முகேனும் விடிய விடிய உறங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்து அவன் அம்மாவுக்காகச் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான். அலுவலகத்திற்குக் கிளம்பயுவது போலக் கிளம்பி தாம்பரம் சென்றான்.
தாம்பரத்தில் குறிப்பிட்ட ஜங்ஷன் சென்றவன், காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கே இருந்த போக்குவரத்துப் போலீசிடம் சென்று, இங்கே விபத்து நடந்தா, எந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்கள் எனக் கேட்க, அவர் ஒரு இரண்டு மூன்று மருத்துவமனை பேரை சொல்ல… முதலில் அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றான்.
“இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த ஆக்சிடெண்ட் கேஸ் கண்டுபிடிச்சு சொல்ல முடியுமா? எனக் கேட்க,
“அதெல்லாம் இப்ப முடியாது. ரொம்பப் பிசியா இருக்கோம். அப்புறம் வாங்க.” என்றால் வரவேற்பில் இருந்த பெண். அது அரசு மருத்துவமனை என்பதால் கூடமும் அதிகம் இருந்தது.
முகேன் ஓரமாகச் சென்று நின்று கொண்டான். அப்போது ஆகாஷ் அழைத்தான்.
“எங்க டா இருக்க? ஆபீஸ் போயிட்டியா?” என்றதும், முகேன் விவரம் சொல்ல…
“தனியா ஏன் போன? எங்க யாராவது ஒருத்தரை கூடிட்டு போக வேண்டியது தான… சரி அங்கேயே இரு. நான் வரேன்.” என்றவன், அடுத்து ஒரு மணி நேரத்தில் வந்து இருந்தான்.
அவன் வந்து அங்கே துப்புரவு பணியில் இருந்த ஆளை அழைத்துப் பணம் கொடுக்க… அவன் சென்று வரவேற்பு பெண்ணிடம் பேச… சரி வாங்க என்றால் அந்தப் பெண்.
எதாவது கெட்டதாகச் சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில், திரும்பப் போயிடலாமா என முகேன் கேட்க,
“தைரியமா தனியா கிளம்பி வந்த.” என்ற ஆகாஷ், “நான் இருக்கேன் வா…” என அழைத்துச் சென்றான்.
முகேனுக்கு இருதயம் துடிப்பது வெளியே வரை கேட்டது. கை கால் நடுக்கத்துடன் தான் நின்றிருந்தான்.
“பேர், விபத்து நடந்த தேதி தெரியுமா?
“தேதி தெரியாது, பேரு நிவேதா.” என்றான் ஆகாஷ்.
அந்தப் பெண் கணினியில் பதிவேட்டை பார்த்து விட்டு, “கல்யாணம் ஆனவங்களா? அவங்க கணவர் பேர் என்ன?” எனக் கேட்க,
“அது தெரியாது. அவங்க அப்பா பேரு முரளி.”என்றான்.
ஒரு ஐந்து நிமிடங்கள் அலசி ஆராய்ந்து விட்டு, “நிவேதா முரளி…இதோ இருக்கே… அவங்க டிஸ்சார்ஜ் ஆகி போயிருக்காங்க.” என்றதும் தான் இருவருக்கும் உயிரே வந்தது.
“மேடம் அவங்க அட்ரஸ் எதாவது இருக்கா? வேற எதாவது தெரியுமா?” “அட்மிட் ஆனா ரெண்டாவது நாளே போயிருக்காங்க. அப்படினா தனியார் ஹாஸ்பிடலுக்குத் தான் போயிருக்கனும். இங்க அட்ரஸ் முழுசா இல்லை. முரளி ஈஸ்ட் தாம்பரம் தான் இருக்கு.” என்றவர், “போன் நம்பர் இருக்கு வேணா குறிச்சிக்கோங்க.” எனச் சொல்ல… ஆகாஷ் அந்த எண்ணை கவனமாகக் குறித்துக் கொண்டான்.
“மேடம் அவங்களுக்கு ஒன்னும் பெரிய காயம் இல்லைதானே…”
“ஸ்பாட் டெத் இல்லை சார்… மறுநாளே டிஸ்சார்ஜ் பண்ணி இருக்காங்க. அப்போ இங்க இருந்தவரை ஒன்னும் ஆகலை… வேற ஹாஸ்பிடல்ல போய் என்ன ஆச்சோ தெரியாது. இங்க சீரியஸ் கேஸ்ன்னு தான் போட்டிருக்கு.” என்றார்.
முன்பு இருந்ததுக்குப் பரவாயில்லை. எதோ கொஞ்சம் நிவேதாவை பற்றித் தெரிந்தது. ஆனால் முழுமையாக நிம்மதியோ சந்தோஷமோ பட முடியவில்லை.
முகேனுக்கு இப்போது தான் படபடப்பு குறைந்து இருக்க… அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். ஆகாஷ் அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்க, அந்த எண்ணுக்கு அழைப்பே செல்லவில்லை.
“நம்பர் போக மாட்டேங்குது. இங்க நிறையத் தனியார் ஹாஸ்பிடல் இருக்கு. எங்கன்னு போய் விசாரிக்கிறது.” என ஆகாஷும் முகேனின் அருகே இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். வினோதா படுத்து உறங்கி இருக்க… தியாகு கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது வினோதாவின் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அழைப்பு வர…இந்த நேரத்தில் யாரா இருக்கும் என நினைத்த தியாகு அழைப்பை ஏற்க… ஆண் குரல் என்றதும் அந்தப் பக்கம் மௌனம்.
“ஹலோ யாருங்க?” எனத் தியாகு மீண்டும் கேட்க,
“வினோதா நம்பர் தான இது. வினோதா இல்லையா?” எனத் தயக்கமாகப் பெண் குரல் கேட்க,
“இப்ப இங்க நடு ராத்திரிங்க. நீங்க யாரு பேசுறது?” எனத் தியாகு கேட்க,
“ஐயோ சாரி, எனக்குத் தெரியாது. வினோதா எங்க அக்காவுக்கு இந்த நம்பர் அனுப்பி இருந்ததா சொல்லி அவங்க தந்தாங்க. அதுதான் கூப்பிட்டேன். சாரி…” என மீண்டும் அந்தப் பெண் சொல்ல,
தியாகுவுக்குச் சந்தேகம் தோன்ற, “பரவயில்லைங்க உங்க பேர் என்ன?” என்றான்.
“நான் நிவேதா பேசுறேன்.” எனக் காதில் விழுந்ததை நம்ப முடியாத ஆச்சர்யத்தில் தியாகு இருந்தான்.
“நீங்க நிவேதாவா… உங்களைப் பத்தி தான் ஒரே புலம்பல்.” என்றவன், இருங்க அவளை எழுப்புறேன் என்றதும், “வேண்டாம்… வேண்டாம்… அவ தூங்கட்டும், நான் நாளைக்குப் பேசுறேன்.” என நிவேதா வைத்து விட்டாள். தியாகு மனைவியை அடித்து எழுப்பினான்.
“என்னங்க?”
“உன் பிரண்ட் சொர்கத்தில இருந்து பேசினா…. அதுதான் எழுப்பினேன்.” என்றதும்,
“உங்களுக்கு எப்ப காமெடி பண்றதுன்னு இல்லையா…. மனுஷனோட டென்ஷன் புரியாம.” என்றவள், நேரத்தை பார்த்து விட்டு கணவனை முறைக்க….
“லூஸு, நிவேதா போன் பண்ணா…” என்றதும், வினோதா நம்ப முடியாத ஆச்சர்யத்தில், “நீங்க எனக்காகப் பொய் சொல்லலை இல்லை தியாகு.” எனக் கேட்க,
“உன் போனுக்குத் தான் வந்துச்சு. இங்க நைட்டுன்னு தெரியாம கால் பண்ணிட்டு, நான் சொல்ல சொல்ல கேட்காம, நாளைக்குப் பேசுறேன்னு வச்சிடுச்சு அந்தப் பொண்ணு.”
உண்மையிலேயே நிவேதாவா, கடவுளே… ரொம்ப நன்றி என்றவள், “முதல்ல முகேனுக்குச் சொல்லிட்டு. நான் நிவேதாகிட்ட பேசுறேன்.” என்றவள், முகேனுக்கு அழைக்க…..
“இவ எதுக்கு இந்த நேரத்தில் கூப்பிடுறா….” என யோசித்தபடி முகேன் அழைப்பை ஏற்க,
“முகேன், நிவேதா நல்லா இருக்கா… அவளே எனக்குப் போன் பண்ணா…” என்றதும், மருத்துவமனை என்றும் பாராமல் முகேன், “நிஜமாவா அவ நல்லா இருக்கா தானே…” எனச் சத்தமாகக் கேட்க,
எல்லோரும் ஒருமாதிரி பார்ப்பதை கவனித்த ஆகாஷ், அவனை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான். வினோதா விவரமாகச் சொல்ல, “சரி நீ அவகிட்ட பேசு. ஆனா என்னைப் பத்தி தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. என்னைப் பத்தி மட்டும் இல்ல… நம்ம மத்த பிரண்ட்ஸ் பத்தி கூட இப்ப சொல்ல வேண்டாம். முதல்ல நீங்க ரெண்டு பேரும் சகஜமா பேசிக்கோங்க. அவளைப் பத்தி தெரியட்டும். அப்புறம் பார்க்கலாம்.” என்றான்.
அவள் திருமணம் செய்து நன்றாக இருக்கிறாள் எனத் தெரிந்தால் போதும், தான் இப்படியே விலகிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் முகேனுக்கு, மீண்டும் அவள் வாழ்க்கையில் சென்று, அவளுக்குத் தர்மசங்கடத்தைக் கொடுக்க அவன் விரும்பவில்லை. அவன் சொல்ல வருவது வினோதாவுக்குப் புரிந்தது.
அவ கிடைக்கிற வரை, இவன் தவிச்ச தவிப்பு என்ன? இப்போ எப்படிப் பேசுறான் என நினைத்த ஆகாஷ் கேட்டே விட…
“தள்ளி இருந்து கூட அன்பைக் காட்டலாம். நான் எப்பவுமே அவளுக்கு ஒரு வெல் விஷரா இருப்பேன். அதே போல அவளுக்கு ஒரு பிரச்சனைனாலும் முன்னாடி நிற்பேன். ஆனா என்னால அவளுக்கு ஒரு தர்மசங்கடம் வரவே கூடாது.”
“அவ நல்லா இருக்கா டா, அதுதான் அவளே போன் பண்ணி இருக்காளே…. இனிமேவாவது வேலையைப் பார்ப்போம்.” என ஆகாஷ் சொல்ல, நண்பர்கள் இருவரும் கிளம்பினர். நேராக வீட்டிற்குச் சென்ற முகேன் தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மதிய உணவு உண்டுவிட்டே அலுவலகம் கிளம்பி சென்றான்.