குழந்தையோடு செல்வதால் மனைவிக்கு நேரடி விமானத்திலேயே டிக்கெட் எடுத்திருந்தான். வினோதா வெள்ளி நள்ளிரவு சென்னையில் வந்து இறங்க, அவள் பெற்றோர் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 


அவளுக்குத் தெரியும் மாமனார் மாமியார் எப்படியும் இன்னும் நான்கு நாட்களில், அவளை ஊருக்கு வரவழைத்துக் கொள்வார்கள் என்று. அதனால் அந்த வார ஞாயிற்றுக் கிழமையே நிவேதாவைப் பார்க்க சென்றாள். 


இருவரும் அங்கருந்து வெளியே செல்வதாக இருந்தது. உமாவும் ஹேமாவும் அங்கே மாலுக்கு வந்துவிடுவதாகச் சொல்லி இருந்தனர். 


முதலில் பெண்கள் மட்டும் சந்தித்துக்கொள்வது, பிறகு இன்னொரு நாள் எல்லோரும் சந்திக்கலாம் என வினோதா திட்டமிட்டிருந்தாள். 


நிவேதா வீடு மூன்று தளங்களைக் கொண்டது. கீழேயும், மேலே இரண்டாம் தளத்தையும் வாடகைக்கு விட்டிருந்தனர். முதல் தளத்தில் இவர்கள் இருந்தனர். மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு. வீடு நன்றாக வசதியாகத்தான் இருந்தது. 

“நிவேதா தோழியை மகிழ்ச்சியாக வரவேற்றாள்.” 


தேவகி வினோதாவைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். நிவேதா அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். வினோதா ஜூஸ் சுடித்தபடி தோழியைத் தான் ஆராய்ந்தாள். 


நிவேதா வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தாள். மீடியம் சைசில் இருந்து எக்ஸ் எல் சைசுக்கு மாறி இருந்தாள். அதே மாசு மருவில்லாத சருமம் தான். ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலை, பின்னலாமல் பேன்ட் மட்டும் போட்டிருந்தாள். வேறு எந்த ஒப்பனையும் இல்லை. சின்னப் போட்டு மட்டும் வைத்திருந்தாள். அவளுக்கு ஒன்றும் பெரிய குறை எல்லாம் தெரியவில்லை. 


வினோதா மகளையும் அழைத்து வந்திருக்க, நிவேதா அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். 


முரளி அவரது அறையில் இருந்து வெளியே வந்தவர், வினோதாவை பார்த்து நலம் விசாரிக்க, 


“நிவேதாவுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தையாவது இருக்கும்னு நினைச்சா… அவளை இப்படி வச்சிருக்கீங்க.” என வினோதா கேட்டே விட… முரளிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. 


“நாங்களும் வரன் பார்த்திட்டு தான் இருக்கோம். ஒன்னும் சரியா அமையலை.” என்றார். 


வினோதா கிளம்பும் சமயம் அவளிடம் வந்த தேவகி, “ எந்த வரன் வந்தாலும் பிடிக்கலைன்னு சொல்றா… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உன் ப்ரண்ட்கிட்ட சொல்லிட்டு போ…” என்றார். 


நிவேதா அவள் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வினோதாவுடன் சென்றாள். 


“உன் அப்பாகிட்ட இப்போ பெர்மிஷன் எல்லாம் கேட்கிறது இல்லையா?” 


“இந்த வயசுக்கு மேல நான் யாரையும் லவ் பண்றேன்னு சொல்ல மாட்டேன்னு எங்க அப்பாவுக்கு நம்பிக்கை. அதுதான் வேற ஒண்ணுமில்லை.” என்றால் நிவேதா. 


மால் வாசலிலேயே உமாவும் ஹேமாவும் நின்றிருந்தனர். நிவேதாவிடம் அவர்கள் வருவதாக வினோதா சொல்லி இருக்கவில்லை. இருவரையும் பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம். நான்கு பேரும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தனர். 


மகளைக் கையில் வைத்திருந்த வினோதா, “கை வலிக்குது. எங்க அம்மாகிட்ட விட்டுட்டு வரலாம்ன்னு பார்த்தா விடவே இல்லை.” எனச் சொல்ல, 


“ச்ச… குழந்தையை எப்படி உன்னை விட்டுட்டு இருக்கும். கொடு நான் வச்சிக்கிறேன்.” என நிவேதா தன்ஷிகாவை அழைக்க, முதலில் யோசித்த குழந்தை பிறகு அவளிடம் சென்றுவிட்டது.
நிவேதா தன்ஷிகாவை தூக்கி வைத்திருப்பதே, எதோ கையில் பூ செண்டை வைத்திருப்பது போல மென்மையாகத் தான் வைத்திருந்தாள். 


இதெல்லாம் மாலின் உள்ளே இருந்து முகேனும் ஆகாஷும் பார்த்துக் கொண்டிருந்தனர். வினோதா அவர்களை அழைக்கவில்லை. முதலில் தாங்கள் மட்டும் நிவேதாவுடன் பேசுகிறோம் எனச் சொல்லி இருந்தாள். நிவேதாவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முகேன் வர… உடன் ஆகாஷும் வந்திருந்தான். 


அவர்கள் உள்ளே வருவதைப் பார்த்து, இருவரும் முதல் தளத்திற்குச் சென்று அங்கு நின்று பார்த்தனர். 


நான்கு பேரும் மாலின் உள்ளே வந்ததும், விதவிதமாகச் செல்பி எடுத்தனர். உணவு அருந்திவிட்டுக் கடைகளுக்குச் செல்வோம் என நான்காம் தளத்தில் இருந்த உணவகத்திற்குச் சென்றனர். சிறிது நேரம் சென்று ஆகாஷும், முகேனும் நிவேதாவை பார்க்க வசதியாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தனர். 


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாலில் கூட்டமும் இருக்க… இவர்களைக் கவனித்துப் பார்த்தால் தான் தெரியும். 


நிவேதா தான் முன்பெல்லாம் அதிகம் பேசுவாள். இப்போது அவள் அமைதியாக இருக்க… மற்ற மூவரும் பேசிக் கொண்டு இருந்தனர். 


உமாவும் ஹேமாவும் அவர்களைப் பற்றிச் சொன்னார்கள். “ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை நிவேதா?” என ஹேமா கேட்க, 


“வீட்ல பார்த்திட்டு இருக்காங்க.” என்று மட்டும் சொன்னாள். அதற்கு மேல் எப்படிப் பேச்சை வளர்ப்பது என்று தெரியாமல், ஹேமா அமைதியாகி விட்டாள். 


உமாவும் ஹேமாவும் உண்டு முடித்துக் கை கழுவ சென்று விட, “கல்யாணம் வேண்டாம்னு சொல்றியே…. உங்க அப்பா அம்மா இருக்கிறவரை அவங்க உனக்குத் துணையா இருப்பாங்க, அப்புறம் நீ என்ன செய்வ? உனக்குன்னு யாரு இருப்பா? ஒருநாள் தனியா நிற்கப் போறியா?” என வினோதா நிவேதவைப் பார்த்து நிதானமாகக் கேட்க, 


மென்று கொண்டிருந்த உணவை விழுங்கிய நிவேதாவின் கண்கள் சட்டென்று கண்ணீரை பொலிந்து விட, “நான் யோசிக்க விரும்பாதது எல்லாம் நீ ஏன் இப்ப யோசிக்க வைக்கிற? என்னை இப்படியே விடு.” என்றவள், கண்ணீரை துடைத்தாள். 


“நிவேதா அழுகிறா தான… எதோ ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டா போலிருக்கு.” என ஆகாஷ் சொல்ல, நிவேதாவையே பார்த்துக் கொண்டிருந்த முகேனுக்கு வருத்தமாக இருந்தது. 


“இதுக்கு மேல இங்க இருந்தா ஆகாது வா போகலாம்.” என ஆகாஷ் சொல்ல, இருவரும் எழுந்து இவர்களை நோக்கி வந்தனர். அதற்குள் உமாவும் ஹேமாவும் வந்திருந்தனர். 


“ஹே… நீங்க உமா, ஹேமா தானே…. என்னைத் தெரியுதா?” என ஆகாஷ் கேட்க, நிவேதாவை தவிர மற்றவர்கள் அவனைக் கொலைவெறியில் பார்த்தனர். 


அவன் நடிப்பது தெரியாமல், “ஆகாஷ் தான நீங்க. ஹே…. உங்களுக்குத் தெரியலையா நம்ம ஆகாஷ்.” என்ற நிவேதா அப்போதுதான் அருகே நின்ற முகேனை கவனித்தாள். பார்த்ததும் அடையாளம் கண்டவள், “முகேனும் வந்திருக்காங்க.” என்றாள். 


“நல்லா இருக்கியா நிவேதா?” முகேன் கேட்க, நலமாக இருப்பதாகத் தலையை மட்டும் அசைத்தாள். 


முகேனை எதிர்பாராமல் பார்த்ததும், நிவேதாவுக்குத் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் வந்தது போல… பளிரென்று முகமே மாறிவிட்டது. அவனைப் பார்த்ததும் தன்னையுமறியாமல் அவள் முகம் மகிழ்ச்சியை வெளிக்காட்ட…. அவன் மற்றவர்களுடன் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்திருந்தாள். 


ஆகாஷ் வினோதாவை தெரியவே இல்லை எனச் சாதிக்க, முகேனும் பார்த்தது போல இருக்கு என்று மட்டும் சொல்ல… இருவரும் வேண்டுமென்றே செய்கிறார்கள் எனப் புரியாமல் இல்லை. ஆனால் நிவேதாவுக்குத் தெரியாது அல்லவா, அவள் இருவருக்கும் நினைவு படுத்த முயன்று கொண்டிருந்தாள். 

“ஓ… அப்ப கொஞ்சம் கருப்பா இருப்ப இல்ல… இப்ப வெளிநாடெல்லாம் போய் வெளித்திட்ட அதுதான் தெரியலை…” என ஆகாஷ் சொல்ல, முகேனும் ஆமாம் என்றான்.


“என்ன செய்றீங்க முகேன்?” என வினோதாவும் தெரியாதது போல நடிக்க… முகேன் அவனைப் பற்றிச் சொன்னான். படிப்பு வேலைப் பற்றித் தான் சொன்னான். வேறு எதுவும் சொல்லவில்லை. 


ஆகாஷ் திருமணமாகி குழந்தை இருப்பதாகச் சொல்ல, நிவேதா முகேனுக்கும் திருமணம் ஆகி இருக்கும் என நினைத்தாள். ஏன் யாருமே அதைப் பற்றிக் கேட்கவில்லை என இருந்தது. 

அவளுக்குக் கேட்க தயக்கமாக இருக்க… அவன் குடும்பத்தைப் பற்றி எதாவது சொல்கிறானா எனக் காத்துக் கொண்டிருந்தாள். 


நிவேதா உண்டு முடித்துக் கைகழுவ செல்ல, அவளோடு ஹேமாவும் சென்றாள். அவர்கள் சென்ற பிறகு… “உங்க ரெண்டு பேருக்கும் கொழுப்பா? ஏன் டா இப்படிப் பண்றீங்க?” என வினோதா கேட்க, 


“நீ என்னைச் சந்தேகப்பட்ட இல்ல… என்கிட்டே நிவேதவைப் பத்தி எதுக்கு மறைச்ச?” என முகேன் கோபப்பட… 


“உன்கிட்ட ஏன் டா சொல்லணும்? நீ அவளை லவ் பண்றேன்னு எப்பவாவது எங்க யார் கிட்டையாவது சொல்லி இருக்கியா?” என வினோதா திருப்பிக் கேட்க, முகேன் அவளை முறைத்தான். 


“ஏற்கனவே அவ ரொம்பக் கஷ்டபட்டுட்டா… திரும்ப எந்தக் கஷ்டமும் வந்திடக் கூடாதுன்னு தான் அப்படிச் செஞ்சேன்.” 


“உங்களுக்கு இருக்க அக்கறை எனக்கும் இருக்கு மேடம். இனி நான் பார்த்துக்கிறேன்.” என்றான் முகேனும் பல்லைக் கடித்துக்கொண்டு. 


“என்ன பண்ணப் போற?” 


“அவகிட்ட போய் என்னைக் கல்யாணம் பண்ணிகிறியான்னு கேட்டா உடனே சரின்னு சொல்வான்னு நினைச்சியா? உன் அவசரத்துக்கு எல்லாம் எதுவும் நடக்காது.” 

“நீங்க ரெண்டு பேருமே நிவேதா மேல இருக்க அக்கரையில் அதான் பேசுறீங்க. நமக்குள்ள சண்டை வேண்டாமே…” என உமா சொல்ல, முகேன் வினோதா இருவரும் சம்மதமாக தலையசைத்தனர். அப்போது நிவேதாவும்  வந்துவிட, பேச்சு அதோடு நின்றது.