் சொன்னாள். 


“நான் ரொம்பப் பயந்திட்டு இருந்தேன். வேலை தெரியலைன்னு என்னை எதுவும் சொல்லிடுவாங்களோன்னு. ஆனா இன்னைக்கு ரொம்ப ஈஸியா தான் இருந்தது.” 


“நீ நினைச்சா… நீதான் அந்தக் கம்பெனிக்கு முதலாளி… ஆனா நீ அங்க வேலை செய்றதை பெருமையா சொல்லிட்டு இருக்க.” என்று ஆகாஷால் நினைக்க மட்டுமே முடிந்தது. 


உமா ஹேமா எல்லோருக்கும் அழைத்துப் பேசினாள். ஆனால் முகேனுக்கு மட்டும் அழைக்கவில்லை. முன்பு அவனிடம் இருந்து அவள் நல்ல எண்ணத்தில் தான் விலகினாள். இப்போது அவன் இருக்கும் நிலை அவளை நெருங்கவிடவில்லை. 

அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவள் பேசுவதை, அவன் வேறு எதுவும் அர்த்தம் செய்து கொண்டு தவறாக நினைத்து விடுவானோ என்ற அச்சத்தில், அவனிடம் இருந்து விலகியே இருக்க முடிவு செய்தாள்.